வெளியிடப்பட்ட நேரம்: 11:20 (15/04/2016)

கடைசி தொடர்பு:19:34 (19/04/2016)

ஹோம்லி சிநேகா... இப்போ அவ்ளோ ஹாப்பி..!

இங்கனே ஒரு நிலபக்‌ஷி என்ற மலையாளப்படத்தின் மூலம்தான் அறிமுகமானார் சிநேகா. அதன்பின் விரும்புகிறேன் படத்தின்மூலம் தமிழில் அறிமுகமானாலும், திரைக்கு முதலில் வந்தது என்னவளேதான். அதன்பிறகு வந்த ஆனந்தம் படத்தின் ‘பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன்’ பாட்டு பட்டிதொட்டியெங்கும் பரவ, 'யார் இந்தப் பொண்ணு’ என்று தேடத்தொடங்கி பிரபலமாக ஆரம்பித்தார் சிநேகா.
 

அதே2001ல் தெலுங்கில் சிநேகா நடித்து வெளியான ’பிரியமைன நீக்கு’ (தமிழில், ‘காதல் சுகமானது’ என்றப் பெயரில் வெளியானது) சூப்பர் டூப்பர் ஹிட். அதன்பிறகு தெலுங்கிலும் பல படங்களில் நடித்தார். தொடர்ந்து பாலசந்தரின் பார்த்தாலே பரவசம் உட்பட தமிழிலும் கொடி கட்டிப் பறந்தார்.


சிநேகாவின் ஸ்பெஷாலிட்டியே, ‘Girl-Next-Door' முகம்தான். அதனால்தான் ஆனந்தம் படத்தின் குடும்பப் பாங்கான வேடத்திற்கு அத்தனை பொருத்தமாக இருந்தார். வசீகரா படத்திலும் கொஞ்சம் குறும்பு கலந்த வேடமாகவும் வசீகரித்தார். இவரது சிரிப்பழகினாலேயே ‘புன்னகை இளவரசி’ என்று அழைக்கப்பட்டார்.
 

பார்த்திபன் கனவு சிநேகாவின் பெயர் சொல்லும் படங்களில் ஒன்று. இரட்டை வேடம். ஒன்று கட்டுபெட்டியான மனைவி. இன்னொன்றில் மாடர்னான பெண். இரண்டிலும் வேறு வேறு பாணியைக் கடைபிடித்து இரண்டிற்கும் நியாயம் சேர்த்திருப்பார். அஜித், விஜய், கமல் என்று முன்னணி நாயகர்களோடு நடித்தாலும் தனக்கான பாணியை விட்டுக்கொடுக்காமல் நடித்திருப்பார்.
 

வசூல்ராஜா எம்பிபிஎஸ் ஜானகியை மறக்க முடியுமா? பாப்பூ! கல்லூரி டீன் மகள். அதே கல்லூரியில் மருத்துவ மாணவனாக சேர்ந்திருக்கும் கமலை காதலிப்பார். கமல் கல்லூரியை விட்டு வெளியேறிய கடைசி காட்சியில், மைக் பிடித்து Satire-ஆக தன் தந்தையிடம் பேசும் காட்சியில் தன் திறமையை சரியாக வெளிப்படுத்தியிருப்பார். 
 

ஆட்டோகிராஃபில் திவ்யாவாக வந்து இவர் பாடிய ஒவ்வொரு பூக்களுமே ஓர் உற்சாக டானிக் பாடல். சரி, இப்படி ஹோம்லியாக வலம் வந்து கொண்டிருந்தாலும் பவானி ஐபிஎஸ் போன்று வெரைட்டி காட்டவும் தவறவில்லை. பாண்டி படத்தில் இவர் ஆடிய ‘குத்து மதிப்பா’ குத்தாட்டம் வேறு சிநேகாவைக் காட்டியது. புதுப்பேட்டை படத்திலும் இவர் யாரும் ஏற்கத் தயங்கும் கதாபாத்திரத்தை ஏற்று சிறப்பாக நடித்திருப்பார்.
டப்பிங் ஆர்ட்டிஸ்டாக ‘உன் சமையலறையில்’ படத்தில் பிரகாஷ் ராஜுடன் நடித்த இவர் வேடத்தை வேறெந்த நடிகையும் ஈடு செய்திட முடியாது என்கிற அளவில் நடித்திருப்பார். டான்ஸ் ஷோக்களில் ஜட்ஜாகவும் வந்தார்.
 

பல நடிகர்கள், பல படங்கள், பலப்பல வேடங்கள் என்று திரையுலகை வலம் வந்து கொண்டிருந்தாலும், பெரிதாக எந்தக் கிசுகிசுவிலும் சிக்காமல் இருந்த இவர், 2009ல் அச்சமுண்டு அச்சமுண்டு படத்தில் பிரசன்னாவுடன் நடித்த பிறகு அவருடன் சேர்ந்து கிசுகிசுக்கப்பட்டார். ‘கிசுகிசுவெல்லாம் இல்லை. உண்மைதான்.. நாங்க கல்யாணம் பண்ணிக்கப்போறோம்’ என்று அறிவித்தார்.
 

ஒரு நடிகையின் திருமணம், விமரிசையாக ஒளிபரப்பட்டது இவருடையதாகத்தான் இருக்கும். விஜய் தொலைக்காட்சியில் ஒலிபரப்பி, ஊர் உலகமே வாழ்த்த, இப்போது விஹான் என்ற மகனுடன் ஹேப்பியாக இருக்கிறார்.
 

ஒன்றிரண்டு விளம்பரங்களில் இவர் நடித்தாலும், பெரிய திரைக்கு இப்போது வருவாரா என்பது சந்தேகமே. ஆனால் அவர் இடம், அப்படியேதான் இருக்கிறது.
.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்