Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அலட்டல் இல்லா ஆர்யா.. அழகி எமி ஜாக்சன்.. அர்ப்பணிப்பு ஏ.எல்.விஜய் - மதராசபட்டினம் எனும் மேஜிக்! #7YearsOfMadrasapattinam

2010..காதல் படங்களும் ஆக்‌ஷன் படங்களும் வரிசைக்கட்டி வெளிவந்த தருணம். படம் ஹிட் ஆவது நடிகர்களுக்காக மட்டும் அல்ல, நல்ல கதைகளுக்காகவும் என்ற நம்பிக்கையையும் மீட்டெடுத்த வருடம்.  இதே நாளில்தான் வெளியானது ‘மதராசபட்டினம்’. என்னடா டைட்டிலும் போஸ்டருமே வித்தியாசமா இருக்கே.. என்னதான் இருக்கு’னு தியேட்டருக்குள் போனவர்களுக்கு காத்திருந்தது காவிய விருந்து. டைட்டில் கார்டே பார்ப்பவர்களின் ஆர்வத்தைத் தூண்டுமளவிற்கு இருந்தது.  அந்த காலக்கட்டத்தின் சென்னையை  வெளிக்கொணர மேற்கொண்ட மெனக்கெடல்களுக்கு ஹாட்ஸ் ஆஃப். 

மதராசபட்டினம்

மதரசப்பட்டினத்தில் ஒரு ஏழை இளைஞனாக ஆர்யாவின் நேர்த்தியான நடிப்பு பரவலாக பேசப்பட்டது. வீரமும் துடிப்பும்  இந்தியர்களின் ப்ளஸ் என காட்டியிருப்பார் இயக்குநர். வெள்ளைக்காரர்கள் நம்மை அடிமைப்படுத்தி ஆண்ட விதத்தை கண் முன் நிறுத்தியிருந்தார். அஹிம்சை வழியில் போராடுவோம் என்று ஒரு குழு, அஹிம்சை வழியில் போராடினால் சுதந்திரம் கிடைக்காது என்ற கருத்தில் சிலர் என அப்போது இருந்த சூழலை பல இளைஞர்கள் இந்தத் திரைப்படத்தில் பார்த்தனர். 30 நாள் இங்கிலீஷ் பேசும் மொழிப்பெயர்ப்பாளராக ஹனீபா, கேமரா எடுத்தாலே போஸ் கொடுக்க தயாராகும் காட்சிகள் உதட்டில் புன்முறுவலை கொடுத்தது.. ``குண்டு போடுறான் குண்டு போடுறான் ஓடு ஓடு..`` போன்ற காட்சிகள் சிரிப்போடு  அப்பாவித்தனத்தையும்  வெளிப்படுத்தியது.

ஆர்யாவின் வீரத்தையும் எதார்த்தத்தையும் பிடித்து அவருடன் எமி ஜாக்சன் நேரம் செலவழிக்க அதுவே காதலாக மாறுகிறது. அந்த தருணத்தில் நா.முத்துக்குமாரின் `பூக்கள் பூக்கும் தருணம்...` பாடல் ஜி.வி.பிரகாஷ் இசையுடன் சேர்ந்து நம்மையும் அவர்கள் காதலில் விழ வைக்கிறது. மற்றொரு பக்கம் ஹிந்துஸ்தான் ஜிந்தாபாத்..வெள்ளையனே வெளியேறு.. என்ற வசனங்கள் மேலோங்க சுதந்திர வேட்கையை நமக்கு உணர வைத்திருக்கிறார் விஜய். 

ஆர்யாவிற்கு பரிசாக எமி எடுத்த போட்டோக்களை தருகிறார். ஆர்யா தயங்கியபடி சொல்கிறார்:  ‘என்கிட்ட ஒண்ணும் இல்ல உனக்கு பரிசா கொடுக்க’.

ராந்தல் வெளிச்சம்.  அமைதி காக்கிறார் எமி. ‘ இந்தத் தாலி இருக்கே.. எனக்கு கொடுப்பியா?; என்று கேட்கிறார். அங்கே மென்மையாகத் துவங்குகிறது ஜி.வி. பிரகாஷின் இசை. இயக்கம், இசை என்று இரண்டிலும் கவனிக்க வைக்கிற இடம் அது. ஜி.வி.பிரகாஷின் சிறந்த இசையமைப்புகளில் ஒன்று மதராசபட்டினம் என்பது சர்வநிச்சயமான ஒன்று! டைட்டானிக்கின் லோக்கல் வெர்ஷன்தான் என்று விமர்சகர்கள் சொன்னாலும், தமிழில் சிலருக்கு ஒரு தனி அனுபவத்தைத் தந்தது மதராசபட்டினம். நாயகன் ஆங்கிலம் கற்றுக் கொள்ளும் காட்சிகள், எமியின் அரண்மனைக்குள் நாயகனும் நண்பர்களும் செல்லும் காட்சி என்று தமிழ் ரசிகர்களுக்கே பிடிக்கிற  வகையில் கதையோடு ஒட்டிய நகைச்சுவையைக் கலந்தது விஜய்யின் சாமர்த்தியம்.

இயக்குநர் விஜய், நாயகிகள் தேர்வில் எப்பொழுதுமே குறைவைத்ததில்லை. எமி ஜாக்சனுக்கு இது முதல் படம். இன்றைக்கு ரஜினியுடன் 2.0வில்  நடித்துக் கொண்டிருக்கிறார் எமி. முதல் படம் என்ற தயக்கமே இல்லாத உடல்மொழியை வெளிப்படுத்தியிருப்பார்.  

எமி பற்றி இயக்குநர் விஜய், விகடன் பேட்டி ஒன்றில் கூறியதை இங்கே குறிப்பிடலாம்.

‘மதராசப்பட்டினம்’ ஹீரோயின் தேடல்ல இருந்த சமயம். அப்ப ஒரு போட்டோ நெட்ல கிடைச்சது. விசாரிச்சா, ‘லண்டன்’னு சொன்னாங்க. ‘இந்தப்பொண்ணுதான் ஹீரோயின்’னு ஆர்யாட்ட சொல்லிட்டு தனி ஆளா லண்டன் கிளம்பிட்டேன். ஆனாலும் அவங்க கிடைக்கலை. பிறகு அங்கயே ஒரு ஆடிஷன் வெச்சிருந்தோம். ஆச்சர்யமான விஷயம் என்னன்னா அந்தப்பெண்ணே ஆடிஷனுக்கு வந்திருந்தாங்க. அப்ப அவங்க 11ம் வகுப்பு ஸ்டூடன்ட். ஸ்கூல் யூனிஃபார்ம்லதான் வந்திருந்தாங்க. அதுக்கு முன்னாடிவரை ஒரு போட்டோஷூட்கூட அவங்க பண்ணினது கிடையாது. விளம்பரம் எதுலயும் நடிக்கலை. அப்படியே ஃப்ரெஷ் அறிமுகம். ஆனா அந்தப்பெண்ணுக்குள் கூர்மையான அறிவு இருந்துச்சு. ஆடிஷன் நடந்த ஹோட்டலுக்கு வெளியில நிக்கவெச்சு முதன்முதல்ல அவங்ளை எடுத்த போட்டோக்கூட என்கிட்ட இன்னும் இருக்கு. அவங்களை அந்தப் படத்தில் கமிட் பண்ணவைக்க, ‘உங்கப்பொண்ணை எப்படியாவது இந்தியாவுக்கு கூட்டிட்டு வாங்க. கண்டிப்பா இந்தப்படம் நல்லா வரும். பிறகு உங்கப் பொண்ணு மிகப்பெரிய ஹீரோயினாகிடுவாங்க. இந்திப் படங்கள்லாம்கூட பண்ணலாம்’னு ஏகப்பட்ட பொய்களை சொன்னேன். 

அவங்க முதல்முறையா சென்னைக்கு வரும்போது நான்தான் ஏர்போர்ட் போய் அழைத்துவந்தேன். அந்த நாள் நல்லா ஞாபகம் இருக்கு. ஏர்போர்ட்ல இருந்து வெளியில் வர்றாங்க. அப்ப அங்க ஒரு மாடு நின்னுச்சு. ‘மாம் லுக் அட் கவ் ஆன் தி ரோட்’னு அவங்க அம்மாட்ட சொல்லி துள்ளிக்குதிச்சாங்க. ‘இப்ப கவ் பாக்குற. போகப்போக ரோட்ல இன்னும் என்னென்ன வரும்பாரு’னு சொன்னேன். நான் அன்னைக்கு பார்த்த அந்த ஏமிக்கும் இப்ப சமீபத்துல பார்க்குற ஏமிக்கும் எவ்வளவு வளர்ச்சி. ஒரு குழந்தை வளர்ந்து மெச்சூர்டாகி தன்னைதானே பார்த்துக்கொள்ளும் பருவம் வரும் இல்லையா, அப்படி ஒரு வளர்ச்சி. அந்தப் பொண்ணு இந்தளைவுக்கு சாதிச்சிருக்குன்னா... ப்யூர்லி அவங்களோட கடின உழைப்புதான். அந்த கிரெடிட் நான் அவங்களுக்குதான் கொடுத்தாகணும். உண்மையை சொல்லணும்னா, ‘பாலிவுட் படங்கள்லாம் நடிக்கலாம்’னு நான் பொய் சொல்லிதான் கூட்டிட்டு வந்தேன். ஆனா அதெல்லாம் இன்னைக்கு நடந்திருக்கு”

இப்படி ஒரு திறமையான நடிகையை அறிமுகப்படுத்தியது, ஆர்யாவின் அலட்டலில்லாத நடிப்பு, ஜி.வி.பிரகாஷ் + நா.முத்துக்குமார் கூட்டணியின் பாடல்கள் என்று மதராசபட்டினம் அன்றைய தேதிக்கு மெகா ஹிட் அடித்ததற்கு நிறைய காரணங்கள் உண்டு. எல்லாவற்றையும் விட முக்கியமானது, பீரியட் படங்கள் என்றாலே வருடக்கணக்கில் எடுப்பார்கள் என்பதைத் தகர்த்து எட்டே மாதங்களில் வெளியானதற்குப் பின் உள்ள இயக்குநர் ஏ.எல். விஜய்யின் அர்ப்பணிப்பு!     

வாழ்த்துகள் விஜய்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

விகடன் பிரஸ்மீட்: அஜித்திடம் என்ன பிடிக்காது? விஜய்யிடம் என்ன பிடிக்கும்? - விஷால்