நீங்கள் சினிமாவை நேசிப்பவரா...? இவரைத் தெரியுமா உங்களுக்கு?

நீங்கள் தீவிர சினிமா காதலரா ? குறிப்பாக திரையரங்கில் போய் சினிமா பார்ப்பவரா அப்படியானால் கண்டிப்பாக நீங்கள் இவரை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். சாமிக்கண்ணு வின்செண்ட், தென்னிந்தியாவில் சலனப்படத்தை திரையிட்ட முதல் தமிழர். இந்திய சினிமாவின் தந்தை தாதா சாகேப் பால்கே என்றால், நாம் பெருமையாக சொல்லிக்கொள்ளலாம் தென்னிந்திய திரையரங்குகளின் தந்தை சாமிகண்ணு என்று.

சாமிகண்ணு தம் வாழ்வை, ரயில்வே வரையாளராக துவங்கியவர். 1905 ஆம் ஆண்டு அப்போது திருச்சியில் ரயில்வேயில் பணியாற்றி கொண்டிருந்தார். ஃபிரான்சை சேர்ந்த டுபாண்ட் என்பவர் அப்போது ஊர் ஊராக சலனப்படங்களை திரையிட்டு கொண்டிருந்தார். இலங்கையிலிருந்து திருச்சி வந்த அவருக்கு, எதிர்பாராத விதமாக உடல்நிலை மோசமானது. அவரிடமிருந்து பிரொஜக்டரை ரூபாய் 2250 க்கு வாங்கிறார் (அப்போது அது மிகப்பெரிய தொகை). எடிசன் சினிமாடோகிராப் என்ற பெயரில் தென்னகத்தின் முதல் டூரிங் சினிமாவை திருச்சி சைண்ட் ஜோஃசப் கல்லூரி அருகே ஆரம்பித்து ‘Life of Jesus' என்ற படத்தை திரையிடுகிறார். அதற்கு கிடைத்த வரவேற்பு, அவரை மதுரை, திருநெல்வேலி, சென்னை, திருவனந்தபுரம், பம்பாய், லக்னோ, லாகூர், பெஷாவர் என பயணிக்க வைக்கிறது.

தேசங்கள் கடந்து பயணித்துவிட்டு மீண்டும், 1909 ஆம் ஆண்டு சென்னை வருகிறார். சென்னை பாரீஸ் கார்னர் அருகே டெண்ட் கொட்டாய் அமைத்து தொடர்ந்து சலனப்படங்களை திரையிடத் தொடங்குகிறார். அதுமட்டுமல்லாமல், பதே ப்ரொஜெக்டர் என்ற கம்பெனியின் விநியோகிப்பாளர் ஆகிறார். இந்த பதே ப்ரொஜக்டரின் வருகை தான் தென்னிந்திய சினிமா எட்டுக்கால் புலி பாய்ச்சலில் பாய காரணமானது.

பின், கோவையில் வெரைட்டி என்னும் திரையரங்கத்தை நிறுவினார். அது மட்டுமல்லாமல் பேலஸ், எடிசன் திரையரங்கத்தையும் ஏற்படுத்தி, ஹிந்தி, தமிழ், ஆங்கில படங்களை அப்போதே திரையிட்டார்.

வின்செண்ட் என்னும் மாயவித்தைக் காரன்:

இதை தாண்டி வின்செண்ட் ஒரு மாயாஜாலவித்தைகாரர். சலனப்படங்கள் இடைவெளியில் இவரே மாயாஜாலவித்தைகளை நிகழ்த்தி இருக்கிறார். இதை அப்போது கிறிஸ்துவ தேவாலயங்கள் கண்டித்து இருக்கிறது. வின்செண்ட் சாத்தானிடம் வரம் வாங்கி தான் இது போல் அற்புதங்களை நிகழ்த்துகிறார். இதை அவர் உடனே நிறுத்த வேண்டும் என்று எச்சரிக்கைவிடுத்தது. வின்செண்ட் நேரடியாக தேவாலயசபையிடமே சென்று, இதில் மந்திரம் ஏதும் இல்லை, அனைத்தும் தந்திரம் என்ற்ய் நிரூபித்து தொடர்ந்து மாயாஜாலவித்தைகளை தொடர்ந்து நிகழ்த்தினார்.

கோவைக்கு மின்சாரம் அளித்தவர்:

இதன் மூலம் சம்பாதித்து, பெரும் பணம் ஈட்டினாலும் மக்களுக்காக தன் பணத்தை செலவு செய்யத் தயங்காதவர். இப்போது வின்செண்ட் சாலை, என்றழைக்கப்படும் சாலையில் இருந்த அவரது அரண்மனைக்கு ஒப்பான வீட்டைப் பார்த்தாலே அவர் எப்படி வாழ்ந்தவர் என்று தெரியும், கோவைக்கு முதன்முதலில் மின்சாரம் அளித்தவர் சாமிக்கண்ணு வின்செண்ட். முதன்முதலில் தன் திரையரங்கத்திற்காக மின்சாரத்தை தயாரித்தவர், பின் அனைவருக்கும் மின்சாரத்தை வழங்கினார். அப்போது நம்மை ஆண்டு கொண்டிருட்ந்த ஆங்கில மக்களுக்கும் மின்சாரத்தை வழங்கினார் என்கிறார் வின்செண்டின் பேரம் வில்ஃபிரய் பால். 1933 ஆம் ஆண்டு, கல்கத்தா பயனீர் கம்பெனிவுடம் இணைந்து வள்ளி திருமணம் படத்தை தயாரித்தார் வின்செண்ட்.

கொண்டாட மறந்த தமிழ்ச் சமூகம்:


ஜே. சி. டேனியல் தமிழராக இருந்தாலும் அவரை மலையாளச் சினிமாவின் தந்தை என்று மலையாள கலை உலகம் கொண்டாடுகிறது; அவர் பெயரில் விருது தருகிறது. அவரை பற்றி சினிமாவும் எடுத்துவிட்டது. ஆனால், தென்னிந்தியாவிற்கே சினிமாவை அறிமுகப்படுத்திய தமிழனை, தமிழ் சமூகம் மறந்துவிட்டது. சாலைக்குப் பெயர் வைத்ததோடு சந்தோஷப்பட்டுக்கொண்டது.  கோவையில் வின்செண்ட் துவங்கிய வெரைட்டி ஹால், டிலைட் என்னும் பெயரில் இன்னும் இருக்கிறது. குறைந்தபட்சம் அதில் வின்செண்ட் பெயரில் சினிமா குறித்த அருங்காட்சியகத்தையாவது ஏற்படுத்த வேண்டும்.

இது தான் நாம் அந்த சினிமா பிதாமகனுக்கு செய்யும் உண்மையான அஞ்சலியாக இருக்கும்.

இன்று சாமிக்கண்ணு வின்செண்ட் பிறந்த நாள்.- மு. நியாஸ் அகமது

Do you like the story?

Please Appreciate the Author by clapping!