Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஸ்வர்ணலதா, நா.முத்துக்குமார், ஷோபா...இன்னும் யாரை எல்லாம் மிஸ் பண்றோம் தெரியுமா?

நட்சத்திரங்கள் மட்டும் இல்லை, பார்த்தவுடன் சட்டென தங்கள் திறமையால் கவர்ந்திழுத்து, வந்த வேகத்திலேயே மறைந்துபோன மின்மினிகளும் தமிழ் சினிமாவில் இருக்கத்தான் செய்கின்றன. அப்படித் தங்களின் தனித்திறமையால் எல்லோரையும் திரும்பிப் பார்க்கவைத்து, கண் மூடித் திறக்கும் இடைவெளியில் நிரந்தரமாய் மறைந்துபோய், நம்மை மிஸ் யூ சொல்ல வைத்த சில கலைஞர்களைப் பற்றிய தொகுப்பு இது. 

ஸ்வர்ணலதா :

கேட்கும் அனைவரையும் மயக்கும் காந்தக் குரலழகி. எம்.எஸ் விஸ்வநாதனின் ஆர்மோனிய இசையில் அறிமுகமானவர். பின் ராஜாவும் ரஹ்மானும் இவரைத் தத்தெடுத்துக் கொண்டார்கள். 'போவாமா ஊர்கோலம்' என டூயட்டாக இருக்கட்டும், 'நீ எங்கே என் அன்பே' என சோகப் பாடலாக இருக்கட்டும்... ஒரே மெட்டில் இவர் காட்டியது ஆயிரம் வித்தியாச உணர்ச்சிகள். ரஹ்மானின் தொடக்க காலத்தில் வஞ்சனையில்லாமல் ஹிட்களை வாரி வழங்கிய குரல் இவருடையது. 'மாலையில் யாரோ மனதோடு பேச’வுக்கு மயங்கிப் போன தமிழகமே அதற்கு சாட்சி.

ஷோபா :

மலையாளத்தில் முன்னணி நடிகையாக இருந்த பிரேமா மேனனின் மகள். புலிக்குப் பிறந்த இந்த புலிக்குட்டி பதினாறு அடிகள் இல்லை, ஒரேயடியாய் 32 அடிகள் தாவியது. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் அடுத்த பத்தாண்டுகளில் தமிழ் சினிமாவையே ஆளும் நாயகியானார். 'முள்ளும் மலரும்' வள்ளி, 'பசி' குப்பம்மா, 'அழியாத கோலங்கள்' இந்துமதி - தமிழ் சினிமா ரசிகனால் மறக்க முடியாத பெண் பாத்திரங்கள் இவர்கள். 17 வயதில் வயதில் தேசிய விருதால் அலங்கரிக்கப்பட்ட தேவதை. இன்னும் கொஞ்ச காலம் இருந்திருக்கலாம் ஷோபா! 

ஷாகுல் ஹமீது :

இசைப்புயலின் ஆஸ்தான பாடகர். மேடைகளில் நிறைய பாடிக்கொண்டிருந்தவரின் புகழ் ரஹ்மானோடு கை கோத்ததும் உச்சத்துக்குச் சென்றது 90-களில் பட்டி தொட்டி எல்லாம் ஆண்டது இவரின் பாடல்கள்தான். 'உசிலம்பட்டி பெண்குட்டி', 'எதுக்குப் பொண்டாட்டி' என துள்ளலாய் ஆட வைக்கும் இவரின் குரல் 'ராசாத்தி.... என் உசுரு என்னுதில்ல' என காதலில் கசிந்துருகவும் வைக்கும். கடைசியாய் 'வாரோயோ தோழி' என ஜீன்ஸில் ஒலித்து ஜொலித்தார். காற்றில் இன்னும் கேட்டபடியேதான் இருக்கிறது அவரின் குரல்! (முதலில் இருப்பவர்தான் ஷாகுல் ஹமீது)

சில்க் ஸ்மிதா :

தென்னிந்திய சினிமாவின் தங்கத்தாரகை. ஹீரோயின்களை விட அதிகமாகக் கொண்டாடப்பட்ட மோகினி. கண்ணழகில் கிறங்கி, குரலழகில் மயங்கி பெட்டிப்பாம்பாய் சுருண்டு கிடந்தது ரசிகர் படை. சில்க்குக்கான ப்ராண்ட் இமேஜ் அன்றைய ஹீரோக்களுக்கு இணையாக இருந்தது என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். சாட்சி - கோடிகளைக் குவித்த 'டர்ட்டி பிக்சர்' படத்தின் வசூல். சில்க்கைப் போல ஓர் அழகி இனி தமிழ் சினிமாவில் தோன்ற வாய்ப்பே இல்லை! 

குணால் :

'காதல் தேசம்' படத்தில் அப்பாஸை அறிமுகப்படுத்தி அவரை சாக்லேட் பாயாக நிறுத்திய இயக்குநர் கதிர், தன் 'காதலர் தினம்' படத்தில் குணாலை அறிமுகப்படுத்தி அடுத்த சாக்லேட் பாய் இமேஜை வாங்கித் தந்தார். மொழுமொழு முகம், அப்பாவி ஜாடை என அப்போதைய காலேஜ் பெண்களுக்கு பிடிக்கும் அத்தனை அம்சங்களும் குணாலிடம் இருந்தது. அவரின் திடீர் மறைவு சகல தரப்புகளிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது!

செளந்தர்யா :

மாடர்ன் ஏஜ் சாவித்ரி. 12 ஆண்டுகள் தமிழ், தெலுங்கு, கன்னடத் திரையுலகங்களை ஆண்ட லேடி சிங்கம். ரஜினி, கமல், வெங்கடேஷ், நாகார்ஜுனா, அமிதாப்பச்சன், விஷ்ணுவர்தன் எனப் பெரும்பாலான இந்திய சூப்பர்ஸ்டார்களோடு நடித்த பெருமை இவருக்கு உண்டு. தேசிய விருது வாங்கிய தயாரிப்பாளரும்கூட. திரை வாழ்க்கையின் உச்சத்தில் இருந்தபோதே அரசியலிலும் குதித்தார். பா.ஜ.க-வுக்கு ஆதரவாக 2004-ல் பிரசாரமும் செய்தார். அந்தப் பளீர் சிரிப்பும், வெகுளித்தனமான நடிப்பும்...செளந்தர்யா செளந்தர்யாதான்!

ஜீவா :

பிரமாண்ட இயக்குநர் ஷங்கரின் ஆரம்பகாலப் படங்களான ஜென்டில்மேன், காதலன், இந்தியன் போன்றவற்றுக்கு அழகு சேர்த்த ஒளிப்பதிவாளர். பி.சி ஶ்ரீராமுக்குப் பிடித்த சிஷ்யப்பிள்ளை. 2001-ல் இயக்குநர் அவதாரம் எடுத்தார். துறுதுறு காதலும், விறுவிறு காட்சிகளுமாய் இயக்குநர் ஜீவா பாய்ச்சியது புது அலை. காதலை அழகாய்க் கையாளும் ஒரு சில இயக்குநர்களுள் ஒருவர் என குட்நேம் வாங்கினார். இருந்திருந்தால் இன்னும் சில காதல் க்ளாஸிக்ஸ் தமிழ் சினிமாவுக்குக் கிடைத்திருக்கும்!

கிஷோர் :

கத்தரிகளால் வித்தை காட்டிய கலைஞன். சுமாரான திரைக்கதையையும் விறுவிறு படமாக மாற்ற முடியும் ஒரு எடிட்டர் மனது வைத்தால்...! அந்த வகையில் கிஷோர் கில்லி. புழுதி மணம் கலையாமல் ஆடுகளத்தை வழங்கியபோதும், ரத்தமும் சதையுமாய் சாமானியர்களின் வாழ்க்கையை விசாரணையில் தெரிவித்தபோதும் சிலிர்த்தன பல கோடி இதயங்கள். அதற்கான அங்கீகாரம்தான் இரண்டு தேசிய விருதுகள். பலரின் வாழ்க்கையை வெளிச்சம் போட்டுக் காட்டிய கிஷோர் வாழ்ந்ததும் மறைந்ததும் எடிட்டிங் ரூமின் இருட்டில்தான்! 

நா.முத்துக்குமார் :

விருட்சமாய் வளர்ந்து இலையாய் உதிர்ந்த கலைஞன். காதல், தாய்மை, தோல்வி, தன்னம்பிக்கை என இவரின் பேனா தொடாத பகுதிகளே இல்லை. சந்தேகமே வேண்டாம். முத்துக்குமார் எக்காலத்திற்குமான கலைஞன்தான். புத்தகங்களின் வழியாகவும் பலரை கொள்ளைகொண்ட மந்திரக்கோலுக்குச் சொந்தக்காரர். பலரை தூங்கவைத்த, தூங்க விடாமல் தவிக்கவைத்த வரிகளுக்குச் சொந்தக்காரர் ஓர் அதிகாலையில் நிரந்தரமாய் தூங்கிப் போனார். மிஸ் யூ கவிஞரே!

நித்திஷ்
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மகாராஷ்ட்ரா விவசாயிகள் போராட்டம் கற்றுக்கொடுக்கும் பாடங்கள்... கவனிக்குமா தமிழ்நாடு?