Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மிஷ்கின் என்கிற சித்திரம் பேசியது! #11YearsofChithiramPesuthadi

2006-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பத்தாம் தேதி. வழக்கமாகத் தமிழ் திரைப்படங்கள் வெளியாகும் வெள்ளிக்கிழமை. பொங்கலுக்கு வெளியான பெரிய நடிகர்களின் படங்கள் விட்டுக் கொடுத்த இடைவெளியில் அந்தப்படமும் வெளியானது. பழைய பாடல்களை தலைப்பாக வைத்து படங்கள் வெளியாகும் 'சீசன்' அது. விஜய் நடிப்பில் வெளியான 'துள்ளாத மனமும் துள்ளும்' மெகா ஹிட் அடித்த பிறகு உருவான பழக்கம் . அந்த வரிசையில் பல படங்கள் பழைய தலைப்பில் வந்து நம்பிக்கையுடன் உள்ளே போனவர்களை, கடுமையாக ஏமாற்றியும் இருந்தன. புதிய இயக்குநர்,புதிய நாயகன், புதிய நாயகி, தெரிந்த முகம் என்று பார்த்தால் காதல் படத்தின் வில்லன் தண்டபாணி மட்டுமே என எந்த ப்ளஸுமே இல்லாமல்  வெளியான அந்தப் படத்தின் பெயர் 'சித்திரம் பேசுதடி'. 

மிஷ்கின்

பெரியளவில் விளம்பரங்களோ,ஆரவாரமோ இல்லாமல் வெளியான 'சித்திரம் பேசுதடி' படத்தின் முதல் காட்சிக்கு போனவர்களுக்கு பெரும் ஆச்சர்யத்தை அளித்தார் அந்தப்படத்தின் அறிமுக இயக்குநர் மிஷ்கின். எழுத்தாளர் சுஜாதா ஒரு நல்ல சிறுகதையின் வெற்றி குறித்து கூறும் போது 'கதையின் முதல் பாராவில் படிப்பவனை வீழ்த்திவிடவேண்டும்' என்பார். இந்தப்படம் அதை முதல் காட்சியில் செய்தது. ஒருவர் உயிர் பிழைக்க ஓடி வருகிறார், ஒரு கழிவறைக்குள் புகுந்து ஒளியப் பார்க்கிறார். அவர்கள் வந்துவிடுகிறார்கள். தப்பிக்க முடியாத கட்டம். அந்த இளைஞரைக் கொல்ல நெருங்கும் போது ஒரு உருவம் குறுக்கிடுகிறது.ஆளுக்கு  ஒரு அடி என மூவரையும் வீழ்த்தி வெளியேறுகிறது. படத்தின் முதல் காட்சியிலேயே ஒரு படபடப்பை ஏற்படுத்தி பெரிய சண்டையைப் பார்வையாளர்கள் எதிர்பார்க்கும் நேரத்தில் சட்டென முடித்து படம் குறித்த நம்பிக்கையை விதைத்தது. படத்தின் கலைஞர்களின் பட்டியலில் இயக்குநர் மிஷ்கின் பெயர் ஆங்கிலத்தில் வரும் போது ஜப்பான் எழுத்து போன்ற ஃபாண்டில் வந்ததை அப்போது யாரும் கவனித்திருக்க மாட்டார்கள். 

Chithiram Pesuthadi

நாயகன் லோயர் மிடில் க்ளாஸ் என அழைத்துக்கொள்ளும் ஏழை. வேலை இல்லாமல் அலைகிறான். வேலை தேடும் இடங்களில் படிப்பு இல்லை என்கிற காரணத்தால் நிராகரிக்கப்படுகிறான். வேறு வழியில்லாத நிலையில் அடியாள் வேலைக் கிடைக்கிறது. அவன் வாழ்க்கையில் வரும் பெண் சாதாரண வாழ்க்கைக்கு அழைக்கிறாள்.அதன் பின்னர் நடக்கும் நிகழ்வுகளே கதை. 

படம் முழுக்க முழுக்க 'அறம்' என்கிற ஒன்றின் பின்னாலேயே நகருகிறது. நாயகி எதிர்பார்க்கும் ஒழுங்கும் சின்னச்சின்ன அறங்களும் ஒரு பக்கம் மீறப்படுகிறது. முதல் காட்சியில் முகம் தெரியாத மனிதனைக் காப்பாற்றும் அறம் கொண்ட நாயகன் குடும்பத்திற்காக  அடியாளாக மாறுகிறார். நாயகியின் தந்தை சிறுவயதில் மனைவி இறந்தாலும்  மகளுக்காக மறுமணம் செய்யாமல் அவருக்கான அறம் ஒன்றை கடைப்பிடிக்கிறார். இப்படி சாதாரண கதை போல தோற்றமளிக்கும் படத்திற்குள் மிக நல்லதொரு நாவலைப் புனைந்திருப்பார் இயக்குநர் மிஷ்கின். 

மிஷ்கினின் இரண்டாவது படமான 'அஞ்சாதே' வந்த பிறகு மீண்டும் மீண்டும் 'சித்திரம் பேசுதடி' படத்தை சிடியில் வாங்கிப் பார்த்தவர்கள் அதிகம். காரணம் படத்தின் காட்சிகளில் மிஷ்கின் பொதிக்கும் குறியீடுகள். ஜப்பானிய ,கொரிய பட இயக்குநர்களின் பாதிப்பு தமக்கு உள்ளது என ஒப்புக்கொள்ளும்  மிஷ்கின் அப்படியான படங்களை போலவே நிறைய குறியீடுகளை முதல் படத்திலேயே வைத்திருப்பார்.  மஞ்சள் நிறத்தின் மீது மிஷ்கினுக்கு பெரும் விருப்பம் இருப்பதை அவர் படங்களை கவனிப்பவர்கள் அனைவருக்கும் தெரியும். இந்த படத்தில் கானா உலகநாதன் மஞ்சள் நிற சட்டையை எப்போதும் அணிந்திருப்பார். படத்தில் பிரசித்தி பெற்ற பாடலான "வாள மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம்"  பாடலில் வரும் மாளவிகாவும் மஞ்சள் சேலைதான் அணிந்திருப்பார். அதன் பின்னர் வந்த மிஷ்கின் பட குத்து பாடல்களில் மஞ்சள் சேலைகள் இடம்பெற்றன.

Mysskin

அடிதடியெல்லாம் விட்டுவிட்டு தெருவில் பொம்மை விற்கப் போகும் நாயகன், திருமணம் நெருங்கும்  நிலையில் சிறைக்கு போகிறார்,திருமணம் நின்றுவிடுகிறது. அதன் பின் நாயகியின் தந்தை தூக்குப் போட்டு கொள்கிறார். தன் தந்தையின் சாவுக்கு நாயகன் தான் காரணம். உண்மையில் நாயகியின் தந்தை விபச்சார விடுதியில் போலிஸிடம் மாட்டிவிட அவரைக் காப்பாற்றி அவருக்குப் பதிலாகவே நாயகன் சிறைக்கு சென்றிருப்பார். தன்னால் பெண் திருமணம் நின்று போனதை வெளியில் சொல்ல முடியாமல் அவர் தற்கொலை செய்திருப்பார். ஆனால் நாயகன் அந்த உண்மையைச் சொல்லாமல் இருப்பார்.இறுதியில் வேறுவழியில் அறிந்து கொள்வார் நாயகி. 

இசையமைப்பாளர்  சுந்தர் சி பாபுவிற்கு இது முதல் படம். பாடல்கள் படத்திற்கு எந்தத் தடையும் செய்யாமல் ஒலித்தது. அப்போது எழுத்தாளர் சுஜாதா தான் எழுதி வந்த 'கற்றதும் பெற்றதும்' தொடரில் ஆண்டின் மிகச்சிறந்த திரைக்கதை கொண்ட படமாக குறிப்பிட்டார். என்னதான் நல்ல படமாக இருந்தாலும் இன்றைய சமூக ஊடகம் போல் அன்று வலிமையான ஊடகம் இல்லாத காரணத்தால் படம் முதல் வாரத்திலேயே பல இடங்களில் தூக்கப்பட்டது. பிறகு பத்திரிகைகளில் விமர்சனம் பாஸிடிவ்வாக வெளியான பின் பல இடங்களில் மீண்டும் இப்படம் திரையிடப்பட்டது. தமிழ் இயக்குநர்களில் முக்கியமானவராக இன்று கருதப்படும் இயக்குநர் மிஷ்கின் அவர்களை இனங்கண்டு ஆதரித்தது விகடன். இப்படத்திற்கான விகடனின் விமர்சனத்தின் கடைசி வரிகள் "கவனத்தை இழுக்கும் ரசனையான ஒரு ஓவியம்!"  என்று இருந்தன. ஆம் சித்திரம் பேசியது!  

மிஷ்கின் என்கிற ரசனைக்காரன் சினிமா என்னும் அழகியலை மெல்ல மெல்ல ரசிக்க ஆரம்பித்து, அது கூடவே நம் ரசனையையும் செதுக்க ஆரம்பித்து இன்றோடு பதினொரு வருடங்கள் ஆகிறது... வாழ்த்துகள் மிஷ்கின்!

- நா.செந்தில் குமார்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்