Published:Updated:

ஏ.ஆர்.ரஹ்மானும் வாய்ப்புத் தேடிய பாடலாசிரியரும்.. - கோடம்பாக்கம் தேடி..! #Cinema மினி தொடர் Part 8

விக்னேஷ் செ
ஏ.ஆர்.ரஹ்மானும் வாய்ப்புத் தேடிய பாடலாசிரியரும்..  - கோடம்பாக்கம் தேடி..! #Cinema மினி தொடர் Part 8
ஏ.ஆர்.ரஹ்மானும் வாய்ப்புத் தேடிய பாடலாசிரியரும்.. - கோடம்பாக்கம் தேடி..! #Cinema மினி தொடர் Part 8

சினிமாவுக்கும், அரசியலுக்கும் நகமும் சதையுமாகத் தொடர்பிருப்பதைப் போலவே, இலக்கியத்துக்கும், சினிமாவுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. இந்தத் தொடர்பு இன்று நேற்றல்ல... அண்ணா, கருணாநிதி போன்றோர் இலக்கியம் - சினிமா - அரசியல் என நான்-ஸ்டாப்பாக எல்லா ஏரியாக்களிலும் ஒரு ரவுண்ட் அடித்தனர்.  இலக்கிய உலகில் இருக்கும் பெரும்பாலானோர் தங்களது அடுத்தகட்ட நகர்வாகக் கருதுவதே சினிமாவைத்தான். நாவல், சிறுகதைகளின் எழுத்தாளர்கள் திரைக்கதை எழுத்தாளர், வசனகர்த்தாவாக முயற்சிப்பதைப் போலவே, கவிஞர்கள் சினிமாவில் பாடல் எழுத வருகிறார்கள். இதற்குக் குறிப்பிட்டெல்லாம் உதாரணம் சொல்லத் தேவையிருக்காது. 

கண்ணதாசன், வைரமுத்து முதல் மதன் கார்க்கி கடந்தும் அதுதான் நிலவுகிறது. விக்னேஷ் சிவன், தனுஷ், சிம்பு, ஹிப்ஹாப் ஆதி போன்ற பாடலாசிரியர்கள் எல்லாம் எந்த லிஸ்டில் வருவார்கள் எனக் கேட்கிறீர்களா..? சந்தேகமே வேண்டாம். அதே பட்டியல்தான். பள்ளிக்கூடம் படிக்கும் காலத்தில், 'அன்பே... நீ ஒரு ரோசாப்பூ...' என என்றாவது கவிதை வரிகள் எழுதியிருப்பார்கள் என நம்புவோமாக.  

சில ஆண்டுகளுக்கு முன்பு ஃபேஸ்புக் நண்பராக அறிமுகமானவர் அவர். 'அலைபாயுதே' படம் பார்த்தபோது, டைட்டில் கார்டில் தன் பெயர் வரவேண்டுமென ஆசைப்பட்டு, தான் சினிமாவில் பாடலாசிரியராக வாய்ப்புத் தேடி அலைந்த கதையைச் சொன்னார். இப்போது போல அவர் வாய்ப்புத் தேடிய காலத்தில் வசதிகள் இல்லை. அதுவும், மதுரை போன்ற தெற்குப் பகுதிகளில் இருந்து சென்னைக்கு வந்து வாய்ப்புத் தேடுபவர்கள் இன்னும் கடினமாகவே சோதனைக்காலத்திற்குத் தயாராகியிருக்கவேண்டும். அவர் பள்ளிக்கூடம் படிக்கும்போதே வானம்பாடிக் கவிஞராக இருந்திருக்கிறார். பள்ளி இறுதி வகுப்பில் தோல்வியடைந்து 1998-வாக்கில் சினிமாவுக்குப் பாடல் எழுதும் வாய்ப்புப் பெற முயற்சித்திருக்கிறார். 

“உண்மையில் கவிதையின் மிகச் சிறந்த குணம், அதன் தாளம். அது தன்னகத்தே ஒரு பொருளைக்கொண்டிருக்க வேண்டும். அது அழகுணர்ச்சியுடன் வெளிப்பட  வேண்டும். அதேசமயம், எளிமையுடனும் இருக்க வேண்டும். அலங்காரச் சொற்களை வலிந்து திணித்ததாக இருக்கக்கூடாது." 
                                                               

                                                                                                         - பால் சக்காரியா 
 

எழுதிய கவிதைகளை பிரபல பாடலாசிரியர்களின் முகவரிக்கு அனுப்பிவிட்டு மாதக்கணக்காக பதிலுக்காகக் காத்திருப்பாராம். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் வீடு அமைந்திருக்கும் தெருவும், பின்கோடு 600024 என்பதையும் மட்டும் தெரிந்துகொண்டு அவருக்கும் சிலமுறை பாடல்வரிகளைக் கூரியரில் அனுப்பி இருக்கிறார். சிலபல வருடங்கள் இப்படியே இருந்ததால் வீட்டிலும் பெரிய மரியாதை இல்லை. சினிமாவில் பாடல் எழுதவும் வாய்ப்புக் கிடைக்கவில்லை... யார் மூலம் பெறுவது எனவும் தெரியவில்லை எனச் சோர்ந்தவர், அந்த நாட்களில் இன்டர்நெட்டின் அபரிமிதமான வளர்ச்சியை அறிந்து சென்னையில் ப்ரௌசிங் சென்டர் வைக்கும் எண்ணத்தோடு மதுரையிலிருந்து கிளம்பியிருக்கிறார். 

இங்கே வந்தபிறகுதான் தெரிந்திருக்கிறது இவர் கடை வைக்கக் கிளம்பிவந்த கோடம்பாக்கத்தின் பின்கோடுதான் 600024 என்பது. தனது ப்ரௌசிங் சென்டரின் பலகையில் தினமும் கவிதை எழுதிப் போடுவதை வழக்கமாக வைத்திருந்திருக்கிறார். வாடிக்கையாளர்கள் வராமல் காற்று வாங்கும் அநேக நேரங்களில் கவிதை எழுதுவதையே வேலையாகவும் வைத்திருந்திருக்கிறார். இவைதவிர கதைகளைக் கவிதைகளாகச் சொல்லும் உத்தியைக் கையாண்டு 'கதைப் பாடல்கள்' சிலவற்றையும் எழுதியிருக்கிறார். அதே சமயத்தில் ஆங்கில அகராதிகளைப் புரட்டுவதையே ஃபுல் டைம் வேலையாக வைத்திருந்தவர் அப்படியே ஆங்கிலக் கவிதைகளையும் எழுதத் தொடங்கிவிட்டிருக்கிறார். 

ப்ரௌசிங் சென்டர் வைத்திருந்ததால் விஸ்டா, யாஹூ, ரெடிஃப்மயில் போன்ற தளங்களில் ஏ.ஆர்.ரஹ்மானின் மெயில் ஐ.டி-யைத் துழாவியிருக்கிறார். ஒருவழியாகக் கண்டுபிடித்து ரஹ்மானுக்கு மெயில் அனுப்பியிருக்கிறார். ஆச்சரியமாக 'டொரான்டோவில் இருக்கிறேன்... ரம்ஜானுக்கு ஊருக்கு வரும்போது சந்திக்கிறேன்'  அவரிடமிருந்து ரிப்ளை வந்திருக்கிறது. அவர் சென்னை வரும் நாளுக்காகக் காத்திருந்தவர், அப்போது ரஹ்மான் வசித்த சாமியார்மடம் பகுதியிலிருக்கும் வீட்டுக்குச் சென்றிருக்கிறார். அதுவும் எப்படி... பாடலாசிரியர் வாய்ப்புக்காக ரெஸ்யூம் ப்ரிபேர் செய்துகொண்டு சென்றவர்களைப் பார்த்திருக்கிறீர்களா..? நம் நண்பர் அவர் எழுதிய கவிதைப் பிரதிகளையும், ரெஸ்யூமையும், வேலைக்குச் சேருவதற்கான விண்ணப்பக் கடிதத்தையும் எடுத்துக்கொண்டு முன்னேற்பாட்டோடு சென்றிருக்கிறார். 'கண்டிப்பாக நல்ல வாய்ப்போடு திரும்ப அழைக்கிறேன்' எனச் சொல்லியிருக்கிறார் ரஹ்மான். 

அவர் ரஹ்மானின் வீட்டுக்குப் போவது இது முதல்முறை அல்ல. ஏற்கெனவே, அவரது உதவியாளரின் பெயரினைத் தெரிந்துகொண்டு வாய்ப்புக் கேட்டிருக்கிறார். அப்போதெல்லாம் ரஹ்மானைப் பார்க்கமுடியவில்லையாம். அவரது வீட்டுக்கு அருகில் அமைந்திருந்த இசை நாடகத்துறை அமைச்சகத்தில் மேனேஜராகப் பணியாற்றிய ஜெயக்குமார் என்பவர் வழிகாட்டுதலின்படி, 'கவிதை உறவு' எனும் அமைப்பின் கூட்டத்துக்குச் செல்லத் தொடங்கியிருக்கிறார். அங்கே நடைபெறும் கவிதைப் போட்டிகளில் பூவை.செங்குட்டுவன், மு.மேத்தா, விவேகா கைகளால் பரிசும் பெற்றிருக்கிறார். 

தான் நடத்திவந்த ப்ரௌசிங் சென்டர் திவாலானதை அடுத்து ஒரு தனியார் நிறுவனத்தில் டேட்டா என்ட்ரி வேலை செய்து வந்திருக்கிறார். கோடம்பாக்கத்திலிருந்த வீட்டிலிருந்து விஜயராகவா ரோட்டில் இருந்த அலுவலகத்திற்கு நடந்தே செல்வது வழக்கம். அப்படி ஒருநாள் அலுவலகம் போனதுமே அலுவல் தொலைபேசிக்கு அவரது வீட்டிலிருந்து அழைப்பு வந்திருக்கிறது. ரஹ்மான் அலுவலகத்திலிருந்து தன்னைக் கேட்டு அவரது தந்தையின் மொபைல் எண்ணுக்கு அழைப்பு வந்ததாகச் சொல்லவும் ஓடியிருக்கிறார். அப்போது பேருந்து வசதி இல்லாத அந்த வழித்தடத்தில் நிஜமாகவே ஓடித்தான் போயிருக்கிறார்.  வீடு வந்துசேர்ந்து அவரது அப்பாவிடம் பணம் பெற்றுக்கொண்டு  ரஹ்மானைப் பார்க்க மனம் முழுக்கக் கேள்விகளோடும், படபடப்போடும் ஒரு ஆட்டோ பிடித்துச் சென்றிருக்கிறார்.  

ஸ்டூடியோவுக்குள் நுழைந்ததும் ஒரு அறையில் அமரும்படி கூறியிருக்கிறார்கள். அப்புறம்தான் விஷயம் தெரிந்திருக்கிறது. 'வரலாறு' படத்தின் பாடல்கள் பதிவிற்காக ரஹ்மான் கனடா சென்றுவிட்டதாகவும், பாடல் வரிகளின் பிரதி அவரிடம் இல்லாததால் தன்னை அழைத்து ஏற்கெனவே பதிவுசெய்த பாடலின் அடிப்படை வடிவத்தைக் கேட்டு அந்த வரிகளைப் படியெடுத்துத்  தருமாறு சொல்லித்  தம் அலுவலகத்திற்கு மின்னஞ்சல் செய்திருந்ததாகக் கூறியிருக்கிறார்கள். ஏமாற்றத்தைச் சந்தித்தவர், பாடல்களை கேட்டுப் படியெடுத்துக் கொடுத்துவிட்டு அவர்கள் கொடுத்த ஐநூறு ரூபாயை வாங்கிக்கொண்டு கிளம்பியிருக்கிறார். அதுவே சினிமாத்துறையில் முதன்முதலில் அவர் சம்பாதித்த பணம். 

"உண்மைதான் ஆகப்பெரும் நகைச்சுவை."

                                                          - அசோகமித்திரன் 

அதற்குப் பிறகு, ஏ.ஆர்.ரஹ்மான் அழைத்ததும் அவரைச் சந்தித்து வாய்ப்புப் பெற்றிருக்கிறார்.  2007-ல் ‘ஒன் லவ்’ என்ற இசைப்புயலின் ஆல்பத்தில் பாடல் எழுதியிருக்கிறார். ஆனால், வெளியிடப்பட்ட கேசட்களில் பிறமொழிப் பாடலாசிரியர்களின் பெயர் இருக்கிறது. இவரது பெயர் இடம்பெறவில்லை. அப்போதும் அடையாளம் கிடைக்காமல் நொந்துகொண்டவர், ’ஜோதா அக்பர்’ படத்தில் ‘க்வாஜா எந்தன் க்வாஜா’ பாடலை எழுதினார். இசைப்புயலுக்குப் பாடல் எழுதவேண்டும் எனும் அவரது கனவு இடைப்பட்ட காலத்தில் தொலைநிலைக் கல்வியில் பயின்று, ஒரு கல்லூரியில் புரொஃபஸராகச் சேர்ந்தபிறகு ஒருவழியாக நிறைவேறியது மஷூக் ரஹ்மானுக்கு.

'ஜோதா அக்பர்' படத்தில் இவர் எழுதிய பாடல் வரிகள் இடம்பெற்றன. அவரது அபரிமிதமான 'அதிர்ஷ்டமோ' என்னவோ அந்தப்படம் வெளியான சில நாள்களிலேயே தமிழகத் திரையரங்குகளில் இருந்து தூக்கப்பட்டது. அதற்குப் பிறகும் பெரிய வாய்ப்புகள் கிடைக்காதவர், சினிமாவுக்காக சமூகத்திற்குப் புறம்பான வரிகளை எழுதுவதற்கு எப்போதும் ஒப்புக்கொள்வதில்லை. இப்போது சூபியைப் பற்றி மஷூக் ரஹ்மான் எழுதிய பாடல் விரைவில் Hungama பேனரில் வெளியாகவிருக்கிறது. 

'ஊர்ல எல்லோரும் என்னைச் சப்பாணினுதான் கூப்புடுறாங்க. நான்தான் கோபால் கோபால்னு சொல்லிக்கிட்டுத் திரியிறேன்'. என '16 வயதினிலே' படத்தில் கமல் சொல்வதாக ஒரு காட்சி வரும். கிட்டத்தட்ட அப்படித்தான் இருக்கிறது வாய்ப்புக் கிடைக்காத இந்தக் கவிஞரின் வாழ்வும்!

சுத்தவிட்டுச் சுண்ணாம்பு அடிக்கும் இந்தச் சினிமாவில் வாய்ப்புத் தேடித்தான் இந்தக் கணத்திலும் ஒருவன் வண்டியேறிக் கொண்டிருக்கிறான். கல்லூரிப்படிப்பு முடிந்த கையோடு, சினிமாவில் ஒளிப்பதிவாளராகப் பணிபுரிந்த நண்பர் ஒருவரிடம் நேற்று ஒருவர் வாய்ப்புக்கேட்டு அலைபேசினார். ஆம். எளிதில் அடைந்துவிடுகிற லட்சியத்தில் என்ன சுவாரஸ்யம் இருந்துவிடப் போகிறது?

- இன்னும் ஓடலாம்...