வெளியிடப்பட்ட நேரம்: 10:40 (21/06/2016)

கடைசி தொடர்பு:11:25 (21/06/2016)

இளையராஜா, ரஹ்மானை விட உயர்ந்தது இது!

இணையத்தை திறந்தால் இளையராஜா தான் மாஸ் என்று ஒரு குழுவும், ரஹ்மான் தான் டாப் என்று ஒரு குழுவும் பேசிக்கொண்டிருக்கும். இவர்கள் இல்லாமல் நமக்குத் தெரிந்த இசையமைப்பாளர்கள் யாராக இருந்தாலும் அவங்க எல்லோரையும் விட பெஸ்ட் இருக்க முடியுமா என்று கேட்டால் நிச்சயம் "யெஸ்" ங்கிறது தான் பதிலாக இருக்கும். அது யாரா இருக்கும் என்று தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்!

வார்த்தைகள் சொல்ல முடியாத உணர்வுகளைக் கூட இசையால் ரொம்ப எளிமையா சொல்லிவிடுவார் ராஜா.. காதலி பிரிந்து செல்லும் துயரமாகட்டும், காதல் பூக்கும் தருணமாகட்டும் கண்களை மூடிக்கொண்டு கேட்டாலும் காட்சி மனதுக்குள் ஓடும் வித்தையை இவர் இசை செய்யும், சரி.. காதலுக்கு மட்டும்தானா என்றால் கீழுள்ள வீடியோவைப் பாருங்கள். சோர்ந்து, ஒதுங்கி வாழும் ஒருவன் வீறு கொண்டு எழுவதை இந்த பி.ஜி.எம் எப்படி உணர்த்துகிறது என்று கேளுங்கள்.


பிரெஞ்சு நாட்டு இசை மேதை எட்கர்ட் வர்ஸ் என்பவர் ஒழுங்கற்ற முறையில் இருக்கும் சப்தங்கள் இரைச்சல் எனவும், ஒழுங்காக வரிசைப்படுத்தப்பட்ட சப்தங்கள்தான் இசை எனவும் கூறுகிறார். இசை என்பது ஒரு மொழி வடிவமாகவே பார்க்கப்படுகிறது. ஒரு மனிதன் பேசும் மொழி மற்றொருவருக்கு புரியாமல் போகலாம். ஆனால் இசை எல்லோருக்கும் புரியும் ஒரு பொதுவான மொழி.

இசை நிச்சயம் உணர்வுகளைக் கடத்தும் பண்பு பெற்றது. இசை ஒருவரை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். உற்சாகத்தில் துள்ள வைக்கும், சோகத்தில் துவள வைக்கும், மன அழுத்தம் கொடுக்கவும் அழுத்தம் நீக்கவும் செய்யும், மனதை ஒருமுகப்படுத்தவும் செய்கிற மாய சக்தி கொண்டது. உடலுக்கு உடற்பயிற்சி எப்படியோ அவ்வாறே மனதிற்கு இசை. அது மட்டுமல்ல இசையால் குணப்படுத்தவும் முடியும். ஆம். இசை கொண்டு மனது தொடர்பான பிரச்சினைகள், அல்ஸைமர் என்று அழைக்கப்படும் நினைவு திறன் இழப்பு நோய்களையும் குணப்படுத்த முடியும். மென்மையான இசை, நிம்மதியான உறக்கத்தைக் கொடுப்பதால் இன்சோம்னியா போன்ற தூக்கமின்றி தவிக்கும் வியாதிகளையும் குணப்படுத்துகிறது. காதல் தேசம் படத்தின் தென்றலே தென்றலே பாட்டைக் கேட்டு நாயகி தூங்குவாள். அத்தனை மென்மையாக இசையைக் கையாண்டிருப்பார் ஏ.ஆர்.ஆர்.

அமைதியை எளிமையாகவும் அதே சமயம் வலிமையாகவும் உணர்த்திய பாடல் ஒன்றுண்டு. கேட்கும்போதே மனதுக்குள் அமைதி குடிகொள்ளும். ஒரு கோயிலில் தனிமையில் அமர்ந்து தியானம் செய்வதாய் உணர்வீர்கள். பூந்தோட்டத்தில் பூவாசத்தினிடையே வானம் பார்த்து அமர்ந்த உணர்வைத் தரும். அதுவும் இந்த வீடியோவில் பார்த்துக் கொண்டே கேட்பது.. Bliss!


இவை இரண்டும் சாம்பிள்தான். இவர்களின் மேதமையை நாம் பிரமித்தபடி பார்க்க உதவுவது.. இசைதான். இதுபோல பலரது பாடல்களைக் கேட்கையில், இசை பற்றிய பேரறிவோ.. ஏன்.. சிற்றறிவோகூட இன்றி கேள்வி ஞானத்திலேயே நாம் நம்மை பறிகொடுத்துவிடுகிறோம். அப்படி இந்த மேதைகளையும் நம்மையும் இணைப்பது இசையன்றி வேறெது?

இசையமைப்பாளர்கள் எல்லாரும் அந்தந்த காலகட்டத்தில் வாழும் காதலர்கள் போல, இசை காதல் மாதிரி. காதலர்கள் மரிக்கலாம், ஆனால் காதல் காலம் தாண்டியும் வாழும். அதனால் இவர்கள் எல்லோரையும் விட இசையே உயர்ந்தது! இன்று World Music Day, என்றும் இளமையாக இருக்கும் இசைக்கு ஒரு வயது கூடுகிறது. இன்றைக்கு இசையை வாழ்த்துவதோடு உங்களுக்கு மிகப்பிடித்த பாடல் எதுவென்று கமென்டில் சொல்லுங்கள்!

-ஆனந்த் விஜயராகவன்-

நீங்க எப்படி பீல் பண்றீங்க