Published:Updated:

இந்த லிஸ்டில் ராஜா, ரஹ்மானை விட.. விஜய் ஆண்டனிதான் வின்னர்!

விகடன் விமர்சனக்குழு
இந்த லிஸ்டில் ராஜா, ரஹ்மானை விட.. விஜய் ஆண்டனிதான் வின்னர்!
இந்த லிஸ்டில் ராஜா, ரஹ்மானை விட.. விஜய் ஆண்டனிதான் வின்னர்!

 நம் வாழ்வின் பெரும்பாலான  பொழுதுகளை தங்கள் இசையால் வசமாக்கும் இசையமைப்பாளர்கள் சில சமயம் திரையிலும் தங்கள் நடிப்பால் நம்மை ‘அட’ சொல்ல வைத்திருக்கிறார்கள். பிளாக் அண்ட் ஒயிட் காலத்திலிருந்தே இசையமைப்பாளர்களின் அரிதார அவதாரங்கள் தமிழ் சினிமாவில் முக்கிய இடம் பிடித்து வருகின்றன. அவற்றைப் பற்றிய கலகல அலசல்  இது.

எம்.எஸ்.வி:

தன் மெல்லிசையால் தமிழகத்தை கட்டிப்போட்ட எம்.எஸ்.வி என்னும் சகாப்தம் திரையிலும் தன் முத்திரையை பதித்திருக்கிறது. காதல் மன்னனிலும், காதலா காதலாவிலும் மின்னிய அவர் நடிப்பே இதற்கு சாட்சி. நடுங்கும் குரலில் அவர் 'முருகா' என பதறும்போதெல்லாம் தியேட்டரில் எழுந்தது குபீர் சிரிப்பலை. சின்னத்திரை தொடர்களிலும் நடித்திருக்கிறார். 2013-ல் தில்லுமுல்லு தில்லுமுல்லு ரீமேக் பாடலில் அவர் எடுத்தது 'யோ யோ' அவதாரம். மிஸ் யூ ஸார்!

இளையராஜா:

பொதுவெளிகளிலேயே அதிகம் தலை காட்டாத இளையராஜா பெரிய திரையில் சிற்சில இடங்களில் தலை காட்டியிருக்கிறார். உடனே எல்லாருக்கும் 'கல்யாண மாலை' பாடலில் அவர் ஜனகராஜை அதட்டும் காட்சி ஞாபகத்திற்கு வருமே. 'மடை திறந்து' பாடலிலும் வருவார் ஜி! கங்கை அமரன் இயக்கத்தில் ராமராஜன் நடித்த வில்லுப்பாட்டுக்காரன் படத்திலும் கோயிலுக்கு கொடை கொடுப்பவராய், வசனமெல்லாம் பேசி  நடித்திருப்பார் இளையராஜா.

ஏ.ஆர்.ரஹ்மான்:

உலகையே அசத்தும் ஆஸ்கர் நாயகன் எக்கச்சக்க ஆல்பங்களில் நடுநாயகமாக கவனம் ஈர்த்திருக்கிறார். 'வந்தே மாதரம்' ஆல்பத்தில் அவர் கை தூக்கியபோது சிலிர்தெழுந்தது இந்தியா. 'ஜன கண மன' ஆல்பத்தில் நீள முடியோடு அவர் ஜயஹே என பாடும்போது புல்லரிக்கத்தான் செய்யும். இரண்டிற்குமே ரஹ்மானின் ஆஸ்தான நண்பரான பரத்பாலா தான் இயக்குநர். ரஹ்மானுக்கு படம் இயக்க வேண்டும் என ஆசை இருக்கிறது. எங்களுக்கு நீங்கள் பெரிய திரையில் நடிக்கவேண்டும் என ஆசை ரஹ்மான் சார்.

யுவன்:

கோலிவுட்டின் ஸ்டைலிஷ் மியூசிக் கம்போஸர். யுவனின் திரை அவதாரம் என்றால் பளிச்சென நினைவிற்கு வருவது புன்னகை பூவே படம். அதில் 'என் காதல்' பாட்டிற்கு பிரேம்ஜி ராப்பில் சூப்பர் ஸ்டைலில் பாடுவார் யுவன். சரோஜா படத்தின் 'சீக்கி சீக்கி' பாட்டிலும், பில்லா 2வின் கேங்ஸ்டர் பாட்டிலும் நாம் பார்த்தது செம கெத்தான யுவனை. சீக்கிரமே ஒரு முழு நீள படத்துல இப்படி ஸ்டைலா நடிங்க ப்ரோ!

ஹாரிஸ் ஜெயராஜ்:


இளசுகளின் ஹார்ட்பீட் டோனாய் ஒலிக்கும் ஹாரிஸ் ஏனோ திரையில் தோன்றுவதே இல்லை. அவர் நடித்ததாக எல்லாருக்கும் நினைவில் இருப்பது 'கோ' படம்தான். அதில் 'அக நக நக' பாடலின் தொடக்கத்திலும் பின் கூட்டத்தில் கைதூக்கி குதிப்பராகவும்தான் பார்த்திருக்கிறான் தமிழ் ரசிகன். நடிக்கிறதை கூட விட்டுடலாம். நிறைய படத்துக்கு மியூசிக் பண்ணுங்க ஜி. வரணும், பழைய ஹாரிஸா வரணும்.

தமன்:

இந்த பட்டியலில் வித்தியாச ‘எஸ்டிடி’ இவருக்குத்தான். நடிகராக வண்ணத்திரைக்குள் நுழைந்து இசைப்பக்கம் திரும்பியவர். 2003-ல் கொழு கொழு பையனாக பாய்ஸில் அறிமுகமானார். அதன்பின் ஐந்து ஆண்டுகள் கழித்துதான் இசையமைப்பாளர் அவதாரம். பாய்ஸில் இருந்த ஐவரில் இவரும் சித்தார்த்தும் மட்டுமே தமிழ், தெலுங்கில் ஆதிக்கம் செலுத்துகிறார்கள்.

தேவி ஶ்ரீ பிரசாத்:

துறுதுறு படபட பட்டாசு. ஓரிடத்தில் இல்லாமல் குதித்துக்கொண்டே இருப்பவர் திரையுலகில் தலை காட்டாமலா இருப்பார்? வெடி படத்தில் ஒரு முழு பாடலுக்கு வந்தாலும் பளிச்சென மனதில் நிற்பது மன்மதன் அம்பு படத்தின் 'நீலவானம்' பாட்டில் கிடார் வாசிக்கும் சீன் தான். சில செகண்ட் என்றாலும் செம ஃப்ரேம் அது. தெலுங்கிலும் கேமியோ தோற்றங்கள் உண்டு.

விஜய் ஆண்டனி:

இந்த லிஸ்ட்டிலேயே ஹீரோவாய் பெரிய வெற்றி பெற்றது இவர்தான். இசையில் போதிய கவனம் ஈர்த்த பின்னர் நடிப்பில் கவனம் செலுத்தினார். மிகை ஹீரோயிசம் இல்லாத சப்ஜெக்ட்கள் இவர் பலம். அதனாலேயே நான், சலீம், பிச்சைக்காரன் என தொடர் ஹிட்கள். அடுத்து சைத்தானகவும் எமனாகவும் வர இருக்கிறார்.

ஜி.வி பிரகாஷ்:

வெயிலில் சுளீரென கவனம் ஈர்த்த துறுதுறு இளைஞன். உச்ச நட்சத்திரங்களுக்கு இசையமைத்த பின் நடிப்பு பாதையில் நடை போட்டார். டார்லிங் அப்பாவி வேஷம் கைகொடுக்க அடுத்து அடல்ட்ஸ் ஒன்லி அவதாரம். விமர்சனங்கள் நிறைய இருந்தாலும் இளசுகள் இவரை வெகுவாக ரசிக்கிறார்கள். கைவசம் புரூஸ் லீ, கடவுள் இருக்கான் குமாரு ஆகிய படங்கள் இருக்கின்றன.

இமான்:

இசையமைப்பாளராக முதல் அறிமுகம் 2002-ல். ஆனால் முதல் பிரேக் கிடைக்க அதிக காலமானது. ஆன் ஸ்க்ரீனில் தோன்றியது 'உலகத்துல' என்ற கோவை பிரதர்ஸ் பாட்டில். ஒரு பக்கம் பளபள நமீதா, மறுபக்கம் கொழுகொழு இமான் என அந்த பாடலில் ஹெவி போட்டி. அதன்பின் நிறைய மேக்கிங் வீடியோக்களில் தலை காட்டுவதோடு சரி.

சந்தோஷ் நாராயணன்:

மனம் மயக்கும் மெலடிகளால் கவனம் ஈர்த்த இந்த இளைஞரை ஒருகாலத்தில் பத்திரிக்கை பேட்டிகளில் பார்ப்பதே அபூர்வம். அவரை 'நட்புக்காக' இறைவியில் நடிக்க வைத்திருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ். இன்னும் நீங்க நிறைய நடிக்கணும் ஜி!

அனிருத்:

இன்றைய தலைமுறையின் ஏகபோக பிரதிநிதி. யூத்தின் பல்ஸ் பிடித்து பாட்டு போடும் ஒல்லி கில்லி அவ்வப்போது திரையிலும் தலை காட்டுவார். வணக்கம் சென்னையில் ராப் பாடி ஆடுபவர், மான் கராத்தேயிலும் மாரியிலும் லோக்கல் டான்ஸ் ஆடி பட்டையை கிளப்பினார். ஹீரோ ஆசை உண்டு. ஏனோ களத்தில் இறங்க டைம் ஆகிறது.

ஹிப்ஹாப் ஆதி:

அறிமுகமானதே யூ-டியூப்பில்தான். அதனால் அநேகருக்கு பரிச்சயம். அதன்பின் இசையமைத்த ஆம்பள, தனி ஒருவன் படங்களில் தலைகாட்டினார். 'டக்கரு டக்கரு' பாடலில் ஹீரோ முன்னோட்டம் பார்த்தவர் இப்போது முழுநேர ஹீரோ.