டைட்டில் ரேஸில் ரஜினி பட டைட்டில்கள் முந்துவது ஏன்?


பாக்யராஜின் தூறல் நின்னு போச்சு படம் வெளியான சமயம் சினிமா துறையில் இருந்த ஒரு பெரியவர் இப்படிச் சொன்னார்;  'படத்துக்கு நெகட்டிவ்வா டைட்டில் வைக்கக் கூடாதுங்க, இப்பப் பாருங்க தமிழ்நாடு பூராம் ’தூறல் நின்னு போச்சு.. தூறல் நின்னு போச்சு’ன்னு சொல்லி இந்த வருசம் மழையே பெய்யலை”

எம்.ஜி.ஆர் பெரும்பாலும் தன் படங்களுக்கு பாசிட்டிவ்வாகவே டைட்டில் வைப்பார். எதிர்மறை டைட்டில்கள் மிகக் குறைவாகவே இருக்கும். அவரின் பாதையில் பயணிக்கும் ரஜினிகாந்த் ஆரம்ப காலங்களில் தன் படங்களுக்கு அவ்வப்போது நெகடிவ்வாகவும் டைட்டில் வைத்துக் கொண்டிருந்தார். பொல்லாதவன், போக்கிரிராஜா, நான் மகான் அல்ல, படிக்காதவன் என்று. அவர் நடித்த காளி பட ஷூட்டிங்கின் போது தீ விபத்து ஏற்பட்டு பெரிய சேதம் ஏற்பட்டது. அப்போது சினிமா துறையினர் பலரும் உக்கிரமான டைட்டில் வைத்தாலே இப்படித்தான் நடக்கும் என்று சொல்லி அதற்கு பரிகாரமும் செய்யச் சொன்னார்கள்.

பகுத்தறிவுவாதியான கமல்ஹாசனுக்கும் இந்தச் சிக்கல் ஏற்பட்டது. சிவாஜி புரொடக்‌ஷன்ஸ் தயாரித்து கமல்ஹாசன் நடிப்பில் வெளியான ‘கலைஞன்’ படத்திற்கு முதலில் வைக்கப்பட்ட பெயர் ‘இந்திரஜித்’. படப்பிடிப்பின் போது கமல்ஹாசனுக்கு விபத்து ஏற்பட்டு, காலில் அடிபட்டது. இந்திரஜித் ராசியில்லாத பெயர் என்று சொல்லி ‘கலைஞன்’ என மாற்றினார்கள். திருப்பதிசாமி இயக்கத்தில் விஜய்காந்த் நடித்த  ‘நரசிம்மா’ படத்தின் படப்பிடிப்பு முடிவதற்குள் இயக்குநர் கார் விபத்தில் சிக்கி உயிரிழந்தார். உக்கிரமான டைட்டில் என்று பேசிக் கொண்டார்கள். எனவே டைட்டில்களுக்கு திரைத்துறையில் பலமான சென்டிமென்ட் உண்டு.

இப்போதைய படக்குழுக்களின் முதல் நோக்கமே எப்படியாவது ரசிகனை தியேட்டருக்குள் இழுத்து வந்துவிடவேண்டுமென்பதும், இப்படி ஒரு படம் தயாரிப்பில் இருக்கிறது என அவன் மனதில் பதியச் செய்வதும்தான்.  அதற்காக ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர், மோஷன் பிக்சர், டீசர், ட்ரெய்லர், யூ டியூப் பாடல் வெளியீடு எனப் பலவகையிலும் சிந்திக்கிறார்கள்.

இதில் ஒரு வகைதான் ஏற்கனவே மக்கள் மனதில் பதிந்த ஒரு டைட்டிலை தங்கள் படங்களுக்கு வைப்பது. அதுவும் இளைய தலைமுறை நடிகர்கள் நடிக்கும் போது, அந்த ரசிகர்களுக்கும் அது அப்பீல் ஆகும், அதற்கு முந்தைய தலைமுறை ரசிகர்களுக்கும் படத்தின் மீது ஓர் ஆர்வத்தைக் கொடுக்கும். மேலும் சினிமாக்காரர்களுக்கு மிகவும் அவசியமான சென்டிமென்ட் காரணமும் சேர்ந்து கொள்ளும். ‘வெற்றி பெற்ற படங்களின் டைட்டிலோடு இறங்கினால் நமது படமும் வெற்றி பெறும்’ என்று.
 
ரஜினியின் படங்கள்தான் இப்போது அதிக அளவில் ரீ மேக் செய்யப்படுகின்றன. எனவே படங்களுக்கு அதே பெயர் வைப்பது தவறில்லை. பில்லா, முரட்டுக்காளை, மாப்பிள்ளை, தில்லுமுல்லு ஆகிய ரஜினியின் ரீமேக் படங்களுக்கு அதே பெயர்தான். படத்தின் உள்ளடக்கத்திற்கும் இந்தப் பெயர் தான் சரியாக இருக்கும்.
ஆனால், ‘உள்ளடக்கத்தைற்கு இந்தப் பெயர்தான் சரியாக இருக்கும் அதனால் தான் இந்தப் பெயர் வைத்தோம்’ என்று சொல்ல முடியாதபடிக்கே பல டைட்டில்களும் வைக்கப்படுகின்றன.

ரஜினி படங்களின் டைட்டில் என்பது மிக ஆழமாக தமிழக மக்களின் மனதில் பதிந்த ஒன்று. முந்தைய தலைமுறை அந்தப் படங்களை நேரடியாக பார்த்தது என்றால் இளைய தலைமுறை சாட்டிலைட் தொலைக்காட்சி மூலம் அடிக்கடி அவர் படங்களைப் பார்த்து மனதில் பதித்துக் கொண்டது. எனவே உள்ளடக்கத்திற்கு சம்பந்தமே இல்லையென்றாலும் அந்தப் பெயரை வைப்பது படம் வெற்றி பெற உதவும் என நினைக்கிறார்கள்,

இவ்வாறு ரஜினி படங்களின் டைட்டிலை வைத்து வெற்றி பெற்ற படங்கள் என்றால் பில்லா, பொல்லாதவன், படிக்காதவன், நான் மகான் அல்ல ஆகிய படங்கள் தான். இவையும் உள்ளடக்கத்திற்காக வெற்றி பெற்றவைதானே தவிர, டைட்டிலுக்காக அல்ல. பில்லா ஒரு ஸ்டைலிஷான என்டர்டெய்னராக வந்து, அஜீத்தின் கேரியரை உயர்த்தியது. யுவன் ஷங்கர் ராஜாவின் இசையும் விஷ்ணுவர்த்தனின் இயக்கமும் படத்திற்கு பலம் சேர்த்தது.  பொல்லாதவன் தமிழுக்கு வெற்றி மாறன் என்ற ஒரு நல்ல இயக்குநரை அடையாளம் காட்டியது. தனுஷின் நடிப்பும் மிகவும் பேசப்பட்டது.  வெண்ணிலா கபடி குழு மூலம் கவனம் ஈர்த்த சுசீந்திரன் நிலைபெற ‘நான் மகான் அல்ல’ உதவியது. சுராஜ் இயக்கத்தில் வந்த படிக்காதவன் விவேக்கின் காமெடி, பாடல்கள் மூலம் தப்பித்தது,

தில்லு முல்லு, கழுகு, ராஜாதிராஜா ஆகிய படங்கள் வெற்றி என்று சொல்ல முடியாவிட்டாலும் தோல்விப்பட வரிசையில் சேராமல் தப்பித்த படங்கள். தில்லு முல்லு படம் வெளியான காலத்தில் மிகப்பெரிய வெற்றி பெறாவிட்டாலும் இன்றும் தொடர்ந்து மக்களால் ரசிக்கப்பட்டு வருகிறது. புதிய தில்லு முல்லுவை அந்த அளவுக்குச் சொல்ல முடியாது. கழுகு படம் மலையில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொள்பவர்களின் உடலை மீட்கும் மனிதர்களைப் பற்றிய படம். கழுகு என்பது ஓரளவு பொருந்தி வந்தது. ராகவா லாரன்ஸ் நடித்த ராஜாதி ராஜா தான் முற்றிலும் படத்தின் கதைக்கு சம்பந்தமில்லாத ஒன்று. ஏமாற்றிய அண்ணன்களை பழிவாங்கும் கதைக்கு ஏன் அந்த டைட்டில் வைத்தார்கள் என்பது அந்த ராகவேந்திரருக்கே வெளிச்சம்.

முரட்டுக்காளை, தீ, தங்க மகன், மாப்பிள்ளை, குரு சிஷ்யன், பாயும்புலி ஆகிய படங்கள் படுதோல்வி அடைந்த படங்கள். முரட்டுக்காளை, மாப்பிள்ளையாவது ரீ-மேக் அந்த பெயர் வைத்தார்கள் என்று சமாதானம் சொன்னாலும் தீ,பாயும் புலிக்கெல்லாம் இந்த டைட்டில் அவ்வளவு அவசியமில்லாத ஒன்றுதான். குரு சிஷ்யனும் வீணடிக்கப்பட்ட ஒரு டைட்டில். அக்காவின் வாழ்க்கைக்காக தம்பியின் போராட்டங்கள். ஜீவா நடிப்பில் போக்கிரிராஜாவிற்கு எதற்காக அந்தப் பெயர் என்றால், சிபி போக்கிரி, ஜீவா ராஜா என்று சொல்வார்கள். மக்களை கவர வேண்டும் என்பதற்காகவே ரஜினி பட டைட்டில் வைத்ததில் இந்தப் படமும் அடங்கும்.

மாப்பிள்ளை படத்தின் ரீ மேக் என்பதால் தனுஷின் புதிய மாப்பிள்ளைக்கு டைட்டில் ஒக்கே, ஆனால் படம் தான் அந்த அளவுக்கு யாரையும் கவரவில்லை. விஐபி 2 என முதலில் சொல்லிக்கொண்டிருந்த படத்திற்கு பின்னர் டைட்டில் வேல்யூவிற்காக தங்கமகன் தலைப்பைச் சூட்டினார்கள். ஆனால் படக்கதைக்கு பொருத்தமான டைட்டில்தான். ஆனால் படம் தான் தரமான மகனாக இல்லாமல் போய்விட்டது.
ரஜினிகாந்த் அளவுக்கு கமலஹாசனின் படங்களின் டைட்டில் அதிக அளவு உபயோகப்படுத்தப்படவில்லை எனலாம். அதற்கு காரணம் ஃபோர்ஸான, எந்தக் கதைக்கும் பொருந்திப் போகிறமாதிரியான டைட்டில்கள் அவரிடம் இல்லாததும் ஒரு காரணம்.

நாயகன், சகலகலா வல்லவன் என இரு துருவங்களில் நடித்து பெருவெற்றி பெற்ற படங்களின் தலைப்பை தேவையே இல்லாத படங்களுக்கு வைத்து அழகு பார்த்தார்கள். காக்கி சட்டை மற்றும் எனக்குள் ஒருவன் ஆகியவை குறைந்த பட்சம் படக்கதையை ஒட்டி இருந்தன. ஆனால் கமல்ஹாசன் இந்த விஷயத்தில் வருத்தப்பட மாட்டார். ஏனென்றால் அவரே அபூர்வ சகோதரர்கள், சதிலீலாவதி, தசாவதாரம், விஸ்வரூபம், மர்மயோகி என பழைய படங்களின் தலைப்புகளை கையாண்டுள்ளார்.  கமலின் அடுத்த படத்தின் டைட்டில் யார் சொன்னது என்பதையும் இங்கே படித்திருப்பீர்கள்!

கரையைத் தொடாத அலைகள், நதியை தேடி வந்த கடல் போன்ற நீளமான உள்ளடக்கத்தை நேரடியாகச் சொல்லும் தலைப்புகளையோ அல்லது மூன்றாம் பிறை, மௌனராகம், முள்ளும் மலரும் போன்ற உள்ளடக்கத்தை மறைமுகமாகச் சொல்லும் தலைப்புகளையோ பெரும்பாலும் யாரும் விரும்புவதில்லை. ஏனென்றால் படத்தலைப்புகள் அதிகபட்சம் இரண்டு வார்த்தைகளுக்குள் இருக்க வேண்டும் என்றே தற்போது நினைக்கிறார்கள். அதுவும் கமர்ஷியல் படங்களுக்கு. ஷங்கர், முருகதாஸ் ஆகியோர் ஒரு வார்த்தையிலேயே தங்கள் படங்களுக்கு டைட்டில் வைத்துக்கொள்கிறார்கள்.

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மனிதன் சமீபத்தில் வந்த ரஜினி டைட்டில் படம்.  அடுத்து, விஷ்ணு விஷால் நடிப்பில் வீரா , விஜய் சேதுபதி நடிப்பில் தர்மதுரை ஆகிய ரஜினி பட டைட்டில்கள் வரவிருக்கின்றன. இவற்றுக்கும் படக்கதைக்கும் எவ்வளவு சம்பந்தம் இருக்குமென்று தெரியவில்லை.

இதுவரை ரஜினி டைட்டில் வைத்த படங்களைப் பார்த்தோமேயானால் எந்தப் படமும் டைட்டில் வேல்யூவால் வெற்றி பெறவில்லை. உள்ளடக்கத்தின் காரணமாகத்தான் வெற்றி பெற்றுள்ளது. கூடுதலாக சில ரசிகர்களை அழைத்து வர மட்டுமே இந்த டைட்டில்கள் உதவி இருக்கின்றன என்றாலும் டைட்டில்கள் ரேஸில் ரஜினி பட டைட்டில்கள்தான் எப்போதும் நம்பர் ஒன்!


 -முரளிகண்ணன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!