தாங்க்யூ பட் ஸ்பென்சர்! | Bud Spencer dead aged 86: Italian westerns actor had 'peaceful' final

வெளியிடப்பட்ட நேரம்: 19:02 (28/06/2016)

கடைசி தொடர்பு:16:45 (29/06/2016)

தாங்க்யூ பட் ஸ்பென்சர்!

பட் ஸ்பென்ஸரைத் தெரியுமா உங்களுக்கு? பழைய கௌபாய் படங்களைப் பார்க்கிற வழக்கம் உள்ளவர்களால் இவரை மறக்க முடியாது. இவரும் டெரன்ஸ் ஹில்லும் ஜோடி சேர்ந்து கலக்கிய படங்கள் இருபது இருக்கும். லாரல் & ஹார்டி போல கௌபாய் படங்களில் இவர்கள் இணைந்து வந்தால் ரசித்துப் பார்க்கும் கூட்டமே உண்டு. பட் ஸ்பென்ஸர் நேற்று - 27 ஜூன் 2016 - தனது 86வது வயதில் மரணமடைந்தார்.

கொஞ்சம் குண்டான பட் ஸ்பென்ஸர், ரியல் லைஃபிலும் ஒரு ஜாலியான பேர்வழி. அவர் பெயரிலேயே அது தெரியும். அவரது இயற்பெயர் Carlo Pedersoli. 1951ல் நடித்த முதல் படத்தில் ஆரம்பித்து ஐந்தாறு படங்களில் அந்தப் பெயரில்தான் வலம் வந்தார். ஒரு படத்தில் நடிக்கும்போது, காரணமாக - அது என்ன என்பதை கீழே பார்ப்போம் - அவருக்கு அமெரிக்க நடிகரான ஸ்பென்சர் ட்ரேசி மீதுள்ள பற்றின் காரணமாக, தன் பெயரை Bud Spencer என்று வைத்துக்கொண்டார். இதிலென்ன ஜாலி என்கிறீர்களா? ஸ்பென்சர் சரி.. அந்த Bud? அவருக்குப் பிடித்தமான பீர் - Budwiser தான் அது!

டெரன்ஸ் ஹில்லோடு இல்லாமல் இவர் தனியாகவும் சில படங்களில் நடித்தார். 1980களில் வந்த "Five Man Army' உங்களுக்கு நினைவிருக்கலாம். அந்தப் படத்தில் ஐந்து பேரில் ஒருவராக நடித்திருப்பார். 1969ல் வந்த படம். அப்போதெல்லாம் இந்த மாதிரி Cult படங்கள் இரண்டு மூன்று முறையாவது திரும்பத் திரும்ப ரிலீஸாகும். 80-களில் கோவை யமுனா திரையரங்கில் இது வெளியிட்ட போதும் அரங்கு நிறைந்து ஓடிய படம் இது. கௌபாய் இல்லாமலும் ‘டபுள் ட்ரபுள்’ போன்ற படங்களும் இவர் நடித்து ஹிட். டபுள் ட்ரபுளில், பட் ஸ்பென்சர், டெரன்ஸ் ஹில் இருவருக்குமே இரட்டை வேடம்.

சண்டைக்காட்சிகளில் காமெடி செய்வது என்கிற ட்ரெண்டுக்கு முன்னோடியாக இருந்தவர்கள் இவர்கள் . பிற்பாடு இதைத்தான் ஜாக்கிசான் தனது குங்ஃபூ சண்டைகளின்போதும் செய்தார்.

இன்றைக்கு ஹீரோக்கள் ரௌடிகளை அடிப்பதை அசால்டான உடல்மொழியில் செய்கிறார்கள் அல்லவா.. அதை அறுபதுகளிலேயே செய்தவர் பட் ஸ்பென்சர். கீழே உள்ள வீடியோவில் 5.30 நிமிடத்தைப் பார்த்தால் உங்களுக்கு அது தெரியும்.

பட் ஸ்பென்சரை இங்கே பலபேருக்கு நடிகராகத்தான் தெரியும். ஆனால் அவர் ஒரு தொழில்முறை நீச்சல்காரர். இத்தாலியில் பிறந்த இவர், அங்கே நீச்சல் க்ளப்பின் உறுப்பினராகி, போட்டிகளில் கலந்து கொண்டு பல கோப்பைகளை வென்றவர். 15 வயது இருக்கும்போதே இவரை விட சீனியர்களையெல்லாம் நீச்சலில் முந்திய வீரர்.

1949ல் ஃப்ரீஸ்டைல் நீச்சல் போட்டியில் சாம்பியன், 1950ல் 100 மீட்டர் ஃப்ரீ ஸ்டைலில் கலந்து கொண்ட முதல் இத்தாலியன் உட்பட பல சாதனைகளை நிகழ்த்தினார். அதுமட்டுமல்லாமல் இத்தாலியன் வாட்டர் போலோ குழுவிலும் இருந்தார்.

அதற்குப் பிறகுதான் திரைத்துறைக்கு வந்தார். பிரபல விளையாட்டு வீரர்.. ஆள் வேறு ஆஜானுபகுவாக இருந்ததால் ஒரு சில படங்களில் கௌரவ வேடத்தில் நடித்தார். அதற்குப் பிறகும், நீச்சல் போட்டிகளில் கலந்து கொண்டிருந்தார். 27 வயதில் இத்தாலியிலிருந்து, வெனிசுலாவுக்குச் சென்றார். படங்களில் அதிக கவனம் செலுத்த ஆரம்பித்தார். 6’.3” உயரமும் 117 கிலோ எடையும் இருந்த இவர்தான் “God Forgives.. I don't" படத்திற்குப் பொருத்தமாக இருப்பார் என்று அழைக்க.. அதில் இவருக்கு முக்கியமான வேடம் கிடைத்தது. அதில்தான் பட் ஸ்பென்சர் என்கிற பெயரில் நடித்தார். அதற்கு அவர் சொன்ன காரணமும் காமெடியாக இருக்கும். ‘என் நண்பர்கள் என்னைக் கண்டுகொள்ளக்கூடாது என்று பெரிய தாடியுடன் நடிப்பது என்று முடிவெடுத்தேன். இல்லையென்றால் ஒரு ‘ஃபன்னி கௌபாய் படத்துல நடிச்சவன்’ என்று என் மதிப்பு போய்விடும் என்று யோசித்து பெயரையும் மாற்றிக் கொண்டேன்’ என்கிறார். ஆனால், அடையாளம் கண்டுகொள்ளக் கூடாது என்று அவர் வைத்துக் கொண்ட பெயர்தான் அவருக்கு மிகப்பெரிய அடையாளத்தைத் தந்தது.

’எனக்கு ஆங்கிலம் சரியாகப் பேசவராது, குதிரையைச் செலுத்தவும் தெரியாது. என்னை ரசிகர்கள் நிச்சயம் ரசிக்க மாட்டார்கள். சும்மா ஒரு படம்தானே’ என்றுதான் நடித்தேன். ஆனால் என் நினைப்பு தவறாகிப் போனது’ என்றார் பட் ஸ்பென்சர். இவரும் டெரன்ஸ் ஹில்லும் இணைந்து நடித்ததை ரசிகர்கள் அப்படி வரவேற்றனர்.

நீச்சல்வீரன், ரசிகர்கள் போற்றும் நடிகன் என்பதோடும் இவர் தாகம் அடங்கவில்லை. All the Way Boys படத்தில் பைலட்டாக நடித்தார். ‘ஆஹா.. செம்மயா இருக்கே’ என்று தோன்றவே, ஃப்ளைட் ஓட்டக் கற்றுக் கொண்டார். 2000 மணி நேரம் பைலட்டாக பறந்திருக்கிறார். 500 மணி நேரம் ஹெலிகாப்டர் ஓட்டியிருக்கிறார். ‘நான் செய்தவற்றிலேயே எனக்கு மிகவும் பிடித்தது இந்த பைலட் வேலைதான்’ என்கிறார் பட் ஸ்பென்சர்.

நீச்சல்வீரர், நடிகன், பைலட்.. ஆஹா என்கிறீர்களா? அதோடு நின்றுவிடவில்லை மனிதர். பாடகரும் கூட. தானே இசையமைத்து பல பாடல்கள் பாடியிருக்கிறார். 1981ல் சொந்தமாக Mistral Air என்று இத்தாலியில் ஏர்லைன்ஸ் தொடங்கி வெற்றிகரமான தொழிலதிபராகவும் பெயரெடுத்தார். அதோடு நிற்கவில்லை, பேஸ்ட் உடன் அடங்கிய டிஸ்போஸபிள் டூத் ப்ரஷ், எலக்ட்ரிக் பொம்மை என்று 12 பொருட்களைக் கண்டுபிடித்து அதற்கான காப்புரிமையையும் வைத்திருந்தார்.

எல்லாவற்றிலிருந்தும் ஓய்வு பெற்று வயதான போதும் சும்மா இருக்கவில்லை. 70வது வயதில் அவர் எழுதிய சுயசரிதை விற்பனையில் நம்பர் ஒன் ஆனதும், எழுதும் ஆசை வந்து இரண்டு மூன்று புத்தகங்களும் எழுதினார். 2014ல் 85வது பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது ‘My Philosophy of eating' என்கிற புத்தகத்தையும் வெளியிட்டார்.

’நானொன்றும் 28 வயது ஆளில்லை. வயதாகிவிட்டது. என் சக நண்பனோடு நான்காவது புத்தகம் எழுதிக் கொண்டிருக்கிறேன். என் லட்சக்கணக்கான ரசிகர்களுக்கான சமர்ப்ப்பணமாக இருக்கும் அந்தப் புத்தகத்தோடு நீங்கள் கேட்காத, நானே இயற்றி இசையமைத்த பாடல்களும் அடங்கிய சிடியும் அந்தப் புத்தகத்தோடு கிடைக்கும்’ என்று சொன்னவர்.. அதை வெளியிடும் முன் மறைந்து விட்டார்.

’எந்த வலியும், படுக்கையில் கிடந்து அவதிப்படுதலுமோ இன்றி மிக அமைதியாக இந்த உலகத்தை விட்டுப் போனார்’ என்று சொன்ன பட் ஸ்பென்சரின் மகன் இன்னொன்றும் சொல்லியிருக்கிறார். அவர் கடைசியாக உதிர்த்த வார்த்தை: THANK YOU.

பல படங்களில் எங்களை மகிழ்வித்தற்கும், நடிப்பு மட்டுமல்ல.. வாழ்விலும் உங்களை உதாரணமாகக் கொள்ளலாம் என்பதாய் இறுதிவரை உற்சாகமாய் பல தளங்களில் இயங்கிக் கொண்டிருந்த உங்களுக்கு.. நாங்கள்தான் சொல்ல வேண்டும் பட் ஸ்பென்சர்.. தாங்க்யூ!

-பரிசல் கிருஷ்ணா-

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்