தமிழ்சினிமாவின் ஜெட் கேட்ஜெட்ஸ்! | Gadgets in Tamil cinema

வெளியிடப்பட்ட நேரம்: 09:09 (06/05/2016)

கடைசி தொடர்பு:11:58 (06/05/2016)

தமிழ்சினிமாவின் ஜெட் கேட்ஜெட்ஸ்!

கால மாற்றத்துக்கு ஏற்ப சினிமாவும் விஞ்ஞான ரீதியா முன்னேறிக்கொண்டே வருகிறது. அதனால் இன்னமும் லெட்டர்ல முகம் தெரியற மாதிரி படிக்கறதோ, ஃபோன்கூட பண்ணிக்காம பார்க்காம இருக்கற மாதிரியெல்லாமோ இப்ப படம் பண்றதில்ல. எல்லாமே கேட்ஜெட்ஸ் மயம்தான். என்னென்ன படங்கள்ல என்னென்ன கேட்ஜெட்ஸ்னு ஒரு சிலதைப் பார்க்கலாம்..

1. பென் டிரைவ்:

2007 ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான "பில்லா" திரைப்படத்தில், பென்டிரைவிற்கு ஒரு முக்கியப்பங்கு கொடுக்கப்பட்டிருக்கும். இடைவேளைக்கு சற்று நேரம் முன் முதல், படத்தின் இறுதி வரை அந்தப் பென்டிரைவை ஒட்டியே படம் நகரும். ரஜினி நடித்த பில்லா திரைப்படத்தில் சிகப்பு டைரிக்கு பதிலாக, அதன் ரீமேக்கான இதில் பென்டிரைவாக மாற்றியிருப்பார். 

2. துப்பாக்கிகள்:

துப்பாக்கியில் இத்தனை ரகமா, ஒவ்வொரு ரகத்திற்கும் ஒவ்வொரு சிறப்பம்சமா என வியக்க வைத்த திரைப்படம் வட்டாரம். கதாநாயகன் ஆர்யா கைத்துப்பாக்கிகள் விற்கும் ஒரு நிழல் உலக அடியாளாக வலம் வருவார். ஒவ்வொரு துப்பாக்கியைப் பார்க்கும் பொழுதும் அதன் அம்சங்களை பற்றி விவரிப்பதும் தமிழ் திரைப்படங்களுக்கு புதிதே.

3. டைம் மெஷின்:

சென்ற வருடம் வெளியான இன்று நேற்று நாளை திரைப்படம் சற்றே அட்வான்சாக சென்று இதுவரையில் தமிழ் திரையுலகம் பார்த்திராத ஒரு கேட்ஜட்டை அறிமுகம் செய்தது. டைம் மெஷின்- காலத்தை கட்டுப்படுத்தும் கருவி. இதை வைத்துக் கொண்டு செய்யும் லூட்டி பயங்கரமானது. நேரத்தோடு விளையாடினால் ஏற்படும் விபரீதங்களும் இதில் காட்டப்பட்டிருக்கும்.


4. ஸ்பை கேமரா:

ரஜினியின் லிங்கா. இதில் ஒரு பத்திரிக்கையாளாராக வரும் அனுஷ்கா அவர் வரும் சீன்கள் அனைத்திலும் ஸ்பை கேமராக்களை கர்ணன் கவச குண்டலத்தோடு இருப்பது போல வைத்திருப்பார். அதை வைத்து அவர் செய்யும் சேட்டைகள் ரசிக்கத்தக்கதாக இருக்கும். பல கோல்மால்களை கேமராக்கள் வைத்து அம்பலப் படுத்துவார் அனுஷ்கா.

5. செல் ஃபோன்:

என்ன தான் பல திரைப் படங்களிலும் சர்வ சாதாரணமாக காட்டப் பட்டாலும் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் திரைப்படத்தில் ஒரு செல்ஃபோனைப் பற்றியும், அழைப்புகள் வந்து செல்லும் முறை பற்றியும் விவரமாக இயக்குநர் கூறி இருப்பார். இது மட்டும் அல்லாமல் கதாநாயகன் கண்டுபிடித்ததாக கூறி ஒரு கேட்ஜட் கடையே காட்டி இருப்பர் இயக்குநர்.


6. தொலைக்காட்சிப் பெட்டி:

விஞ்ஞானம் மற்றும் பாட்டிக் கதைகள் இரண்டையும் ஒன்றிணைத்து யாவரும் நலம் என ஒரு திரைப்படம் சில வருடங்களுக்கு முன் வந்தது. கொத்தாகக் கொல்லப்பட்ட ஒரு குடும்பத்தின் ஆவி தொலைக்காட்சிப் பெட்டிக்குள் வசிக்கும். புதியதாக அங்கே குடியேறும் கதாநாயகன் குடும்பம் தொலைக்காட்சியில் வரும் ஆவிகளை சீரியல் என நினைத்துப் பார்க்க, கதாநாயகன் மட்டும் அதில் ஏதோ மர்மம் இருப்பதை உணர்ந்து அதை கண்டறிவார். மனிதர்களுக்கு பேய் பிடித்து பார்த்து சலித்த தமிழ் ரசிகர்களுக்கு இது ஒரு வித்தியாசமான படமாக அமைந்தது.

7. ஸ்பை மைக்:

ஓர் இயக்குநர், கதையை தேடிச்செல்ல என்னவெல்லாம் கஷ்டப்பட வேண்டும் என்பதை விவரிக்கும் படம் ஜிகர்தண்டா. ரத்தம் தெறிக்கத் தெறிக்க ஒரு கேங்க்ஸ்டர் கதையை தேடி செல்லும் கதாநாயகன், ஒரு ரவுடி கும்பலைக் கண்டுபிடித்து, அதைப் பற்றிய உண்மைகளை ஆராய முயல்கிறார். அந்த கும்பலில் ஒரு ரவுடியுடன் நெருங்கி பழகும் அவர், ஒரு ஸ்பை மைக்கை அவரது ஃபோனில் இணைத்து அந்த கும்பலை வேவு பார்க்க கொடுக்கிறார். அந்த மைக்காலேயே அவர், மாட்டுவது தான் படத்தின் சுவாரசியமே.

8. ரெட் சிப்:

திரைப்படம் முழுவதும் ரோபோக்களை சுற்றியே இயங்கும் கதைக் களம் கொண்ட திரைப்படம் எந்திரன். இருந்தாலும் திரைப்படத்தின் சுவாரசியம், இயந்திரத்திற்க்கு ஒரு சிவப்பு சிப் பொருத்தியவுடனே தான் அதிகரிக்கிறது. அந்த ஒரு சிப் பொருத்துவதனால் அந்த இயந்திரத்திற்க்கு 100 மனிதர்களின் அழிக்கும் சக்தி வருவதாகவும், அதனால் தன் ஆசையை நிறைவேற்றிக் கொள்ள எந்த எல்லைக்கும் அந்த ரோபோ செல்வதாகவும் கதை திரிக்கப்பட்டிருக்கும்.

9. லேப்டாப்:

அமெரிக்காவிலிருந்து திரும்பும் சாஃப்ட்வேர் பொறியாளர் மக்களுக்கு உதவ நினைக்க, அதை தடுக்க அவர் சொத்து அனைத்தையும் பறிக்கிறார் வில்லன். இடைவேளை வரை சிவாஜி திரைப்படம் இப்படிச் செல்ல, பிறகு பெரிய திருப்பத்தைக் கொள்கிறது. கருப்பு பணம் வைத்திருக்கும் அனைவரிடமும் மிரட்டி பாதி பணத்தை பிடுங்கி கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்றி உதவுவார் கதாநாயகன். அதைப் பற்றிய தகவல்கள் அனைத்தையும் ஒரு லேப்டாப்பில் பதுக்கி வைக்கும் கதாநாயகன் வாய்ஸ் ரெகக்னிஷனில் மட்டுமே திறக்கும் அளவிற்கு பாதுகாப்புகளை செய்து வைக்கிறார். இறுதியில் கதாநாயகன் உருவாக்கிய டிரஸ்டை அழிக்க அந்த தகவல்களை லேப்டாப்பிலிருந்து எடுக்கப் போய் மொத்த தகவல்களையும் அழித்து விடுவர் ஐ டி அதிகாரிகள்.

10. வாட்ச்:

இன்றைக்கு வெளிவரும் ‘24’ வாட்ச்தான் என்கிறது ட்ரெய்லர். இன்னும் படம் பார்க்கல.. ஸோ ரஜினி, சிவாஜிகணேசன் நடித்த படிக்காதவன் படத்துல வர்ற வாட்சைப் பார்க்கலாம். ரஜினி மீது ஒரு கொலைப் பழி விழுந்து விட, அதிலிருந்து அவரை விடுவிக்க முயற்சிக்கிறார் சிவாஜி கணேசன். என்னென்னவோ ஆதாரங்களை கண்டுபிடித்தாலும் செல்லாமல் போக, இறுதியில் போலீசார் சார்பில் எடுக்கப்பட்ட புகைப்படத்தில் வில்லனின் கைக் கடிகாரம் காட்டும் நேரத்தை வைத்து, தனது சகோதரனை விடுவிப்பார்.


11. டிரான்ஸ்மிட்டர்

ஓர் அங்குலத்திற்கும் குறைவான அளவுள்ள ஒரு கருவியால் இவ்வளவு விஷயங்களை செய்ய முடியுமா என வியக்க வைத்த திரைப்படம் தனி ஒருவன். தோட்டாவால் அடிபட்டு மருத்துவமனையில் இருக்கும் கதாநாயகனை வேவு பார்க்க, வில்லன் ஒரு மருத்துவரிடம் ட்ரான்ஸ்மிட்டர் ஒன்றை கொடுத்து அதை உடலுக்குள் வைத்து தைத்து விடச் சொல்லுவார். பிறகு அவரது நடவடிக்கைகளை உல்லாசமாக காதில் ஹெட்ஃபோனை மாட்டிக் கொண்டே வேவு பார்ப்பார் வில்லன்.

12. கம்ப்யூட்டர்:

கணினிப் புரட்சி உலகமெங்கும் நடந்து கொண்டிருந்த சமயத்தில் வெளிவந்த திரைப்படம் விக்ரம். கதாநாயகனாக வரும் கமலஹாசன், பக்கத்து நாட்டுக்கு தீவிரவாதிகளால் கடத்தப்பட்டிருக்கும் ராக்கெட்டை கண்டுபிடிக்க அந்த நாட்டிற்கு செல்வார். அந்த ராக்கெட் ஏவப்பட்ட பிறகு,  அதை செயலிழக்கச் செய்ய முடியாது என அறிந்து, அதன் பாதையை மாற்றி கடலில் விழுமாறு செய்வார் கமல். கிளைமாக்ஸில் மட்டுமே காட்டப்பட்டாலும், கணினியால் இதெல்லாம் செய்ய முடியுமா என வியக்க வைத்த திரைப்படம்.

கம்ப்யூட்டர்களின் மற்றொரு பரிணாமத்தை நமக்கு காட்டிய திரைப்படம் ஜீன்ஸ். பிரஷாந்த், ஐஸ்வர்யா ராய் நடிப்பில் வெளியான இந்த திரைப்படத்தில், காதலர்களுக்கு சாதாரணமாக இருக்கும் தடைகளை விலக்கி, புதிய நூதன சிக்கலாக "இரட்டை பிறவி" என்பதை முன்வைத்துள்ளார் இயக்குநர். கதாநாயகி உண்மையில் இரட்டை பிறவி இல்லை, ஆனால் மாப்பிள்ளை வீட்டாரை நம்ப வைக்க முப்பரிமாண ப்ரொஜெக்டரையும் ஒரு கம்ப்யூட்டரையும் வைத்து செய்யும் லூட்டி, ஒரு பாடலில் மட்டுமே வந்தாலும் அலாதியானது.

13. ஐ ஃபோன்:

பல செல்ஃபோன்கள் இருந்தாலும், ஐஃபோனுக்கு தனி மவுசு.  ஒரு மெடிக்கல் ரெப் ஒருவருக்கு டீக்கடையில் ஐஃபோன் கிடைக்கிறது அதனால் அவருக்கு ஏற்படும் மாற்றங்களை விவரிக்கும் படமே வடகறி. போலி மருந்துகள் தயாரிக்கும் ஒருவர் தனது ஐஃபோனை தொலைத்து விடுகிறார். அது கதாநாயகன் கைக்கு கிடைக்கிறது. அதை வைத்துக் கொண்டு பல விஷயங்கள் செய்கிறார் நாயகன். பிறகு அண்ணனின் நியாயமான பேச்சால் மனம் மாறும் அவர், போனை திரும்ப கொடுக்கச் செல்லும் பொழுது வேறு சிக்கலில் மாட்டுகிறார். அந்த போனால் ஏற்ப்படும் சிக்கலிலிருந்து அவர் எப்படி மீள்கிறார் என்பதே கதை.

14. கேமரா:

சமீபத்தில் DSLR கேமரா மீது அனைவருக்கும் இருக்கும் நாட்டத்தை உருவாக்கியதில் கோ படத்திற்க்கு ஒரு பெரிய பங்கு உண்டு. ஒரு தினசரி பத்திரிக்கையில் போட்டோகிராஃபராக வரும் ஜீவா தனது கேமராவை வைத்து செய்யும் ஜாலங்களால் நக்சல்களை பிடிப்பது முதல், ஆட்சி மாற்றம் வரை அனைத்தையும் செய்கிறார். ஒரு சாதாரண போட்டோகிராஃபரால் என்ன செய்துவிட முடியும் என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்க, இப்படி ஒரு திரைப்படம் வந்தது அனைவருக்கும் அவர்கள் மீது நல்ல மரியாதையை கொண்டு வந்தது.

15. டிராக்கிங்க் சிப்:

ராணுவ வீரரின் வாழ்வை நேர்த்தியாக கொண்டு சேர்த்த திரைப்படம் துப்பாக்கி. மும்பையில் பதுங்கி இருக்கும் தீவிரவாதியை அழிக்க நினைக்கும் கதாநாயகன், அந்த கும்பலில் கீழிருந்து ஒவ்வொருவராக அழித்துக் கொண்டு வர, முக்கியத் தலைவன் வரும் பொழுது சிக்கிக் கொள்கிறார். அவரை தீவிரவாதிகள் தனிமையான ஒரு இடத்திற்கு அழைத்துச் செல்ல, அவர் இருக்கும் இடத்தை கண்காணிக்க உடலுக்குள் டிராக்கிங்க் சிப்பை செலுத்திக் கொள்கிறார். அதை வைத்து அவரை அவரது நண்பர்  காண்காணிக்க, பிறகு அந்த கும்பலிலிருந்து எப்படி தப்புகிறார் என்பதே படத்தின் கிளைமேக்ஸ்.பா. அபிரக்ஷன் (மாணவப் பத்திரிக்கையாளர்)

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்