Published:Updated:

’எ ஃபிலிம் பை பாலுமகேந்திரா’னு திமிரோடதான் போடுவேன்! #PhotographersAboutPhotography

விகடன் விமர்சனக்குழு
’எ ஃபிலிம் பை பாலுமகேந்திரா’னு திமிரோடதான் போடுவேன்! #PhotographersAboutPhotography
’எ ஃபிலிம் பை பாலுமகேந்திரா’னு திமிரோடதான் போடுவேன்! #PhotographersAboutPhotography

177வது உலக புகைப்பட தின ஸ்பெஷலாக தமிழ் சினிமாவின் ஒளிப்பதிவாளர்கள் புகைப்படம், தங்களது அனுபவம், சினிமா என கலந்துகட்டி பகிர்ந்து கொண்ட சில விஷயங்களில் தொகுப்பு கீழே...

பி.சி.ஸ்ரீராம்:

'ஒரு நல்ல ஒளிப்பதிவுக்கு தரமான ஒளிப்பதிவு சாதனங்கள் தேவையா... அல்லது திறமையான ஒளிப்பதிவாளர் போதுமா?''

 ''என்னதான் டெக்னாலஜி வளர்ந்தாலும் ஒளிப்பதிவில் சாதனங்களின் பங்கு ஒரு சதவிகிதம்தான். அந்தச் சாதனங்களை எப்படிப் பயன்படுத்துறோம்கிற வியூகம்தான் ஒரு கேமராமேனின் திறமை. ஒரு படத்தின் கதை, அதன் சூழல், அதற்கான மனநிலை, அதை எப்படி திரையில் கொண்டுவர்றோம்... இதெல்லாம் ஒரு ஒளிப்பதிவாளனின் அனுபவத்தில் இருந்துதானே வரும். வில்லும் அம்பும் எவ்வளவு நவீனமா இருந்தாலும், இலக்கை அடைவதில் எய்பவனின் குறிதானே முக்கியம்!''

பாலுமகேந்திரா: 

திரைக்கதை ஆசிரியர், இயக்குநர், ஒளிப்பதிவாளர், படத் தொகுப்பாளர்... இந்த நாலு பேரும்தான் படத்தின் முக்கியமான தொழில்நுட்பக் கலைஞர்கள். இந்தப் படத்தில் அந்த நாலுமே நான்தான். அதனால், எனக்கு எந்தப் பிரச்னையும் கிடையாது. என் படத்தை நானே எழுதி, நானே ஒளிப்பதிவு பண்ணி, நானே இயக்கி, நானே எடிட் செய்தால்தான் எனக்குத் திருப்தி. ஒரு படம் எடுப்பது என்பது, எனக்குப் பிடித்தமான ஒரு பெண்ணோட செக்ஸ் வெச்சுக்கிற மாதிரி. 'நீ பாதி பண்ணு, நான் பாதி பண்றேன்’னு அதை என்னால் யார்கிட்டயும் பிரிச்சுக் கொடுக்க முடியாது.

ஓர் எழுத்தாளன், 'இது என் சிறுகதை’னு சொல்றான். ஓர் ஓவியன், 'இது என் ஓவியம்’னு சொல்றான். ஆனா, ஒரு சினிமாக்காரன், 'இது என் படம்’னு சொல்ல முடியலை. காரணம், சினிமா இங்கே ஒரு கூட்டுத் தயாரிப்பு. ஆனா, சரியோ தப்போ என் படத்துக்கு நான்தான் பொறுப்பு. 'எ ஃபிலிம் பை பாலுமகேந்திரா’னு போட்டேன்னா, அதை ஒரு திமிரோடதான் போடுவேன்!''

செழியன்: 

ளிக்கும் உணர்வுகளுக்கும் இடையே ஆழமான தொடர்பு இருக்கிறது என்று நான் உணர்ந்ததை 'பரதேசி’ பட ஒளிப்பதிவில் முழுமையாக முயன்றுபார்த்திருக்கிறேன். 'இருள் என்பது குறைந்த ஒளி’ என்பதை உணர்வது வேறு. அதைச் செய்யத் துணிவது வேறு. அந்தத் துணிச்சலை பாலா எனக்குக் கொடுத்தார்.  

கே.வி.ஆனந்த்:

'புகைப்படக்காரர், ஒளிப்பதிவாளர், இயக்குநர்... எந்த ரோல்ல நிம்மதி, சந்தோஷம்?''

''ஸ்டில் போட்டோகிராபர்தான்! நான், என் கேமரா, எனக்கான ஆப்ஜெக்ட்... இந்த மூணு மட்டும்தான். நான் நினைச்சதைப் பெரிய தொந்தரவு இல்லாம எடுத்திருவேன். அதுவே சினிமா ஒளிப்பதிவாளருக்குக் குறிப்பிட்ட நேரத்துல இயக்குநரின் விஷூவலைக் கொண்டுவரவேண்டிய சவால். ஹீரோ, ஹீரோயினோட பேசக்கூட நேரம் இருக்காது. ஆனாலும் பெஸ்ட் சீன்ஸ் கொண்டுவரணும். இயக்குநர்... கேக்கவே வேணாம். ஏகப்பட்ட மனிதர்கள், சங்கடமான சூழ்நிலைகள்... எல்லாரையும் அனுசரிச்சு அவங்ககிட்ட இருந்து பெட்டர் ரிசல்ட் எடுக்கணும். சமயங்கள்ல பைத்தியமே பிடிக்கும்.

சந்தோஷ் சிவன்:

யார்கிட்டயாவது உதவியாளரா இருக்கணும், இல்லைனா வேலையே கிடைக்காது’னு சொன்னாங்க. யார்கிட்டயும் உதவியாளரா சேர எனக்கு விருப்பம் இல்லை. கொஞ்ச நாள் ஸ்டில் போட்டோ கிராபி பண்ணிட்டு இருந்தேன்.

ஒருமுறை அருணாசலப்பிரதேசத்துல உள்ள ஒரு ஸ்கூலுக்கு போட்டோகிராபி டிரெய்னிங் தரப் போயிருந்தேன். காட்டுக்கு நடுவில்தான் அந்த ஸ்கூல் இருக்கு. பசங்க எல்லாரும் புத்தகத்தோட கையில் கத்தியும் வெச்சிருந்தாங்க. 'படிக்கும் பசங்க கையில் கத்தியா?’னு விசாரிச்சா, 'இங்கே அடிக்கடி புலிகள் நடமாடும். புலி வந்தா எல்லாரும் ஓடிருவோம். இல்லைன்னா மரத்துல ஏறிடுவோம். முடியலைன்னா... அதை பயமுறுத்தத்தான் கத்தி’னு பதில் சொன்னாங்க. எனக்குப் பதற்றம் ஆகிருச்சு. 'எனக்கு ஓடவோ, மரம் ஏறவோ தெரியாதே... புலி வந்தா என்ன பண்றது?’னு கேட்டேன். 'பிரச்னையே இல்லை. புலியை நேரில் பார்த்தா எல்லாத்தையும் நீங்களே கத்துப்பீங்க’னு சிரிச்சுக்கிட்டே சொன்னார் ஒருத்தர். 

சுகுமார்:

'பிரின்ட்டிங் கத்துக்கோ. போட்டோகிராஃபி புரியும்’னு ஒரு லேப்ல சேர்த்துவிட்டான் அண்ணன். பிரின்ட்டிங் பார்த்துப் பார்த்துதான் எப்படி ஃப்ரேம் வைக்கணும்னு கத்துக்கிட்டேன். அப்போ வஸந்த் சார் 'நேருக்கு நேர்’ படத்துல ஸ்டில்ஸ் எடுக்க ஜீவனைக் கூப்பிட்டார். அவனுக்கு வெளிநாட்டுக்குப் போற வேலை இருந்ததால், என்னை அங்கே சேர்த்துவிட்டான். வஸந்த் இயக்கம், கே.வி.ஆனந்த் ஒளிப்பதிவு... ரெண்டு பேருமே விஷவல்ஸ்ல கில்லி. நான் நடுவுல செமத்தியா மாட்டிக்கிட்டு நிறையத் திட்டு வாங்கி, நிறைய நல்ல விஷயங்களைக் கத்துக்கிட்டேன்.

மனோஜ் பரமஹம்சா:

ஓவர் மேக்கப் ஹீரோ, டென்ஷன் டைரக்டர், வியர்க்க விறுவிறுக்கத் திரியும் அசிஸ்டென்ட் டைரக்டர்ஸ்... இவங்கள்லாம் என்னை ஈர்க்கவே இல்லை. ஆனா, அந்த கேமரா... அதைச் சுத்தி ஏதோ ஒரு காந்தம். ஒரு மர்மமான கவர்ச்சி. 'ஆக்ஷன்'னு சொன்னதும் எல்லோரோட கவனமும் கேமராவைச் சுத்தியே இருக்கும். அந்தக் கறுப்பு மெஷினுக்குள் என்னதான் இருக்குன்னு தெரிஞ்சுக்கணும்னு ஆசை. அந்த ஆர்வம் வெறியாக உருமாறி, 'கேமராமேன்தான் நம்ம இலக்கு'ன்னு நிலைகொண்டது, நம்புவீங்களோ இல்லையோ... நான் ஆறாவது படிக்கும்போது.

கே.கே.செந்தில்குமார்: 

'பாகுபலி' படத்தில இருக்கும் ஒவ்வொரு காட்சியுமே கஷ்டமானது தான். ஏன் கஷ்டம்னு சொல்றேன்னா கதையில வர்ற ஒவ்வொரு கதாப்பாத்திரமும் என்ன பண்ணனும், எந்த இடத்துக்குள்ள பண்ணனும்னு ஒரு மீட்டர் இருக்கு. அதைத் தாண்டி செஞ்சாலோ, அதுக்கு கம்மியா செஞ்சாலோ சொதப்பீடும். அதுக்காகவே கொஞ்சம் கஷ்டப்பட வேண்டியது. கடைசியா வர்ற அவுட்புட் எப்படி இருக்கப் போதுனு நமக்குத் தெரியும், ஆனா ஸ்பாட்ல நிக்கற அவங்களுக்கு அந்த விவரம் முழுசா தெரியாது. கடைசியா ஸ்க்ரீன்ல பார்த்து நடிச்சவங்களே ஆச்சர்யப்பட்டது தனிக் கதை. ராணாவுடைய தங்க சிலை வெச்சு ஒரு ஷாட் இருக்கும். அது மட்டும் தான் இருந்தது, அப்பறமா தான் அந்த சிலைய விட பிராபாஸ்க்கு ஒரு தங்க சிலை காமிக்கணும்னு யோசனை வந்தது. படம் வெளியாக 20 நாள் முன்னால பிரபாஸைக் கூப்பிட்டோம். பொதுவா இந்த மாதிரி சீனுக்கும் நடிகர முழுசா ஸ்கேன் பண்ணுவாங்க. ஆனா, நாங்க 360 டிகிரியும் பிரபாஸை போட்டோஸ் எடுத்தோம். அதற்குப் பின்னால தான் படத்தோடு பிரபாஸ் சிலையையும் சேர்த்தோம். அது தான் அந்த இன்டர்வல் ப்ளாக். அடுத்த பாகத்தில என்னென்ன சவால்கள் இருக்கும்னு ரொம்ப ஆவலா எதிர்பாத்திட்டிருக்கேன். இதில் பேசிக் ஒரு போட்டோகிராஃபர் மனநிலை தான். அதுவே கொஞ்சம் அசையும் போட்டோவா யோசிக்கணும். 

வேல்ராஜ்:

ஒளிப்பதிவாளர் கனவோடு வரும் இளைஞர்களுக்கு என்ன சொல்ல விரும்புறீங்க?''

''நான் சொல்லி புதுப் பசங்க எந்த விஷயமும் கத்துக்க வேண்டியது இல்லை. சினிமாவில் ஜெயிக்க ஒரே சட்டம், கடின உழைப்பு. அத னால உடம்பையும் கொஞ்சம் கவனிச்சுக்கங்க. ஒவ்வொரு ஒளிப்பதிவாளரும் ஒரு ஸ்டன்ட் கலைஞருக்கு சமமா ரிஸ்க் எடுக்கணும். அதனால உடம்பு பத்திரம்!'' 

மணிகண்டன்:

ஒருமுறை கேரளாவுக்கு டூர் போனப்ப, சாதாரண ஒரு கேமராவில் படம் எடுத்தேன். பிரின்ட் போடக் கொடுத்திருந்த லேபில் அதைப் பார்த்த ஒரு போட்டோகிராஃபர், 'எந்த கேமராவில் எடுத்தீங்க? ஃபிரேம் எல்லாம் சூப்பரா இருக்கு’னு சொன்னார். பெயர் தெரியாத, முகம் நினைவில்லாத அவரோட பாராட்டு, எனக்கு அப்போ பெரிய உற்சாகமா இருந்தது. பிறகு, பகவான்னு ஒரு போட்டோகிராஃபர்கிட்ட சேர்ந்தேன். அப்புறம் சிவப்பிரகாசம்னு ஒரு போட்டோகிராஃபர்கிட்ட வேலைக்குச் சேர்ந்ததுதான் எனக்குப் பெரிய திருப்புமுனை. 'நீ கல்யாண போட்டோ எடு. அதுல, ஒரு ரோலுக்கு அஞ்சு போட்டோ உன் தேவைக்கு எடுத்துக்கோ’னு சொன்னார். இப்படி ஒவ்வொரு ரோல்லயும் அஞ்சஞ்சா எனக்குப் பிடிச்ச விஷயங்களை எடுக்க ஆரம்பிச்சேன். அதை பிரின்ட் போட்டு ஒவ்வொரு படத்தின் ப்ளஸ், மைனஸ் சொல்லி அவரே வித்தையைக் கத்துக்கொடுத்தார்.

-தொகுப்பு: பா. ஜான்சன்