Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நாளைய தீர்ப்பில் என்ட்ரி... இன்றைய ஹிட் ஹிஸ்ட்ரி... 'வாவ்' விஜய்! #HBDVijay

வர் திரைத் துறையில் முக்கியமான ஓர் இயக்குநர். அவரின் மகனை ஹீரோவாக்கிப் பார்க்க வேண்டும் என நினைத்தார். அதற்கு மகன்தான் காரணம். ரசித்து ரசித்து ஒரு கதை எழுதி, படப்பிடிப்பைத் தொடங்கினார். மகனின் முகவெட்டில் சில பிரச்னைகள். போட்டோ ஷூட் செய்த சிலர் `இந்த ஆங்கிள்ல ஷாட் வெச்சா ம்ஹூம்... நல்லாயிருக்க மாட்டார்' எனச் சொல்ல, படத்தை கவனத்துடன் ஷூட் செய்தார். ஏகப்பட்ட ரீடேக்குகள், ஏகப்பட்ட செலவுகள். எதைப் பற்றியும் கவலையின்றி மகனுக்காகச் செய்தார். படம் ரிலீஸ் ஆனது. பிளாக்பஸ்டர். முதல் படத்திலேயே ஏகப்பட்ட பெண் ரசிகைகள். அரங்குகளில் ரசிகர்களின் ஆராவாரம். அதுவரை அறிமுக நாயகர்கள் யாருக்கும் கிடைக்காத வரவேற்பு. அதன் பிறகு தொட்டதெல்லாம் ஹிட். நடனத்துக்கு அவர்தான் அகராதி. கோடிக்கணக்கான ரசிகர்கள். தவிர்க்க முடியாத சக்தி ஆனார். அந்த நடிகர், ஹ்ருத்திக் ரோஷன். அந்த அப்பா, ராகேஷ் ரோஷன். அந்தப் படம் `கஹோ நா ப்யார் ஹை'.

விஜய்

இந்தக் கட்டுரை அவரை பற்றியல்ல. மேலே சொன்னதில் இந்த நாயகனுக்கும் பொருந்தும் விஷயம், அவரது அப்பா இயக்குநர் என்பதும் முதல் படத்திலேயே ஹீரோவுக்கான முகவெட்டு இவருக்கும் இல்லை என்பதும் மட்டும்தான். இவரது முதல் படம் பிரமாண்டமாக எடுக்கப்படவில்லை; அதிக செலவு செய்யப்படவில்லை; பிளாக்பஸ்டர் ஆகவில்லை; ரசிகைகள் காத்திருக்கவில்லை; சினிமா ரசிகர்களில் பலர் அவரை அடையாளம்கூட கண்டுக்கொள்ளவில்லை. ஆனால், ஹ்ருத்திக்குக்கு சினிமாவில் என்னவெல்லாம் கிடைத்தனவோ, அவை எல்லாம் இவருக்கும் கிடைத்தன. தொட்டதெல்லாம் ஹிட். நடனத்துக்கு இவர்தான் அகராதி. கோடிக்கணக்கான ரசிகர்கள். தவிர்க்க முடியாத சக்தி ஆனார். அந்தப் படம் `நாளைய தீர்ப்பு'. நடிகர், விஜய்!

ஒரு பிரபலத்தின் மகனாகப் பிறப்பது சில விஷயங்களில் செளகர்யம்தான். அது ஒரு என்ட்ரியை எளிதாக்கும். ஆனால், அந்தச் சலுகையைச் சரியாகப் பயன்படுத்தி அடுத்த கட்டத்துக்குத் தாண்டவில்லையெனில், அதே சலுகை சவுக்கடியாகவும் மாறும். அந்தச் சலுகை கிடைக்காத ஒருவன் சாதிக்கவில்லையெனில், அது ஒரு விஷயம் கிடையாது. ஆனால், கிடைத்தவன் சாதிக்கவில்லையென்றால் தீர்ந்தது விஷயம். அந்தத் தோல்வி தரும் மன உளைச்சல் நகரவே விடாது. அதைத் தாங்கிக்கொள்ளும் பக்குவம் எல்லோருக்கும் வாய்க்காது. பக்குவம் வாய்த்தாலும் மீண்டும் எகிறி அடிக்க பலம் போதாது. அந்தப் பக்குவம், பலம் இரண்டும் விஜய்க்கு இருந்தன. சினிமாவில் நுழைய வேண்டும் என்பது விஜய்யின் ஆசை. நுழைந்த பிறகே அதிலுள்ள சிரமங்கள் அவருக்குப் புரிந்தன.

VIjayவெற்றி-தோல்விகளைப் பற்றி கவலைப்படாமல் படங்கள் நடித்தார். சீனியர் நடிகர்களுடன் நடித்து, அனுபவத்தைப் பெற்றார். படப்பிடிப்பு இல்லாத நேரங்களில் கதவை  மூடிக்கொண்டு வெறித்தனமாக நடனம் ஆடினார். நாம் திரையில் பார்க்கும் ஒவ்வொரு நிமிட நடனத்துக்குப் பின்னும் விஜய்யின் பல மணி நேர பயிற்சி இருக்கிறது. படப்பிடிப்புக்கு நேரத்துக்கு வந்துவிடுவார். எந்த அறிமுக இயக்குநரையோ, நடிகர்களையோ துச்சமாக நினைக்க மாட்டார். 

விஜய் அளவுக்கு தன் கரியரைத் தெளிவாக வரையறுத்தவர்கள் எவரும் இல்லை என்றுதான் தோன்றுகிறது. முதல் எட்டு படங்கள் தனக்கான சோதனைக்களமாகக்கொண்டார். கொஞ்சம் மசாலா தூக்கலாகத்தான் இருக்கும். அதிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள `பூவே உனக்காக' கதையைத் தேர்வுசெய்தார். அந்தப் படத்தின் வெற்றி, அவரை குடும்பங்களுக்குள் கொண்டுசென்றது. `லவ் டுடே', `காதலுக்கு மரியாதை', `துள்ளாத மனமும் துள்ளும்' என அந்த வகை படங்களில் (Genre) அவர் தந்த வெற்றிகள் அவரின் போட்டியாளர்கள் யாரும் தந்திராத வெற்றி. பிறகு `என்றென்றும் காதல்', `நிலாவே வா', `கண்ணுக்குள் நிலவு' என வரிசையாகத் தோல்விகள். தன்னைப் புதுப்பித்துக்கொள்ள முடிவுசெய்தார். அப்போது அவர் நடித்த படம்தான் `குஷி'. 

இது வேறு மாதிரியான விஜய்யை ரசிகர்களுக்குக் காட்டியது. கொஞ்சம் மாடர்ன் ஆனார். ராஜுசுந்தரத்தின் உதவியால் அவரது நடனம் மாறியது. `குஷி', `பத்ரி', `யூத்' எனப் பாடல்களுக்காகவே அவரது படங்கள் பட்டையைக் கிளப்பின. சாட்டிலைட் சேனல்களும் படையெடுத்த காலம் அது. அனைத்து சேனல்களிலும் எப்போதும் விஜய்தான் ஆடிக்கொண்டிருப்பார். `நடுக்காட்டுல ஒரு டிவி இருந்தால் போதும்... விஜய் பாட்டைப் பார்த்துட்டே எவ்ளோ வருஷம் வேணும்னாலும் இருப்பேன்' என அப்போது நிறைய தங்கைகள் சொல்லி நாம் கேட்டிருப்போம். தன் உயரம் வளர்வதை விஜய் அறியாமலிருப்பாரா? நிறைய படங்கள் நடிக்காமல், ஆண்டுக்கு மூன்று படங்கள் என எண்ணிக்கையைக் குறைத்தார். இது அவரது மார்க்கெட் வேல்யூவைக் கூட்டியது.

2000 - கண்ணுக்குள் நிலவு, குஷி, பிரியமானவளே

2001 - பிரெண்ட்ஸ், பத்ரி, ஷாஜகான்

2002 - தமிழன் யூத், பகவதி

2003 - வசீகரா, புதிய கீதை, திருமலை

2004 - உதயா, கில்லி, மதுர

`கில்லி', விஜய்யின் கிராஃபை ராக்கெட் வேகத்தில் உயர்த்திய படம். சென்னை உதயம் காம்ப்ளெக்ஸில் அனைத்து திரைகளிலும் ஓடி சாதனை புரிந்தது. ரிலீஸுக்கு முன்பே `sure shot' என விளம்பரப்படுத்தும் அளவுக்கு விஜய்யின் மார்க்கெட் இருந்தது. அதற்கு அதன் தயாரிப்பாளரும் ஒரு காரணம். இதுவரை விஜய்யும் ஏ.எம்.ரத்னமும் மூன்று படங்களில் இணைந்திருக்கிறார்கள். மூன்றுமே ஹிட் (குஷி, கில்லி, சிவகாசி)

கில்லி

2006-ம் ஆண்டில் விஜய்க்கு மீண்டும் ஒரு தேக்க நிலை ஏற்பட்டது. `தன்னுடைய ஸ்க்ரீன் பிரசென்ஸ் மக்களுக்கு போரடிக்கிறதோ!' என்ற சந்தேகம். `ஆமாம்' என்றது `ஆதி'யின் படுதோல்வி. அந்த வருடம் வேறு எந்தப் படமும் நடிக்கவில்லை விஜய். `போக்கிரி' மூலம் தன்னை  மாற்றிக்கொண்டார். `மகேஷ்பாபு ஸ்டைலைக் காப்பியடிக்கிறார்' என்ற குற்றச்சாட்டு இருந்தாலும், `போக்கிரி' வெற்றி, விஜய்யைத் தொடரச் செய்தது. அதன் பிறகு இரண்டு ஆண்டுகளுக்கு மூன்று படங்கள் எனக் குறைத்துக்கொண்டார்.

2007, 2008 - போக்கிரி, அழகிய தமிழ் மகன், குருவி

2009, 2010 - வில்லு, வேட்டைக்காரன், சுறா

இவற்றில் `போக்கிரி'யைத் தவிர மற்ற எதுவும் பெரிய வெற்றிபெறவில்லை. சினிமா மாறுவதை விஜய் கவனிக்காமலா இருப்பார்? தன்னால், இனி நடிப்புக்கு முக்கியத்துவம் இருக்கும் படங்களும், பெரிய இயக்குநர்களுடனான படங்களும் பண்ண முடியும் என நம்பினார். `நண்பன்' தொடங்கியது. அமீர் கான் அசத்திய கதாபாத்திரத்தை விஜய் சமாளித்துவிட்டார் எனப் பெயர் வாங்கினார். அதே ஆண்டு வந்த `துப்பாக்கி', விஜய்யை மீண்டும் பல கட்டங்கள் முன்னால் கொண்டுசென்றது. 

`கில்லி' வெற்றிபெற்ற பிறகு `மதுர' படம் வெளிவந்தது. `கில்லி'யின் வெற்றி, `மதுர' படத்தின் மவுசை எங்கேயோ தூக்கிச் சென்றது. தயாரிப்பாளர் நினைத்ததைவிட பல மடங்கு அதிக பணம் தந்து ஏரியாக்கள் வாங்கப்பட்டன. அதுதான் சினிமா. ஆனால், இன்று முந்தைய படத்தின் வெற்றி-தோல்விகள் விஜய்யின் மார்க்கெட்டை ஒன்றும் செய்வதில்லை. அதையெல்லாம் தாண்டி அவர் வளர்ந்துவிட்டார்.

`உயரத்தை அடைந்துவிட்டால் எல்லா பக்கங்களிலும் சரிவுதான்' என்பார்கள். ஆனால், உயரத்தைக் கூட்டிக்கொண்டேயிருப்பதுதான் விஜய்யின் ஸ்டைல். வளர்ந்துவிட்டதாக அவர் எப்போதும் நினைப்பதேயில்லை. `வளர்ந்துகொண்டேயிருப்பேன்' என விஜய் முடிவுசெய்திருக்கிறார். அதை அவர் நிச்சயம் செய்வார். ஏனென்றால், ஒரு தடவை முடிவுபண்ணிவிட்டால் அவர் பேச்சை அவரே கேட்க மாட்டார்!

-கே

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

விகடன் பிரஸ்மீட்: அஜித்திடம் என்ன பிடிக்காது? விஜய்யிடம் என்ன பிடிக்கும்? - விஷால்