கவுண்டமணியின் ‘ஆஃப் ஸ்க்ரீன்’ கிண்டல்கள்! #NothingButgoundamani

வுண்டமணி!

இவருடைய பிறந்தநாள் குறித்து பல கருத்துக்கள் இருந்தன. தனக்கு மார்ச் 18 பிறந்தநாள் என்று தவறாக  நினைத்து பலர் அன்று வாழ்த்து சொல்லியதாக ஒரு திருமண விழாவில் கூறியுள்ளார். இன்று (மே 25) இவருக்கு 77ஆவது பிறந்தநாள்!

‘சும்மா தலைவன் - ரசிகன்னு எல்லாம் சொல்லி ஏமாத்திக்காதீங்க’ என்று இவர் சொன்னது உட்பட  இவரைப் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் பலவற்றைப் படித்திருப்பீர்கள்.  திரையில் இவர் கலாய்த்ததை விட, திரைக்கு வெளியே இவரது கலாய்ப்புகள் துறையில் மிகப் பிரபலம். அவற்றில் சில:

1. வீரநடை திரைப்படத்தின் ஷூட்டிங்கில் உதவி இயக்குனர்  ஷாட் ரெடி என்ற அழைக்க, வர முடியாது என்று கோபப்பட்டு சொல்லியிருக்கிறார் இவர். அவரோ பதறிப்போய் என்னவென்று கேட்க, "கையில இருக்கிறது இது ஒரே படம். இதையும் நடிச்சு தீர்த்துட்டா  எப்படி?"  என்று சீரியஸாக காமெடி செய்திருக்கிறார். கையில் படமே இல்லை என்றாலும் அதை நகைச்சுவையாக காட்டிக்கொள்ள இவரால் மட்டுமே முடியும்.

2. சத்யராஜும், இவரும் அமர்ந்திருக்க ஒரு டைரக்டர் வந்து ‘அடுத்த படத்துல நான் ஹீரோவா நடிக்கப்போறேன். ஒரு ஸ்கூல் விழால எல்லாரும் என்னை பார்த்து ஹீரோ மாதிரியே இருக்கீங்கன்னு சொன்னாங்க’ என்றிருக்கிறார். ஒருநொடிகூட தாமதிக்காமல் இவர் கேட்டாராம்:  ‘ப்ளைண்ட் ஸ்கூலா?”

3. ரம்பா ஒருமுறை மேக் அப் மேன் வராமல் காத்திருந்தபோது, கவுண்டமணி ‘எனக்குத் தெரிஞ்ச ஒரு மேக்கப் மேன் ஆழ்வார்ப்பேட்டைல இருக்காரு. செமயா மேக்கப் போடுவார்.. வரச்சொல்லவா?’ என்று சொல்லியிருக்கிறார். யூனிட் மொத்தமும் அதிர்ந்து சிரிக்க, ரம்பா புரியாமல் விழித்தாராம். பிறகு கமலைத் தான் சொல்கிறார் என்றதும் அவர் சிரித்த சிரிப்பில் ஷூட்டிங் அரை மணி நேரம் தாமதமானதாம்.

4. மலையாள இயக்குநர் ஒருவர் தமிழில் முதன்முதலாக படம் இயக்குகிறார். கவுண்டமணியிடம் வந்து ஒரு காட்சியை விளக்கி. ‘இந்த ஒரு ஷாட்ல நான் பாரதிராஜாவைத் தாண்டிடுவேன்ல?” என்று கேட்டிருக்கிறார். ‘எப்ப? அவரு குனிஞ்சுட்டிருக்கறப்பவா?” என்று கவுண்ட்டர் கொடுத்திருக்கிறார் மகான்!

5. கவுண்டமணி வீட்டுக்கு பத்திரிகை கொடுக்கச் சென்றிருக்கிறார் டைரக்டர் ராமதாஸ். நாய் ஒன்று வர, ‘என்னண்ணே பேரு?” என்று கேட்டிருக்கிறார். “நாய்தான். வேற என்ன? அதுக்கெல்லாம் பேரு வெச்சுட்டு அத ஞாபகம் வெச்சுட்டு.. அடப்போப்பா” என்றாராம் இவர்.

6. ஒரு பிரபல நடிகையின் தம்பி நடிக்க வந்தபோது, அவர் கவுண்டமணியிடம் கேட்டிருக்கிறார். ‘அண்ணே.. எப்டிண்ணே.. என் தம்பி நல்லா வருவாப்டியா?’

கவுண்டமணி: ‘கண்டிப்பா வருவான்ம்மா.. ஷூட்டிங் முடிஞ்ச உடனே வீட்டுக்கு வந்துடுவான்’

7. ஓர் இயக்குனர் பேன்ட்டை நெஞ்சுவரை போடுவார். அவரைப் பார்த்ததும் இவர் அருகிலிருந்த சத்யராஜிடம் சொன்னாராம்: ‘இந்தாளு சட்டைத்துணி அரை மீட்டரும், பேன்ட் ரெண்டரை மீட்டரும் எடுப்பார் போல’

8. ஒரு  படத்தின் டப்பிங்கில் அந்தப் படத்தின் ஹீரோ கலந்து கொண்ட செய்தி வருகிறது. பேப்பரைப் பார்த்ததும் அருகிலிருந்தவரிடம் கேட்டாராம்: ‘அவரு படத்துக்கு அவர்தான்யா டப்பிங் குடுக்கணும். இதுல என்னத்தக் கண்டாங்க!”

 9. தேவர்மகன் ப்ரிவ்யூ காட்சிக்கு கவுண்டமணியும் சென்றிருக்கிறார். படம் முடித்ததும் சிவாஜி, ‘அந்த மணியைக் கூப்டு. எதுனா கிண்டல் பண்ணுவாரே’ என்றிருக்கிறார். கவுண்டமணியும் போய் நின்று ‘படம் நல்லாருக்குங்கய்யா’ என்றிருக்கிறார். சிவாஜியும் விடாமல், ‘நான் கேக்கறேன்னு சொல்றியா.. எதுனா நக்கல் விடுவியே?’ என்று கேட்க, ‘எல்லாஞ்சரிங்கய்யா.. அவ்ளோ கெத்தா படம் முச்சூடும் வந்துட்டு, கடசீல ஒரு பச்சக் கொழந்த மிதிச்சதுல பொசுக்னு போய்ட்டீங்களேய்யா’ என்றாராம்.

ஹேப்பி பர்த்டே மகான்!


-பரிசல் கிருஷ்ணா

Do you like the story?

Please Appreciate the Author by clapping!