தமிழின் டிரெண்ட் செட்டர் படங்கள்.. ஒரு பார்வை!

’ஊர் எப்படிப் போகுதோ அதே வழில நாமளும் போகலாம்’ என்று படமெடுப்பது ஒருவகை என்றால், வணிக ரீதியான  வெற்றி தோல்வியைப் பற்றி பயப்படாமல் பரீட்சார்த்தமான முயற்சிகளை மேற்கொண்டு ட்ரெண்ட் செட் செய்யும் படங்கள் வேறொரு வகை. இரண்டாம் வகையிலான படங்கள் குறைவே எனினும் காலாகாலத்துக்கும் நின்று நிலைத்து, ‘அந்தக் காலத்துலயே..’ என்று எந்தக் காலத்திலும் பேசப்படும். அப்படியான சில படங்கள்;

 

அந்த நாள்:

பாட்டுகள் இல்லாமல் சண்டை காட்சிகள் இல்லாத ஒரு தமிழ் சினிமாவை  கற்பனை செய்து பார்க்க முடியுமா? ஆனால் எந்த வித தொழில்நுட்ப வசதிகளும் வளர்ச்சிடையாத 1954 லேயே அப்படியான ஒரு தமிழ் சினிமா வந்துள்ளது என்றால் நம்புவீர்களா. அதுதான் "அந்தநாள்". ‘வீணை’ எஸ். பாலசந்தரால் இயக்கப்பட்டது. கதாநாயகனாக வளர்ந்து வந்த சிவாஜிக்கு இந்த படம் சரியாக இருக்குமா என பலரும் கேள்வியெழுப்பிய நிலையில்  வில்லனாய் நடிக்க ஒப்புக்கொண்டார் சிவாஜி கணேசன் . முதல் காட்சியிலேயே ஹீரோ சுடப்பட்டு இறப்பது போன்ற காட்சியை பார்த்த ரசிகர்கள் திரையரங்கில் ரகளை  செய்த நிகழ்வுகளும் நடந்துள்ளன.

பதினாறு வயதினிலே : 

 

படம் முழுவதும் அரங்குகளுக்குள் மட்டுமே எடுக்கப்பட்டுக் கொண்டிருந்த கால கட்டத்தில், அரங்குக்கு வெளியே படப்பிடிப்பை நடத்தி, ஒரு கிராமத்தின் உயிர்ப்பான சூழலை திரையில்  காட்டியது பதினாறு வயதினிலே திரைப்படம். 1977 இல் வந்த இத்திரைப்படத்தை பாரதிராஜா இயக்க  இசை இளையராஜா. ஹீரோ என்றால் அழகாக இருக்க வேண்டும், வில்லன் என்றால் உடல் ரீதியாக மட்டுமின்றி, கிண்டலடித்தே நோகடிப்பது என்று பல முயற்சிகள்.  வாயில் எப்போதும் வெற்றிலை பாக்கு, மூக்குத்தி, வித்தியாசமான நடை என நடித்த சப்பாணி ( கமலஹாசன் ), " இது எப்படி இருக்கு..!?" என்ற பன்ச் டயலாக் பேசிய பரட்டை (ரஜினிகாந்த்)  என பதினாறு வயதினிலே கேரக்டர்கள் ஒவ்வொன்றும் தமிழ் சினிமாவின் பொக்கிஷங்கள்..!

அவள் அப்படித்தான்

ருத்ரைய்யாவின் இயக்கத்தில், தமிழ் சினிமாவில் புலிப்பாய்ச்சலாய்ப் பாய்ந்த ஒரு படைப்பு. படம் ஆரம்பிக்கும் முன், டைட்டிலிலேயே பின்னணிக் குரல்கள்மூலம் காட்சியை ரசிகன் உணரும் வண்ணம் செய்து, புதுமை செய்திருப்பார்.  ரஜினி, கமல், ஸ்ரீப்ரியா நடிப்பில் இன்றளவும் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படும் படம். பேசாப்பொருட்கள் பலவற்றை பொட்டிலடித்தாற்போல பேசிய படம். படத்தின் வசனங்களில் நிறைய ஆங்கிலக்கலப்பு இருக்கும். அப்போது, அது புதிது! அதைப் போலவே, ஸ்டைலிஷான மேக்கிங்’ என்பதற்கு உதாரணமாய்ப் பேசப்பட்ட படம்.நாயகன் :

‘நீங்க நல்லவரா கெட்டவரா.’ என்ற கேள்வியை கிண்டலாக நிச்சயம் எல்லோருமே கடந்திருப்போம். நாயகன் படத்திலும் வேலுநாயக்கரை இந்த வசனம் துரத்திக் கொண்டேயிருக்கும் . 1987 இல் வெளிவந்த நாயகன் படம் மணிரத்னம் இயக்கதில் வெளிவந்தது ஒளிப்பதிவு பி.சி.  ஸ்ரீராம். வசனங்களை எழுத்தாளர் பாலகுமாரன் எழுதினார். மும்பையில் வாழ்ந்த வரதராஜ முதலியாரின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு வேலு நாயக்கரின் கதாபாத்திரம் சித்தரிக்கப்பட்டது. டைம் இதழ் வெளிட்ட சிறந்த நூறு படங்கள் வரிசையில் நாயகனும் ஒன்று.

ஆட்டோகிராஃப் :

 

 

ஒரு ஹீரோவுக்கு ஒரே ஒரு காதல் தான் இருக்க வேண்டும் என்ற வழக்கமான  தமிழ் சினிமா மரபை தள்ளிவைத்து விட்டு ஒருவனின் வாழ்க்கையில் கடந்து போன பெண்களையும் அவர்கள் மீதான காதலையும் காட்டியிருக்கும் இந்த "ஆட்டோகிராப்". 2004 இல் வெளிவந்த 'ஆட்டோகிராப்' பிறகு பல வடிவங்களில் உலவியது. 

காதல்:

உண்மைக்கதைகளை பலர் படமெடுத்திருக்கிறார்கள். சொல்லிக் கொண்டும், சொல்லாமலும். ஆனால் 2004ல் காதல் மிகப் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அந்தக் கதை சொன்ன நிஜம் பலர் முகத்தில் அறைந்தது. படத்தின் தாக்கத்தை, இறுதியில் காண்பிக்கப்பட்ட ‘இது உண்மைக்கதை..  ஒரு ரயில்பயணத்தில் நாயகியின் கணவன் எனக்குச் சொன்னது இது’ என்ற இயக்குநரின் ஸ்லைட் இன்னும் அதிகப்படுத்தியது. இசை பேசப்பட்டது. தெலுங்கு, பெங்காலி, மராட்டி, நேபாளி என்று பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது. 

ஆரண்யகாண்டம்:

 

Cult என்றால் வழிபாடு என்கிறது அகராதி.  அந்த வார்த்தையை சினிமாவை ரசிக்கும் இன்றைய இளைஞர்கள் மத்தியில் பரப்பிய படம் என்று இதைச் சொல்லலாம். படத்தின் போஸ்டர்களில் ஆரம்பித்து மேக்கிங் வரை வித்தியாசம் காட்டியிருந்தார் இயக்குநர் தியாகராஜன் குமாரரஜா. படத்தின் வசனங்களும், கதாபாத்திரங்களும் நடிப்பும் பெருமளவு பேசப்பட்டது.

 

பீட்சா :

எல்லாக் காலத்திலேயும் தமிழ் சினிமாவில் பேய்களின் ஆதிக்கம் இருந்து கொண்டே தான் இருந்திருக்கிறது.   அந்த வகையில் 2012 இல் வெளிவந்து கல்லா கட்டியது பீட்சா. அந்த ஹிட் ஃபார்முலாவை வைத்துக்கொண்டு தொடர்ச்சியாக இப்போது வரை மாதம் ஒரு பேய்ப்படம் வெளிவந்து ரசிகர்களை அலற விட்டுக்கொண்டிருக்கிறது.  இயக்குநர் கார்த்திக் சுப்புராஜுக்கு முதல் படம்.

இது போன்ற நிறைய படங்களைச் சொல்லலாம். உங்களைக் கவர்ந்த ட்ரெண்ட் செட்டர் படங்களை கமென்டில் குறிப்பிடுங்க பாஸ்!

 - க.பாலாஜி
 
  

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!