சத்யஜித்ரேவிடம் நாம் பாடம் கற்போமே!

டுமையான பொருளாதார நெருக்கடியில் ஒரு சிறிய பையன், நடு வயது குழந்தை மற்றும் ஒரு மூதாட்டியை வைத்து படம் எடுத்துக் கொண்டு இருக்கிறீர்கள். உங்களுக்கு அது முதல் படம், நீங்களே அதற்கு தயாரிப்பாளரும் கூட... பண நெருக்கடியால், படத்தின் படப்பிடிப்பு இடைவெளி விட்டு விட்டு நடக்கிறது. இடைவெளி விட்டு எடுப்பதால் அந்த பையனும், பெண்ணும் வளர்வதற்கு வாய்ப்புகள் அதிகம்... அது நிச்சயம் திரையில் பிரதிபலிக்கும். இன்னொரு பக்கம், அந்த மூப்பால் அந்த பாட்டி இறந்து விட்டால்  உங்களை எவ்வளவு பதற்றம் தொற்றிக் கொள்ளும்...? இவ்வளவு அழுத்தங்களுக்கு இடையே ஒரு படத்தை இயக்குவது எவ்வளவு கடினம்? எவ்வளவு மன உளைச்சலுக்கு ஆளாவீர்கள்?

படைப்பு நேர்மையாகவும், படைப்பிற்கு நேர்மையாகவும் இருத்தல்:

ஆனால், சத்யஜித் ரே இந்த அழுத்தங்கள் எதையும் தன் மனதிற்குள் அண்டவிடவில்லை. ஒரு ஜென் துறவி போல் அமைதியாக இருந்து நினைத்தை எடுத்தார். ஏறத்தாழ மூன்று ஆண்டுகள் பதேர் பாஞ்சாலி படப்பிடிப்பு நடந்தது. ஆனால் கொஞ்சமும் ரே மனம் தளரவில்லை. நம் படைப்பு உச்சப்பட்ச நேர்மையுடன் இருக்கும் போது, நாமும் அந்த படைப்பிற்கு நேர்மையாக நடந்து கொள்ளும் போது, நிச்சயம் எங்கிருந்தாவது உதவிகள் கிடைக்கும், நாம் எதிர்பார்க்காத கதவுகள் திறக்கும். அவருக்கும் திறந்தது. அரசு உதவி செய்தது.

படம் நியூயார்க்கில் திரையிடப்பட்டு, உலகின் அனைத்து கலை ஆளுமைகளின் பாராட்டையும் பெற்றது. அந்த எளிய கதையை உலகமே கொண்டாடியது, உச்சி முகர்ந்து பாராட்டியது.

சாலைகள் இல்லாத மலையின் மீது இருக்கும் காதலியின் வீட்டை கரடு முரடான பாதையில் சென்று காண்பது நிச்சயம் சுகமான அனுபவம் தான். மழையோ, வெயிலோ நம்மை நிறுத்திவிட முடியாது. ஆம் காதலியை பார்க்க போகிறோம் என்ற எண்ணமே எல்லா விதமான ஆற்றலையும், உத்வேகத்தையும் நமக்கு அளிக்கும். சத்யஜித் ரே விற்கு அது போல் தான் சினிமா. ஒரு நல்ல சினிமா எடுப்பதிலிருந்து அவரை எதுவும் தடுத்ததில்லை.

சுற்றுச்சூழல் தான் ஒரு மனிதனின் எதிர்காலத்தை எப்போதும் தீர்மானிக்கிறது. நம் மொழிகளில் நாகரீகம் அடையாத பழங்குடி மனிதர்கள் இன்னும் வெள்ளந்தியாக இருக்க, அவர்கள் செடிகளுடன், பூக்களுடன், மரத்துடன் நட்பு பாராட்டுவது தான் காரணம். அது போல் தான் ரேவை அவர் வளர்ந்த சூழல் செழுமை ஆக்கியது.

அவரது தாத்தா உபேந்திராகிஷோர் ராய் எழுத்தாளர், ஓவியர், பதிப்பாளர், தத்துவஞானி. ரேவின் அப்பா சுகுமாரும் குழந்தைகள் இலக்கிய எழுத்தாளர். ஆனால், ரேவிற்கு மூன்று வயதாக இருக்கும் போதே சுகுமார் இறந்துவிட்டார். அம்மா சுப்ரபா கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு இடையில் தான் ரேவை வளர்த்தார். அந்த வறுமை அவரின் எல்லா படங்களிலும் ஒரு பாத்திரமாக தொடர்ந்தது.

பைசைக்கிள் தீவ்ஸ் படத்தை பார்க்காமல் இருந்திருந்தால்:

ரே ஒரு ஓவியராக தான் தன் தொழில் வாழ்க்கையை துவங்கினார். ஒரு நந்நாளில் பிரென்ச் சுதந்திர சினிமாக்காரர் ஜீன் ரீனோர் சந்திக்காமல் இருந்திருந்தால், பைசைக்கிள் தீவ்ஸ் படத்தை பார்க்காமல் இருந்திருந்தால், நிச்சயம் அவர் ஓவியராகவும் பல உயரங்களை தொட்டு இருப்பார். பதேர் பாஞ்சாலி, அபு சான்சார், அபரஜித்தோ, சாருலதா போன்ற படங்கள் நமக்கு கிடைக்காமல் போய் இருக்கும்.

இலக்கியத்திற்கும் சினிமாவுக்குமான இணைப்பு பாலமாக இருந்தவர் ரே. இவர் முதல் படமான பதேர் துவங்கி பல படங்கள் நாவல்களை மையமாக கொண்டவை. சாருலதா படம் ரபிந்திரநாத் எழுதிய நஸ்தானிர் கதையை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டது.

சினிமாவை தான் குறுப்படங்கள் எடுப்பது, குழந்தைகளுக்கான பத்திரிக்கை நடத்துவது, எழுதுவது என்று எப்போதும் தன்னை தான் விரும்பிய துறையில் ஈடுப்படுத்திக் கொண்டே இருந்தவர் ரே. ரபிந்தரநாத் தாகூர் போல் படம் எடுத்தார், துப்பறியும் கதைகள் எழுதினார்.

பெருமை கொள்ளாதீர்கள்:

உலகின் அனைத்து சினிமா விருதுகளையும் வாங்கி இருக்கிறார். பெர்லினின் வெள்ளி கரடி பரிசு, 32 தேசிய விருதுகள், மாஸ்கோ சர்வதேச படவிழாவில் சினிமாவிற்கான இவரது பங்களிப்பை போற்றும் விதமாக சிறப்பு விருது, வெனீஸில் தங்க சிங்கம் விருது, கேன்ஸ் படவிழாவில் விருது, ஆஸ்கர் விருது என உலகின் அனைத்து முக்கிய விருதுகளையும் அவர் வாங்கி இருக்கிறார். ஆனால், அவர் எதற்காகவும் பெருமை கொண்டதில்லை. தம் குழந்தையை எந்த பிரதிபலனும் பார்க்காமல் நேசிக்கும் தாய் போல் தான் அவர் சினிமாவை நேசித்தார்.

முதல் படத்தில் எப்படி பல சிக்கல்களை எதிர்கொண்ட போது சலனப்படாமல் இருந்தாரோ, அது போல் தான் பல வெற்றிகள், விருதுகளை குவித்த போதும் அமைதி காத்தார். தன்னுள் இருக்கும் ஒரு குழந்தையின் அப்பாவித்தனத்தை மரணிக்க விடாமல் இறுதி வரை காத்துக் கொண்டே வந்தார். தன் படைப்பிற்கு மிக விசுவாசமாக இருந்தார்.

இது நாம் அனைவரும் ரேவிடமிருந்து கற்க வேண்டிய பாடம்.

இன்று சத்யஜித் ரே பிறந்த நாள்.

- மு. நியாஸ் அகமது

Do you like the story?

Please Appreciate the Author by clapping!