வெளியிடப்பட்ட நேரம்: 12:55 (06/04/2016)

கடைசி தொடர்பு:17:43 (07/04/2016)

மறக்க முடியாத 10 ரயில் க்ளைமேக்ஸ்கள்!

தமிழ் சினிமாவின் மாஸ் இயக்குநர்கள் நிச்சயம் ரயில் சார்ந்த காட்சிகளை வைக்க தவறுவதில்லை. வாழ்க்கைப் பயணத்தை எளிதில் காட்சிப்படுத்துவதில் ரயிலுக்கு தனி இடமே கொடுத்திருக்கிறோம். அவ்வாறு ரயில் பயணத்தில் ஏற்படும் க்ளைமேக்ஸ் காட்சிகளில் நம்மால் மறக்கமுடியாத சில நினைவுகள் ஜிஃப் வடிவில்...

மௌனராகம்

மிஸ்டர் சந்திரமௌலி என்று துறுதுறு கார்த்திக், ரேவதியிடம் காதலை சொல்லும் விதத்தை இன்றைக்கும் படமெடுக்கும் இயக்குநர்கள் பாடமாக வைத்துக் கொள்ளலாம். கதை? கரடுமுரடான இளைஞன் கார்த்திக்கிடம் ரேவதி  தன் இதயத்தைப் பறிகொடுத்ததையும், போலீஸ் துரத்தலின்போது கார்த்திக் துப்பாக்கிக்குப் பலியாகிவிட்டதையும் ரேவதி மோகனிடம் விவரிக்கும் விதம், அவர் மீது பரிதாபத்தை வரவழைத்துவிடுகிறது. இந்த இடைக்காலத்தில், பிரிவுக்காகத் தன்னைத் தயார்படுத்திக்கொள்ளும் வகையில் மோகன் 'அட் எ டிஸ்டன்ஸ்' பழக, கொஞ்சம் கொஞ்சமாக ரேவதியும் யதார்த்தத்தை உணர்ந்து மனம் மாற, கடைசியில் பிரியவேண்டிய நேரத்தில் ஒன்று கூடி விடுகிறார்கள்.


காதல் கோட்டை

அவ்வப்போது தென்றலாக வந்து வருடிவிட்டுப் போகிற திரைப்படங்களின் வரிசையில் காதல் கோட்டை ஒரு முக்கியமான படம். பார்க்காமலே காதல் என்கிற ட்ரெண்ட்டை செட் பண்ணிய ப்ளாக் பஸ்டர். இவர்தான் அவர் என்று தெரியாமல் தேவயானி, அஜீத்தின் ஆட்டோவிலேயே பயணிக்கிற காட்சிகளில் தியேட்டரில் ரசிகனுக்கு ஏறியது பிபி. காதல் என்கிற மகத்தான சக்தியால் பின்னிப் பிணைந்து கட்டுண்ட இருவர் கடைசிவரை நேரில் அறிமுகமாகாமலே இருப்பது என்பது ஆச்சரியமான கரு. முதல் தர சஸ்பென்ஸ் படங்களுக்கு இருக்கிற பரபரப்பை இப்படிப்பட்ட காதல் கதையின் உச்சகட்ட நிமிடங்களில் கொண்டு வந்திருப்பதே, இந்தப் படத்தின் அழுத்தமான வெற்றிக்குக் காரணம்.


ஒரு தலை ராகம்

கல்லூரி வாழ்க்கையைப் பின்னணியாகக் கொண்ட ஒரு  காதல் கதைதான்.காம்பவுண்டு சுவரின் மீது உட்கார்ந்து கொண்டு மாணவிகளைக் கிண்டல் செய்வதிலிருந்து, வகுப்பில் பிராக்ஸி கொடுப்பதுவரை கல்லூரி கலாட்டாக்களை மிகை இல்லாமல் இயல்பான காட்சிகளாக கடந்து செல்கிறது. கல்லூரி இறுதி நாள் 'பிரேக்-அப்' காட்சி மனதைத் தொடுவதுடன், படத்தின் ஹீரோ பாடகன் என்பதால், ஆறு பாட்டுகளை டி. ராஜேந்தர் போட்டிருந்தார்.


உன்னை நினைத்து

‘வேணும்னா ரெக்கார்ட் பண்றதுக்கும் வேணாம்னா அழிக்கிறதுக்கும் காதல் ஒண்ணும் டேப்ரெக்கார்டர் கேசட் இல்லைங்க. அது மனசு! ஒரு தடவை அழிச்சா அழிச்சதுதான். மறுபடியும் ரெக்கார்ட் பண்ணவே முடியாது’ என்ற சென்டிமென்ட் வசனங்களுக்கு நடுவில் லாலாலா லாலா லாலாலாலா பின்னணி இசையைக் கேட்கும் போதே, இது விக்ரமனின் படம் என்பதை பலரால் சொல்லி விட முடியும். படத்தின் முன்பாதியில் காமெடி அத்தியாயங்களும், இடைவெளியில் ப்ளாஷ்பேக்கிற்கான தொடக்கம் என வழக்கமான திரைக்கதையே இருந்தாலும், க்ளைமேக்ஸில் நல்ல படம் பார்த்த மனநிறைவை இப்படம் நமக்கு தந்துவிடுகிறது.

UNNAI NINAITHU Tamil Film climaxகாவலன்

ராஜ்கிரண் மேல் மகா அபிமானம் வைத்திருக்கிறார் விஜய். கொலை மிரட்டல் காரணமாக, ராஜ்கிரணின் மகள் அசினுக்கு பாடிகார்டாகச் செல்கிறார். விஜய்யின் 24X7 கெடுபிடியில் வெந்து தவிக்கிறார் அசின். விஜய்யை ரூட் மாற்றிவிடுவதற்காக, செல்போனில் குரலை மாற்றிக் காதல் பேசுகிறார். ஒரு கட்டத்தில் செல்போன் காதலி மீது விஜய் வைத்துஇருக்கும் காதலில் நெகிழ்ந்து, அவரிடம் தான் யார் என்கிற உண்மையைச் சொல்லத் தயாராகிறார் அசின். ரயில் நிலையத்தில் விஜய் காத்திருக்க, காதலி வராவிட்டால் விஜய்யைக் கொல்வதற்கு ராஜ்கிரணின் ஆட்கள் காத்திருக்கிறார்கள். அசின் வந்தாரா? விஜய் உயிர் பிழைத்தாரா என்பது அதிரவைக்கும் க்ளைமாக்ஸ்.பில்ட் - அப் ஓப்பனிங் எதுவும் இல்லாமல் மென்மையாக விஜயும், கணக்காகக் கதையை நகர்த்தும் வேடத்தில் அசினும் கச்சிதமாக பெர்ஃபாமென்ஸ் காட்டிய படம் இது.

KaVaLaN Climax


மூன்றாம் பிறை

'அம்னீஷியா' என்ற வியாதி, 'அமரதீபம்' காலத்தில் தோன்றி இன்றைக்கும் பல திரைக் கதாசிரியர்களுக்குக் கைகொடுத்து வருவது நமக்கெல்லாம் நல்லா தெரியும். ஆனால்  அப்படித் தெரிஞ்ச ஒரு வியாதியால் பாதிக்கப்பட்ட ஓர் இளம் பெண்ணை வைத்து கதையைச் செதுக்கிய விதத்தில் பாலுமகேந்திராவின் திறமை வெளிப்படுகிறது. சகிப்புத்தன்மைக்கு முழு அர்த்தத்தை இந்தப் படத்தில் காட்டிவிட்டார் கமல்ஹாசன் எனத் துணிந்து சொல்லலாம். ஸ்ரீதேவியின் அச்சுப் பிச்சுக் கேள்விகளுக்கெல்லாம் பொறுமையாகப் பதிலளித்து, அவரின் பொறுமையைச் சோதிக்கும்போது, 'ஐயோ பாவம்' என்று அனுதாபப்பட வைக்கிறார். பாலுமகேந்திராவின் கேமரா ஊட்டியின் பனிச் சாரலையும், மழைத் தூறலையும் கண்முன் கொண்டு நிறுத்தியிருக்கிறதை இங்கு கண்டிப்பாக குறிப்பிட்டாக வேண்டும்.


ரிதம்

திருமணமாகி ரயில் விபத்தில் கணவனை இழந்த ஒரு பெண்ணும் (மீனா), அதே ரயில் விபத்தில் தனது மனைவியை இழந்த ஒரு ஆணும் (அர்ஜுன்) ரயில் பயணத்தில் சந்தித்து, பரஸ்பரம் புரிந்து கொண்டு சேர்ந்து வாழ முடிவெடுப்பதே, ரிதம் படத்தின் கதைச் சுருக்கம். ஏ.ஆர். ரஹ்மானின் இசையில், குடும்பத்துடன் படத்தைப் பார்க்கக் கூடிய வகையில் படத்தை இயக்கியிருந்தார் வசந்த்.


அந்நியன்

ராமானுஜம் எனும் நேர்மையான வழக்கறிஞர், சமூகத்தில் தன்னைச் சுற்றி நடக்கும் அவலங்களால் மனம் வெதும்பி, பல ஆளுமைக் கோளாறால் பாதிக்கப்படுகிறான். அதன் வெளிப்பாடாக அவனுக்குள்ளே இருந்து வெளியாகும் மற்ற பிம்பங்களாக, ஃபேஷன் மாடலான ரெமோ மற்றும் ராமானுஜத்தை ஏமாற்றியவர்களை கருட புராணத்தின்படி பழிவாங்கும் அந்நியன் என 3 அவதாரங்களாக விக்ரம் வெளிப்படுத்திய நடிப்பு அனாயசமானது. ஷங்கரின் பரபரப்பான திரைக்கதையில், சுஜாதாவின் அற்புதமான வசனங்களில், ஹாரிஸ் ஜெயராஜின் துள்ளலான இசையும் இப்படத்தை வெற்றிப் படைப்பாக தூக்கி நிறுத்தியதில் பெரும் பங்கு வகித்தன.

Anniyan Climax Scene HD


செந்தூரப்பூவே

1988 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தப்படம் முழுக்க ரயிலிலேயே நடக்கிறதோ என்கிற எண்ணம் ஏற்படுகிற அளவுக்குப் படத்தில் ரயில் காட்சிகள் இடம்பெற்றிருந்தன.பி. ஆர். தேவராஜின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயகாந்த் ஒரு வித்தியாசமான நோயால் பாதிக்கப்பட்டவராக நடித்திருந்தார். ரயிலில் பாடல்கள் மற்றும் சண்டைக்காட்சிகள் படமாக்கப்பட்டிருந்தன. எம்.எம்.ரெங்கசாமியின் ஒளிப்பதிவும் பாடல்களும் படத்துக்குப் பெரும் பலம்.
 

Senthoora Poove Movie Climax

இணைந்த கைகள்!

அந்திநேரத் தென்றல் காற்று பாடல் மட்டுமின்றி பல மறக்க முடியாத பாடல்களைக் கொண்ட படம். ராம்கி, அருண்பாண்டியன், நிரோஷா, சிந்து, நாசர் உள்ளிட்ட பெரிய நட்சத்திரக் கூட்டம் படத்தில் இருக்கும். இராணுவம் சம்பந்தப்பட்ட கதை என்பதால் வட இந்தியா வரை போய்ப் படப்பிடிப்பு நடத்தியிருப்பார்கள். அதனால் இந்தப் படத்திலும் ரயிலுக்கு முக்கியப் பங்குண்டு. 

ராகுல் சிவகுரு

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்