Published:Updated:

இவரிடம் காதல் வசப்படும், வயப்படும்..! பாரதிராஜாவின் ஆகச்சிறந்த காதல் காட்சிகள்

இவரிடம் காதல் வசப்படும், வயப்படும்..! பாரதிராஜாவின் ஆகச்சிறந்த காதல் காட்சிகள்
இவரிடம் காதல் வசப்படும், வயப்படும்..! பாரதிராஜாவின் ஆகச்சிறந்த காதல் காட்சிகள்

"காதல் கூட

கடவுள் மாதிரிதான்

காலதேச தூரங்களைக்

கடந்தது அது

காதல் என்னும்

அமுதஅலைகள்

அடித்துக்கொண்டே

இருப்பதனால்தான்

இன்னும்

இந்தப்

பிரபஞ்சம்

ஈரமாகவே இருக்கிறது.

(கடலோரக் கவிதைகள்)

- திரை உலகில் காதல் கதைகள் என்றுமே இளமையானவை. ஶ்ரீதரின் 'கல்யாணப் பரிசு', டி.பிரகாஷ்ராவின் 'வசந்தமாளிகை', கே.பாலசந்தரின் 'மரோசரித்ரா', டி.ராஜேந்தரின் 'ஒரு தலை ராகம்' என்று பட்டியலிட்டால், அவரவர்களுக்கு மைல்கற்களாக சில படங்களைத்தான் குறிப்பிட முடியும். ஆனால், பாரதிராஜாவுக்கு அவரது படங்களில் பெரும்பாலானவை, குறிப்பாக 80-களில் காதலுக்கு முக்கியத்துவம் கொடுப்பவையாகவே அமைந்துவிட்டன. காதலும் இசையும் அவரது படங்களில் கைகோத்துக் களிநடனம் புரிகின்றன.

'It is not Love; it is something more than that' என்று 'நிழல்கள்' படத்தில் ஒரு வசனம் வரும். பாரதிராஜா தான் இயக்கிய படங்களில், மனிதநேயம், கிராமத்து மண்வாசனை, சமூக உணர்வு இவற்றையெல்லாம் சொன்னாலும், something more than that -ஆகச் சொல்லியிருப்பது, 'காதல்'தான். அவர் இயக்கிய படங்களில் பல படங்கள் காதலுக்கு முக்கியத்துவம் தருபவையாக இருக்கின்றன.

மாறுபட்ட கதைக்களங்களுடன் உருவான காதல் கதைகள், வெவ்வேறு தளங்களில் அறிமுகமாகும் ஹீரோவுக்கும் ஹீரோயினுக்கும் காதல் உருவாவதைக் காண்பித்த விதங்கள் அலாதியானவை. காதல் வெளிப்படும் காலத்தை யாரால் கணிக்க முடியும்? பூக்கள் மலரும் வேளையை யாரால் புரிந்துகொள்ள முடியும்? ஆனால், இவரோ காதலின் காதலனாக, காதல் வெளிப்படும் காலத்தை அழகாகக் கணிக்கிறார். காதல் வெளிப்படும் நேரம் படத்துக்குப் படம் வித்தியாசப்பட்டாலும், சுவையென்னவோ கொஞ்சம்கூட குறையவே இல்லை.

பதினாறு வயதினிலே :

`பதினாறு வயதினிலே' படத்தில், 'சப்பாணினு யாராவது சொன்னா சப்புனு அறைஞ்சிடு' என்று மயிலிடம் ஞான உபதேசம் பெற்ற சப்பாணி, ஊரில் எவரும் கை நீட்டிக்கூட பேச அஞ்சும் பரட்டையை அறைந்து விட்டு வருகிறான். அப்பாவியாய் இருந்தவன் ஆர்ப்பரிக்கும் பிரவாகமாக மாறி அறைந்துவிட்டு வந்ததும், `எப்படி அறைஞ்ச? எப்படி அறைஞ்ச?' என்று மயில் மீண்டும் மீண்டும் பிரமிக்க, 'பளார்னு அறைஞ்சேன்' என்று தவறுதலாக அவளையும் அறைய... காதல் பிறக்கிறது. 

செவ்வந்திப் பூ முடித்த' சின்னக்காவைக் காதலைப் பாட அழைக்கிறார்கள். இங்கே காதல் கழிவிறக்கத்தில்தான் பிறக்கிறது. பின்னாளில் மயிலுக்காகப் பரட்டையையே கொன்றுவிட்டு, சிறைக்குச் செல்கிறான் சப்பாணி. 'அடடே காலமெல்லாம் கஷ்டப்பட்ட சப்பாணி ஜெயிலுக்குப் போய்விட்டானே' என்ற ஆதங்கம் ரசிகர்கள் மனதில் அப்பிக்கொள்கிறது. இந்த ஆதங்கத்தை, 'கிழக்கேப் போகும் ரயிலி'ல் தீர்த்து வைக்கிறார், இயக்குநர் பாரதிராஜா. 

கிழக்கே போகும் ரயில் :

சப்பாணி சார்பாக மொய் எழுதிவிட்டு பரஞ்ஜோதியின் தங்கை திருமணத்தில் வந்து போகிறான், ஒருவன். ஒரு படத்தின் பாத்திரம் இன்னொரு படத்தில் வராமல், அவர்களின் பெயர்களை உச்சரித்த மாத்திரத்தில் கை தட்டல் பறந்தது. தியேட்டரே ரசித்து மகிழ்ந்தது.

தன்னுடைய கவிதைகளுக்கு ஊரில் அங்கீகாரம் கிடைக்காத நிலையில் இருக்கிறான், 'கிழக்கே போகும் ரயில்' பரஞ்சோதி. குடை ராட்டினம் சுற்றும் கருத்தமாவின் தங்கை பாஞ்சாலி, ஆத்தாவை விழுங்கிவிட்டு அந்த ஊரில் இருக்கும் அக்கா வீட்டுக்கு வருகிறாள். பரஞ்சோதியின் தங்கையும் பாஞ்சாலியும் தோழிகள் ஆகிவிடுகின்றனர். 

தகப்பனிடம் கோபித்துக்கொண்டு போய் தனித்திருக்கும் பரஞ்சோதிக்கு, தங்கை கொடுத்தனுப்பும் சாதத்தைப் பரிமாறுகிறாள் பாஞ்சாலி. இருவரும் தங்கள் மனதையும் பண்டமாற்று செய்து கொள்கின்றனர். 'கோவில்மணி ஓசைதனை செய்தது யாரோ?' என்று அவள் காதலை வெளிப்படுத்த, அவள் வளர்க்கும் கிளியே, 'பரஞ்சோதி! பரஞ்சோதி!' என்று கூறி காதலுக்குச் சாட்சியாகிறது. தன் தங்கைக்குப் பிறகு தன்னையும் தன் கவிதைகளையும் அங்கீகரிக்கும் அவளிடம் தன் மனதைக் கொடுக்கிறான். தன் காதலியைக் கரையேற்ற நகரத்திற்க்கு வந்து பத்திரிகை அலுவலகத்தில் பணியில் சேர்கிறான். 'வசந்தம் பிறந்தது பாஞ்சாலி!' என்று ரெயில் பெட்டியின் முதுகில் எழுதி செய்தி அனுப்புகிறான்.

சிகப்பு ரோஜாக்கள் :

'சிகப்பு ரோஜாக்கள்' முழுக்க முழுக்க க்ரைம் படமாக இருந்தாலும், பாரதிராஜாவினால் காதல் உணர்வுகளுக்கு கைவிலங்கு போட்டு வைத்துக்கொள்ள முடியவில்லை. திலீப் எனும் கதையின் நாயகனும் (கமல்ஹாசன்), ஜவுளிக்கடையில் விற்பனைப் பெண்ணான நாயகி சாரதாவும் (ஶ்ரீதேவி) சந்தித்துக் கொள்கிறார்கள்.

'பியூட்டிஃபுல்!' என்கிறான், திலீப். அதிர்கிறாள். 'நான் புத்தகத்தைச் சொன்னேன்' என்று கூறிவிட்டுப் போகிறான். மறுமுறையும் அதே கடைக்கு ஷாப்பிங் வருகிறான். 'பியூட்டிஃபுல்' என்று கூற, மறுபடியும் அதிர்கிறாள். 'நான் கர்ச்சீபை சொன்னேன்' என்று நளினமாக நழுவுகிறான். மூன்றாவது முறையாகக் கடைக்கு வருகிறான் 'பியூட்டிஃபுல்! இப்ப நான் புத்தகத்தையும், சொல்லலை, கர்ச்சீபையும் சொல்லலை' என்று கூறிவிட்டுப் புறப்படுகிறான். அவன் தன்னைத்தான் குறிப்பிட்டான் என்பதை அறிந்து, இன்ப அதிர்ச்சியில் மூழ்குகிறாள். 'Art must be indirect' என்பார்கள். காதலும் ஒரு கலைதானே. ரசிகர்களால் மிகவும் ரசிக்கப்பட்ட மறக்க முடியாத ஒரு காட்சி.

புதிய வார்ப்புகள் :

'உன்னோட இதயத்தைக் கொடுத்தாத்தான் வாத்தியரய்யா குங்குமம் தருவாராம்' என்று அக்காள் ஜோதியிடம் சொல்கிறான், தம்பி. 'குங்குமம்' வார இதழைப் படிக்க எதிர்வீட்டு ஜோதி கேட்டதற்கு வாத்தியார் சண்முகமணியின் பதிலாக 'புதியவார்ப்புகள்' படத்தில் வரும் வசனம். 

80-களில் எத்தனையோ ஆயிரம் காதலர்கள் தங்கள் வாழ்வில் பேசித் தீர்த்த கவித்துவ வரிகள். Love Starts from the two persons symoltauncously என்பதற்கு இலக்கணமாக இவர்களது காதல் இருந்தது.

நிறம் மாறாத பூக்கள் :

காயின் போனில் ஐம்பது பைசா காசைப் போட்டுப் பேச, தொலைபேசி தகராறில் பிறக்கிறது 'நிறம் மாறாத பூக்கள்' காதல். 

நிழல்கள் :

'நிழல்கள்' படத்தின் காதல் வேறு விதம். எம்.ஏ. ஆங்கில இலக்கியம் பயின்று வேலையில்லாப் பட்டதாரியாக இருக்கும் இளைஞனிடம் டியூஷன் கற்றுக்கொள்கிறாள், மகா. ரோமியோ ஜூலியட் கதையைப் பாடம் நடத்துகிறான். அந்தி மயங்கும் மாலை வேளையில், ஜூலியட்டை சந்திக்கவரும் ரோமியோ, சந்திரனை வர்ணிப்பதற்குப் பதிலாக ஜூலியட்டின் முகத்தை வர்ணித்து விடுகிறான். நம் கதாநாயகனோ 'It is Juliet' என்பதற்கு பதில் 'It is maha' என்று கூறிவிட, காதல் பிறக்கிறது.

கல்லுக்குள் ஈரம் :

'என் பேரு சோலை' என்பதை உற்றுக் கவனித்தால், ஒரு சாதாரண தகவல் வாக்கியமாகத்தான் நம்மால் அதனைக் கூற முடியும். ஆனால், 'கல்லுக்குள் ஈரம்' படத்தில், இறுதிக் காட்சிக்கு சற்று முன்னதாக படத்தின் நாயகியான அருணா, நாயகன் பாரதிராஜாவிடம் இதைக் கூறுகிறாள். திரையில் ஒன்றரை மணி நேரம் மெளனமாக அவள் வளர்த்த காதல், இந்தக் காட்சியில்தான் பூரணத்துவம் பெறுகிறது. ஊருக்குப் படப்பிடிப்பு நடத்த வரும் இயக்குநராக வருபவரின் மேனரிஸங்களால் கவரப்பட்டு மெளனமாகவே கண்களால் பேசிக் காதலை வளர்த்தவள், தன் காதலை இப்படிச் சொல்கிறாள். முன்பின் அறியாத நபரிடம் தன் பெயரைச் சொல்லிய மாத்திரத்திலேயே, அவன் மீது தனக்குள்ள ஈர்ப்பை வெளிப்படுத்திவிடுகிறாள்.

முதல் மரியாதை :

சிங்கமும் சிட்டுக்குருவியும் சினேகம் வைத்துக்கொள்ளும் முரணான காதல், 'முதல் மரியாதை' காதல். 'நான் உன்னை வச்சிருக்கேனா குயிலு! சாவடியிலே தூங்கி பொழுதுபோக்குற பயலுக பஞ்சாயத்துல சரிக்குச் சரியாய் நின்னு ஒரு கேள்வி கேட்டுட்டான்க. ஆமான்னுட்டேன். ஏதோ மனுஷனுக்கு ஆத்திரம், சொல்லிப்புட்டேன். மனசார சொல்லலை'' என்று நாட்டாமை பெரிசு கூற,

'இப்போதான்யா நீ தப்பு பண்ணிட்டே' என்கிறாள், குயிலு. வயதை வரம்புகளை மீறிய ஆத்மார்த்த ஸ்நேகம் அவர்களிடையே இழையோடுகிறது.

கடலோரக் கவிதைகள் :

கடலோரக் கவிதைகளில் மனம் திரும்பிய அடியாள் சின்னப்பதாஸும், டீச்சர் ஜெனீபரும் பேசிக்கொள்கிறார்கள். சுவரில் மாட்டப்பட்டிருக்கும் நல் மேய்ப்பவன் படத்தைக் காண்பித்துக் கேட்கிறாள், 'தாஸ், இதேமாதிரி ஒரு ஆடு உன் கைக்கு வந்தா நீ என்ன செய்வே?' 'பிரியாணிதான். பட்டை, கிராம்பு போட்டு தூள் கிளப்பிட வேண்டியதுதான்', 'அந்த ஆடு ஜெனீபரா இருந்தால்...' இளம் மனசுகள் இரண்டும் இறக்கை கட்டிப் பறக்கின்றன.

இப்படியாக, பாரதிராஜாவின் அந்தக்கால காதலர்கள் பல்வேறு பரிணாமங்களில் வெவ்வேறு அவதாரங்களை எடுக்கின்றனர். இவர் படம் பிடித்த காதலில்தான் எத்தனை ரகங்கள் பதினாறுவயதினிலே - கழிவிறக்கத்தில் காதல். கிழக்கே போகும் ரயில் - கவிஞனின் காதல். நிறம்மாறாத பூக்கள் - அந்தஸ்து பேத காதல். கல்லுக்குள் ஈரம் - மெளனராகமாக ஒரு கிராமியக் காதல். நிழல்கள் - கல்லூரிக் காதல். அலைகள் ஓய்வதில்லை - விடலைப்பருவ ஆனால், விவேகமான காதல். முதல் மரியாதை - வயது வரம்பை மீறிய, பொருத்தமாகக் காட்டப்பட்ட பொருந்தாக் காதல். கடலோர கவிதைகள் - முள்ளும் மலரும் முத்தமிட்டுக் கொள்ளும் முத்தான காதல். காதல் ஓவியம் - இரு கலைஞர்களிடம் மலரும் காதல். 

தன் மனக்கோவிலில் குடியிருக்கும் மயிலுக்காக சப்பாணி கொலையே செய்கிறான். 'கிழக்கே போகும் ரயிலி'ல் காதலர்களுக்கு ஊர்ச் சதிகாரர்களிடமிருந்து தப்பித்தால் போதுமென்ற நிலை. 'புதியவார்ப்பு'களில் சமூகக் கட்டுகளையும் போலி மனிதர்களையும் ஒழித்துக்கட்ட ஒரு ஹீரோ செய்யவேண்டிய வேலையை ஹீரோயினே செய்து முடிக்கிறாள். பூவைவிட மென்மையான அவள் பூகம்ப பிரவாகமாக மாறி அநீதியை அழிக்கிறாள். பாரதிராஜாவின் படக் காதலிகள் உண்மை, கோபம், ரோஷம் ஆகியவற்றின் தொகுப்புகளாக இருக்கிறார்கள். காதலர்களைவிட புத்திசாலிகளாகவும் தைரியசாலிகளாகவும் இருக்கிறார்கள்.

அலைகள் ஓய்வதில்லை :

'அலைகள் ஓய்வதில்லை' படத்தில் விச்சு ஊர் பள்ளிக்கூடத்தில் தேர்வு எழுதிய கையோடு, கான்வென்ட்டில் படித்து ஊர் வரும் மேரியைக் காதலிக்கிறான். இவர்களது காதல் விடலைப் பருவக் காதல் என்று சில விமர்சனம் எழுந்தது.  

படத்தில் மேரியும் அவளது அண்ணி எலிஸீயும் பேசிக்கொள்கிறார்கள். 'மேரி உனக்கென்ன பைத்தியமா பிடிச்சிருக்கு?' 'ஆமா. பைத்தியம்தான் பிடிச்சிருக்கு. என் விச்சுமேல எனக்குப் பைத்தியம்தான். பணத்தைப் பார்த்து கல்யாணம் பண்ணிக்கிட்ட உங்களுக்கு மனசைப் பார்த்து காதலிக்கிற எங்களைப் பார்த்தா பைத்தியமாகத்தான் தெரியும்' என்கிறாள். இவர்களை எப்படி அறிவு முதிர்ச்சியற்ற விடலைப் பருவத்தினர் என்று சொல்லமுடியும். அறிவின் முதிர்ச்சியாக, அளவீடாக வயதை மட்டுமே நம்மால் எப்படி ஏற்றுக்கொள்ளமுடியும்?

காதல் என்பதன் அதிகபட்ச இலக்கே, பரஸ்பர புரிந்துகொள்ளல்தான். அந்தப் புரிந்துகொள்ளலுடன் கூடிய பெண் எந்த வயதில் கிடைத்தாலும் மனம் காதல் கொள்வதுதான் இயற்கை என்பதற்கு முதல் மரியாதையே சாட்சி. காதல் தோற்றாலும், ஜெயித்தாலும் காதல் காதல் தானே.

சக்கர வியூகத்தில் நுழைவதற்கு மட்டுமே அறிந்திருந்த அபிமன்யுவைப்போல், பாரதிராஜாவின் படக் காதலர்கள் எப்படியெல்லாம் காதல் கொள்ளலாம் என்பதையறிந்திருந்தனரே தவிர, எப்படி இணைந்து வாழலாம் என்பதைக் குறைவாகவே அறிந்திருந்தனர். ஆதாம், ஏவாள் காலம்தொட்டு காதலர்களின் கதையே இதுதானே!.

ஏனென்றால், காதல் உணர்வுபூர்வமானதா அறிவுபூர்வமானதா என்றால் உணர்வுபூர்வமானதுதான். அறிவுடன் ஆலோசித்தால் வாழ்க்கையைப் பற்றிய தொலைநோக்கும், ஆராய்ச்சியும் வந்துவிட அங்கே காதல் ஒதுங்கி நின்றுகொள்ள வாழ்க்கை தெரிய ஆரம்பித்து விடும்.

இந்த நிலையில், உணர்வுபூர்வமாக ஏற்பட்ட காதலை அறிவுபூர்வமாக்கி அங்கீகாரம் பெற்றுத்தரும் முயற்சியைத்தான் ஒரு படைப்பாளி மேற்கொள்ள வேண்டும். காதலை அங்கீகரிப்பவர்கள், காதலர்களை அங்கீகரிப்பதில்லை.

துரதிர்ஷ்டவசமாக, இதுவரை இங்கு எல்லோரும், 'லைலா மஜ்னு', 'அம்பிகாபதி அமராவதி' என செத்துப்போன காதலர்களுக்குத்தான் புத்தகம் போட்டுக்கொண்டிருந்தார்கள். அவை பழைய புத்தகங்களின் புதிய பதிப்புகள்! ஆனால், இவர் மட்டும்தான் காதலை வாழ்வித்து புதிய புத்தகம் எழுதினார்.

எல்லோர் வாழ்க்கையிலும்

ஒரு மேரியோ

ஒரு குயிலோ

ஒரு ஜெனீபரோ இருந்து விட்டால்

மனிதனுக்கு சொர்க்கம்

பூமியிலேயே ஆரம்பமாகிவிடும்.