Published:Updated:

சுருதிபேதத்திலிருந்து சூப்பர் ஸ்டார்! #41YearsOfRajiniKanth

Vikatan
சுருதிபேதத்திலிருந்து சூப்பர் ஸ்டார்! #41YearsOfRajiniKanth
சுருதிபேதத்திலிருந்து சூப்பர் ஸ்டார்! #41YearsOfRajiniKanth

சென்னை அடையாறு திரைப்படக்கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கிறார் சிவாஜிராவ். அந்த நேரத்தில் இயக்குநர் கே.பாலசந்தரிடம் கிடைத்த சிறு அறிமுகத்தை வாய்ப்பாக பயன்படுத்தி, அவரது மனதில் இடம்பிடிக்கிறார். கே.பாலசந்தரும் எளிதில் யாரையும் நடிகனாக ஏற்றுக்கொள்பவர் கிடையாது. எந்த சமரசத்திற்கும் உட்படாமல் ஒருவரை தன்னுடைய படத்தின் மூலம் நடிகராக உருவாக்குகிறார். அந்த நடிகரும் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திகொண்டார். கே.பாலசந்தரின் பட்டறையில் உருவான பொக்கிஷத்திற்கு இன்னுமொரு சாட்சியாக மாறுகிறார் அந்த சிவாஜிராவ் என்கிற ரஜினிகாந்த்!

ரஜினிகாந்தின் திரையுலக வளர்ச்சியின் முதல் விதை விதைக்கப்பட்ட நாள் இன்று. ரஜினி நடிப்பில் உருவான முதல் படம் “அபூர்வராகங்கள்” இதே (ஆகஸ்ட் 18) நாள் 1975ல் வெளியானது.  

பேருந்து நடத்துனர் உட்பட பல வேலைகளைச்செய்து, இடையிடையே நடிப்பையும் கற்றுக்கொண்டு வாழ்வில் தோல்வியை மட்டுமே சுவைத்து வந்த ரஜினிக்கு கிடைத்தமுதல் வெற்றி இந்த அபூர்வராகங்கள். இந்தப் படத்தின் மூலம் பாலசந்தர் என்ற மிகப்பெரிய குருவையும், கமலஹாசன் என்ற நண்பனையும் பரிசாக பெற்றுக்கொண்டார் ரஜினிகாந்த்.

அபூர்வராகங்கள் தமிழ் திரையுலகின் புதுமையான முயற்சி. பாரம்பரியம், குடும்பம், நாகரிகம் என்று பழைமை பேசிய படங்களுக்கு இடையே, புதுமையான கதையுடன், வாழ்க்கையின் குறுக்குவெட்டுத்தோற்றத்தை புரட்டிப்போடும் ஒரு கதையாக, திரையரங்கின் வாசலைத் தட்டியது அபூர்வராகங்கள். 

படத்தின் கதை இனி....

மேஜர் சுந்தர்ராஜனின் ஒரே மகன் கமல்ஹாசன். தந்தையின் ஒழுக்கத்திற்கு நேர்மாறாக வளரும் இளைஞர். முரட்டு சுபாவத்தால் தந்தையை பிரிந்து வாழ்கிறார். பிரபல கர்நாடக இசை பாடகி பைரவியாக ஸ்ரீவித்யா. சிறுவயதிலேயே காதலித்த பாண்டியன் என்பவரால் கைவிடப்படப்படுகிறார். அவனால் ஏற்பட்ட கர்ப்பத்தை யாருக்கும் தெரியாமல் மறைத்து குழந்தையையும் பெற்றெடுக்கிறார்.  உலகத்திற்கு இந்த குழந்தையை தத்தெடுத்து வளப்பதாக சொல்கிறார் ஸ்ரீவித்யா. காலங்கள் ஓடுகிறது. பருவம் வந்த ஸ்ரீவித்யாவின் மகள், தான் இவரின் சொந்த மகள் தான் என்பது தெரிந்து ஸ்ரீவித்யாவை பிரிந்து செல்கிறாள்.

இப்போது, ஸ்ரீவித்யாவின் மேல் காதல் கொள்ளும் கமல்ஹாசன், மேஜர் சுந்தர்ராஜன் மீது அன்புகொள்ளும் ஸ்ரீவித்யாவின் மகள் ஜெயசுதா என்று உறவுகள் முரணாக திரிகிறது. இந்த முரணுக்கான விடையும், இதற்கு நடுவே ரஜினியின் நடிப்பும் தான் அபூர்வராகமாக திரையில் ஒலித்தது. 

இந்தக் கதைக்கு நடுவே, ரஜினியின் கதாபாத்திரம் உங்களுக்கு யாரென்று தெரிந்திருக்கும். ஸ்ரீவித்யாவை சிறுவயதில் காதலித்து, கர்ப்பமாக்கி ஏமாற்றிச்சென்ற பாண்டியன்தான் ரஜினி. ஸ்ரீவித்யாவும், கமல்ஹாசனும் திருமணம் செய்துகொள்ள முடிவெடுக்கும் நேரத்தில், மீண்டும் ஸ்ரீவித்யாவைத் தேடி வருகிறார் ரஜினிகாந்த். திரையில் ரஜினியின் முதல் காட்சி இது தான்.

ஸ்ரீவித்யாவின் வீட்டின் கேட் முன் வந்து நிற்கிறார் ரஜினி. முதல் காட்சி, முதல் வசனம் கமல்ஹாசனுடன் என்பது நச். 
இதோ, ரஜினியின் முதல் வசனம், “பைரவி வீடு இதுதானே?”- தமிழ்த் திரையுலகில் ரஜினியின் குரல் முதலில் ஒலித்தது இப்படித்தான். அதைவிட, ரஜினியின் என்ட்ரியின்போது ஃப்ரீஸ் செய்து ஒரு வார்த்தை வரும் “சுருதி பேதம்’.

இந்தக்காட்சி திரையில் ஓடிக்கொண்டிருக்கும் போது ரஜினியின் எண்ணம் என்னவாக இருந்திருக்கும்? அவர் நிச்சயம் எதிர்பார்த்திருக்க மாட்டார், பின்னாளில் நடிப்புலகின் ஜாம்பவனாக மாறுவோம் என்று. அவர் நிச்சயம் நினைத்திருக்க மாட்டார், பின்னாளில் ஆசியாவிலேயே அதிகம் சம்பளம் பெரும் நடிகராவோம் என்று. நிச்சயம் யோசித்திருக்க மாட்டார், பின்னாளில் பல நூறு படங்கள் நடிப்போம் என்று. சூப்பர் ஸ்டார் ஆவோம் என்று. ஆனால் அனைத்தும் சாத்தியமானது. 

சிறப்புத் தோற்றத்தில் நடித்த ஒரு நடிகர், திரையுலகில் வில்லனாக வேண்டும் என்ற ஆசையில் வந்தவர், இப்போது ரசிகர்களின் சூப்பர் ஸ்டார். 

ரஜினிக்கும், கமலுக்குமான முதல் காட்சியின் உரையாடல் இது தான்,

கமல்: ஆமா நீங்க யாரு சொல்லுங்க?

ரஜினி: பைரவியோட புருஷன். 

கமல்: என்ன சொன்ன...?

ரஜினி: அவளோட மகளுக்கு தகப்பன்

கமல்: அதுக்கு என்ன ஆதாரம்?

ரஜினி: என்னால நிரூபிக்க முடியாது. அவளால மறுக்க முடியாது. நான் அவகிட்ட பேசணும். 

கமல்: நீ பேச வேண்டியது என்னோட தான்.

முதல் காட்சி முடிகிறது.  

ரஜினிக்கு இந்தப் படத்தில் மொத்தம் ஆறு காட்சிகள். 

காதலித்து கர்ப்பமாக்கிவிட்டு போன கொடியவன், செய்த பாவத்திற்கு மீண்டும் மன்னிப்பு கேட்டுவரும் காதலன், பொறுப்பில்லாத தந்தை, குடிகாரன், காதலியை மற்றொருவனுக்கு திருமணம் செய்துவைக்க விரும்புபவன், மரணத்தை எதிர்கொள்ளும் கேன்சர் நோயாளி. 

வெறும் ஆறு காட்சிகள் மட்டும் தானே என்று விலக்கிவிட முடியாது. ஆறு காட்சிகளிலும் ஆறுவிதமான நடிப்பை கொடுத்திருப்பார் ரஜினி. இந்த ஆறு காட்சிகள், அவரை  கபாலி வரை கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறது.

படம் இதே நாள் வெளியாகிறது, ரஜினி என்னும் கலைஞன் கண்டெடுக்கப்படுகிறான். பாராட்டுகளும் விருதுகளும் குவிகிறது. வசூலிலும் சாதனை. சிறந்த படத்திற்கான தேசிய விருதையும் பெறுகிறது அபூர்வராகங்கள்.  

ஆரம்ப காலத்தில், கே.பாலசந்தரிடம், “வில்லனாக வேண்டும் என்று ஆசீர்வதியுங்கள்” என்றே சொல்லிக்கொண்டிருப்பாராம் ரஜினிகாந்த். அதற்கு பதிலாக, “வில்லன் இல்லப்பா, எதிர்கால சினிமாவின் மன்னனே நீதான்” என்ற கேபியின் வார்த்தை இன்று நிஜமாகி நிற்கிறது. 

100 வருட இந்திய சினிமாவில், ரஜினியை பிரித்து யோசிக்க முடியாது. 65 வயதினைக் கடந்துவிட்டாலும், கபாலியின் மூலம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்து நிற்கிறார் ரஜினிகாந்த். உடலுக்கு ஓய்வு கொடுத்தாலும் நடிப்பிற்கு ஓய்வு கொடுக்காதவர்.

திரைக்கதைக்கு நல்ல படிப்பினை, நடிப்பிற்கு ஒரு பட்டறையாக இன்றும் பேசப்படும் படங்களில் அபூர்வராகம் படமும் ஒன்று. மற்றவருக்கு மட்டுமல்ல, அன்று ரஜினிக்கும் அபூர்வராகம் ஒரு பாடம் தான். 

பி.எஸ்.முத்து

Vikatan