Published:Updated:

டெம்ப்ளேட்களில் சிக்காத ஐ.டி. இளைஞன்; தமிழின் 'மெர்க்குரி' கலைஞன்! - #HBDKarthikSubbaraj

உ. சுதர்சன் காந்தி.
டெம்ப்ளேட்களில் சிக்காத ஐ.டி. இளைஞன்; தமிழின் 'மெர்க்குரி' கலைஞன்! - #HBDKarthikSubbaraj
டெம்ப்ளேட்களில் சிக்காத ஐ.டி. இளைஞன்; தமிழின் 'மெர்க்குரி' கலைஞன்! - #HBDKarthikSubbaraj

தமிழ் சினிமா ஏராளமான இயக்குநர்களை அறிமுகப்படுத்தியுள்ளது. ஒவ்வொருவரும் தனக்கென ஒரு அடையாளதைக் கண்டு, சினிமா எனும் கல்வெட்டில் தனது பெயரைச் செதுக்க முயற்சிப்பார்கள். சிலருக்கு அதற்கான கால அவகாசம் தேவைப்படும். சிலருக்கோ அது விரைவில் கிடைத்துவிடும். ஆனால், அது சாதரண காரியமில்லை. காலகட்டத்தை உணர்ந்து சினிமா எடுப்பதே சவாலாக இருக்கும் சூழலில், தனக்கென ஒரு ட்ரேட் மார்க்கோடு கால்பதித்தவர், இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ்.  

இயக்குநராக வேண்டுமென்றால் ஒரு பெரிய இயக்குநரிடம் உதவியாளாராக வேலை பார்த்து, அவர்களுடன் பணியாற்றி சினிமாவின் ஆழத்தை உணர்ந்தபின், தன்னுடைய கனவுக் கதையை செதுக்கி, அதன்பின் அதை இயக்கி... இப்படி இயக்குநர்கள் படும் கஷ்டங்களை விவரிக்க வார்த்தைகள் பத்தாது. இன்னும் சிலருக்கு உதவி இயக்குநர் வாய்ப்பே எட்டாக்கனியாக இருக்கும். அத்தருணத்தில், `நாளைய இயக்குநர்' என்ற மேடையை சரியாகப் பயன்படுத்திக்கொண்டு, தன் படைப்பை அதில் அரங்கேற்றியது கார்த்திக் சுப்பராஜின் அறிவாற்றலைச் சொன்னது. அந்நிகழ்ச்சியில் தன்னை நிரூபிக்க இவர் எடுத்த குறும்படங்கள், ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் திரும்பிப் பார்க்க வைத்தது. 'பெட்டி கேஸ்', 'ராவணம்', 'லாஸ்ட் டிரெயின்' ஆகிய குறும்படங்கள்  இவரை இறுதிப் போட்டிக்கு அழைத்து வந்தது. மீனவர்களின் நிலைமையை பற்றிய நிதர்சன உண்மையைச் சொன்ன 'நீர்' என்ற குறும்படம் மூலம், 'நாளைய இயக்குநர்' என்ற பட்டத்தை வாங்கியவர், இன்றைய தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குநராகத் திகழ்கிறார். அதுமட்டுமின்றி  இன்று நாளைய இயக்குநராக வேண்டும் என்று துடிக்கும் இளைஞர்களுக்கு சிறந்த ஐகானாகவும் இருக்கிறார் என்றால், அதற்குக் காரணம் அவரின் உன்னதமான உழைப்பும் சினிமாவின் மீதான காதலும்தான்!  

குறும்படங்களின் நாயகனாக வலம் வந்தவர் சினிமாவில் என்ன செய்யப்போகிறார் என்ற கேள்வி எழ, 'ராத்திரியை ஆளும் அரசன்' என்ற பாடலை 'பீட்சா'வில் வைத்து, பேய் ஜானர் படங்களில் ஒரு புதிய பாணியை உருவாக்கி, 'யார்ரா இந்தப் பையன். பயங்கரமா எடுத்திருக்காப்ல?!' எனப் படம் பார்ப்பவர்களை பிரமிக்கவைத்தார். முதல் படம் வெற்றிப் படமாக அமைந்தவுடன், அவரின் அடுத்த படைப்பிற்கான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாய் இருந்தது. ஆனால், எதையுமே பொருட்படுத்தாமல் முதல் படத்தில் 'பீட்சா' ட்ரீட் கொடுத்ததை போல, இம்முறை தனது சொந்த மண்ணிலே கால் பதித்தார். படத்தின் பெயர், `ஜிகர்தண்டா'. கூட்டிவந்த ஆட்கள் இயக்குநர் கார்த்திக், கேங்ஸ்டர் அசால்ட் சேது. இந்த இருவருமே கார்த்திக் சுப்பராஜ் என்ற மனிதரின் வரலாற்றுப் புத்தகத்தில் மிக முக்கியமான பக்கங்களாக இருப்பார்கள். எந்தவித பின்புலமும் இல்லாமல் தன்னுடைய திறமையால் மட்டுமே சினிமாவுக்குள் வந்த சொற்ப படைப்பாளிகளுள் கார்த்திக் சுப்பராஜும் ஒருவர் என்ற அங்கீகாரத்தைக் கொடுத்து, `தரமான, சிறப்பான சம்பவத்தை' நிகழ்த்தியது இப்படம். `சொல்லியிருந்தா, அசால்ட் சேது கேரக்டரை நானே நடிச்சிருப்பேனே?!' என சூப்பர் ஸ்டார் ரஜினியே இந்தப் படத்தைப் புகழ்ந்தது, இவரது இமேஜை மேலும் சில படிகள் உயர்த்தியது. 'வாழணும் செமையா வாழ்ந்தான்டாங்கிற மாதிரி வாழணும்' என்ற வசனத்தை தமிழ் சினிமாவில் இருந்து இனி அழிக்கவே முடியாது. `ஜிகர்தண்டா' கொடுத்த சுவைக்குப் பிறகு கார்த்திக் சுப்பராஜ் முன்னணி இயக்குநர்கள் பட்டியலில் இடம்பிடித்தார். ஸ்டோன் பென்ச் என்ற நிறுவனம் மூலம் குறும்படங்களுக்குத் தன்னுடைய ஆதரவை அளித்து வந்தவர், தான் கடந்து வந்த வெற்றிப்பாதையில், இன்று நிறைய புதுமுக இயக்குநர்கள் பயணம் செய்ய வழிகாட்டியாக இருக்கிறார். 

என்னதான் நவீன உலத்தில் இருந்தாலும், ஆண்களை சகித்துக்கொண்டு வாழும் பெண்கள் படும் கஷ்டங்களையும், ஆணாதிகத்திற்குள்  அடைபட்டுக் கிடக்கும் ஒரு பெண்ணின் நிலையையும், மிக நேர்த்தியான முறையில் எடுத்துரைத்த படைப்பு, `இறைவி'. இந்த முறையும் கணிக்க முடியாத கதைக்கருவைத் தேர்ந்தெடுத்து சிலருக்கு இன்ப அதிர்ச்சி, சிலருக்கு குற்ற உணர்வைக் கொடுத்த படம். 'ஆண் நெடில்...பெண் குறில்', ‘பொறுத்துக்குறதுக்கும் சகிச்சுக்கிறதுக்கும் நாம என்ன பொம்பளையா... ஆம்பளை!" போன்ற சுருக்.. நருக்.. வசனங்களில் முத்திரை பதித்த இந்த 'இறைவி'யைப் பல இறைவிகள் கொண்டாடினார்கள். ஆண்களும் தன்னை உணர்ந்துகொள்ள ஒரு பாடமாக இருந்தாள், இந்த 'இறைவி'. இவரின் அடுத்த படம் என்ன? என்ற எதிர்ப்பார்ப்பு எகிற, 'இதோ... அடுத்த ட்ரெண்ட்டை செட் பண்ணத் தயாராகிட்டேன்' என்று சொல்லிச் சொல்லாமல், வசனமே இல்லாத சைலண்ட் த்ரில்லர் படத்தை 'மெர்க்குரி'யாக வார்த்தெடுத்திருக்கிறார். தொடர்ந்து சூப்பர் ஸ்டாரை வைத்து இயக்கப்போவதாக அறிவிப்பு வெளியான நாளிலிருந்தே அதற்கான எதிர்பார்ப்பு வேற லெவலில் இருக்கிறது. 'எங்க தலைவரை கார்த்திக் சுப்பராஜ் எப்படிக் காட்டுவார்' என்ற பேரார்வத்தில் திளைக்கிறார்கள், ரஜினி ரசிகர்கள். முதல் படத்திற்கு ரஜினியிடமிருந்து வாழ்த்து பெற்றவர், இன்று ரஜினிக்கு ஸ்டார்ட்... கேமரா... ஆக்‌ஷன் சொல்லவிருக்கிறார். சூப்பர் ஸ்டாரின் மாஸ் - கார்த்திக் சுப்புராஜின் ஸ்கிரீன்ப்ளே - அனிருத்தின் பிஜிஎம் என்ற வித்தியாசமான காம்போவிற்காக கோலிவுட்டே வெயிட்டிங்!. 

தன்னுடைய ஒவ்வொரு படைப்பிலும் வித்தியாசம் காட்டி, ஒவ்வொரு சினிமாவின் மூலமும் சிலிர்ப்பூட்டும் இந்த சினிமாக் காதலனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.!