43 ஆண்டுகளுக்குப் பின்னும் இளைஞர்களைக் கவரும் சிவகாமியின் செல்வன் | sivakamiyin selvan movie analytics

வெளியிடப்பட்ட நேரம்: 13:14 (04/04/2016)

கடைசி தொடர்பு:18:48 (04/04/2016)

43 ஆண்டுகளுக்குப் பின்னும் இளைஞர்களைக் கவரும் சிவகாமியின் செல்வன்

ஆராதனாவும் சிவகாமியின் செல்வனும் - ஒரு நாஸ்டால்ஜியா டிரீட்

'சங்கீதம் பிரபஞ்ச பாஷை'யென ஜெயகாந்தன் சொல்லுவார். அது எத்தனை உண்மை என்பதை தமிழகத்தின் பட்டிதொட்டியெல்லாம், நிருபித்த முதல் படம் 1969ல் வெளிவந்த 'ஆராதனா'  எனும் ஹிந்தி திரைப்படம். எல்.பி ரெக்கார்டுகளில் தமிழக அளவில் சாதனை படைத்த முதல் திரைப்படம். ராஜேஷ் கன்னாவும் ஷர்மிளா டாகூரும் இணைந்து நடித்த இந்தப்படம் தமிழகத்தின் பெருநகரங்களில் எல்லாம் 100 நாட்கள் சில்வர் ஜூபிளி என வெற்றிவாகை சூடிய படம். இத்தனைக்கும் அப்போது டி.வி கிடையாது, டேப் ரெக்கார்டர் கிடையாது. கிராமபோன் இசைத்தட்டுதான் ராஜேஷ் கன்னா கிஷோர்குமார் வெற்றிக்கூட்டணி ஹிந்தி திரைப்பட உலகில் ரொம்ப ஸ்ட்ராங்காக கால்பதித்த படம்.


மலைரெயிலில்  புத்தகம் படித்துக்கொண்டு பயணிக்கும் ஷர்மிளா டாகூர் நாக்கை மடக்கி அழகுகாட்டியதில் ஒட்டுமொத்த இந்தியாவின் இளைஞர்களும் கிறங்கிப்போய்க் கிடந்தார்கள். ரம்மியமான மலைப்பாதையில் திறந்த ஜீப்பில் ராஜேஷ்கன்னா 'மேரே ஷப்னோம் கி ராணிகப் ஆயே கீத் 'என பாட இளைஞர்களும் யுவதிகளும் எல்லா விழாக்களிலும் அந்தப்பாடலைப் பாடித்தீர்த்தனர். இந்த இந்தித் திரைப்படப்பாடல் தமிழகத்தின் மூலைமுடுக்கெல்லாம் ஒலித்தது. இத்தனைக்கும் இந்தி எதிர்ப்புப் போர் தமிழகத்தில் நடந்து முடிந்திருந்த நேரம். இதைத் தொடர்ந்து 'பாபி' 'யாதோங் கி பாரத்' என இந்தித் திரைப்படங்களின் ஆதிக்கம் இளையராஜாவின் வருகை வரை 10 ஆண்டுகள் நீடித்தது. 


தமிழகத்தில் பெரும் வெற்றி பெற்ற இந்தப் படத்தை 1973ல் மொழி மாற்றம் செய்யப் பலரும் தயங்கிய வேளையில் சிவாஜி, வாணிஶ்ரீ ஜோடியாக நடிக்க சிவகாமியின் செல்வன் படம் தயாரானது.
அரசியல் ரீதியாகப் பார்க்கப்போனால், இரண்டுமுறை திமுக ஆட்சிக்கட்டிலில் அமர்ந்திருந்த நேரம்... எம்.ஜி.ஆர் அ.தி.மு.க.வை ஆரம்பித்து இருந்தார். பழைய காங்கிரசின் தலைவரான காமராஜர் தமிழகம் முழுவதும் சூறாவளிச் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த நேரம். சிவாஜி ஏற்றுக்கொண்ட ஒரே தலைவர் காமராஜர். அதனால், 'ஆராதனா' படத்தைத் தமிழில் எடுத்த போது 'சிவகாமியின் செல்வன்' என்றே படத்துக்குப் பெயரிட்டார் . காமராஜர் அம்மாவின் பெயர் சிவகாமி.

பாடல்களுக்காகவே ஓடிய படம் என்பதால், எம்.எஸ்.விஸ்வநாதன்  சிறப்புக் கவனம் எடுத்து இசை அமைத்த படம். அதுவும் ரூப் தேரா மஸ்தானா பாடலை வழக்கமாக சிவாஜிக்குப் பின்னணிக்குரல் கொடுக்கும் டி.எம்.எஸ்ஸுக்கு பதிலாக எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தைப் பாட வைத்து இருந்தார். அது இன்னமும் எஸ்.பி.பியின் தனிப்பாடல்களின் இசை ஆர்வலர்களுக்கு சவால் விடும் ஒரு மைல்ஸ்டோனாக இருக்கிறது.

சிவாஜியைப்பொறுத்தவரை அப்பா பிள்ளையென இரண்டு வேடங்கள். திருமணத்துக்குமுன்பே தன் ஆருயிர்க்காதலன் விமானப்படை வீரர் விமான விபத்தில் இறந்திட. கர்ப்பிணிப்பெண்ணான காதலி தன் மகனை விமானப்பைலட்டாக உருவாக்கும் கதை. பாடல்கள், ஆட்டம், பாட்டம் என முதல் பாதி. சோதனைகளைச் சாதனையாக்கும் அம்மாவாக அடுத்தபாதி. அந்தக் காலகட்டத்தில் வந்த வித்தியாசமான திரைக்கதை.

பெரிய சிவாஜி வருகின்ற போதெல்லாம் ஹே ஏஹே... எனும் ஹம்மிங்கை படம் முழுவதும் ஓட விட்டு எம்.எஸ்.வி அவர்கள் புது விதமான யுக்தியைக் கையாண்டிருப்பார். 'உள்ளம் ரெண்டும்', 'மேளதாளம் கேட்கும் காலம்', 'இனியவளே இன்று பாடிவந்தேன்', 'எத்தனை அழகு கொட்டிக்கிடக்குது', 'ஆடிக்குப் பின்னே' மற்றும் எதற்கும் ஒரு காலமுண்டு' என அத்தனைப்பாடல்களும் தேனில் நனைத்த பலா வென இனிப்பானவை.

சிவகாமியின் செல்வன். 1974 ஆம் ஆண்டு கண்ணதாசன், வாலி, புலமைபித்தன் ஆகியோர் பாடல் வரிகளில், எம்.எஸ். விஸ்வநாதன் இசையில், சிவி ராஜேந்திரன் இயக்கத்தில் வெளியானது. இதில் சிவாஜி கணேசன், வானிஸ்ரீ, லதா, எம்என் ராஜம், எஸ்வி ரங்காராவ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.  சிவாஜியும் லதாவும் இணைந்து நடித்த ஒரே படம் என்ற பெருமையும் இதற்கு உண்டு.
படத்தின் நாயகி  வாணிஶ்ரீயிடம் நாம் பேசியபோது சிவாஜியை மிகவும் நன்றியுடன் நினைவு கூர்ந்தார் வசந்தமாளிகை ஏற்கெனவே எங்களுக்கு மிகப்பெரிய வெற்றிப்படம். அதைப்போலவே எனக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாப்பாத்திரம். சிவாஜி அவர்கள் என்னைப்பார்க்கும் பொழுதெல்லாம் நான் புடவை அணியும் அழகை எந்த வித சுருக்கமோ தொய்வோ இல்லாமல் உடுத்தும் அழகை எனது காஸ்ட்யூம் சென்ஸையும் ரொம்பவே பாராட்டுவார். (உண்மை இன்றைக்கும் ஜவுளிக் கடைகளில் இருக்கும் புடவை கட்டிய பொம்மைகளுக்கு மாடல் 'வசந்த மாளிகை' வாணிஶ்ரீதான்)

இந்தப் படத்தை தற்போது புதிய தொழில்நுட்பத்துடன் டிஜிட்டல் செய்யப்பட்டு வெளியிட உள்ளனர். இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் மதுரையில் உள்ள பிரியா காம்ப்ளக்ஸ் திரையரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. படத்தயாரிப்பாளர் கே.ஈஸ்வரமூர்த்தியிடம் பேசினோம். சத்யம் தியேட்டர் கிடைத்திருக்கிறது. சிவாஜி  ரசிகர்களின் ஆதரவு நல்லவிதமாக உள்ளது. நானும் சிவாஜி ரசிகன்தான். அந்தப் பாசத்தில்தான் இந்தப் படத்தை டிஜிட்டலில் புதிதாக வடிவமைத்திருக்கிறோம். தேசப்பற்று மிக்க இந்தப்படத்தை எங்கள் முயற்சியை மறைந்த விமான ஓட்டி, லெப்டினன்ட் பிரவீண் அவர்களுக்காக சமர்ப்பிக்கிறோம். என்றார்.

சிவாஜி ரசிகரான சந்திர சேகர் என்பவரிடம் படம் பற்றி கேட்டோம். ''பொதுவாகவே இயக்குனர் சி.வி.ராஜேந்திரன் சார் படங்களில் சிவாஜிசார் இளமைத்துள்ளலுடன் இருப்பார். அதற்கு மரியாதை செய்யும் விதமாக  படம் அமைந்துள்ளது'' என்கிறார்.

70 களில் இளைஞர்களாக இருந்த சிவாஜிரசிகர்களுக்கு மட்டுமல்ல... இன்றைய இளைஞர்களும் விரும்பும் வித்தியாசமான கதையம்சமுள்ள படமாக வந்து விருந்து படைக்கிறது.

-எஸ்.கதிரேசன் -

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close