பஸ்கண்டக்டர் முதல் பத்மவிபூஷன் வரை.... ரஜினியின் வெற்றிப் பயணம் | Success Secret Of Rajinikanth! Life History Rewind

வெளியிடப்பட்ட நேரம்: 16:10 (12/04/2016)

கடைசி தொடர்பு:16:39 (12/04/2016)

பஸ்கண்டக்டர் முதல் பத்மவிபூஷன் வரை.... ரஜினியின் வெற்றிப் பயணம்

திறமையை மட்டுமே வழிச்செலவிற்கு வைத்துக்கொண்டு உழைப்பினாலும், விடாமுயற்சியாலும் கலைத்துறையில் வெற்றியை முகர்ந்தவர் ரஜினிகாந்த்.  இந்திய அரசு பத்மவிபூஷன் விருதை வழங்கி, அவரது மகுடத்தில் கூடுதலாக அலங்கரிக்க தொடங்கிவிட்டது. விருது நாயகனின் வாழ்க்கை வரலாற்றை இந்த  நாளில் நிச்சயம் யோசித்துப் பார்ப்பது நமக்கு ஒரு பாடம். அதற்காக உங்களுக்குத் தெரிந்த ரஜினியின் வாழ்க்கை வரலாற்றில் சில ஹைலைட்ஸ்...

அவரைப் பற்றி.....


கர்நாடகாவில் டிசம்பர் 12ம் தேதி, 1950ல் பிறந்தவர் தான் நம்ம சிவாஜிராவ். ராமோஜி ராவ்க்கும், ராமாபாய்க்கும் நான்காவது மகனான சிவாஜி பெங்களூர் ஆச்சாரியா பாடசாலை, விவேகானந்த பாலக சங்கம் ஆகியவற்றில் கல்விபயின்றார். படிப்பில் கவனம் செலுத்தாமல் நடிப்பில் ஈடுபாட்டுடன் இருந்தார். படித்துமுடித்ததும், அங்கேயே பேருந்து நடத்துனராக பணியாற்றிக்கொண்டே நாடகங்களில் நடித்துவந்தார் சிவாஜிராவ் .

நடிகராக விரும்பி சென்னைவந்த ரஜினியை,சென்னை திரைப்படக் கல்லூரியில் சேர்த்து படிக்கவைத்தார் ரஜினியின் நண்பர். அதனால் 2 ஆண்டுகள் பணிக்குச் செல்லாததால் கண்டக்டர் வேலையும் போய்விட்டது.

ரஜினியை ரசிகர்கள் ஏற்றுக்கொள்ள காரணமான படங்கள்!

ரஜினிகாந்த் முதல் முதலாக 1975ல் கதா சங்கமா என்ற கன்னட படத்தில் நடித்தார். அதே வருடம் கே.பாலசந்தர் இயக்கிய அபூர்வராகங்கள் படத்திலும் சிறிய வேடமேற்றார். தொடர்ந்து அவர் நடித்த மூன்றுமுடிச்சு, புவனா ஒரு கேள்விக்குறி, அவர்கள், 16 வயதினிலே, காயத்ரி படங்களே இவரை ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளக் காரணமான முக்கிய படங்கள். வில்லன் கதாபாத்திரம் ஏற்றுக்கொண்டிருந்த ரஜினி நாயகனாக நடித்த முதல் படம் பைரவி. தொடந்து முள்ளும்மலரும், ஆறிலிருந்து அறுபதுவரை, எங்கேயோகேட்ட குரல் உள்ளிட்ட படங்கள். 

தமிழ் கற்றுக்கொண்டால் உங்களை எங்கேயே கொண்டுபோய் விடுவேன் என்று கே.பாலசந்தர் கூறியதற்காக சீக்கிரமாகவே தமிழ் பேசக் கற்றுக்கொண்டார் ரஜினி.

பில்லா, தனிக்காட்டுராஜா, போக்கிரிராஜா, முரட்டுக்காளை உள்ளிட்ட படங்கள் இவரை ஆக்‌ஷன் நாயகனாகவும், தில்லுமுல்லு, முத்து, போன்ற படங்கள் இவரை நகைச்சுவை நாயகனாகவும் கொண்டு வெளியான படங்கள். அதுமட்டுமின்றி பணக்காரன், வேலைக்காரன், படிக்காதவன், தர்மத்தின் தலைவன், மிஸ்டர் பாரத் ஆகியன ரஜினியின் வெற்றியையும், சூப்பர் ஸ்டாராக உயர உதவிய வெற்றிப் படங்கள்.

தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம், வங்காளம், ஆங்கிலம் ஆகிய மொழிகளிலும் சுமார் 170 படங்களில் நடித்துள்ளார். ஆங்கிலத்தில் இவர் நடித்து வெளியான பிளட் ஸ்டோன் 1988ல் வெளியானது.

தொடர்ந்து அண்ணாமலை, பாட்ஷா, படையப்பா என்று தொடர் வசூல் வெற்றி ரஜினியை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியது. இந்த வெற்றிகள் பாபா, குசேலன் படங்களின் மூலம் இறங்கினாலும், சந்திரமுகி, சிவாஜி, எந்திரன் படங்கள் மீண்டும் ரஜினியை உச்சத்தில் கொண்டுநிறுத்தியது. இனி கபாலியும், எந்திரன் 2.0வும் ரஜினியை ரசிகர்கள் கொண்டாட காத்திருக்கும் படங்களே... 

பெற்ற விருதுகள்:

1984ல் தமிழக அரசின் கலைமாமணி விருதும், 1989ல் எம்.ஜி.ஆர் விருதும் 2007ல் மகாராஷ்டிரா அரசின் ராஜ்கபூர் விருதையும் பெற்றார். 2011ல் எம்ஜிஆர்-சிவாஜி விருது மற்றும் 2000ல் பத்மபூஷன் விருதையும், இன்று 2016ல் பத்மவிபூஷன் (4-12-2016) விருதையும் வழங்கி இந்திய அரசு பெருமைப் படுத்தியுள்ளது.

முள்ளும்மலரும், மூன்றுமுகம், முத்து, படையப்பா, சந்திரமுகி, சிவாஜி உள்ளிட்ட ஆறு படங்களுக்காகவும்  தமிழ்நாடு மாநில விருதிற்கு தேர்வாகி, ஆறிலும் சிறந்த நடிகர் விருதினைப் பெற்றார் ரஜினி.

உலக ரசிகர்களின் நாயகனாக மாறிய ரஜினி!

ரஜினியின் முத்து படம் இந்தியாவைத் தாண்டி ஜப்பானிலும் அமோக வெற்றி. இந்திய மொழிப் படம் முதன் முறையாக ஜப்பானிய மொழிமாற்றம் செய்யப்பட்டு ஹிட் அடித்தது என்றால் அது முத்து தான்.

சந்திரமுகி படம் 200 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்தது நமக்குத் தெரியும், இந்தியாவைத் தாண்டி டர்கிஷ் மொழியிலும், ஜெர்மன் மொழியிலும் டப்பிங் செய்யப்பட்டும் ஹிட் அடித்தது.

கே.பாலசந்தர், மகேந்திரன், முத்துராமன் உள்ளிட்ட இயக்குநர்களின் பயிற்சிப் பட்டறையின் மூலம் நடிகராக மாறியவர் ரஜினிகாந்த். இயக்குநருக்கான நடிகராக மட்டுமில்லாமல், தயாரிப்பாளருக்குமான நடிகரே ரஜினிகாந்த்.

இவர் நடித்தபடத்தில் தயாரிப்பாளருக்கு நஷ்டம் ஏற்பட்டால், அதை ஈடுகட்ட இவரே பண உதவிகள் செய்வது, பொது நிகழ்ச்சிகளில் மேக்கப் இல்லாமல் தோன்றுவது, உள்ளதை உள்ளபடி சொல்லுவது உள்ளிட்ட குணங்களுமே இன்றும் ரஜினியை பலருக்குப் பிடிக்க காரணங்கள்.

இந்த நடிகரின் சகாப்தத்தில் இவ்வாறான விருதுகள் புள்ளியாக முடியாமல், கமாவாக இன்னும் பல காவியங்கள் சாதனைகளாக ரஜினி படைக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பம். 

வாழ்த்துகள் ரஜினிகாந்த்!

பி.எஸ்.முத்து

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்