Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நன்நம்பிக்கை கவிஞனுக்கு வாழ்த்துகள்! #பா.விஜய் பிறந்தநாள் பதிவு

“நம்பிக்கை என்பது வேண்டும் நம் வாழ்வில்
லட்சியம் நிச்சயம் வெல்லும் ஒரு நாளில்
மனமே... ஓ மனமே... நீ மாறிவிடு
மலையோ, அது பனியோ நீ மோதி விடு...!"

என்று வார்த்தை உரம் போட்டு, இளம் தலைமுறைக்கு நம்பிக்கையூட்டிய கவிஞர் பா.விஜயின் பிறந்த நாள் இன்று.  

வித்தகக் கவிஞர் என்று போற்றப்படும் பா.விஜயின் பூர்வீகம் கும்பகோணம். பிறந்து வளர்ந்ததெல்லாம் கோயம்புத்தூரில். அப்பா பாலகிருஷ்ணன் தனியார் நிறுவன ஊழியர். அம்மா சரஸ்வதி, ஆசிரியை. சிறு வயதிலேயே விஜயை எழுத்தார்வம் ஆட்கொண்டு விட்டது. படிப்பு இரண்டாம்பட்சம் ஆகிவிட்டது. பிளஸ்டூவில் தோல்வியடைந்து மனம் ஒடிந்து நின்ற விஜயை அவரது அப்பா தேற்றினார். 

‘‘படிப்பு போனாப் போகட்டும்... உனக்குத்தான் கவிதை, கதையெல்லாம் எழுத வருதே. அதுல உன்னை வளர்த்துக்கோ...’’

அந்த வார்த்தைகள் விஜயை உந்தித் தள்ளின. நன்றாக எழுத வேண்டும் என்றால் நிறைய வாசிக்க வேண்டும். தமிழில் உள்ள தொன்மையான இலக்கியங்கள், இலக்கண நூல்களை எல்லாம் தீவிரமாக வாசித்தார். கவிதைகளை எழுதிக் குவித்தார். விஜயின் தீவிரத்தைக் கவனித்துக் கொண்டேயிருந்த அவரது தந்தை, மீண்டும் உற்சாகத்தைப் பற்ற வைத்தார். 

“இவ்வளவு நல்லா எழுதுற நீ, திரைப்படங்களுக்குப் பாட்டு எழுத முயற்சி செய்யலாமே’’ 

விஜய் அந்த வார்த்தைகளை வேதவாக்காக எடுத்துக்கொண்டு அதற்கான முயற்சியில் இறங்கினார். 

பாக்யராஜ் மூலம் வாய்ப்பு!

இயக்குனர் பாக்யராஜ், விஜய்க்கு திரையுலக வாசலைத் திறந்து விட்டார். பாக்யராஜ் உடனான ஒரு சந்திப்பில், தாஜ்மஹாலைப் பற்றி, நீரோ மன்னனைப் பற்றி, கஜினியைப் பற்றியெல்லாம் பேசி பிரமிப்பூட்டினார். விஜயின் இலக்கியப் புலமையையும், வரலாற்றுப் புலமையையும் கணித்த பாக்யராஜ், விஜய்க்கு பல வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்தார். தான் இசையமைத்து நடித்த "ஞானப்பழம்" படத்திலேயே முதல் பாடலை எழுதும் வாய்ப்பையும் வழங்கினார்.  

‘உன்னைப்போல் ஒருத்தி
மண்ணிலே பிறக்கவில்லை...
என்னைப்போல் யாரும்
உன்னை ரசிக்கவில்லை’ என்று பா.விஜய் எழுதிய முதல் பாடல் திரையுலகில் பெரிதும் கவனிக்கப்பட்டது. படிப்படியாக வாய்ப்புகள் வர ஆரம்பித்தன. ‘ஆட்டோகிராஃப்’ படத்தில் எழுதிய ‘ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே’ பாடல் அவருக்கு தனியிடத்தை ஏற்படுத்தித் தந்தது. சோர்ந்து கிடக்கும் மனிதர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்திய அந்தப் பாடல், தேசிய விருதையும் பெற்றது. மதுரை காமராஜர் பல்கலைக்கழக பாடநூலிலும் இந்தப் பாடல் இடம்பெற்றது.

மறக்க முடியாத அனுபவம்!

‘ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே’ பாடலுக்காக தேசிய விருது வாங்க டெல்லி சென்ற விஜய், அப்போது ஜனாதிபதியாக இருந்த அப்துல்கலாமை, குடும்பத்தோடு சந்தித்துப் பேசினார். அப்போது, விஜயையும், அவரது மனைவியையும் இணைந்து அந்தப் பாடலைப் பாடச்சொல்லிக் கேட்டாராம் அப்துல் கலாம். பிறகு, ‘‘சுதந்திர இந்தியா எப்படி இருக்கவேண்டும் என்பதை பாரதி, தன்னுடைய ‘வெள்ளிப் பனி மலையின் மீது...’ என்ற பாடலில் சொல்லியிருப்பார். அதேபோன்று, நீங்களும் எதிர்கால இந்தியா எப்படி இருக்க வேண்டும் என்கிற ஒரு கனவுப் பட்டியலுடன் ஒரு திரைப்பாடல் எழுதுங்கள்’’ என்று வேண்டுகோள் வைத்தாராம். ‘‘இது என்னுடைய வாழ்வில் மறக்க முடியாத அனுபவம்’’ என்கிறார் பா.விஜய்.

நம்பிக்கை ததும்பும் பாடல்கள்!

இதுவரை 600க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்குப் பாடல்கள் எழுதியுள்ளார் பா.விஜய். ‘இளைஞன்’ படத்தில், "தோழா... வானம் தூரம் இல்லை", ‘ஏழாம் அறிவு’ படத்தில், "இன்னும் என்ன தோழா" என விஜய் எழுதிய பல பாடல்கள் இளைஞர்கள் மனதில் தன்னம்பிக்கை வெளிச்சத்தை ஏற்றுபவை. திரைப்பாடல்களில் மட்டுமின்றி, பா.விஜயின் கவிதைகளிலும் நம்பிக்கையை களமாக இருக்கிறது.  

‘காயப்படாத மூங்கில்
புல்லாங்குழல் ஆகாது...
வலிபடாத வாழ்வில்
வசந்தங்கள் நுழையாது!’ -

‘துடியாய்த் துடி
சாதிக்க!
படியாய்ப் படி
வாதிக்க!

மரம் குடைய கோடாலி
கொண்டுபோவதில்லை
மரங்கொத்தி...
அவனவன் கையில்
ஆயிரம் ஆயுதம்’ 


கதாநாயகனான கதை!

`பராசக்தி’ படத்தை ரீமேக் செய்து நடிக்கலாம் என்று இருக்கிறேன் என தன் ஆசையை கருணாநிதியிடம் தெரிவித்துள்ளார் பா.விஜய். ‘‘ரஷ்ய எழுத்தாளர் மாக்ஸிம் கார்க்கி எழுதிய, ‘தாய்’ நாவல் உனக்குப் பொருத்தமாக இருக்கும். அதைச் செய்" என்று ஆலோசனை சொல்ல, அவருடைய எழுத்திலேயே தாய் நாவல் "இளைஞன்" என்ற பெயரில் படமாகியது. படத்தின் கதாநாயகனாக பா.விஜயே நடித்தார். இதையடுத்து ‘ஞாபகங்கள்’, ‘ருத்ரமாதேவி’, ‘நையப்புடை’, ‘ஸ்ட்ராபெர்ரி’ என அவரது நடிப்புப் பயணம் தொடர்கிறது. ஸ்ட்ராபெர்ரி படத்தை இயக்கியதும் அவரே!

ஒரே நாளில் 12 நூல்கள்!

‘உடைந்த நிலாக்கள்’, ‘கண்ணாடி கல்வெட்டுகள்’, ‘காட்டோடு ஒரு காதல்’, ‘நந்தவனத்து நட்சத்திரங்கள்’, ‘வானவில் பூங்கா’, ‘ஒரு கூடை நிலா’, ‘தூரிகை துப்பாக்கியாகிறது’, ‘நிழலில் கிடைத்த நிம்மதி’, ‘வள்ளுவர் தோட்டம்’, ‘அரண்மனை ரகசியம்’, ‘மஞ்சள் பறவை’, ‘கடவுள் வருகிறான் ஜாக்கிரதை’, ‘கறுப்பழகி’, ‘ஐஸ்கட்டி அழகி’,  ‘நம்பிக்கையுடன்’, ‘தோற்பது கடினம்’, ‘செய்’ உள்பட 40க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கிறார். ஒரே நாளில் தன்னுடைய 12 நூல்களை வெளியிட்டதும் விஜயின் தனித்துவங்களில் ஒன்று. அந்த நூல் வெளியீட்டு விழாவின்போது, விஜய்க்கு ‘வித்தகக் கவிஞர்’ என்று பட்டம் வழங்கினார் கருணாநிதி. ஒரு விழாவில், கவிஞர் வாலி, ‘‘சினிமாவில் என்னுடைய வாரிசு பா.விஜய்" என்று குறிப்பிட்டுப் பாராட்டியதும் குறிப்பிடத்தகுந்தது.  

‘‘வாழ்க்கையில் ஒரே இடத்தில் தேங்கி நிற்பது எனக்குப் பிடிக்காத ஒன்று. அடுத்தடுத்து நகர்ந்து கொண்டே இருக்க வேண்டும்’’ என்று கூறும் கவிஞர் பா.விஜயின் பயணங்கள் அனைத்தும் ஜெயிக்கட்டும்...! 

பிறந்த நாள் வாழ்த்துகள் பா.விஜய்!

-ஜெ.பிரகாஷ்

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மகாராஷ்ட்ரா விவசாயிகள் போராட்டம் கற்றுக்கொடுக்கும் பாடங்கள்... கவனிக்குமா தமிழ்நாடு?