Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தனுஷிடம் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய சில விஷயங்கள்!

சில ஆண்டுகளுக்கு முன்பு பார்த்த பேட்டி. பேட்டியாளர் கேட்கிறார்,

“உங்கள் தகுதிக்கு மீறி அனைத்து அங்கீகாரங்களும் கிடைக்கிறது என்று நினைக்கிறீர்களா...?”

அதற்கு அந்த நடிகர், “இல்லை. கிடைக்கும் அனைத்து அங்கீகாரங்களுக்கும் என்னை தகுதிப்படுத்திக் கொள்ள என் வேலையில் என்னை முழுமையாக அர்ப்பணித்து கடுமையாக உழைக்கிறேன்.” என்று மிகுந்த நம்பிக்கையுடன் பேட்டியளிக்கிறார்.

பிறகொரு பேட்டியில், “உங்களுக்கு இந்தி தெரியாது, அவர்கள் கலாசாரமும் புரியாது. கொஞ்சம் சறுக்கினாலும் சிராய்ப்புகள் அதிகமாகும். ஏனெனில் ’ராஞ்சனா’ படத்தில் இந்தியின் முன்னணி நடிகையும் நடித்திருந்தார்... உங்களுக்குப் பயமாக இல்லையா...? எப்படி நடிக்கச் சம்மதித்தீர்கள்...?”

புன்னகையை படரவிட்டப்படி, “நான் எனது துவக்க காலத்தில் இங்கேயே பல அவமானங்களை சந்தித்து இருக்கிறேன். அவமானங்கள் எனக்கு எப்போதும் புதிதல்ல. ஆனால், அந்த அவமானங்கள் தான் என்னை பட்டை தீட்டியது. என்னை செழுமைப்படுத்தியது... நான் ஹிந்திக்கு அஞ்சி இயற்கையாக வந்த ஒரு வாய்ப்பை மறுக்கிறேன் என்றால், என்னை நானே தாழ்த்தி கொள்கிறேன் என்று அர்த்தம். பிறர் நம்மை அவமானப்படுத்துவதைவிட, நம்மை நாம் அவமானப்படுத்தி கொள்வது தான், நம் ஆன்மாவிற்கு செய்யும் அசிங்கம். அதை நான் செய்ய விரும்பவில்லை”

ஆம். உண்மையில் இது நடிகர்களின் கிளிஷேதனமான பதில் இல்லை. அவர் நடிக்க துவங்கிய காலத்திலிருந்து அவரைப் பின் தொடர்பவர்களுக்குத் தெரியும். அவர் எத்தனை அவமானங்களை சந்தித்து இருக்கிறார் என்று. ஒரு காலத்தில், அவர் உருவம் எள்ளி நகையாடப் பட்டது.

தனுஷ் நடித்த முதல் படம் ‘துள்ளுவதோ இளமை’ கிளாமராலும், அதிர்ஷ்டத்தாலும் தான் தப்பிடுச்சு.முதல் படத்தோடு காணாமல் போயிடுவார் என்று திரை உலகம் கிசுகிசுக்கவெல்லாம் இல்லை.. நன்றாக உரக்கவே பேசியது. ஆனால், அவர் எந்த அவமானங்களுக்கும் அஞ்சவில்லை. அப்போது அவருக்கு வயது 20, அந்த வயதிலேயே மிகவும் முதிர்ச்சியாக எதையும் மனதில் ஏற்றி கொள்ளாமல் கடுமையாக உழைத்தார். அவரது இரண்டாம் படம் ‘காதல் கொண்டேன்’ மெகா ஹிட். இப்போது விமர்சகர்கள், ஊடகங்கள் அவரை எள்ளி நகையாடிய திரை உலகத்தினர், அவரை, அவரது நடிப்பை பிரம்மிப்பாக பார்க்கிறார்கள். இனி அவரை தவிர்க்க முடியாது என்று புரிந்து கொள்ள துவங்குகின்றனர்.

ஆனாலும், அவரது உடல்வாகு சார்ந்த எள்ளல்கள் தொடர்ந்த வண்ணமே தான் இருந்தது. அவர் இந்த எள்ளல்களை எப்போதும் பொருட்படுத்தவில்லை. தன் இலக்கு என்ன...? அதற்காக எவ்வளவு தன்னை அர்பணிக்க வேண்டும் என்பதில் மிக தெளிவாக இருந்தார். கடுமையாக உழைத்தார். சுவாரஸ்ய கதைகளம் இல்லாத படத்தில் கூட மிகச் சிறப்பான நடிப்பை வெளிபடுத்தி இருப்பார். நடிப்பு மட்டுமல்லாமல் தம் துறை சார்ந்த அனைத்து விஷயங்களையும் கற்றார். பாடல் எழுதி Poettu ஆனார். பாடல் பாடினார். தன் அதீத உழைப்பால் ஐஐஎம் மாணவர்களுக்கு வகுப்பெடுக்கும் அளவிற்கு விஸ்வரூபம் எடுத்து நிற்கிறார்.  அந்த ஒல்லிப்பிச்சான் நடிகரிடமிருந்து நாம் கற்க உண்மையில் ஏராளமான விஷயம் இருக்கிறது. அவர் வாழ்வே நம்மை உற்சாகப்படுத்தும் புத்தகம் தான்.

நாம் நம் துறை சார்ந்து எவ்வளவு அவமானங்களை சந்திக்கிறோம். வாய்ப்பிற்காக எவ்வளவு ஏங்குகிறோம். ஆனால். நம்மை நாம் கோரும் வாய்ப்பிற்காக தகுதிப்படுத்திக் கொள்கிறோமா...? வைரமுத்து ’சிற்பியே உன்னைச் செதுக்குகிறேன்’ நூலில் எழுதி இருப்பார், “நம் நாட்டில் ஆசிரியன் என்பவன் கற்றலை நிறுத்தியவனாக இருக்கிறான்...” என்று. அது போல் தான் நாம் அனைவரும் இருக்கிறோம்.

வாய்ப்பு கிடைக்கும் வரை ஓடும் நாம், வாய்ப்பு கிடைத்தவுடன் நமக்கு நாமே ஒரு பெரிய கதவை மாட்டி ஒரு பெரிய பூட்டை தொங்கவிட்டு கொள்கிறோம். அப்படி இல்லாமல் எப்போதும் ஏதேனும் ஒன்றை கற்றுக் கொண்டிருக்கும் தனுஷின் வெற்றியிலிருந்து நாம் சில விஷயங்களைக் கற்கலாம்.

உண்மையில் நீங்கள் விரும்பும் இலட்சியத்தை அடைய விரும்புகிறீர்கள் என்றால் அவர் செய்தது போல் உங்களை நீங்கள் நம்புங்கள். அவமானப் பேச்சுகளை உதாசீனம் செய்யுங்கள்.

தம்மபதத்தில் கூறி இருப்பது போல், “பிறன் மந்தை ஆடுகளை எண்ணி உங்கள் வழியை மறந்து விடாதீர்கள்”. உங்கள் பாதையை தீர்மானித்து கொள்ளுங்கள் அல்லது நீங்களே உருவாக்குங்கள். அதைத்தான் அவர் செய்தார். அவர் பிறருடன் தன்னை ஒப்பிட்டு தன்னை தானே சிறுமைப்படுத்தி கொள்ளவில்லை. அவர் பாதையில் அவர் பயணிக்கிறார்.

உங்களுக்கு வரும் சறுக்கல்களிலிருந்தும் வாய்ப்பைத் தேர்ந்தெடுங்கள். கொலைவெறி பாடலை அவர் முதலில் இணையத்தில் விடுவதாகவே இல்லை. எடிட் செய்யப்படாத ரா வெர்ஷன் லீக்காகி பரவ தொடங்கியவுடன்தான், இவர்கள் மெருக்கேற்றி வெளியிடுகிறார்கள். அது சூப்பர் டூப்பர் ஹிட். அது போல் எதிர்பாரா தடங்கள், சிக்கல்களை உங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

அடிக்கடி ஏதேனும் ஒரு புதிய விஷயத்தைக் கற்றுக் கொள்ளுங்கள். அவர் இன்றும் இந்தி கற்கிறார். எப்போதும் இளையவர்களுடன் நெருக்கமாக இருங்கள். அப்போது தான் டிரெண்ட் தெரியும். உங்களை அதற்கேற்றார் போல் புதுப்பித்து கொள்ள முடியும். தனுஷ் இதையெல்லாம் செய்கிறார். அதனால் தான் அவரால் அவர் மைனஸ்களை, பிளஸ் ஆக்க முடிந்தது.

குறிப்பாக, அவர் அப்பா, அண்ணன் எல்லாம் இயக்குநர்கள் அதனால் அவர் உச்சத்தை தொட்டார் என்று நமக்கு நாமே ஒரு சப்பைக்கட்டை கட்டி ஏமாற்றிக் கொள்ள வேண்டாம். இந்த திரையுலகிலேயே பல முன்னணி நடிகர்கள், இயக்குனர்களின் பிள்ளைகள் தங்களை நிரூபிக்க முடியாமல் இன்னும் தடுமாறுகிறார்கள். உண்மையில் வாய்ப்பு கிடைப்பதைவிட அதை தக்க வைப்பதுதான் அதிக உழைப்பைக் கோருவது. அவர் அதை தக்க வைத்தது மட்டுமல்லாமல், அடுத்த கட்டத்திற்கும் நகர்ந்து உள்ளார்.
உண்மையில் நாம் வாய்ப்புகளையும், வெற்றிகளையும் விரும்புகிறோமென்றால் அவர் சொல்லியது போல் அதற்கு நாம் நம்மை தகுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

ஆம். நேர்மையான வெற்றிக்கு வேறு வழிகள் இல்லை!

- மு. நியாஸ் அகமது

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்