நயன்தாராவைத் தெரியும், தமிழ் சினிமாவின் முதல் நாயகியைத் தெரியுமா? | Do we know about Tamil Cinema's first heroine

வெளியிடப்பட்ட நேரம்: 15:59 (13/05/2016)

கடைசி தொடர்பு:10:29 (14/05/2016)

நயன்தாராவைத் தெரியும், தமிழ் சினிமாவின் முதல் நாயகியைத் தெரியுமா?

சாவித்ரி, சரோஜாதேவி, ஸ்ரீதேவி, மாதவி, ஜோதிகா, சிம்ரன், நயன்தாரா, த்ரிஷா இப்படி தமிழ் சினிமாவைக் கலக்கிய, கலக்கி வரும் ஹீரோயின்களுக்கெல்லாம் இவர் தான் முன்னோடி என்று கூட சொல்லலாம்.

டி.பி.ராஜலட்சுமி... தமிழ் சினிமாவின் முதல் பேசும் படமான 'காளிதாஸ்' படத்தின் கதாநாயகி. தஞ்சாவூரில் பிறந்த ராஜலட்சுமிக்கு எட்டு வயதிலேயே திருமணம் நடந்திருக்கிறது. வரதட்சணைக் கொடுமையால் மீண்டும் தந்தை வீட்டுக்கே திரும்பிய ராஜலட்சுமிக்கு அடுத்த பேரதிர்ச்சியாக அவரது அப்பாவும் மரணம் அடைய, அம்மாவுடன் திருச்சி வந்து சேர்ந்தார்.

வாழ்வாதாரமே பாதிக்க, தினம் தினம் சாப்பிடக்கூட வழியின்றி தன் அன்னையுடன் கஷ்டப்பட்டு வந்த டி.பி.ராஜலட்சுமி வீடுகளில் வேலைகள் செய்து, தன் அம்மாவுடன் வாழ்க்கை நடத்தி வந்தார். அங்கேதான் 'நாடகத் தந்தை' என அழைக்கப்படும் சங்கரதாஸ் சுவாமிகளின் அறிமுகம் கிடைக்க , அங்கே பயிற்சி பெற்று 11 வயதில் நாடக நடிகையாக மாறினார்.

ராஜலட்சுமி நடித்த முதல் நாடகம் 'பவளக் கொடி’. டி.பி.ராஜலட்சுமி நடிகை மட்டுமல்ல; சிறந்த பாடகியும்கூட! "இந்தியர்கள் நம்மவர்களுக்குள் ஏனோ வீண் சண்டை...", "இராட்டினமாம் காந்தி கைபாணமாம்" என இவர் பாடிய இந்த தேச பக்திப் பாடலுக்காக ஆங்கிலேய அரசால் கைது செய்யப்பட்டிருக்கிறார். 1917-லேயே ஊமைப்படமான ‘கீசகவதம்’ படத்தில் நடித்த ராஜலட்சுமி, பிறகு மீண்டும் நாடகங்களில் கவனம் செலுத்தி வந்தார். ராஜலட்சுமிக்கு ரசிகர்களும், பத்திரிகையாளர்களும் இணைந்து பாராட்டு விழா நடத்தி ’சினிமா ராணி’ என பட்டம் கொடுத்து கவுரவித்தனர்.

தன்னுடன் இணைந்து நடித்த டி.வி.சுந்தரத்தைத் திருமணம் செய்து கல்கத்தாவிலே தங்கிவிட்டார். அங்கே திரௌபதி, அரிச்சந்திரா மற்றும் குலேபகாவலி (1935) போன்ற படங்களில் நடித்தார். பெண்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்த முதல் நடிகையும் இவர் தான். டி.பி.ராஜலட்சுமியும் அவரது கணவர் டி.வி.சுந்தரமும் இணைந்து ஒரு பெண் குழந்தையைத் தத்தெடுத்து, பெண் சிசுக் கொலைக்கு எதிரான விழிப்புணர்வைக் கொடுத்து, அதற்காகப் போராட்டங்களும் நடத்தினர்.

இவர்கள் இருவருக்கும் ஒரு பெண் குழந்தையும் பிறக்க அந்தக் குழந்தைக்கு மிஸ்.கமலா எனப் பெயரிட்டு அந்தப் பெயரிலேயே 'மிஸ்.கமலா’ என ஒரு படமும் தயாரித்து, இயக்கி, நடித்து வெளியிட்டார். அந்தப் படம் பெரிய அளவில் ஹிட் ஆகவில்லை என்றாலும், டி.பி.ராஜலட்சுமியை முதல் பெண் இயக்குநராக தமிழில் மாற்றியது.

1938-ம் ஆண்டு 'மதுரை வீரன்' என்னும் படத்தையும் இயக்கிய ராஜலட்சுமி, எம்.ஜி.ஆர், என்.டி.ஆர் என பெரும் நடிகர்கள் தமிழ் சினிமாவை ஆக்கிரமிப்பதற்கு முன்பே 'டி.பி.ஆர்' என்னும் பெயரில் தமிழ் சினிமாவில் மாஸ் காட்டினார். 23 படங்களில் நடித்த டி.பி.ஆர் தான் தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் முதல் நடிகையாக இருந்து கலைமாமணி பட்டம் பெற்று, நயன்தாரா, ஹன்சிகா, அனுஷ்கா என அத்தனை ஹீரோயின்களுக்கும் முன்னோடி!

ஷாலினி நியூட்டன் -

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்