Published:Updated:

மிஸ் யூ ஹீரோயின்ஸ்! #EverGreenHeroines

Vikatan
மிஸ் யூ ஹீரோயின்ஸ்! #EverGreenHeroines
மிஸ் யூ ஹீரோயின்ஸ்! #EverGreenHeroines

ந்தாரை வாழவைக்கும் தமிழ்நாட்டில், நம் கோலிவுட்டில் என்ட்ரிகொடுத்து கிரேட் பிக் அப் ஆகி டோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் வரை என ஹிட் அடித்த ஹீரோயின்களின் லிஸ்ட் இது!

ஹேமமாலினி

தமிழ் அழகி. ஆனால், 'இது சத்தியம்' படத்தில் ஒரு பாடலில் ஆடியது, 'ஹேராம்' படத்தில் நடித்தது தவிர, தமிழ் படங்களில் அவரைக் காண நமக்குக் கொடுத்தவைக்கவில்லை. மொத்தத் அழகையும் அப்படியே அள்ளிக்கொண்டது இந்தி உலகம். எங்கிருந்தாலும் வாழ்க!

மாதவி

‘அக்கட’ பூமியில் பிறந்து அனைத்து மொழிகளிலும் அசத்திய காந்தக் கண்ணழகி. ஏக் துஜே கேலியேவில் துணை நடிகையாக நடித்து அனைவரையும் கவர்ந்த திறமைசாலி. ‘அழகே அழகு தேவதை’ என்று கமலும், ‘ராகங்கள் பதினாறு உருவான வரலாறு’ என்று ரஜினியும் பாட,  கண்ணதாசனின் வரிகளால் வர்ணிக்கப்பட்ட கதாநாயகி இப்போது  நியூஜெர்சியில் குடும்பத்தலைவி!

ஸ்ரீதேவி

80களில் தமிழ்நாட்டை குத்தகைக்கு எடுத்தவர். 'லீவுக்கு ஊருக்குப் போயிட்டு வர்றேன்' என்று சொல்லிச் சென்ற காதலிக்கு,லீவிலேயே கல்யாணம் முடிந்து டாட்டா காட்டிச் செல்வதுபோல, இந்தியில் என்ட்ரி கொடுத்த நம் 'மயிலு', பிறகு தமிழுக்குத் திரும்பவே இல்லை. அங்கு பீக் ஸ்டார் ஆகி, பாலிவுட்டையே புகுந்த வீடாகவும் ஆக்கிக்கொண்டார். 'புலி' படத்தில் ஆறு கோடி சம்பளம் பெற்று அம்மா கேரக்டரில் அவர் ரீஎன்ட்ரி கொடுத்தபோது, ரசிகர்கள் அவ்வளவாக ஏற்றுக்கொள்ளவில்லை. இது அட்டகாசமான மயில்!

சுஷ்மிதா சென்

பிரபஞ்ச அழகிப் பட்டம் வென்றவர், 'சுஷ் தஸ்தக்', 'ஸோர்' என இந்தியில் இரண்டு படங்கள் நடித்திருந்தாலும் அங்கீகாரம் பெரிதாக இல்லை. 'ரட்சகன்' படத்தின் மூலம் தமிழுக்கு வந்து, அதிரடியாகச் சொக்கவைத்த இந்த சோனியாவை கையில் மிதக்கும் கனவாக நாம் கொண்டாட, இந்தியில் அவரின் அடுத்தடுத்த பாய்ச்சல்களில் எங்கோபோய்விட்டார் இந்தப் பூனைக்கண் அழகி. நல்லாருங்க!

தபு

'காதல் தேசம்' படத்தில் ஸ்டைல் வாக் வந்தவரை, 'ரெண்டு அழகான பையனுங்க லவ் பண்ற அளவுக்கு இது அழகான பொண்ணு இல்லையே' என்று தமிழ்நாட்டு டீக்கடை பென்ச்களில் மார்க் போட்டோம். அதற்குப் பின் இந்தியில் அவர் கிளாமர் ஃபிளேவர் கொடுக்க, 'அந்தப் பொண்ணா இது' என்று அண்ணாந்து பார்த்துக்கிடந்தோம். 'இருவர்', 'கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்', 'சிநேகிதியே' என அவ்வப்போது நமக்கு ஆறுதல் சொல்லிச் சொல்கிறார், படைகொண்டு நடக்கும் இந்த மன்மதச் சிலை! என்ன சொல்லப் போகிறாய்!

நந்திதா தாஸ்

தான் நடித்த 'ஃபயர்' படத்தின் மூலம் இந்தியாவையே ஃபயர் ஆக்கியவர். 'அழகி'யாக அவரை தங்கர் நமக்கு தூக்கிவந்து கொடுத்தபோது, தமிழ்நாடே கருப்பழகி காதலில் தத்தளித்தது. இந்தியில் க்ளாஸ் நடிகையாக அப்ளாஸ் அள்ளிக்கொண்டிருந்தாலும், 'கன்னத்தில் முத்தமிட்டால்', 'நீர்ப்பறவை' என, 'நீங்கதான் வேணும்' என்று அவ்வப்போது அவரை அழைத்துவருகிறார்கள் நம் டைரக்டர்கள். கருப்பு நெறத்தழகி!

ஐஸ்வர்யா ராய்

உலக அழகியாகிவிட்டு, வீட்டில் அமைதியாக காபி சாப்பிட்டுக்கொண்டிருந்தவரை, 'இருவர்' மூலம் முதன் முதலில் திரைக்கு அழைத்து வந்தார் மணிரத்னம். முழித்துக்கொண்ட பாலிவுட் 'நம்ம வீட்டுக்கு வந்துடும்மா' என்று அள்ளிச்செல்ல, இந்தியாவின் டாப் மோஸ்ட் ஹீரோயின் ஆனார். 'கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்', 'ராவணன்', 'எந்திரன்' என அவ்வப்போது அவரைக் கண்ணில் காட்டினாலும், நம்மூர் பட்ஜெட்டுக்கு கட்டுப்படாத ஹீரோயின் ஆகிவிட்டவர் அமிதாப் வீட்டின் மருமகள். நெற்றித்தளர நீர்வடிஞ்சது நெஞ்சவிட்டு அகலலை அழகி!

ப்ரியங்கா சோப்ரா

'தமிழன்' படத்தில் விஜய்யுடன் கண்டாங்கி கட்டி ஆடினார்; சொந்தக் குரலில் ஒரு பாடல் பாடினார். 'ஆனாலும் இந்தப் புள்ள ரொம்ப ஒல்லியா இருக்கே' என்றோம். அடுத்து பாலிவுட்டில் அடித்துத் தூள்கிளப்பியர், இப்போது ஹாலிவுட்வரை சீறிப்பாய்ந்துகொண்டிருக்கிறார்! எல்லாம் கோலிவுட் ராசி கண்ணு!

இலியானா

'கேடி' படத்தின் மூலம் தமிழில் என்ட்ரி கொடுத்த இலியானாவை 'நோ தேங்க்ஸ்' என்று நாம் அனுப்பிவைத்துவிட, அந்திராவில் அதிக சம்பளம் வாங்கும் நாயகியாக எடுத்தார் விஸ்வரூபம். 'நண்பன்' பட்டத்தில் பெல்லி டான்ஸில் ரசிக்கவைத்த இடையழகி, மீண்டும் ஆந்திரா ரிட்டர்ன் ஆகிவிட்டார். மீண்டும் மீண்டும் வா!

- ஷாலினி நியூட்டன் -

Vikatan