Published:Updated:

16 வயதில் எண்ட்ரி.. பாலிவுட்டின் தவிர்க்க முடியாத சக்தி - நஸ்ருதீன் ஷா! #HBDNaseeruddinShah

பரிசல் கிருஷ்ணா
16 வயதில் எண்ட்ரி.. பாலிவுட்டின் தவிர்க்க முடியாத சக்தி - நஸ்ருதீன் ஷா!  #HBDNaseeruddinShah
16 வயதில் எண்ட்ரி.. பாலிவுட்டின் தவிர்க்க முடியாத சக்தி - நஸ்ருதீன் ஷா! #HBDNaseeruddinShah

நஸ்ருதீன் ஷா. 40 வருடங்களாக பாலிவுட்டின் அசைக்க முடியாத பெயர். பாலிவுட்டில் இயக்குநர்கள் மனதில்,  ’இந்த மாதிரி கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கவும், அதில் ஓர் உச்ச நடிப்பைக் காட்டவும் யாரால் முடியும்?’ என்ற கேள்வி எழும்போதெல்லாம் சட்டென வந்து நிற்கும் பெயர். இன்றைக்கு தன் 67வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார் இந்தக் கலைஞன்.

வாழ்க்கை வரலாறை எதற்காக எழுதுவார்கள்? சில வருடங்களுக்கு முன் ‘And Then One Day A Memoir' என்ற தனது வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை எழுதி வெளியிட்டார் நஸ்ருதீன் ஷா. “ரொம்ப போரடிச்சு.. என்ன பண்றதுனு தெரியாமத்தான் எழுத ஆரம்பிச்சேன்” என்கிறார் ஷா. 

தனது 19 வயதில், தன்னைவிட 16 வயது மூத்தவரான, 36 வயது மனரா சிக்ரி என்பவரைத் திருமணம் செய்து கொண்டவர் நஸ்ருதீன் ஷா. ஒருவருடம் மட்டுமே அந்த பந்தம் நீடித்தது. அதன்பிறகு ரத்னா பதன் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இப்போது இவர்கள் தங்கள் வாரிசுகளுடன் மும்பையில் வசித்து வருகிறார்.

‘நடிக்கறதுக்காக படிப்பை பாதில விட்டுட்டு வந்தேன்’ என்று கேள்விப்பட்டால் கோபப்படுவார். ”என்னைப் பார்த்து வந்ததாகக் கூறும்போது இன்னும் கோபம் வரும். நடிகர்கள் படிக்க வேண்டாம், எழுத வேண்டாம் என்று யார் சொன்னார்கள் என்று தெரியவில்லை. படிப்பு முக்கியம்தான்.” என்பார்.

“ஒரு எஞ்சினியர், டாக்டர் போல நடிப்பதற்கும் அதற்கான படிநிலைகளைத் தாண்டி வருவது பெஸ்ட். ஒவ்வொருவருக்குள்ளும் நடிகனாக வேண்டும் என்ற ஆசை இருக்கும். கொஞ்சம் நடிப்பைப் படித்தும் வந்தால் ரொம்பவே நன்றாக இருக்கும்” என்கிறார் நஸ்ருதீன்.
நைனிடாலில் போர்டிங் ஸ்கூலில் தங்கிப் படித்தார். அவருக்குப் பிடிக்காத காலம் என்பார் அதை. படிக்கும்போதே நாடகம், இலக்கியம் இவற்றில்தான் ஆர்வம் இருந்தது. பள்ளிநாடகங்களிலெல்லாம் நடித்து கைதட்டல்களும், பாராட்டும் வாங்கினார்.   16வயதில் மும்பை வந்துவிட்டார். எக்ஸ்ட்ரா நடிகர்களுக்கான ஏஜெண்ட்டுடன் நட்பு கிடைக்கிறது. இருந்தாலும் ஒரு கதவும் அவருக்காகத் திறக்கவில்லை. ‘நீ குழந்தையும் அல்ல. பெரியவனும் அல்ல. இந்த வயதில் சான்ஸ் கிடைப்பது கஷ்டம்’ என்று துரத்தி அடிக்கப்படுகிறார். 

1975ல் நிஷாந்த் படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகிறார். முதல்படமே ஆஸ்கருக்குப் பரிந்துரைக்கப்பட்டது. நிஷாந்த் படம் தேசிய விருது பெறுகிறது. பெரும் கவனம் பெறுகிறார் நஸ்ருதீன் ஷா. அதன்பிறகு ஏறுமுகம்தான். ஸ்பர்ஷ், மிர்ச் மசாலா, ஜானோ பி தோ யாரோ, மண்டி, இஜாசத், மன்சூம், எ வெட்னஸ்டே, வெய்ட்டிங் என்று அவற்றில் பல, விமர்சகர்களால் கொண்டாடப்பட்ட படங்களே. நஸ்ருதீன் நடித்து வெளியான ‘எ வெட்னஸ் டே’தான் தமிழில் கமல் நடிக்க ‘உன்னைப் போல் ஒருவன்’ என ரீ மேக் செய்யப்பட்டது. 

படிக்கும்போதே ஆங்கில இலக்கியத்தின்மீது ஈடுபாடு இருந்ததால், ஷேக்ஸ்பியர் என்றால் ரொம்பப் பிடிக்கும். “இப்பவும் ஸ்கூல்ல போய் ஷேக்ஸ்பியர் பாடங்களை எடுக்க ஆசை. ஆனா இப்ப நான் போனா ‘ஏன் இதப் பண்றார்’னு என்னை சந்தேகப்படுவாங்க’ என்றார் ஒரு பேட்டியில்.  

நான் அழகில்லை. பெரிய அறிவாளியுமில்லை என்று அடிக்கடி சொல்லிக் கொள்வார். ஆனாலும், இவரது கதாபாத்திரத் தேர்வுகளும், தேர்ந்தெடுத்த கதாபாத்திரத்தில் இவரது நடிப்பும், ரசிகர்களையும் சக நடிகர்களையும் பெரிதும் கவர்வதாகவே அமைந்தது. அமைந்து கொண்டிருக்கிறது.

ஹேப்பி பர்த்டே ஷா!