Published:Updated:

'ஹு இஸ் திஸ் கபாலி?' ஒபாமாவை உலுக்கிய 'நெருப்புடா'..!

Vikatan
'ஹு இஸ் திஸ் கபாலி?' ஒபாமாவை உலுக்கிய 'நெருப்புடா'..!
'ஹு இஸ் திஸ் கபாலி?' ஒபாமாவை உலுக்கிய 'நெருப்புடா'..!

கபாலி, நெருப்புடா, மகிழ்ச்சி - மந்திரம் போல எங்கும் எதிலும் ஒலித்துக்கொண்டிருக்கின்றன இந்த வார்த்தைகள். புரிகிறது. சூப்பர்ஸ்டார் படம்தான், ரெட்ரோ லுக்தான், மாஸ் கம்பேக்தான். ஆனால் அதற்காக கபாலி படத்தை ஒபாமா ஆர்வமா எதிர்பாக்குறாரு, சீனாவுல இன்னொரு புரட்சி வெடிக்கப்போகுது என 'ஒருகோடிப்பே' ரக செய்திகளை எல்லாம் உலாவ விடுகிறார்கள் சில அதி தீவிர ரசிகர்கள். நம்ம வாயும் சும்மா இருக்கமாட்டேங்குதே. என்னத்தையாவது சொல்லி வைப்போம்....

* ஐரோப்பிய யூனியனோடு பிரிட்டன் இருக்கலாமா வேண்டாமா என்ற வாக்கெடுப்பின் முடிவுகளை, ஜுலை 23-ம் தேதிதான் வெளியிடுவதாக இருந்தார்கள். ஆனால் கபாலி ஜூலை மாதம் வெளியாகும் வாய்ப்பு இருப்பதால், ஊடகங்களில் நம் செய்தி முக்கியத்துவம் பெறாது என ஒரு மாதம் முன்பே அறிவித்துவிட்டார்கள்.

* அமெரிக்க அதிபர் தேர்தல் ஜூலை மாதம்தான் நடக்க இருந்தது. ஆனால் பாதிபேர் படம் பார்க்க தியேட்டருக்கு சென்றுவிடுவார்கள். இதனால் வாக்குப்பதிவு சதவீதம் குறையும் என்பதை எஃப்.பி.ஐ மூலம் அறிந்த வெள்ளை மாளிகை, தேர்தலை நவம்பர் மாதம் தள்ளி வைத்தது. அதுமட்டுமின்றி தன் கட்சி சார்பாக  பேச கபாலியை ஒபாமா அழைக்கவிருப்பதாகவும் தகவல்.

* 'போக்கிமான் கோ' கேமை இன்னும் நன்றாக மெருகேற்றி வெளியிட இருந்தது நியான்டிக் நிறுவனம். ஆனால் கபாலி ஃபீவர் மெல்ல மெல்ல தீவிரமடைந்ததை அடுத்து, அவசர அவசரமாக 6-ம் தேதி வெளியிட்டது. எப்படியும் கபாலியைத் தாண்டி இந்தியர்கள் போக்கிமான் மீது கவனம் செலுத்தமாட்டார்கள் என்பதால்தான் இங்கே இன்னும் அறிமுகமாகவில்லை.

* சம்மர் ஒலிம்பிக்ஸை சம்மர்லதானே வைக்கணும். ஆனால் ஆகஸ்ட் மாதத்தில் வைத்திருக்கிறார்கள். கபாலி மோகத்தில் வீரர்கள் பயிற்சியில், விளையாட்டில் ஆர்வம் செலுத்தமாட்டார்கள். பதக்கங்கள் ஆணியிலேயே தொங்கும் என்பதால் அதை ஆகஸ்ட் மாதம் தள்ளி வைத்திருக்கிறார்கள்.

* கபாலி படம் எடுக்கப்பட்ட இடங்களை தங்குத்தடையின்றி அனைவரும் பார்க்கவேண்டும் என்பதற்காக மலேசியா - சிங்கப்பூர் இடையே ரயில்பாதை அமைக்கப்பட உள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது.

* எப்படியும் யாரும் அலுவலகம், கல்லூரிகளுக்கு செல்லப்போவதில்லை என்பதால், '22-ம் தேதி பொது விடுமுறை விட்டுவிடலாமா' என தீவிர ஆலோசனையில் இருக்கின்றன மத்திய, மாநில அரசுகள். ஸ்டார்ட் அப் இந்தியா, க்ளீன் இந்தியா போன்று 'கபாலி இந்தியா' என்ற புதுத்திட்டத்தை தொடங்கும் முயற்சியிலும் மத்திய அமைச்சரவை தீவிரமாக இறங்கியுள்ளது.

* உலக மேப்பில் இருக்கும் சந்து பொந்துகளைக் கூட விட்டுவிடக்கூடாது என தீவிரமாய் ஊர் சுற்றி வரும் பிரதமர் மோடி, கடந்த ஒரு வாரமாக எங்குமே செல்லவில்லை. கபாலி ஃபீவரை ரசித்துக்கொண்டு, முதல் நாள், முதல் ஷோ பார்க்கும் முடிவில் இருக்கிறார் என்கின்றன டெல்லி வட்டாரங்கள்.

* சென்னையில் இருக்கும் தியேட்டர்களில் நூற்றுக்கணக்கான ஷோக்கள் போடப்பட்டிருந்தாலும், அவை அனைத்தும் ஹவுஸ் ஃபுல். இப்படி முண்டியடிக்கும் கூட்டம் காரணமாக, இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேம்பாலங்கள், மெட்ரோ திட்டம் உள்ளிட்டவை கட்டமைக்கப்பட்டன.

* சென்னை புறநகர் பகுதிகளில் சமீபத்தில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதற்குக் காரணம் கபாலி ரிலீஸை முன்னிட்டு ஏற்பட்டுள்ள பரபரப்புதான் என தெரிய வந்துள்ளது. " இதைத்தான் பேரைக் கேட்டாலே அதிருதுல்ல... என எங்கள் தலைவர் முன்பே சொன்னார்"  என பூரிப்பில் உள்ளார்கள் அவரது ரசிகர்கள்.

* உலகம் முழுக்க கபாலி பெயர் முணு முணுக்கப்பட்டு வருவதால், 'வசூல் சாதனையில் ஹாலிவுட் படங்களை மிஞ்சிவிடும்' என கையில் அடித்து சத்தியம் செய்கிறார்கள் உலக சினிமா ரசிகர்கள். இந்தப் படம் மூலம் குவியும் லாபத்தை வைத்து, மூன்றாம் உலக நாடுகளில் நிலவும் வறுமையை ஒழிக்க முடிவெடுத்துள்ளது தயாரிப்புத் தரப்பு. இதற்காக உலக வங்கிக்கு கடன் கொடுக்கும் ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாக உள்ளது.

#கபாலிடா...

-நித்திஷ்

Vikatan