வெளியிடப்பட்ட நேரம்: 17:03 (06/04/2016)

கடைசி தொடர்பு:17:48 (06/04/2016)

’அடியே காந்தாஆஆஆ!’ - மறக்க முடியுமா? திருவாரூர் தங்கராசு பிறந்ததின பகிர்வு

 

“இந்த மாதிரி கூட்டங்களைப் பார்த்தாலே எனக்குப் பிடிப்பதில்லை. எப்பொழுது பார்த்தாலும் பஞ்சம் பசி பட்னி. ஊருக்கொரு லீடர். ஆளுக்கொரு கொள்கை. அவனவனுக்கு ஒரு டஜன் பட்டினிப் பட்டாளம். நான்சென்ஸ்! மேலை நாட்டு தொழிலாளிகள் அப்படி வாழ்கிறார்கள் இப்படி வாழ்கிறார்கள் என்று பாலு சொன்னான். மேலை நாட்டு தொழிலாளிகள், அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் பிறந்தவர்கள். அப்படித்தான் வாழ்வார்கள். அவர்கள் தலைவிதி அப்படி. நீங்கள் இந்த நாட்டிலே பிறந்தவர்கள்.  இப்படித்தான் வாழ்வீர்கள்.  உங்களுடைய தலைவிதி இப்படி!”

1954ல் வெளிவந்த படத்தின் வசனம் இது.  தலைப்பிலிருந்து கண்டுபிடித்திருப்பிர்கள் என்ன படம் என்று.

ஆம்.. ரத்தக்கண்ணீர்!
 

நாடகங்கள் கொடிகட்டிப் பறந்த காலத்தில், எம். ஆர். ராதாவுக்கு ஆஸ்தான கதை - வசனகர்த்தாவாக இருந்த கருணாநிதி விலகிவிட, தங்கராசுவிற்கு வருகிறது வாய்ப்பு. அவருக்காக எழுதியதுதான் ரத்தக்கண்ணீர். 1949 பொங்கலன்று திருச்சியில் அரங்கேறிய நாடகம் பிறகு பலமுறை மேடையேற்றப்பட்டு பலத்த வரவேற்புப் பெற்றது. இன்றைக்கும் சிந்தித்துப் பார்க்க முடியாத, ஒன்லைனர்! ‘பொண்டாட்டியை விட்டுட்டு தாசி பின்னாடி போனவன், நோய்வந்து வாடி, க்ளைமாக்ஸ்ல தன் நண்பனையும் பொண்டாட்டியையும் சேர்த்துவைக்கற’ கதை!


67 வருடங்களுக்கு முன்னரே மறுமணத்தை வலியுறுத்திய க்ளைமாக்ஸ்.  தமிழகம் மட்டுமல்லாமல் சிங்கப்பூர் / மலேசியா, பர்மா, இலங்கை என்று சென்ற இடமெல்லாம், எம். ஆர். ராதாவின் அசால்டான நடிப்பாலும், தங்கராசுவின் வசனங்களாலும் பெரும் வெற்றி பெற்றது. நாடகத்தைப் பார்த்த இரட்டை இயக்குநர்களான கிருஷ்ணன் - பஞ்சு, இதை முழுநீள திரைப்படமாக்க எண்ணினார்கள். ‘பராசக்தி’ படம் தயாரித்த நேஷனல் பிக்சர்ஸால் தயாரிக்கப்பட்டு 1954ல் வெளிவந்தது.
-
ஒரு சில வசனங்களைப் பாருங்கள்...


‘எனக்கு வரவேற்பு கொடுக்கிறார்கள் என்று சொன்னவுடன் கொடுக்கக்கூடிய, தகுதி யோக்கியதை உள்ளவர்கள் -  பெரிய சீமான்களும் சீமாட்டிகளும் வந்திருப்பார்கள் என்று நினைத்தேன். வந்த இடத்தில் எல்லாம் லேபரர்ஸ் கூட்டமாக தெரிகிறது..’

எஸ்.எஸ்.ஆர்: நம்மூர் நகரசுத்தித் தொழிலாளர்கள் ஒரு கூட்டம் நடத்த  ஏற்பாடு பண்ணீருக்காங்க

எம். ஆர். ராதா: அதுல கூட்டறதுக்கு என்னையும் கூப்டாங்களா?

எஸ்.எஸ்.ஆர்: நமது தொழிலாளர்கள் மத்தியில் குவிந்திருக்கும் முட்டாள்தனமும் மூடநம்பிக்கையும் அகற்ற முடியாத குப்பைகள்தானே? நீவந்து மேல்நாட்டிலே நகரசுத்தித் தொழிலாளர்கள் எப்படி வேலை செய்கிறார்கள் என்பதையாவது சொல்லக்கூடாதா?

எம். ஆர். ராதா:  மேல்நாட்ல இருக்கறவன் நின்னுகிட்டு கூட்டறான். இங்க இருக்கறவன் குனிஞ்சுகிட்டுக் கூட்றான். ஜாதிக்கட்சி, சாமியார்கட்சி.. இந்தியாவுல க்ரோர்ஸ் கணக்கா வெச்சுகிட்டிருக்கான் கட்சிய. எல்லா கட்சியும் பிஸினஸுல புகுந்து சம்பாதிக்கறான். வேற ஒண்ணுத்துக்கும் லாயக்கில்ல.நோயுடன் இருக்கும் எம்.ஆர். ராதாவிடம், எஸ். எஸ். ராஜேந்திரன், ‘சோறு போடறேன் வீட்டுக்கு வா’ என்று அழைத்துப் போவார். ராஜேந்திரனுடன், ஒரு போர்ட்டர் பெட்டியைத் தூக்கிக் கொண்டு வந்து வீட்டில் வைத்துவிட்டு, ‘ரெண்டு அணா சேர்ந்து குடு’ என்று கேட்பார். ‘குடுக்கறத வாங்கிட்டு போடா’ என்று சொல்லுவார் எம். ஆர். ராதா. உடனே அந்த போர்ட்டர், ‘நீ சும்மாக் கெடடா பிச்சைக்காரப் பயலே’ என்று சொல்ல, இவர் பதில் சொல்லுவார்.


‘இவன் குபேரன் மச்சான்! பொட்டியத் தூக்கிட்டு வந்து எட்டணா வாங்கறவன் பிச்சக்காரப்பய. நான் ஒண்ணும் தூக்காமயே சோறு வாங்கப்போறேன். நான் உன்னைவிடப் பெரியவன்தான் போடா!’


ரோடு போட மூணுவருஷம் ஆகுது. கல்லைக் கொண்டு ரெண்டு பக்கமும் கொட்றானே

துபோன்ற படம் முழுவதும் வசன சாட்டையடிகள்தான். இன்றைக்கும், தமிழகத்தின் ஏதோ ஒரு கிராமத்தில் ஏதோ ஒரு தியேட்டரில் இந்தப் படம் ஓடிக்கொண்டிருக்கக் கூடும்.


ரத்தக்கண்ணீருக்குப் பிறகு, தங்கதுரை, பெற்ற மனம் ஆகிய படங்களுக்கும் கதை-வசனம் எழுதியிருக்கிற தங்கராசு, பெரியாரின் தொண்டனாகவே கடைசிவரை இருந்தார். சினிமாவுக்காக தன் கருத்துக்களை என்றும் மாற்றிக் கொள்ளவில்லை. தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளாமல், தன் கருத்துகளை மட்டுமே முன்னிலைப்படுத்துவார் தங்கராசு.


பெரியாருக்குப் பிறகு, எம்.ஜி.ஆர், கருணாநிதி என்று எல்லாருடனும் நட்புடன் இருந்தாலும் தன் கருத்தை துணிச்சலாகப் பேசக்கூடியவர். எழுத்துச் சீர்திருத்ததில் இவருக்கு பெரும் பங்குண்டு. அதற்காக எம்ஜிஆர் அமைத்த குழுவில் தங்கராசுவும் ஒருவர்.

பாலுமகேந்திரா, மகேந்திரன், சிவகுமார், வைரமுத்து என்று தொடங்கி விஜய் சேதுபதி வரை தங்களது மிக விருப்பப் படங்கள் என்றால் ரத்தக்கண்ணீரைக் குறிப்பிடத்தவறியதில்லை. 1954ல் தமிழில் வெளியான இந்தப் படத்தின் ரீ மேக், 49 ஆண்டுகள் கழித்து 2003ல் ‘ரத்தக்கண்ணீரு’ என்ற பெயரில் கன்னடத்தில் உபேந்திரா நடித்து சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது!

2014 ஜனவரி 5ல் மறைந்த தங்கராசு ரத்தக்கண்ணீர் மூலம் என்றென்றும் நினைவில் இருப்பார்! 
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்