Published:Updated:

``சாம்பாருக்கு முருங்கைக்காய ஸ்கேலால அளந்து நறுக்கினேன்!'' - நடிகை பத்மினியின் பிறந்ததினப் பகிர்வு

ஆ.சாந்தி கணேஷ்
``சாம்பாருக்கு முருங்கைக்காய ஸ்கேலால அளந்து நறுக்கினேன்!'' - நடிகை பத்மினியின் பிறந்ததினப் பகிர்வு
``சாம்பாருக்கு முருங்கைக்காய ஸ்கேலால அளந்து நறுக்கினேன்!'' - நடிகை பத்மினியின் பிறந்ததினப் பகிர்வு

மாம்பழ முகத்தில் கருவண்டு கண்கள் சுழல, `நாடகமெல்லாம் கண்டேன் உந்தன் ஆடும் விழியிலே' என்ற 'மதுரை வீரன்' படத்தின் பாடல் வரிகளுக்கு பத்மினி கண்களாலேயே அபிநயம் பிடிக்கும் அழகுக்கு இணையாக இன்னொரு நாயகி பிறக்கவேயில்லை. நாட்டியப் பேரொளியாக வாழ்ந்து மறைந்த அந்தப் பேரழகுக்கு இன்று 86 வது பிறந்தநாள். `பப்பிம்மா’ எனச் செல்லமாக அழைக்கப்பட்டவரின் நடிப்பும் நடனத்திறமையும் கேக்கின் மேல் செர்ரிபோல அவ்வளவு ரசனையும் ருசியும் சேர்ந்தது. அவர் பற்றிப் பெரிதும் தெரியாத சம்பவங்கள் பற்றி, இங்கே பகிர்ந்துகொள்கிறார் கண்ணதாசனின் மூத்த சகோதரர் ஏ.எல்.சீனிவாசனின் மருமகள் ஏ.எல்.ஜெயந்தி. 

``பத்மினியம்மாவின் `தில்லானா மோகனாம்பாள்' படம் வெளிவரும்போது நான் ஸ்கூல் மாணவி. அவர் என் புகுந்த வீட்டாருடன் நெருக்கமாக இருந்தார் என்பதால், என்னை ஒரு மகள்போலவே நடத்துவார். அதனால், பத்மினியம்மாவின் வயதான காலத்தில்தான், அதாவது 1975-க்குப் பிறகுதான் நானும் அவரும் நெருக்கமாக இருந்தோம். அந்த நெருக்கத்தின் தொடர்ச்சியாக ராகினியின் மகளுடன் இப்போதும் பழக்கம் உள்ளது.

அம்மாவை என் குடும்ப விழாக்களில் பலமுறை சந்தித்திருக்கிறேன். ஒரு சந்திப்பை என் வாழ்நாளில் மறக்கவே முடியாது. என் வீட்டு வாசலில் படகு போன்ற ஒரு கார் வந்து நிற்கிறது. அதிலிருந்து பட்டுப்புடவை, நகைகள் அணிந்து அம்மன் சிலைபோல இறங்குகிறார் பத்மினியம்மா. அவரின் மகன் திருமணப் பத்திரிகையை வைப்பதற்காக வந்திருந்தார். பால்கனியிலிருந்து அவரைப் பார்த்துவிட்ட நான், கடகடவென படிகளில் இறங்கி கீழே ஓடிவந்தேன். நான் கீழே வருவதற்கும் வாடிக்கையான பூக்காரம்மா வருவதற்கும் சரியாக இருந்தது. அம்மாவுக்கு மல்லிகைப்பூ என்றால் கொள்ளைப் பிரியம். உடனே இரண்டு முழம் ஜாதிமல்லி கேட்டேன். பூக்காரம்மாவோ ஜாதிமல்லி பூப்பந்தையே மொத்தமாக எடுத்து பத்மினி அம்மா கைகளில் கொடுத்துவிட்டார். பத்மினி அம்மா எவ்வளவோ வற்புறுத்தியும் பணம் வாங்கவும் மறுத்துவிட்டார் பூக்காரம்மா. இத்தனைக்கும் பத்மினியம்மா, திரைத்துறையை விட்டு ஒதுங்கியிருந்த காலம் அது. ஆனாலும், அவர் மேல் பொதுமக்கள் அவ்வளவு அன்பாக இருந்தார்கள்'' எனப் பரவசத்துடன் தொடர்கிறார் ஜெயந்தி.

''அம்மாவுக்கு அசைவம் ரொம்பவும் பிடிக்கும். அதிலும், என் வீட்டுச் செட்டிநாடு கோலா உருண்டை குழம்பை மிகவும் விரும்பிச் சாப்பிடுவார்.

நெகிழ்ச்சியான விஷயம் ஒன்று; ஜாலியான விஷயம் ஒன்று என் நினைவுக்கு வருகிறது. இந்த இரண்டு சம்பவங்களைப் பற்றி பப்பிம்மாவே முன்பொரு முறை என்னிடம் சொல்லியிருகிறார். அவருடைய திருமணத்துக்கு முன்னால், கடைசியாக நடித்த படம் 'செந்தாமரை'. இது எங்கள் பேனரில் உருவான படம். அந்தப் படத்தில் 'வாரணமாயிரம்' என்ற பாடலுக்கு ஆண்டாள் வேடமிட்டு அம்மா நடனமாடி முடித்ததும், தன் திரையுலகை வாழ்வு இதோடு முடிந்தது எனக் கண்ணீருடன் கிளம்பியிருக்கிறார். கல்யாணமாகப் போகும் பெண் அழுதுகொண்டே கிளம்புவதை தாங்கமுடியாத என் மாமனார், பப்பிம்மா போட்டிருந்த ஆண்டாள் மேக்கப்புடனே அவரை எழும்பூரில் ரயில் ஏற்றினாராம். 'செந்தாமரை' என்கிற அந்தப் படம் பப்பிம்மாவின் திருமணத்துக்குப் பிறகுதான் வெளிவந்தது. 

அடுத்து, அந்த ஜாலியான விஷயம். இதை பப்பிம்மா என்னிடம் சொன்னபோது சிரித்துச் சிரித்து வயிறு வலித்தது. பப்பிம்மாவுக்குத் திருமணமாகி அமெரிக்கா சென்றிருந்த புதிது. நாட்டியப் பேரொளியாக கோலோச்சியவருக்கு வெந்நீர்கூட வைக்கத் தெரியாதாம். கணவர் ராமச்சந்திரன், முருங்கைக்காய் சாம்பார் கேட்டிருக்கிறார். பப்பிம்மாவும் சமையல் புத்தகத்தைப் பார்த்து அருமையாகச் சாம்பார் வைத்து, கணவரிடம் பாராட்டும் வாங்கியிருக்கிறார். அதன்பிறகு நடந்ததுதான் காமெடி. ஒருநாள் அவரின் அம்மாவிடம் போனில் பேசும்போது, 'சாம்பார் வைக்கிறதெல்லாம் கஷ்டமா இல்லைம்மா. ஆனால், அதுக்கு முருங்கைக்காய் வெட்டறதுக்குத்தான் ரொம்ப கஷ்டப்பட்டேன். ஒரே அளவா என்னால் வெட்டவே முடியலைம்மா. அதனால், முருங்கைக்காயை ஸ்கேலால் அளந்து பால் பாயிண்ட் பேனாவால் மார்க் பண்ணி வெட்டினேன்' என்றாராம். இதைச் சொல்லும்போது, பப்பிம்மா முகத்தில் அப்பாவி களை வரும் பாருங்கள். அந்தக் குழந்தைத்தனத்தைப் பார்த்து பார்த்து ரசித்துக்கொண்டே இருக்கலாம்'' எனச் சிரிக்கிறார் ஜெயந்தி.

''ஒருமுறை பப்பிமா தன் கணவர் பற்றிப் பேசிக்கொண்டிருக்கும்போது, 'அவர் என் வேல்யூ தெரிந்தவர். அதனால்தான் என்னைத் திருமணத்துக்குப் பிறகும் நடிக்கச் சம்மதித்தார்' என்றார். 2006-ம் ஆண்டு பப்பிம்மா  மரணமடைவதற்கு சில நாள்கள் முன்பு, 'எனக்கு உங்க எல்லாரையும் பார்க்கணும்போல இருக்கு' என்று தெரிவித்தார். நான், சச்சு, பாலாஜி சார், இன்னும் சிலர் சென்று அன்றைக்கு ரொம்ப நேரம் சிரிக்கச் சிரிக்கப் பேசிக்கொண்டிருந்தோம். யாராவது கிளம்புவதற்கு எத்தனித்தால், 'என்ன அவசரம் போகலாம். உட்காரு' என்றார். அன்று இரவு எங்களையெல்லாம் மனமே இல்லாமல்தான் அனுப்பிவைத்தார் அம்மா. இன்னும் சில நாள்களில் அம்மா சந்திக்க முடியாத இடத்துக்குப் போகப்போகிறார் என்பது அப்போதே தெரிந்திருந்தால், அன்று இரவு முழுக்க அம்மாவுடனே இருந்திருப்பேன்'' - வருத்தமான குரலில் தழுதழுத்தார் ஏ.எல்.ஜெயந்தி.