‘ஒரே ரத்தம்’ நந்தகுமார்... ‘குறிஞ்சி மலர்’ அரவிந்தன் - மு.க.ஸ்டாலின் திரைப்பயணம்! #VikatanExclusive

“தலைவர் வழியில்...’’ என்ற முழக்கத்துடன் தி.மு.க-வில் தந்தைக்கு இணையான செல்வாக்குடன் செயல் தலைவராக வலம் வருகிறார் மு.க.ஸ்டாலின். அவருக்கு இன்று அகவை 65. தி.மு.க தலைவரான கருணாநிதியின் வழியில் அரசியல் களத்தில் செயல்படும் ஸ்டாலின், தந்தை கருணாநிதியின் அரசியலுக்கு முந்தைய தாய்வீடான சினிமா, தொலைக்காட்சியிலும் நடிப்பில் கலக்கியிருக்கிறார் என்பது இங்கு எத்தனைப் பேருக்குத் தெரியும்?

மு க ஸ்டாலின்

ஸ்டாலின் தன்னுடைய இளம்வயதில் இரண்டு படங்கள், இரண்டு டிவி தொடர்களின் நடித்திருக்கிறார். அவரது நடிப்பில் தூர்தர்ஷன் சேனலில் ஒளிப்பரப்பான ’குறிஞ்சி மலர்’ தொடருக்கு அப்போது ஏகப்பட்ட வரவேற்பு. சொல்லப்போனால், தி.மு.க-வின் மூத்த தொண்டர்களுக்கு ஸ்டாலின் முதன்முதலில் நடிகராகத்தான் அறிமுகமானார்.

ஒரே ரத்தம்:

நடிகராக சினிமாவில் மு.க.ஸ்டாலின் முதன்முதலில் காலடி எடுத்து வைத்த திரைப்படம் 1988-ல் வெளியான ‘ஒரே ரத்தம்’. ஒரே ரத்தம் திரைப்படத்தில் ஸ்டாலினின் கதாப்பாத்திரப் பெயர் ‘நந்தக்குமார்’. கிஷ்மு, கார்த்திக், ராதாரவி, பாண்டியராஜ், மனோரமா, சீதா, மாதுரி என்று எக்கசக்க நட்சத்திரப்பட்டாளமே நடித்திருந்த இத்திரைப்படத்துக்கு கதை, வசனம் மு.கருணாநிதி. வார இதழ் ஒன்றில் தொடராக வெளிவந்த நெடுங்கதையின் திரைவடிவம்தான் ’ஒரே ரத்தம்’. கட்டவிழ்ந்து கிடந்த சாதி, மத வேறுபாடுகளுக்கு எதிராக சமுதாயப் புரட்சி பேசுகின்ற கதாப்பாத்திரத்தில் தந்தையின் வழியை அன்றே பின்பற்றி இருப்பார் மு.க.ஸ்டாலின். ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாகப் போராடுகின்ற, நகரம் சென்று கல்விகற்ற புரட்சியாளன் கதாபாத்திரம் ஸ்டாலினுக்கு. எனினும், படத்தில் அவர் உயிர்விடுகிற காட்சிகளில் கண்ணீர் விட்டுக் கதறிய தொண்டர்கள் ஏராளம். 

மக்கள் ஆணையிட்டால்:

விஜயகாந்த், ரேகா நடிப்பில் அதே ஆண்டில் வெளியான மற்றொரு திரைப்படம் மக்கள் ஆணையிட்டால். இதுவும் கருணாநிதியின் கற்பனையில் உருவான புரட்சிகரமான கதைதான். இப்படத்தின் ’ஆற அமர கொஞ்சம் யோசிச்சு பாருங்க’ பாடல் இன்றும் தி.மு.க-வின் தேர்தல் பிரசார பாடல்களின் டாப் 10 லிஸ்ட்டில் இடம்பிடித்திருக்கிறது. ஒல்லியான தோற்றத்துடன், முன்பக்க நெற்றியில் கற்றைமுடி புரள, வெள்ளை ஆடையில் ஸ்டாலின் பாடல் பாடும் காட்சியை ரசிக்காத தி.மு.க விசுவாசிகள் யாருமே இருக்க முடியாது. 

குறிஞ்சி மலர்:

எழுத்தாளர் நா.பார்த்தசாரதியின் எழுத்தில் வெளிவந்த ‘குறிஞ்சி மலர்’ என்னும் புத்தகத்தின் கதைதான் தூர்தர்ஷனில் ஒளிப்பரப்பான குறிஞ்சி மலர் சீரியல். அரவிந்தன், பூரணி என்னும் இருவரின் வாழ்வியலைச் சுற்றி இயக்கும் வாழ்க்கைப் போராட்டம்தான் இந்த தொடர். குறிஞ்சி மலரில் நடித்தபோது மு.க.ஸ்டாலினின் வயது 37. 13 பாகங்களாக ஒளிபரப்பான இந்த தொடரில் மு.க.ஸ்டாலின் கதாப்பாத்திரம் பெயர் அரவிந்தன். குறிஞ்சி மலரின் தாக்கத்தால், தி.மு.க தொண்டர்கள் அக்காலகட்டத்தில் பிறந்த குழந்தைகளுக்கு அரவிந்தன் என்று பெயர் வைத்தனர். பூரணியின் அரசியல் வாழ்வுக்காகவும், ஏழை மக்களுக்காகவும் தன் இன்னுயிரையே தியாகம் செய்யும் கதாபாத்திரம்தான் ஸ்டாலின் நடித்த ‘அரவிந்தன்’ கேரக்டர். 

மு.க.ஸ்டாலினின் திரைப்பயணம் இத்துடன் முடிந்துவிடவில்லை. கடந்த தேர்தல் பிரசார காலத்தில் மக்கள் பிரச்னைகளை முன்வைத்து தி.மு.க சார்பில் வெளியான ‘முடியட்டும் விடியட்டும்’ குறும்படத்திலும் அவர்தான் ஹீரோ. ஸ்டாலின் 1988-க்குப் பிறகு நடிப்புலகை விட்டுவிட்டு, அரசியலில் வெற்றிகரமாக களம் கண்டுகொண்டிருந்தாலும், அதற்கு மாற்றாக அவரது மகன் உதயநிதி, தந்தை விட்ட நடிப்புக் களத்தைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டிருக்கிறார். இந்த 65-வது பிறந்தநாளில் நடிகர், அரசியல்வாதி என பன்முகத்திறமைகளுடன் பிரகாசிக்கும் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துகள்!

-பா.விஜயலட்சுமி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!