முள்ளும் மலர்ந்தது..! - மகேந்திரனின் 30 வருட ரீவைண்ட் | Pamaran talks about Mahendran's nostalgic Trip

வெளியிடப்பட்ட நேரம்: 11:05 (09/04/2016)

கடைசி தொடர்பு:11:22 (09/04/2016)

முள்ளும் மலர்ந்தது..! - மகேந்திரனின் 30 வருட ரீவைண்ட்

'முள்ளும் மலரும்’ படத்தில் காளி என்ற கதாபாத்திரமாகவே மாறி. தன் நடிப்பில் முத்திரை பதித்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். முள்ளும் மலரும் திரைப்படத்தின் முக்கியக் காட்சிகள் நீலகிரியின் ‘பென்ஸ்டாக்’கில் படமாக்கப்பட்டன. இயற்கை எழில் கொஞ்சும் அந்த இடத்துக்கு இயக்குநர் மகேந்திரன் சமீபத்தில் சென்றுள்ளார். அவரை அழைத்துச் சென்றவர்கள் எழுத்தாளர் பாமரனும் அவரது தோழர்களும். அந்த அனுபவங்களை பாமரனிடமே கேட்போமே...

30 வருஷ ரீவைண்ட்!


“எனக்கும், மகேந்திரன் அய்யாவுக்கும் 1994-ல் இருந்தே பழக்கம். எனக்கு மட்டுமல்ல, கோவையில் இருக்குற எங்கள் தோழர்களோடும் மகேந்திரன் அய்யா ரொம்ப நெருக்கமாகவும் பிரியமாகவும் இருப்பார். எப்பல்லாம் எங்களைப் பாக்கணும்னு விரும்புறாரோ, உடனே கோவைக்குக் கிளம்பி வந்துடுவார். நிறையப் பேசுவோம். பல இடங்களுக்குப் பயணம் செய்வோம். சமீபத்தில் பிரகாஷ்ராஜ் நடிக்கவிருக்கும் ஒரு படப்பிடிப்புக்கான இடங்களைப் பார்ப்பதற்கு பல பகுதிகளுக்குச் சென்று வந்தோம். அவர் வந்து செல்லும் ஒவ்வொரு பயணமும் மறக்க முடியாத ஒன்றாகவே அமையும்.

2008-ல் ஒரு தடவை கோவைக்கு வந்தார். முள்ளும் மலரும் 1978-ல் வெளியானது. சரியாக 30 ஆண்டுகள் கழித்து அவருடன் பென்ஸ்டாக் போனோம். மஞ்சூருக்கு மேல் ஒரு கெஸ்ட்ஹவுஸ் இருக்கு. அங்கே போய் தங்கினோம். இயக்குநர் வந்துருக்கார்னு கேள்விப்பட்டு, அவரைப் பாக்குறதுக்காக நிறையப் பேர் அங்கு வந்துட்டாங்க. அவங்க எல்லாம் முள்ளும் மலரும் சூட்டிங் நடந்தப்போ, அந்த இடத்துல வேலை செஞ்சவங்களாம். முள்ளும் மலரும் சூட்டிங் நடந்ததை சம்பவங்களை நினைவுகூர்ந்துவிட்டு, இயக்குநருடன் புகைப்படம் எடுத்துவிட்டு அந்த மக்கள் போனாங்க.

 


காணாமல் போன சரத்பாபு!


மறுநாள், விஞ்ச் இருக்கும் இடத்துக்குப் போனோம். அங்கே போனதும், மகேந்திரன் அய்யா அந்தக்கால நினைவுகளுக்குப் போயிட்டார். எந்த இடத்தில் என்ன காட்சி எடுத்தாங்க... ரஜினி எந்த இடத்தில் நிற்பார்... ஷோபா எப்படி நடந்து வருவார்...என்பதை எல்லாம் ஆர்வத்தோடு சொன்னார். காளி கேரக்டரில், ரஜினி தாவாங்கொட்டையில் கைவைப்பது மாதிரியே செய்துகாட்டினார். மகேந்திரன் அய்யாவின் நடிப்பில் ‘இன்ஸ்பையர்’ பண்ணப்பட்டவர் ரஜினி. தாடியில் கை வைப்பது எல்லாம் மகேந்திரன் அய்யாவும் ரஜினியும் ஒரே மாதிரி இருக்கும். ரஜினிக்கு மகேந்திரன் அய்யா ஒரு ஸ்பெஷல் டைரக்டர்னு சொல்லலாம்.
 

அங்கே இரண்டு நாட்கள் தங்கியிருந்தோம். அப்போது பல சுவாரஸ்யமான சம்பவங்களை எங்களுடன் பகிர்ந்துகொண்டார். ‘முள்ளும் மலரும் ஷூட்டிங் போய்கிட்டு இருந்திருக்கு. இப்ப என் தங்கச்சியை உங்களுக்கு மனைவியாக்க சம்மதிக்கிறேன். ஆனா, இப்பவும் உங்களை எனக்குப் பிடிக்கலை என்று சரத்பாபுகிட்ட ரஜினி சொல்லும் காட்சி. அப்போது, திடீரென சரத்பாபுவை காணவில்லையாம். ஜீப்பை எடுத்துட்டுப் போயிட்டார். மேட்டுப்பாளையத்தில் போய் அவரைப் பிடித்திருக்கிறார்கள். ஏன் இப்படி போய்விட்டீர்கள் என்று சரத்பாபுவிடம் கேட்டிருக்கிறார்கள். ரஜினி என்னை கடைசி வரை பாராட்ட வில்லையே. என்னிடம் கோபமாகவே பேசுகிறார் என்று வருத்தத்துடன் சொல்லியிருக்கார். அந்தளவுக்கு அந்தப் படத்தின் கேரக்டராகவே எல்லோரும் மாறியிருக்கிறார்கள். இது வெறும் கேரக்டர் தானே என்று சரத்பாபுவுக்கு மகேந்திரன் புரியவைத்திருக்கிறார். அதேபோல, முள்ளும் மலரும் பிரிவியூ பார்த்த அந்தப் படத்தின் தயாரிப்பாளர், என்ன மகேந்திரன் என் தலையில மண்ணை அள்ளிப்போட்டுட்டிங்களே....படத்துல வசனமே இல்லையே என்று அப்செட் ஆகி சொல்லியிருக்கிறார். ஆனால் படம் நூறு நாட்களைத் தாண்டி ஓடியவுடன் இயக்குநரைப் பாராட்டியிருக்கிறார்.

 

காசில்லாததால், நனைந்த ரஜினி!


இயக்குநர் மகேந்திரன் ஈழத்துக்குப் போய் அங்குள்ள மக்களுக்கு சினிமா எடுப்பது பயிற்சி கொடுத்தார். அந்தப் பயிற்சியை வைத்து, ’பனிச்ச மரம் பழுத்திருக்கு’ என்று ஒரு படத்தை அந்த மக்கள் எடுத்திருந்தார்கள். கை இல்லாத ஒருவர்தான் அந்தப் படத்தை இயக்கியவர். எங்களுடைய நாய்வால் திரைப்பட இயக்கம் சார்பாக, மகேந்திரன் அய்யாவை கோவைக்கு அழைத்து, வந்து அந்தப்படத்தை திரையிட்டோம். ஈழத்தில் சிறுவயதில் இருந்தே அந்த மக்கள் எதிர்கொள்கிற துயரங்கள் என்ன என்பதை அழகாகப் பிரதிபலிச்சிருப்பாங்க. அந்த நிகழ்ச்சி முடிந்து மகேந்திரன் அய்யாவை அழைத்துக்கொண்டு மசினகுடிக்குப் போனோம். மசினகுடியில் போய் குறும்படம் ஒன்றையும் எடுத்தோம். சன் டி.வி-யின் கோவை செய்தியாளராக இருந்த, மறைந்த அவிநாசிலிங்கம், பண்ணையார் ஆக நடித்தார். மகேந்திரன் அய்யாதான் படத்தை இயக்கினார்.


நானும் சில தோழர்களும் பைக்கில் முன்செல்ல, மகேந்திரன் அய்யாவும் சில தோழர்களும் காரில் வந்தனர். மகேந்திரன் அய்யா வந்த கார் விபத்துக்குள்ளாகிவிட்டது என்று எனக்கு போன் வந்தது. திரும்பி வந்து பார்த்தால் பிரேக் ஃபெயிலியர் ஆகி ஒரு பெயர் பலகையின் மோதி காரை நிறுத்தியிருந்தார் டிரைவர். நல்லவேளையாக யாருக்கும் எதுவும் இல்லை. அப்படியே மசினகுடிக்குப் போனோம். அவருடைய அனுபவங்களில் இருந்து ஏராளமான விஷயங்களைச் சொல்லிக்கொண்டே இருப்பார். உதிரிப்பூக்கள் படத்தில் தலைவிரி கோலமாக இருக்கும் ஒரு பெண்ணின் படத்தை போஸ்டரில் போட்டிருக்கார். அதுபோன்ற காட்சிகளை சென்டிமென்ட்டாக சினிமாகாரர்கள்  பார்ப்பார்கள். ஆனால், மகேந்திரன் அய்யா எந்த மூடநம்பிக்கையும் இல்லாதவர். ஜானி படத்தில் ‘காற்றில் எந்த கீதம்...’ பாடல் காட்சியில் அவருக்குக் குடை கிடைக்கவில்லையாம். தயாரிப்பாளரிடம் பணம் இல்லாமல் அந்தக் காட்சியை சமாளித்து எடுத்திருப்பார். ரஜினிகூட மழையில் நனைந்து கொண்டுடதான் ஓடிவருவார். நூறு பேர் குடைகளோடு இருந்திருந்தால் அந்தக் காட்சி இன்னும் சிறப்பாக வந்திருக்கும் என்ற சொன்னார்.

 

இவரு தெறி வில்லனா?


பென்ஸ்டாக் உட்பட பல இடங்களுக்கு நான் போயிருக்கிறேன். ஆனால், இந்த இடத்தில் இந்தக் காட்சியை எடுத்தேன் என்று மகேந்திரன் சொல்லச் சொல்ல, அந்த இடங்களைப் பற்றிய மகத்துவம் எனக்குப் புரிந்தது. பென்ஸ்டாக் ஒரு பிக்னிக் இடமாகத்தான் எங்களுக்குத் தெரியும். அது எப்படி ஒரு உயிரோட்டமான இடம், தமிழகத்தின் உச்சபட்சமாக இருக்கும் ரஜினி என்ற கலைஞன் எப்படி தன்னை ஒரு நடிப்பு திறனைக்காட்டிய இடமாக இருந்தது... அவருக்கிட்ட இருந்த நடிப்பு திறமையை இயக்குனர் மகேந்திரன் வெளியே கொண்டுவருகிறார் என்ற விஷயங்கள் எல்லாம் அந்த இடத்துக்கு கூடுதலாக ஒரு மகத்துவம் கொடுத்தது.


என்னை மட்டுமல்ல. எங்கள் தோழர்களையும் பார்க்க வருவார். எல்லாரும் அவருக்கு நண்பர். அவருக்கு அறிமுகப்புள்ளி நான். ஓராண்டுக்கு முன்பு வந்தார். கோவையை சுற்றி இடங்களைப் போய் பார்த்திட்டு வந்தோம். மிக ஆறுதலாக இடம் என்பதால் இது. சினிமா சம்பந்தமான ஆட்கள்  யாரும் இங்கு இருக்க மாட்டோம். அதனால் அதுக்கான ஒரு முகம் ஒன்றை வைத்துக் கொண்டு சுற்ற வேண்டிய அவசியம் இல்லாத இடம். அதனால கோவை தோழர்களை அவருக்குப் ரொம்ப பிடிக்கம்.


விஜய்யின் ‘தெறி’ படத்தில் மகேந்திரன் அய்யா வில்லனாக நடிக்கிறார் என்பதைக் கேள்விப்பட்ட உடன் எனக்கு சிரிப்புதான் வந்தது. இன்றுவரை அவருக்கும் எனக்குமான உறவில் அவன் இவன் என்று யாரையும் அவர் சொன்னதே கிடையாது. யாரைப் பற்றி பேசினாலும் மிஸ்டர் என்ற வார்த்தையைப் போட்டுத்தான் சொல்வார். யாராவது அவரை குத்த வந்தால்கூட, உங்களுக்கு கை வலிக்கும்...கத்தியைக் கொடுங்க... நானே குத்திக்கறேன் என்று சொல்கிற குணம்படைத்தவர். அவர் தெறி படத்துல வில்லனா? என்று ஆச்சர்யப்பட்டேன். அவரை வில்லனாக சினிமாவில் பார்த்தால்தான் உண்டு”

சொல்லிவிட்டுப் பலமாகச் சிரிக்கிறார் பாமரன்.


-ஆ பழனியப்பன்.

 

‘கெட்ட பய சார் இந்த அட்லி! ‘ -தெறி இசைவெளியீட்டு விழாவில் டைரக்டர் மகேந்திரன்

 

 

.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்