இந்தியாவின் முதல் சினிமா வெளியான அன்று என்ன நடந்தது? #ராஜா ஹரிச்சந்திரா | What Happen an Indian First Movie Release Time ? #Raja harishchandra

வெளியிடப்பட்ட நேரம்: 15:33 (03/05/2016)

கடைசி தொடர்பு:15:40 (03/05/2016)

இந்தியாவின் முதல் சினிமா வெளியான அன்று என்ன நடந்தது? #ராஜா ஹரிச்சந்திரா

இந்திய சினிமா சகாப்தத்தின் வயது 103 முடிந்து, 104ல் அடியெடுத்துவைக்கிறது. ஆம், இந்தியாவின் முதல் முழு நீளத் திரைப்படமான “ராஜா ஹரிச்சந்திரா” வெளியான நாள் இன்று. 1913ஆம் ஆண்டு மே 3ம் தேதி கருப்பு வெள்ளையில் புராணக்கதையாக இந்தியமக்களுக்கு அறிமுகமான மந்திரமில்லா மாயலோக ஆச்சரியமே இந்த முதல் திரைப்படம்.

நாடகங்களை மட்டுமே பார்த்துப் பழகிய இந்திய மக்கள், முதன் முதலாக ராஜா ஹரிச்சந்திரா படத்தை வெள்ளைத்திரையில் பார்த்த போது, அவர்களின் மனநிலை என்னவாக இருந்திருக்கும்?  அளவிடமுடியாத ஆச்சரியங்களால் நிறைந்திருந்திருக்கக்கூடும். இணையம், செல்போன், மல்டிஃப்ளக்ஸ் திரையரங்குகள், நவீன சவுண்ட் சிஸ்டம் என்று அறிவியலின் உச்ச சுகங்களைக் கண்டுகொண்டிருக்கும் நாம், அனைத்தையும் மறந்து, 1913ல் மக்களின் மனநிலை என்னவாக இருந்திருக்கும் என்று யோசித்துப் பார்ப்போம்.

திரையில் காணும் முதல் திரைப்படம் என்ற அனுபவமே அலாதியான ஓர் ஆச்சரியம் தான் அவர்களுக்கு. நடித்துக்கொண்டிருக்கும் நடிகர்களை திரையில் காணும்போது, ஓடிவரும் காட்சியில், திரையைக் கிழித்து நம் மேல்வந்து விழுந்துவிடுவார்களோ என்று அஞ்சியிருப்பார்கள். படத்தில் நெருப்பு சார்ந்த காட்சிகள் இருந்திருந்தால், அச்சத்தோடும், அதிர்ச்சியோடும் கண்டுகளித்திருப்பார்கள். வீடியோவிற்கு என தனி ரீல் பெட்டிகள், ஒலிக்கு தனியாக ஆம்ப்ளிஃபயர் என்று அனைத்துமே வித்தியாசமாகத்தானே தெரிந்திருக்கும். இன்றைய தலைமுறை காணாத, சினிமாவின் அறிமுகநிலை அது.

இந்த சினிமா வரலாற்றுக்கு அடிகோலாக, சினிமா மேல் ஆர்வத்தையும், சினிமாவிற்கு கலைஞர்களை ஈர்க்க ஆதாரமே இந்த ராஜா ஹரிசந்திரா தான். இந்தியாவின் முதல் முழுநீள மெளனப்படம் (Silent Film). 40 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்தப் படம் மராத்திய மண்ணில் தயாரானது. இப்படத்தை இந்திய சினிமாவின் தந்தையான தாதா சாகிப் பால்கே எழுதி, இயக்கி தயாரிக்கவும் செய்திருந்தார்.

ஆரம்ப காலகட்டத்தில் வெளியான திரைப்படங்கள் பண்பாடு சார்ந்தும், கலாச்சாரம் சார்ந்தும், மக்களின் மனநிலைக்கு ஏற்ற படங்களாகவே உருவானது. அதாவது புராணங்கள், இதிகாசங்களைச் சார்ந்த நாடக பாணியிலான படங்களே உருவானது. நாடகங்களின் தாக்கங்கள் நிறைந்திருந்த காலகட்டத்தில் வெளியான ராஜா ஹரிச்சந்திரா படமும், புராணத்திலிருந்து எடுக்கப்பட்ட கதைக்கருவே.

நீதிநேர்மை தவறாத மன்னராக ராஜாஹரிச்சந்திரா, தன்னுடைய ராஜ்யத்தை துறந்து, தன் மனைவி, மகனுடன் சென்று முனிவர் விஸ்வாமித்ரருக்கு இனி ராஜ்யம் ஏற்பதில்லை என்று சத்தியம் செய்துகொடுப்பது போன்றதொரு கதைக்களமே திரைப்படம். இந்தப் படத்தை எடுத்துமுடிக்க 7 மாதங்களும், 21 நாட்களும் ஆகியிருக்கிறது.

அதுமட்டுமின்றி படத்திற்கான டைட்டில் ஆங்கிலம், மராத்தி மற்றும் ஹிந்தியில் போடப்பட்டிருக்கிறது.  மராத்தியின் பிரபல நாடகநடிகரான தத்தாத்ரேயா தமோதர், ராஜா ஹரிச்சந்திர மன்னராக நடிக்க, ராணியாக நடித்தவரும் ஓர் ஆண் கலைஞரே. அந்த நேரத்தில் பால்கேவிற்கு பெண் நடிகர் கிடைப்பதில் சிக்கல் இருந்த சமயம். அதையும் தாண்டி படத்தை சவால்களுக்கு மத்தியில் எடுத்துமுடித்தார் பால்கே.

இந்தப் படத்தை முதன்முறையாக இன்றைய தினம் பாம்பே  Coronation Cinema என்ற இடத்தில் திரையிடப்பட்டது. அந்தசமயம் மக்கள் கூட்டம் அரங்கத்தையும்  தாண்டி வீதிவரைக்கும் சென்றதாக சொல்லப்படுகிறது. அந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து,  பட அச்சுகள் தயாரிக்கப்பட்டு கிராமப் பகுதிகளுக்கும் திரையிட்டுக் காட்டினார் இயக்குநரான பால்கே. 

ராஜா ஹரிச்சந்திரா படத்தின் வெற்றி பால்கேவை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியது. பல படங்களை இயக்கவும், தயாரிக்கவும் இப்படம் வழிகாட்டியாக அமைந்தது.

பால்கேவிற்கு மட்டுமல்ல, இந்திய சினிமா இந்த அளவிற்கு வளர்ச்சியின் உச்சமாக, உலக சினிமா தரத்திற்குச் செல்ல, இப்படமே ஆதாரம்.

இந்திய சினிமாவின்  104வது பிறந்த தினத்தை கொண்டாடுவோமாக!

பி.எஸ்.முத்து

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்