கட்டுரைகள்
சினிமா
தொடர்கள்
Published:Updated:

பொன்மாணிக்கவேல் - சினிமா விமர்சனம்

பொன்மாணிக்கவேல்
பிரீமியம் ஸ்டோரி
News
பொன்மாணிக்கவேல்

பிரபுதேவா எடுக்கும் முடிவுகளை நம்மால் மிக எளிதாக முன்பே யூகிக்க முடிகிறது.

ஒரு கொலை வழக்கு - மொத்த டிபார்ட்மென்டிலும் ஒரே ஒருவரால்தான் அதை முடிவுக்குக் கொண்டுவர முடியும் - 90களில் அதிகம் வெளியான இந்தக் கதையமைப்பில் மற்றுமொரு படம் இந்த ‘பொன்மாணிக்கவேல்.’

நகரின் முக்கியப் பகுதியில் கொடூரமாகக் கொல்லப்படுகிறார் ஒரு நீதிபதி. துப்பாக்கியால் சுட்டு அதன்பின் தலையைத் துண்டாக வெட்டி என வினோதமாக நடைபெற்றிருக்கும் இந்தக் கொலையை பொன்மாணிக்கவேல் எனும் நேர்மையான போலீஸ் அதிகாரிதான் விசாரிக்கவேண்டும் என உயரதிகாரிகள் முடிவெடுக்கிறார்கள். முந்தைய வழக்கில் டிபார்ட்மென்ட்டுடனான முட்டல் காரணமாக நெடிய விடுமுறையில் சென்றுவிட்ட அவர், மீண்டும் பணியில் இணைந்து துப்பு தேடி அலைகிறார். இதற்கு நடுவே அடுத்தடுத்து மரணங்கள் நிகழ, பதற்றம் அதிகரிக்கிறது. இறுதியில் குற்றவாளிகளைப் பொன்மாணிக்கவேல் பிடித்தாரா இல்லையா என்பதில் சந்தேகத்திற்கெல்லாம் இடம்கொடுக்காமல் முடிகிறது படம்.

பொன்மாணிக்கவேல் - சினிமா விமர்சனம்

பிரபுதேவாவிற்கு வயதே ஆகாதுபோல. இருபதாண்டுகளுக்கு முன் பார்த்த அதே ஃபிட்னஸ். அதே துறுதுறுப்பு. கொஞ்சம் வித்தியாசமாய் இம்முறை சீரியஸ் ரூட்டில் பயணம். அதிலும் கரை சேர்கிறார். அவருக்கும் நிவேதா பெத்துராஜுக்குமான காதல் காட்சிகள் ரசிக்க வைக்கின்றன. ஆனால் அவை படத்தில் கொஞ்சமே கொஞ்சம்தான்.

இயக்குநர் மகேந்திரன் நடித்த இறுதிப்படம் என்பதால் அவர் தோன்றும் காட்சிகளில் தன்னாலே நெகிழ்ச்சி கூடுகிறது. வில்லன் உட்பட மற்ற யாருக்கும் படத்தில் பெரிதாய் வேலை இல்லை.

இமானின் இசையில் ‘உதிரா உதிரா’ கேட்க வைக்கிறது. பின்னணி இசை ஏமாற்றம். கே.ஜி. வெங்கடேஷின் ஒளிப்பதிவு ஒரு வழக்கமான த்ரில்லர் படத்திற்கான யத்தனிப்போடு மட்டுமே இருக்கிறது.

கடந்த காலத்தை எண்ணிக் கலங்கும் ஒரு காக்கி, இவர்களைப் பின்தொடரும் மர்ம நபர், அடுத்தடுத்து விழும் முடிச்சுகள் என ஸ்கிரிப்ட்டாக ஒரு நல்ல த்ரில்லராக விரிகிறது பொன்மாணிக்கவேல். ஆனால் இந்த எதையும் முழுமையாக இயக்குநர் முகிலால் திரையில் கடத்தமுடியவில்லை என்பதுதான் படத்தின் பிரச்னை.

பொன்மாணிக்கவேல் - சினிமா விமர்சனம்

பிரபுதேவா எடுக்கும் முடிவுகளை நம்மால் மிக எளிதாக முன்பே யூகிக்க முடிகிறது. இதனால் முன் பின்னாகப் பாயும் திரைக்கதையும் சுவாரஸ்யமற்றுப்போகிறது. கதையை அடுத்தடுத்து நகர்த்த ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட் வைத்து அதை மட்டுமே நம்பியிருப்பதில் தெரிகிறது இயக்குநரின் பலவீனம்.

வழக்கமான ரூட்டைத் தேர்ந்தெடுக்காமல் அதிகம் பயணிக்காத வழியில் பயணப்பட்டிருந்தால் கவர்ந்திருப்பார் இந்தக் காக்கிச்சட்டை.