வெளியிடப்பட்ட நேரம்: 10:13 (04/04/2016)

கடைசி தொடர்பு:10:41 (04/04/2016)

சிம்ரன் இல்லாததாலதான், த்ரிஷா இல்லைன்னா நயன்தாரா! - சிம்ரன் பிறந்தாள் பகிர்வு

சில ஆண்டுகளுக்கு முன் நண்பன் ஒருவனது அறைக்குச் சென்றதும் அங்கு சுவர்களில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்களைப் பார்த்து வியந்துபோனேன். ஏனெனில், த்ரிஷா, நயன்தாராக்களைக் கடந்து சமந்தாக்களை தமிழ் சினிமா பன்னீர் ரோஜாப்பூக்களைத் தூவி வரவேற்றுக்கொண்டிருந்த காலம் அது. அந்த புகைப்படங்களில் காட்சியளித்தவர் சிம்ரன். நாங்கள் 'நான் ஈ - பிந்து'வை கனவுநாயகியாகக் கொண்டிருக்க அவன் மட்டும் 'துள்ளாத மனமும் துள்ளும்' 'ருக்கு'வை இன்னும் காதலித்துக் கொண்டிருந்தது வியப்புக்குரியது தான். 

சிம்ரன் காலத்தில் திரைப்படம் பார்க்கத் தொடங்கியவர்கள் நாங்கள். விவரம் தெரியாத வயதில் அவர் எங்களுக்கு சிம்ரனாக அறிமுகமாவதற்கு முன்பே ருக்குவாக, 'அவள் வருவாளா - திவ்யா'வாக, 'கண்ணெதிரே தோன்றினாள் - ப்ரியா'வாக, 'உன்னைக் கொடு என்னைத் தருவேன் - இந்து'வாக பழக்கப்பட்டவர். படத்தில், அந்தத் திரைப்படங்களின் நாயகர்கள் காதலைச் சொல்லும்முன்னே, திரையில் தோன்றும் சிம்ரனுக்கு காதலைச் சொன்னவர்கள் நாங்கள்.

அதுவரை, சற்று பூசினாற்போன்று உடற்கட்டு கொண்ட கதாநாயகிகளையே கொண்டாடிய தமிழ் ரசிகர்கள் ஒல்லியான சிம்ரனைக் கொண்டாடினார்கள். தன் மயக்கும் விழிகளால் ரசிகர்களின் இதயங்களைச் சிறைப்பிடித்தார். சோகமான காட்சிகளாகட்டும், நகைச்சுவைக் காட்சிகளாகட்டும் கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு தன் கண்களாலும், உடல்மொழியிலும் அசத்தும் நடிகை எனப் பெயர் பெற்றவர். 90 களின் இறுதியிலும், 2000 த்தின் தொடக்கங்களிலும் தன் வசீகர நடிப்பாலும் இடையழகாலும் தமிழ் சினிமா ரசிகர்களைக் கட்டிப்போட்ட நடிகை சிம்ரன். இப்போதும் கூட இடுப்பை ஆட்டி நடக்கும் பெண்களை "மனசுல சிம்ரன்னு நெனப்பு.." எனக் கேலி செய்வதைக் கேட்டிருப்போம். 

இந்தி, மலையாளத் திரைப்படங்களில் நடித்து வந்த சிம்ரன் 1997 ஆம் ஆண்டு ஒன்ஸ்மோர் திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். தமிழில் அறிமுகமான வருடத்திலேயே, ஒன்ஸ்மோர், நேருக்குநேர், வி.ஐ.பி. படங்களின் நடித்த சிம்ரன் தென்னிந்தியாவின்  சிறந்த அறிமுக நடிகைக்கான ஃப்லிம்ஃபேர் விருதைத் தட்டிச்சென்றார். இந்தி, மலையாளம், தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ளார். வெற்றிகரமான நடிகையாக வாய்ப்புகள் குவிந்த சூழலிலும் 'பார்த்தேன் ரசித்தேன்' திரைப்படத்தில் எதிர்மறை கதாபாத்திரத்தையும் ஏற்று நடித்தார். ஃப்லிம்ஃபேர் விருதை 2002 ம் ஆண்டு 'கன்னத்தில் முத்தமிட்டால்' திரைப்படத்தில் நடித்ததற்காகப் பெற்றார். இந்தத் திரைப்படத்தில் ஒன்பது வயது சிறுமியின் வளர்ப்புத் தாயாக 'இந்திரா' கதாபாத்திரத்தில் நடித்து பலரது மனதையும் கவர்ந்தார்.

 

'நெஞ்சில் ஜில் ஜில் ஜில் ஜில் ..' பாடலில்

ஒரு தெய்வம் தந்த பூவே
கண்ணில் தேடல் என்ன தாயே
வாழ்வு தொடங்கும் இடம் நீதானே..

என ரம்மியமான இசையோடு இணைந்துவரும்  சின்மயியின் குரலுக்கு சிம்ரன் வாயசைத்திருப்பார். அது வெறும் முகபாவ நடிப்பு அல்ல என்பதை அடுத்த விநாடியில் சிறுமி கீர்த்தனா தன் தாயை நிமிர்ந்து பார்த்துவிட்டு மனதை இலேசாக்கிக் காற்றில் பறக்கும்போது நம்மால் உணரமுடியும். வானத்தின் நீலத்தைக் கொஞ்சம் ஒற்றியெடுத்தது போல சேலையை தரையில் படரவிட்டுத் மகளை மார்போடு அணைக்கும் தருணங்களில் சிம்ரன் தாய்மையை உணர்த்தியிருப்பார் நமக்குள்ளும்.'துள்ளாத மனமும் துள்ளும்' திரைப்படத்தில் எதிர்பாராவிதமாக நாயகனின் மூலமாகவே கண்பார்வை பறிபோகும். அதனால் அவன்மீது வெறுப்பு ஏற்பட்டு பின்னாளில் பார்வை கிடைத்ததும் அவனை யாரென அறியாமல் அடித்துத் துரத்தும் கலெக்டர் கதாபாத்திரம். படம் முழுவதும் கண் தெரியாத இடங்களிலெல்லாம் யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். உண்மையை அறிந்துகொண்டதும் மனம்வருந்தி அவர் பாடுவதாய் இறுதிக்காட்சி அமைந்திருக்கும்.

இன்னிசை பாடிவரும்
இளங்காற்றுக்கு உருவமில்லை
காற்றலை இல்லையென்றால்
ஒரு பாட்டொலி கேட்பதில்லை..

இன்றுவரை அந்தக் காட்சிகளையும் 'ருக்கு'வையும் யாராலும் மறக்க முடியாது.

கமல்ஹாசனோடு 'பம்மல் கே சம்பந்தம்' மற்றும் 'பஞ்ச தந்திரம்' இரண்டு படங்களிலும் நகைச்சுவையான கதாபாத்திரங்களிலும் சிம்ரன் கலக்கியிருப்பார். 'பம்மல் கே சம்பந்தம்' படத்தில் டாக்டராக நடித்திருப்பார். ஒரு ஆப்பரேஷனில் கமலின் வயிற்றுக்குள் கடிகாரத்தை வைத்துத் தைத்துவிட்டு அது தெரிந்தபின்னர் அதை யாருக்கும் தெரியாமல் எடுக்கப் படாதபாடுபடும் காட்சிகள் அதகளம். அதேபோல, பஞ்சதந்திரம் படத்தில் ரம்யா கிருஷ்ணனுடன் அவர் ஆடும் ‘வந்தேன் வந்தேன்’ பாடலில், முகபாவத்தில் கமலஹாசனை சந்தேகம், கோவம், ஏமாற்றம் எல்லாம் கலந்து கேள்வி கேட்டுக்கொண்டே ஆடவும் செய்து தூள் கிளப்பியிருப்பார். அரசு படத்தில் வடிவேலுவுடன், வசனத்துக்கு தகுந்து முகபாவத்தையும் காட்டி  (ஒன்ன யாரு சேர்த்திக்கச் சொன்னா.. ஒன்ன வெளில அனுப்பிட்டு இவாளை இங்க தங்கிகக்ச் சொன்னா) கலாய்க்கும் காட்சிகளாகட்டும், வாரணம் ஆயிரம் படத்தில் வெர்சடைல் நடிப்பாகட்டும்.. அவரது  திறமைக்குச் சான்றாக இன்னும் பல படங்களை சொல்லிக்கொண்டே போகலாம்.

2000 ஆம் ஆண்டிலேயே தென்னிந்திய நாயகிகளில் அதிகபட்சமாக சிம்ரன் 75 லட்சங்களுக்கும் அதிகமாக சம்பளம் பெற்றவர் என்றும் கூறப்படுவதுண்டு. அவரது நடிப்பில் பல திரைப்படங்கள் வெற்றிப்படங்களாயின. எட்டுமுறை ஃபிலிம்ஃபேர் விருது பெற்ற பெருமைக்குரியவர். 1999 மற்றும் 2003 என இருமுறை தமிழக அரசின் 'கலைமாமணி' விருது கிடைக்கப் பெற்றார். சிம்ரன் சிறந்த பரதநாட்டியக் கலைஞர் என்பது பலருக்குத் தெரிந்திருக்காது. இரண்டாவது திரையுலகப் பிரவேசத்தில் 'ஐந்தாம் படை' திரைப்படத்தில் நாட்டியக்கலைஞர் தேவசேனாவாக நடித்ததும் குறிப்பிடத்தக்கது.

தீபக் பாகாவுடனான திருமணத்திற்குப் பிறகு திரைத்துறையை விட்டு விலகியிருந்த சிம்ரன் 'சேவல்' மற்றும் கௌதம் வாசுதேவ் மேனனின் 'வாரணம் ஆயிரம்' திரைப்படத்தின் மூலம் 2008-இல் ரீ-எண்ட்ரி கொடுத்தார். அதற்குப் பிறகு சில படங்களில் குணச்சித்திர வேடங்களிலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்குபெறுகிறார். 'சிம்ரன் & சன்ஸ்' எனும் பெயரில் தயாரிப்பு நிறுவனம் ஒன்றைத் தொடங்கியிருக்கிறார். சிம்ரனுக்கு ஆதீப் மற்றும் ஆதித் என இரு மகன்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது. அவரது தயாரிப்பில் 'கரையோரம்' என்னும் திரைப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கவிருக்கிறார்.  

நண்பர்களோடு த்ரிஷா இல்லைன்னா நயன்தாரா’ பார்த்துக் கொண்டிருந்தோம். இடைவேளைக்குப் பிறகு இன்ப அதிர்ச்சியாய் திரையில் சிம்ரன். உடன் வந்த நண்பன் சொன்னான்:  ‘ஹும்.. இந்த சிம்ரன் கல்யாணமாகிப் போய்ட்டாங்க. அதுனாலதான் திரிஷா இல்லைன்னா நயன்தாரா-ன்னுட்டிருக்கீங்க. இவங்க இருந்திருந்தா இவங்களை மட்டும்தான் கொண்டாடிருப்பீங்க!’

நிஜம்தான்.   ஹேப்பி பர்த்டே சிம்ரன்!
                                                                                       - விக்னேஷ் சி செல்வராஜ்
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்