Published:Updated:

நான் வாங்கற அஞ்சுக்கும் பத்துக்கும் இது தேவையா? - ஒரு ரசிகன் குரல் #NothingButGoundamani

Vikatan
நான் வாங்கற அஞ்சுக்கும் பத்துக்கும் இது தேவையா? - ஒரு ரசிகன் குரல் #NothingButGoundamani
நான் வாங்கற அஞ்சுக்கும் பத்துக்கும் இது தேவையா? - ஒரு ரசிகன் குரல் #NothingButGoundamani

த்தியான நேரம். உண்ட மயக்கத்தில் தேர்தலில் தோற்ற வேட்பாளர் போல தலை தொங்கிப் போய் உட்கார்ந்திருந்தேன். மொபைல் விர்ரடித்தது. ஸ்கீரினில் மீனாட்சி அண்ணன். 'சாயங்காலம் ஆறு மணிக்கு ஒரு புரோமோஷன்டா. தலைவர் படம். மறக்காம வந்துடு. இன்னிக்கு உன் ஆசை நிறைவேறும்' என்றார். தலைவரை பார்க்கப் போகிறோமா என குருதி குத்தாட்டம் போட்டது.

அந்த தலைவர் கவுண்டமணி. ஆசை - அவரோடு போட்டோ எடுப்பது. அவரது  ’நீ வாங்கற அஞ்சுக்கும் பத்துக்கும் இது தேவையா’ என்று அவர் டயலாக்கையே மனசு கேட்டாலும்.. ஆசை விடவில்லை.

நல்லவேளையாக அன்று காலை ஷிஃப்ட். 'உன் தொகுதிக்கு அடிக்கடி தேர்தல் நடக்கணும்டா' என ஷிஃப்ட் போட்ட நண்பனை மனதார வாழ்த்தினேன். எத்தனை மணிக்கு கிளம்பலாம்? இந்த சட்டை போட்டோல நல்லா தெரியுமா? என்றெல்லாம் ஏகப்பட்ட கேள்விகள் உள்ளே. இதிலேயே நேரம் ஓடிவிட நான்கு மணிக்கு கிளம்பினேன்.

கவுண்டர் எனக்கு அறிமுகமானது டிக்கிலோனா என்ற சர்வதேச விளையாட்டின் மூலமாகத்தான். என் டவுசர் காலத்தில் விவரம் இருந்திருந்தால் ஒலிம்பிக்கில் அதைச் சேர்க்க சொல்லி உண்ணாவிரதம் இருந்திருப்பேன். பின்னர் அறிமுகமான சேதுபதி ஐ.பி.எஸ் சமையல்காரரும், உள்ளத்தை அள்ளித்தா தில்லாலங்கடியும், மேட்டுக்குடி மாமாவும், கரகாட்டக்கார வித்வானும், நடிகன் கிழவரும் என் பால்யம் நிறைத்தார்கள். கல்லூரிக் கூட்டத்தில் இந்த சுமார் மூஞ்சி குமாரும் தனித்துத் தெரிய கவுண்டரின் கவுன்ட்டர்கள் கைகொடுத்தன. என்னைச் சுற்றி இருக்கும் சோமபானம் அருந்தும் கும்பலுக்கு அவரின் காமெடிகள்தான் கம்பெனியே. அந்த வகையில் சவ்வு கிழியும் சென்டிமென்ட் புலம்பல்களில் இருந்து என்னைக் காப்பாற்றிய ஆபத்பாந்தவான் அவர். வேலை கிடைக்காமல் வெட்டியாய் இருந்த காலத்தில் 'நான் எல்லாம் எங்க எப்படி இருந்திருக்க வேண்டியவன் தெரியுமா?' என சொல்லி மனசை தேற்றித் திரிந்தேன். வேலை கிடைத்ததும், 'அந்த சிஸ்டம் என்ன விலை? இந்த ஆஃபிஸ் என்ன விலை?’ என தெனாவட்டாய் சுற்றியது கிளைக்கதை. வேலைக்கு சேர்ந்த இடத்தில் அவரைப் பற்றிக் கேள்விப்பட்ட தகவல்கள் சில, அவர்மீது அதிக ப்ரியத்தை உண்டு பண்ணியது.

இப்படி விரல் சூப்பிய காலம் முதல் 'ஏழு கழுதை' காலம் வரை எனக்கு எங்கும் எதிலும் கவுண்டர் இருந்ததால் அவரை அவ்வளவு பிடிக்கும். மீடியாவிற்கு வந்த இத்தனை நாட்களில் பேட்டா, போனஸ், அப்ரைசல் எல்லாம் தாண்டி அவரோடு எடுத்துக் கொள்ள விரும்பும் போட்டோதான் எனக்கு பெரிய விஷயமாக இருந்தது. மீனாட்சி அண்ணன் இந்தத் துறையில் பழம் தின்று கொட்டை போட்டு மரம் வளர்த்து விவசாயம் பார்த்தவர் என்பதால் அவரை நச்சரித்துக் கொண்டே இருப்பேன். அவர் தலைவரோடு நிறைய போட்டோக்கள் எடுத்துள்ளார் என்பது கூடுதல் காரணம். 'அவர் அவ்வளவு சீக்கிரம் யாரையும் பாக்கமாட்டாருடா' எப்படியாவது ஒருநாள் கூப்பிட்டு போறேன்' என சமாதானம் சொல்லுவார். தொடர் நச்சரிப்பின் பலன் இன்று கைகூடியிருக்கிறது. பலரின் காதலுக்கு தூது போன கவுண்டர் மீதான என் காதலுக்கு தூது மீனாட்சி அண்ணன்.

5.45. விழா நடக்கும் இடத்திற்குள் நுழைந்தேன். புரோமோஷனுக்கே ஃபர்ஸ்ட் ஷோ அளவிற்கு கூட்டம் கூடியிருந்தது. அண்ணனை கண்டுபிடித்தேன். 'வாடா வாடா, அவர் எப்படியும் இங்கதான் முதல்ல வருவார்,. இன்னிக்கு போட்டோ எடுக்குற' என அழைத்துப் போய் ஓர் அறையில் உட்கார வைத்தார். அங்கே ஏற்கெனவே இருந்த மூத்த பத்திரிக்கையாளர்கள் சிலர் தலைவரின் ஆஃப் ஸ்கிரீன் கலாய்ப்புகளை எல்லாம் சொல்லி எனக்குள் இருந்த ரசிகனை வெறியேற்றினார்கள்.

ஒவ்வொரு தடவை கதவு இழுபடும்போதெல்லாம் படபடப்பாய் திரும்பி ஏமாந்தேன். ஒரு கட்டத்தில் அது அனிச்சை ஆகியிருந்தது. நாம் பரபரப்பாய் இருக்கும் நேரங்களில்தான் இயற்கை மம்மிக்கு நம் மேல் பாசம் பொங்கும். கவனித்திருக்கிறீர்களா? அடிவயிற்றில் வாட்டர் ஓவர்லோட் ஆகிகொண்டிருக்க, எங்கே எழுந்து செல்லும் கேப்பில் அவர் வந்துவிடுவாரோ என முட்டு கொடுத்து ஒரு தினுசாய் உட்கார்ந்திருந்தேன். திடீரென ஒருவர் வந்து. 'லேட்டாயிடுச்சுனு அவர் நேரா ஸ்டேஜுக்கு போறாரு' என சொல்ல மெய்யாலுமே அரங்கத்திற்குள் பறந்தேன்.

வெளியே இருந்த மொத்தக் கூட்டமும் உள்ளே குடியேறி இருந்தது. வாசல் பக்கம் ஒண்ட இடம் கிடைக்க எட்டி எட்டி பார்த்துக் கொண்டிருந்தேன். புசுபுசுவென முடி வளர்த்த ஒருவன் என் முன்னால் நின்று மேடையை மறைத்தான். 'ஒதுங்கி நில்லுடா ஃபவுன்டெயின் தலையா' என அவர் பாணியில் சொல்ல நினைத்து என் பாடி கண்டிஷனை நினைத்து பம்மினேன். ஆரவாரமாய் உள்ளே வந்தார் தலைவர். மேடைக்கு கீழ் அமர வைத்து பாடல்கள், ட்ரெய்லரை போட்டுக் காட்டினார்கள். பின் அவர் மேடையேற நானும் அண்ணனும் பாய்ந்தோம் இடம் பிடிக்க. எனக்கு அவர் அமர்ந்த இடத்தில் சீட். முதல் வெற்றி.

மேடையில் ஒவ்வொருவரும் பேச பேச, ரன்னிங் கமென்ட்ரி கொடுத்து காலி பண்ணிக்கொண்டிருந்தார் தலைவர். 'அது யாருப்பா அவன் தலைல பொக்கே வச்சுட்டு வந்து நிக்கிறான்' என அவர் என் சமீபத்திய எதிரியை நக்கல் செய்ய - தன்யனானேன். ஆர்வக் கோளாறில் ஓர் ஆள் மேடையேறி கவிதை பாட, ‘இவன் எதுக்கு இப்ப கூட்டத்துக்குள்ள பாம்பு புகுந்த மாதிரி கத்துறார்?’ என கிண்டலடித்தார். காது ஜில்லென்றது. கடைசியாய் மைக் வாங்கி அவர் கொஞ்சமே கொஞ்சம் பேச, எனக்கு ஏமாற்றம். நிகழ்ச்சி முடிந்ததும் போட்டோவுக்காக மேடையேறினேன். எனக்கு முன்னால் நூறு பேர். 'அட. ஒண்ணுக்கு போய்ட்டு வந்தேன்யா' என மன்னன் பாணியில் முண்டியடித்து முன்னேறினேன். தொட்டுவிடும் தூரத்தில் அவரை நெருங்க, சட்டென கிளம்பி மின்னல் வேகத்தில் வெளியே சென்றுவிட்டார்.

ப்ச்! ஏமாற்றம் அப்பட்டமாய் முகத்தில் தெரிந்திருக்க வேண்டும். மீனாட்சி அண்ணன் அருகில் வந்து தட்டிக் கொடுத்தார். 'உன் கல்யாணத்துக்குள்ள அவரை நீ மீட் பண்ற. நான் பொறுப்பு' என சத்தியம் செய்தார். 'அம்மா தாயே! ஏதாவது பொண்ணு இருந்தா போடுங்கம்மா' என அவர் ஸ்டைலிலேயே சுற்றிக்கொண்டிருக்கிறேன்.

ஓ மை கல்யாணமே! ஐ யம் வெயிட்டிங்!
மை டியர் தலைவா! ஐ யம் கம்மிங்!

(பி.கு) இந்த பிறந்த நாளுக்கும் வாழ்த்து அனுப்பிவிட்டு 'தலைவர் வரட்டும்' என காத்திருக்கிறேன்.

-நித்திஷ்

Vikatan