தமிழ் சினிமாவின் மறக்கமுடியாத 14 பயணங்கள்! #nostalgic | Travel in Tamil Cinemas

வெளியிடப்பட்ட நேரம்: 17:42 (08/04/2016)

கடைசி தொடர்பு:12:35 (13/04/2016)

தமிழ் சினிமாவின் மறக்கமுடியாத 14 பயணங்கள்! #nostalgic

 

தமிழ்சினிமா வரலாற்றில் எண்ணற்ற திரைப்படங்கள் பயணத்தையும் பயணிக்கிற வாகனங்களையும் கூட பாத்திரங்களாக்கி வந்து வெற்றிபெற்றுள்ளது. தனுஷின் 'தொடரி' கூட முழுக்க ரயிலை பின்னணிக கொண்ட திரைப்படம்தான். அப்படிப்பட்ட தமிழ்சினிமாவின் மறக்கமுடியாத பயண திரைப்படங்களின் சின்ன தொகுப்பு இது.


1. கிழக்கே போகும் ரயில்:

பதினாறு வயதினிலே என்ற தனது முதல் படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் ஒரு புரட்சியைத் தோற்றுவித்த இயக்குனர் பாரதிராஜா இயக்கிய இரண்டாவது திரைப்படம். படத்தில் ரயில் ஒரு பாத்திரமாகவே வந்து போகும். அதை வைத்து கடித போக்குவரத்தெல்லாம் பண்ணுவார்கள் நாயகனும் நாயகியும்.

2. அன்பே சிவம்

கமலும் மாதவனும் ஒரு ரயில் விபத்தில் சந்தித்துக்கொள்ள உலகம் புரியாத மாதவனுக்கு உன்னதத்தை புரியவைக்கிறது கமலின் வாழ்க்கை. வெளியான சமயத்தில் வெற்றியடையாத இத்திரைப்படம் இப்போதும் பலருக்கும் டாப் ஃபேவரட். படத்தின் இறுதிக்காட்சி எப்படிப்பட்டவரையும் கலங்கடித்துவிடும்.

3. ஒரு தலை ராகம்

ரயில் பார்த்து, அதிலேயே காதலித்து, அதிலேயே தோல்வியடைந்து செத்துப்போகிற நாயகனின் காவியகாதல் கதை. நாயகனாக சங்கரும், நாயகியாக ரூபாவும் நடித்திருந்தார்கள். படத்தின் கதை வசனம் பாடல்களை எழுதி இசையமைத்து டி.ராஜேந்தருக்கும் முதல் அறிமுகம் கொடுத்த படம். முழுவதுமாக ரயில் பயணத்தை மையமாக வைத்து இந்த கதைக்களம் டி.ராஜேந்தரின் கல்லூரி நாட்களில் உருவான ஒன்று.

4. எங்கேயும் எப்போதும்

எதிர்பாராத கணத்தில் நிகழும் ஒரு விபத்து, சிலரின் வாழ்க்கையை எப்படியெல்லாம் சிதைத்துக் குலைக்கிறது என்பதை அழுத்தமாகச் சொல்கிறது இப்படம். சென்னையில் இருந்து திருச்சி செல்லும் பேருந்தில்தான் மொத்தபடமும் நிகழும். ஒரு விபத்தை இவ்வளவு விலாவாரியாக இதற்கு முன் தமிழ் சினிமாவில் பார்த்தது இல்லை. 'வாகன ஓட்டிகள் சூழ்நிலைக்கேற்ப கவனமாக வாகனத்தைச் செலுத்தினாலே விபத்துகளின் எண்ணிக்கை குறையும் என்ற படத்தின் இறுதி மெசேஜ் இயக்குனர் சரவணனுக்கு பாராட்டுக்களை பெற்றுத்தந்தது.

5. பயணம்

சென்னை-டெல்லி செல்லும் விமானத்தில்தான் மொத்த படமும் நடக்கும். விமானத்தை தீவிரவாதிகள் கடத்துவதும், அதை மீட்பதற்கான ராணுவத்தின் போராட்டமும்தான் இப்படம். விமானக் கடத்தலை வைத்துப் பல படங்கள் வந்திருக்கும்போதும், அதன் சாயல் வராமல் தவிர்த்து, கந்தகார் கடத்தலையே கண் முன் நிறுத்தி இருந்ந்தார் இயக்குனர் ராதாமோகன். பயணத்தின் பதட்டம் படம் பார்ப்பவர்களையும் தொற்றிக்கொண்டதால் படம் வெற்றிபெற்றது.

6. நெடுஞ்சாலை

1980-களில் தேசிய நெடுஞ்சாலைகளைப் பரபரக்க வைத்த தார்ப்பாய்த் திருட்டைப் பின்னணியாக வைத்து கதை பண்ணியிருந்தார் "ஜில்லென்று ஒரு காதல்" படப்புகழ் இயக்குநர் கிருஷ்ணா. தார்ப்பாய்த் திருட்டுக் காட்சிகள், புரோக்கர் உண்டாக்கும் திகீர் ட்விஸ்ட், கரன்சி லாரியைக் கண்டுபிடிக்கும் உத்தி முதலான டீடடெயிலிங் படத்தின் பெரியபலம். .

7. பையா

கார் சேஸிங்கில் பூக்கிற ஒரு காதலும், அதன் முடிவும்தான் பையா. 'காதலி அருகில் இருக்க, மிக நீண்ட பயணம்' எனும் ஒரு வரிக் கதையில், திரைக்கதையில் தனது வழக்கமான ஆக்ஷன் பாணியில் வித்தையைக் காட்டியிருந்தார் இயக்குநர் லிங்குசாமி. காரில் லிஃப்ட் கேட்டு ஏறி தமன்னாவை பிக்கப் பண்ண முயற்சிக்கும் சாஃப்ட்வேர் ஆசாமியின் அலம்பல்கள், தமன்னா ஸ்டீயரிங் பிடித்திருக்கும்போது கட்டுப்பாடு இழக்கும் கார் என முழுக்கவே பயண பரபரப்புதான் பையா.

8. இரண்டாம் உலகம்

ஊர் விட்டு ஊர் போகும் காதல் போல இது உலகம் விட்டு உலகம் போகும் காதல். இரு உலகங்களுக்கான ஃபேன்டஸி லாஜிக்குகளை நம்பும்படி பதிய வைத்து, வித்தியாசமான உணர்வுகளுடன் ஆர்யா-அனுஷ்காவை இரு உலகங்களிலும் உலவவிட்டு வித்தியாசமாக முயற்சி செய்திருந்தார். ஆனால் எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை.

9. பரதேசி

ஒரு கப் தேநீரில், எவ்வளவு சாமானிய உயிர்களின் ரத்தம் கலந்திருக்கிறது என்பதை தெளிவாக உணர்த்தியது 'பரதேசி’. இந்தியாவின் சுதந்திரத்திற்கு முன்பு நடந்த கதை. சாலூர் கிராமத்திலிருந்து தேயிலைத் தோட்ட வேலைக்கு பஞ்சம்பிழைக்க பயணிக்ககிற அப்பாவி சனங்களின் வாழ்வியலை அச்சு அசலாக பதிவு செய்திருந்தார் இயக்குனர் பாலா. அடி, உதை, அட்டைக் கடி, சுளீர் குளிர், பாலியல் தொந்தரவு, உழைப்புச் சுரண்டல், நயவஞ்சகம், கொள்ளை நோய் எனக் கொத்தடிமைகளின் வரலாறு தமிழ்சினிமாவில் செய்யப்பட்ட முக்கிய ஆவணம்.

10. 10 எண்றதுக்குள்ளே

விக்ரம் காரில் எதிர்பாராமல் சமந்தா பயணிக்க, அந்தப் பயணத்தில் தான் காதல்கொள்ளும் சமந்தாவை, அவரே வில்லன் கையில் சேர்க்கிறார். வில்லன் சமந்தாவைத் தீர்த்துகட்ட முயற்சிக்கிறார். என்ன குழப்பமாக இருக்கிறதா? அதற்கான விடைதான் '10 எண்றதுக்குள்ள’. கொஞ்சம் குழப்பியடிக்காமல் தெளிவாக கதை பண்ணியிருந்தால் தமிழ்நாட்டு ட்ரான்ஸ்போட்டராக வந்திருக்க வேண்டிய படம். தோல்வியடைந்த ரோட் மூவி!

11. தசாவதாரம்

கிருமி ஆயுதம் ஒன்றின் நீண்ட பயணம்தான், இந்த கமலஹாசனின் ப்ளாக்பஸ்டர். கிபி 12ஆம் நூற்றாண்டில் தொடங்கி இன்றைய நாள் வரைக்குமான கதை அமெரிக்காவில் தொடங்கி சென்னைக்கு வந்து தாம்பரம் வழியாக ஶ்ரீரங்கம் போய் அங்கிருந்து அப்படியே தமிழ்நாட்டையே சுற்றுகிற கதையில் கமல் மட்டுமே நிறைந்திருந்தார்.. மறக்கமுடியாத வசனங்களும் காட்சிகளும் கொண்ட க்ளாசிக் படம் இது.

12. சுந்தரா டிராவல்ஸ்:

தமிழ் சினிமாவில் பயணத்தை அடிப்படையாக கொண்ட சிறந்த காமெடி திரைப்படம். முரளி, வடிவேலு கூட்டணி ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்து மிகவும் கவர்ந்தது. ஒரு பஸ்சை மட்டுமே வைத்துக்கொண்டு திரைக்கதை முழுவதையும் நகர்த்தி காட்டினார் இயக்குநர் செந்தில்குமார். படத்தில் காதல், சென்டிமென்ட்டை குறைத்து காமெடிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, சென்னையிலிருந்து பாண்டிச்சேரி வரை பயணம் செய்ய வைத்தது படத்தின் வெற்றிக்கு வழிவகுத்தது. இதுபோக தமிழ்நாட்டின் அனைத்து தியேட்டர்களுக்கும் படத்தில் வந்த 'பஸ்' வலம் வந்தது படத்தின் பிரபலமாக்கியது.

13. பேராண்மை:

ஹாலிவுட் ஆக்ஷன் படங்களின் கதைக்களம், தமிழுக்கு ரொம்பவே புதுசு. இந்தியா செலுத்தவிருக்கும் செயற்கைக்கோளை நவீன ஆயுதங்கள் உதவியோடு தகர்க்க காட்டுக்குள் ஊடுருவுகிறார்கள் 16 தீவிரவாதிகள். தனது சொல் பேச்சு கேட்கக் கூடாது என்ற வறட்டுப் பிடிவாதத்தோடு இருக்கும் ஐந்து பெண்களை அதே காட்டுக்குள் என்.சி.சி. பயிற்சிக்கு அழைத்து வருகிறார் காட்டிலாகா அதிகாரி 'ஜெயம்' ரவி. பயணம் அந்த பெண்களின் மனதை மாற்றுகிறது என்பதே கதை. நிறைய அரசியல் பேசிய படம்.

14. இன்று நேற்று நாளை

தமிழின் முதல் டைம் ட்ராவல் படம் இது. நிகழ்ந்தபடியே இருக்கும் கடந்த/நிகழ்/எதிர்காலங்களுக்கு 'டைம் மெஷின்’ மூலம் டாக்ஸி ட்ரிப் அடிக்கிற சயின்ஸ் ஃபிக்ஷன் அதிரடி. அறிவியல் படத்தை நகைச்சுவையாக புரியும்படி சொன்னதில் இயக்குனர் ரவிக்குமாரின் திறமைக்கு வெற்றியை பரிசளித்தனர் தமிழ் சினிமா ரசிகர்கள்.- துரை நாகராஜன் - ராகுல் சிவகுரு

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்