'சிரிக்காத நாட்களெல்லாம் வீணான நாட்களே' - சார்லி சாப்ளின் நினைவுதினம் இன்று!

 

'இறுக்கமான கோட்டும், அதற்கு மாறாக பெரிய சைஸ் பேண்ட்டும், டூத் பிரஷ் மீசையும், கிழிந்த தொப்பியும், பொருத்தமில்லாத ஷுக்களும், வாத்து நடையுமாக...' என்று நாம் கூறும்போதே நம் கற்பனைக் கண்கள் முன்பாக சார்லி சாப்ளின் தோன்றிவிடுகிறார். இந்த அளவுக்கு ரசிகர்களைக் கவர்ந்த சாப்ளின் செல்லுலாயிடில் செய்த விந்தைகளை எளிதாகச் சொல்லி விட முடியாது.

லண்டனில் ஒரு ஏழைக் குடும்பத்தில் 1889ல் பிறந்த சார்லஸ் ஸ்பென்ஸர் சாப்ளினின் இளைமைக்காலம் அத்தனை இனிமையானதாக இல்லை.    இசைக்கலைஞர்களாக இருந்த சார்லஸ் ஹன்னாவுக்கும் ஹாரியட் ஹில்லுக்கும் மகனாகப் பிறந்த சாப்ளின், சிறுவயதிலேயே தந்தையை இழந்து தாயின் அரவணைப்பில் வளர்ந்தார்.  கணவரின் பிரிவால் அவரது தாயார் சற்று மனநிலை பிறழ்வு நோய்க்குக்கூட  ஆளாகிப் போனார். 

தாயாரும் சிறுவன் சாப்ளினும் கலை அரங்குகளிலும், வீதிகளிலும் நாடகங்கள், பாடல்கள் என ஆடிப் பாடி நடித்தனர். ஒருமுறை அவரது தாயாரால் பாட முடியாமல் போக, சிறுவன் சாப்ளின் பாடத் தொடங்கினான். சிறுவனின் பாடலைக் கேட்ட ரசிகர்கள் காசை வீசியெறியவே அவற்றை ஓடிச்சென்று எடுப்பதும், பிறகு பாடுவதுமாக இருந்தான். சாப்ளினின் இந்தச் செயலைப் பார்த்து விழுந்து விழுந்து சிரித்தனர். அவரது நகைச்சுவைக்கான விதை அன்றுதான்  அவர் மனதில் முளைத்தது.

 ஓரளவு வளர்ந்ததும் அமெரிக்காவுக்குப் பயணமான சாப்ளின், ஹாலிவுட்டின் தெருக்களில் காசில்லாமலே சில காலம் வலம் வந்தார். மெக்சன்னட்டின் நாடகக் குழுவில் சேர்ந்து புகழ்பெற தொடங்கினார். அதன்பிறகு, 1914 ல் முதன்முதலாக அனாதையான நாடோடி 'டிரெம்ப்' (TRAMP) பாத்திரத்தில் தோன்றி ரசிகர்களின் நெஞ்சத்தில் நீங்காத இடம் பெற்றார். இந்த கால கட்டத்தில்தான் சின்னச்சின்ன படங்களாக ஏராளமான படங்களில் நடித்தார். அவைதான் இப்போதும், 'சித்திரம்' தொலைக்காட்சியிலும்,  'சுட்டி' டி.வியிலும் அடிக்கடி ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கின்றன.  இதைத் தொடர்ந்து 1940 வரை ஏறத்தாழ 25 வருடங்கள் அந்த வேடத்திலேயே நடித்து உலகை சிரிப்புக் கடலில் ஆழ்த்தினார்.

டிரேம்ப் (TRAMP), தி கிட் (The kid), கோல்ட் ரஷ் (Gold Rush), சர்க்கஸ் (Circus), சிட்டி லைட்ஸ் (City lights), மாடர்ன் டைம்ஸ் (Modern Times), தி கிரேட் டிக்டேட்டர் (The great Dictator) ஆகிய படங்கள் இன்றளவும் திரை உலக இதிகாசங்களாகப் புகழ் பெற்று விளங்குகின்றன. THE GREAT DICTATOR படத்தில் சாப்ளின் இறுதியில் பேசும் சிலிர்க்க வைக்கும் வசனம் உலகப்புகழ் பெற்றது.  சாப்ளின் தானே நடித்து, தயாரித்து, இசையமைத்து  இயக்கிய இந்தப் படங்கள் அமெரிக்கர்களை மட்டும் அல்ல; அகிலம் முழுவதும் உள்ள அனைவரையும் சிரிக்க வைத்து, சிந்திக்க வைத்தன. அவரது கால்கள் சுழன்றபோது ஓராயிரம் கண்கள் சுழன்றன. 

உலக சபையில் நகைச்சுவையை சங்கீதமாக வாசித்தவர். திரையில் சாப்ளின் பிரச்னைகளில் சிக்கி சுண்ணாம்பாகும் போது ரசிகர்கள் சிரித்துக்கொண்டிருப்பார்கள். பார்வையாளர்கள் உச்சுக் கொட்டும் போதோ சாப்ளின் சிரித்துக்கொண்டிருப்பார். இது அவரது படங்களில் நாம் காணும் விசித்திரம்.

40 ஆண்டுகளாக அமெரிக்காவில் வாழ்ந்தபோதும், அவர் அந்த நாட்டின் குடியுரிமையைப் பெறவே இல்லை.  தனது இறுதிக்காலத்தை சுவிட்சர்லாந்திலும் இங்கிலாந்திலும்தான் கழித்தார். அவருக்கு 1972 ல் சிறப்பு ஆஸ்கார் விருது வழங்கப்பட்டது. நமது இந்திய அரசாங்கம் அவரது தபால் தலையை வெளியிட்டு ஒரு கலைஞனுக்கு செய்ய வேண்டிய மரியாதையைச் செய்து முடித்தது. ஹிட்லர் தொடங்கி, சராசரி மனிதன் வரை உலக மக்கள்   அனைவரையும் சிரிப்பால் அசத்திய சாப்ளின்  1977 டிசம்பர் மாதம் 25 ம் நாள் மறைந்தார்.

இந்த ஒப்பற்ற கலைஞனின் தாக்கம் பெரும்பாலான நடிகர்களிடம் இருந்ததை, இருப்பதை இன்றளவும் எவரும் மறுக்க முடியாது. ஏனென்றால் இவர் போட்ட, போன சாலைகளில்தான் திரை உலக காமிராக்கள் இன்றும் பயணம் செய்கின்றன. 

சாப்ளினின் பொன்வாசகங்களில் சில:

* டாக்கி  (பேசும் சினிமா) வந்ததும் நடிப்புக்கலை செத்து விட்டது.

* உலக பணக்காரர்களின் வரிசையில் நானிருந்தாலும், என்னால் ஏழையாகத்தான் சிந்திக்க முடிகிறது. பணம் இடையில் வந்தது. ஆனால், ஏழ்மை என் ரத்தத்தில் ஊறியது.

* ரஷ்யாவுக்கு நான் சென்று வந்ததால், 'என்னை கம்யூனிஸ்டா?' எனக் கேட்கிறார்கள். மனிதநேயத்துடன் வாழ  நான் கம்யூனிஸ்டாக இருக்க வேண்டிய அவசியமில்லை.

* மழையில் நனைந்துகொண்டுச் செல்வது எனக்கு மிகவும் பிடிக்கும். காரணம் அப்போதுதான் நான் அழுவது மற்றவர்களுக்குத் தெரியாது.

* லாங் ஷாட்டில் பார்க்கும் போது ஒவ்வொருவரின் வாழ்க்கையும் மகிழ்ச்சிகரமானதுதான். க்ளோசப் ஷாட்டில் பார்க்கும்போதுதான் அதில் சோகத்தை நம்மால் கவனிக்க முடியும்.

* திரைப்படத்தின் மூலம் உங்களை சிரிப்பலைகளில் மிதக்க வைக்க, எனக்கு  ஒரு பூங்கா, ஒரு போலீஸ்க்காரர், மற்றும் அழகிய ஒரு பெண் இருந்தால் போதும்.

* சிரிக்காத நாட்களெல்லாம் வீணான நாட்கள்தான்.

* இந்த உலகில் எதுவுமே நிரந்தரமானதல்ல, நமக்கு வரும் துன்பங்கள் உள்பட.

* ஏசு கிறிஸ்து ஜனாதிபதியாக இருக்கும்போதுதான் நான் மீண்டும் அமெரிக்காவுக்கு திரும்புவேன்.   

 

எஸ்.கதிரேசன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!