விஜய் நடித்த ‘சுறா’ படத்தின் முதல் தலைப்பு என்ன தெரியுமா? #7YearsofSura

சூப்பர் என்பதற்கு Simplified Universal Player Encoder & Renderer, A Video Converter / Player, OOP என்கிற புரொக்ராமிங்கின் ஒரு கீவேர்ட், 2005ல் வெளியான தெலுங்குப் படம், 2010ல் வெளியான கன்னடப் படம், ஆங்கிலப் படம் என இன்னும் பல தகவல்களைக் கொட்டியது விக்கிப்பீடியா. எதேச்சையாக சூப்பர் பற்றி தேடிய தருணத்தில் கூகுள் காட்டிய இன்னொரு சர்ச் இளைய தளபதி நடித்த 'சுறா'. சும்மா க்ளிக் பண்ணிப் பார்த்ததில் சுறா வெளியாகி இன்றோடு (ஏப்ரல் 30) ஏழு வருடம் ஆகிறது என்கிற செய்தி கிடைத்தது. விஜய்யின்  50வது படத்தை பற்றி பேசாமலிருக்க முடியுமா? அதைப் பற்றி விக்கிப்பீடியா ஸ்டைலிலேயே பார்க்கலாம்.

விஜய்

சுறா (Sura) என்பது 2010ம் ஆண்டின் மத்தியில் வெளியான தமிழ்த் திரைச்சித்திரம் ஆகும். இந்தத் திரைப்படைப்பு எஸ்.பி.ராஜ்குமார் இயக்கத்திலும், திரைக்கதை அமைப்பிலும் வெளியானது. இந்தப் படம் சங்கிலி முருகனால் தயாரிக்கப்பட சூரிய படங்களால் (Sun Pictures) வழங்கப்பட்டது. சுறா விஜய்யின் 50வது திரைப்படம் என்பதால் பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், ’உயரமான’ எதிர்பார்ப்புகளை (High Expectations) பூர்த்தி செய்யாமல், பார்வையாளர்களிடமிருந்தும், விமர்சகர்களிடமிருந்தும் எதிர்மறையான விமர்சனங்களைப் வாங்கிக் கொண்டது. இருந்தாலும் இப்போதும் தொலைக்காட்சியில் திரையிடப்பட்டால் அதிக மக்களால் பார்க்கப்படும் சித்திரம் என்று கூறப்படுகிறது. 

 

கதாபாத்திரங்கள்:

சுறா - விஜய்

பூர்ணிமா - தமன்னா

தேவ் கில் - சமுத்திர இராசா

வடிவேலு - அம்பர்லா

ஸ்ரீமன் - தண்டபானி

சுஜாதா - சுறாவின் தாய்

மதன் பாபு - மதன் பாபு

 

கதைக்கரு:

சுறா

தமிழகத்தின் கரையொட்டிய ஊரான யாழ் நகரில் நடைபெறுகிறது சுறா படத்தின் கதை. சுறாவும் (விஜய்), அம்பர்லாவும் (வடிவேலு) யாழ்நகரிலேயே பிறந்து வளர்ந்து வசிக்கிறார்கள். தன் ஊரின் மக்களுக்கு ஒற்றை மனித ராணுவமாக (One man army) காவலாய் இருக்கிறார் சுறா. தன் மக்களுக்கு வரும் ஆபத்தை எப்படித் தடுக்கிறார் என்பதே படத்தின் கதைக் கரு. இதில் இடம்பெறும் சுறாவின் அறிமுகக்காட்சி மிகப் பிரபலம்.

நகைச்சுவை:

வடிவேலு

இடையில் அம்பர்லா காலை ஆறுமணிக்கு நடைபெறும் படகோட்டும் போட்டியில் கலந்து கொள்ள மாலை ஆறுமணிக்குச் சென்று நகைச்சுவை செய்வார். திரைப்படம் பார்த்துக் கொண்டிருந்த தான் இடைவேளையின் போது வெளியே வந்ததால் அடிபட்டுவிட்டது எனவும், பாகவதரை உச்சஸ்தானியில் பாடினால், இருதயக் கோளாறு வரும் எனப் பல நகைச்சுவை செய்திருப்பார் அம்பர்லா.

காதல்:

Sura

மீன்வலை பின்னிக் கொண்டிருக்கும் சுறாவும், அம்பர்லாவும் கடலில் விழுந்து தற்கொலைக்கு முயலும் ஒரு பெண்ணைப் பார்க்கிறார்கள். அவளைக் காப்பாற்றிக் கரையேற்றும் சுறா என்ன பிரச்னை என விசாரிக்கிறார். பரபரப்பாக அங்கே நுழைகிறது ஒரு கார். அதிலிருந்து வரும் நாய்க் குட்டியைப் பார்த்ததும் அந்தப் பெண் நெகிழ்ச்சியடைகிறார். அந்தப் பெண் பெயர் பூர்ணிமா (தமன்னா) என்றும், தன் வளர்ப்பு நாய் இறந்து போனது என்று நினைத்து அரிதாரம் பூசிக் கொண்டு தற்கொலைக்கு முயன்றதையும் சுறாவிடம் சொல்கிறார். இதிலிருந்து நாயகி பூர்ணிமா எவ்வளவு மென்மையானவர் (Sensitive) என்பதை உணர்ந்து கொள்கிறார் சுறா. பின்பு ஒரு நாள் பூர்ணிமா, சுறா சில நற்காரியங்கள் செய்வதைப் பார்த்து அவர் மீது காதல் கொள்கிறார். தன் காதலையும் சுறாவிடம் சொல்கிறார். தன் காதலை ஏற்காவிடில் தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டுகிறார். ஏணிப் படியை எடுத்துக் கொண்டு அம்பர்லாவுடன் பூர்ணிமா வீட்டிற்குச் செல்கிறார் சுறா. அங்கு சக்கரையுடன் தூக்க மாத்திரையை சாப்பிட ஆயத்தமாக இருக்கிறார் பூர்ணிமா. பூர்ணிமாவிடம் சென்று ஆறுதலாக பேச்சுக் கொடுக்கும் சுறாவுக்கு காதல் வந்துவிடுகிறது. 'சிறகடிக்கும் நிலவே கரம்பிடித்ததென்னை' என்கிற பாடலைப் பாடிய படி இருவரும் காதலிக்கத் துவங்குகிறார்கள்.

வில்லன்:

 

 

கதை இப்படி நகர்ந்து கொண்டிருக்கும் பொழுது, அமைச்சர் சமுத்திர இராசா (தேவ் கில்) சுறாவும், அவனைச் சார்ந்த மக்களும் வாழும் யாழ் நகரைக் கைப்பற்றி அங்கு ஒரு தீம் பூங்கா (Theme Park) கட்ட நினைக்கிறார். ஆனால் அதைத் தடுக்கும் சுறாவை அழித்து அங்கு தான் நினைத்ததை நடத்த நினைக்கிறார் சமுத்திர இராசா. ஆனால், அதிலிருந்து தப்பும் சுறா தன் மக்களைக் காப்பாற்ற கடற்படையினர் எனப் பல வேடமிட்டு தமிழன் வீர தமிழன் என்ற பாடலுடன் காப்பாற்றுகிறார். இசையமைப்பாளராக மணிசர்மாவும் தன் தெலுங்கு திரைக்காவியங்களில் மெட்டமைத்த பாடல்களை அள்ளி வந்து தமிழாக்கம் செய்து தன் பங்கை நிறைவு செய்திருப்பார்.

க்ளைமாக்ஸ்:

Tamannaah

சமுத்திர இராசா வைக்கும் ‘நேர வெடிகுண்டை’ (Time Bomb) அவருக்கே திருப்பி வைத்து, சாகச சண்டைக் காட்சிகள் கடந்து படத்தைக் க்ளைமாக்ஸ் நோக்கி அழைத்து வருகிறார் சுறா (விஜய்). பிற தமிழ்ப்படங்களைப் போலவே இந்தப் படமும் க்ளைமாக்ஸில் முடிகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்தப் படத்திற்கு முதலில் வைப்பதாக இருந்த தலைப்பு 'உரிமைக் குரல்'

Do you like the story?

Please Appreciate the Author by clapping!