Published:Updated:

``ஜோதிகா, பிருந்தா, நான்னு எங்க நட்புபோல... எங்க குழந்தைகளின் நட்பும்...!" - `பாப்' ஷாலினி

கு.ஆனந்தராஜ்

ஜோதிகா, பிருந்தா, சுமா ஹாரீஸ்னு எங்களுக்குள் இருக்கும் நட்புபோல, எங்களுடைய குழந்தைகளும் நண்பர்களா இருக்கிறது மகிழ்ச்சியான விஷயம்.

`காப்பான்' இசைவெளியீட்டு விழா
`காப்பான்' இசைவெளியீட்டு விழா

சூர்யாவின் நடிப்பில் உருவான `காப்பான்' திரைப்பட இசைவெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. விழாவின் தொடக்க நிகழ்வாக, ஏராளமான குழந்தைகள் இணைந்து அப்படத்தில் இடம்பெற்ற 'விண்மீன்' பாடலைப் பாடினர். அப்பாடலைப் பாட குழந்தைகளுக்குப் பயிற்சி கொடுத்தவர், பின்னணிப் பாடகி `பாப்' ஷாலினி. குழந்தைகள் சூழ் செயல்பாடுகள் குறித்து, ஷாலினியிடம் பேசினோம்.

`` `விண்மீன்' பாடலுக்குப் பயிற்சி கொடுத்த அனுபவம் பற்றி..."

`காப்பான்' இசைவெளியீட்டு விழா
`காப்பான்' இசைவெளியீட்டு விழா

``இசைவெளியீட்டு விழாவுல அந்தப் பாடலை 40 பெண் குழந்தைகள் சேர்ந்துப் பாடினாங்க. அதில், 34 குழந்தைகளை அப்படத்தின் இயக்குநர் கே.வி.ஆனந்த் சாரே ஏற்பாடு செய்துட்டார். மீதி ஆறு குழந்தைகள் என் இன்ஸ்டிடியூட்ல படிச்சவங்க. அதில், ஹாரீஸ் ஜெயராஜ் பொண்ணு நிகிதா, நடிகர் சூர்யாவின் தங்கை பிருந்தாவின் மகள் தன்வி ஆகியோரும் அடக்கம். `காப்பான்' படத்தில் `விண்மீன்' பாடலுக்குப் பின்னணிப் பாடியது நிகிதாதான். கே.வி.ஆனந்த் சார் சொன்னபடி, 40 குழந்தைகளுக்கும் மூணு நாள்கள் பயிற்சி கொடுத்தேன். நிறைய பார்வையாளர்கள் மற்றும் பெரிய கலைஞர்கள் முன்னிலையில், பயமில்லாம குழந்தைங்க பாடிட்டாங்க. நான் எதிர்பார்த்ததைவிடவும் குழந்தைகள் நல்லபடியா பர்ஃபார்ம் பண்ணினாங்க.

``குழந்தைகளுக்கான பயிற்சிப் பட்டறையைத் தொடங்கியதன் காரணம்..."

குழந்தைகள்
குழந்தைகள்

``வெறும் படிப்பு மட்டுமே குழந்தைகளின் முன்னேற்றத்துக்கு உதவாது. கூடவே தனித்திறமையும் தேவை. ஆக்டிங், டான்ஸ், மியூசிக் உட்பட பல விஷயங்களை ஒரே இடத்துல சொல்லிக்கொடுக்கும் பயிற்சி பட்டறைதான் நான் நடத்தும் 'ட்ரெஷர் ட்ரோவ் புரொடக்‌ஷன்' இன்ஸ்டிடியூட்.

வெறும் கமர்ஷியலா இல்லாம, இந்தியாவின் பல மாநில கலாசாரங்களையும் குழந்தைங்க கத்துக்கிறாங்க. குழந்தைகளுக்குப் பிடிச்ச மாதிரி தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி பல்வேறு திறமைகளைக் கத்துக்கொடுக்கிறோம்.
`பாப்' ஷாலினி

வெறும் கமர்ஷியலா இல்லாம, இந்தியாவின் பல மாநில கலாசாரங்களையும் குழந்தைங்க கத்துக்கிறாங்க. குழந்தைகளுக்குப் பிடிச்ச மாதிரி தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி பல்வேறு திறமைகளைக் கத்துக்கொடுக்கிறோம். இதனால் குழந்தைகளின் தனித்திறன் வளரும்.

பேட்ஜ் முறையில்தான் பயிற்சி கொடுக்கிறேன். ஒவ்வொரு பேட்ஜூக்கும், ஸ்கிரிப்ட் எழுதவே பல மாதங்கள் ஆகும். பிறகு நிகழ்ச்சி ஏற்பாடுகள், பயிற்சிகள் முடிந்து இறுதி நிகழ்ச்சி நடக்க பல மாதங்கள் ஆகிடும். எனவே, ஒன்றரை முதல் ரெண்டு வருஷத்துக்கு ஒருமுறைதான் இறுதி நிகழ்ச்சி நடக்கும். பிறகுதான் அடுத்த பேட்ஜ் பணிகள் தொடங்கும். 

சூர்யா, ஜோதிகாவுடன் ஷாலினி
சூர்யா, ஜோதிகாவுடன் ஷாலினி

கடந்த பேட்ஜ்ல, நடிகர் சூர்யாவின் பிள்ளைகள் தியா மற்றும் தேவ், பிருந்தாவின் பொண்ணுக்கு தன்வி, ஹாரீஸ் ஜெயராஜ் பொண்ணு நிகிதா என பிரபலங்கள் பலரின் குழந்தைகள் உட்பட 80 குழந்தைகள் தங்களின் திறமையை வெளிப்படுத்தினாங்க. இறுதிநிகழ்ச்சி நடந்தப்போ, சூர்யா மற்றும் ஜோதிகா உட்பட பல பிரபலங்கள் வந்திருந்தாங்க. ஜோதிகா, பிருந்தா, சுமா ஹாரீஸ்னு எங்களுக்குள் இருக்கும் நட்புபோல, எங்களுடைய குழந்தைகளும் நண்பர்களா இருக்கிறது மகிழ்ச்சியான விஷயம். இப்போ புதிய பேட்ஜ் பணிகள் தொடங்கிடுச்சு. ஒவ்வொரு பேட்ஜ்லயும் அரசுப் பள்ளி குழந்தைகள் 10 பேர் இலவசமா பயிற்சி எடுத்துக்கிறாங்க."

``இசைப் பணிகளைக் குறைச்சுகிட்டது ஏன்?"

தோழிகளுடன் ஷாலினி
தோழிகளுடன் ஷாலினி

``என் கணவர் வேலை விஷயமா மாதத்துல 20 நாள்கள் வெளியூர் போயிடுவார். நானும் ரிக்கார்டிங், கச்சேரினு போயிட்டிருந்தால், பையனை சரியா வளர்க்க முடியாது. அதனால, மியூசிக் வாய்ப்புகளைக் குறைச்சுகிட்டேன். 5,000 சினிமா பாடல்களுக்கு மேல பாடிட்டேன். 1,000-க்கும் மேற்பட்ட மேடை நிகழ்ச்சிகளில் வேலை செய்திருக்கேன். முன்புபோல இப்போ பிஸியா வேலை செய்ய வாய்ப்புகள் வருவதில்லை. புதிய பாடகர்கள் வந்துகிட்டே இருக்காங்க. அதனால, என் குழந்தையைக் கவனிச்சுக்கிறது மற்றும் இன்ஸ்டிடியூட் வேலைகளில்தான் அதிகம் கவனம் செலுத்துறேன். அதேசமயம் சினிமா மற்றும் வெளியூர் மேடை நிகழ்ச்சிகளில் பிடித்தவற்றை ஏத்துகிட்டு வேலை செய்றேன். தொடர்ந்து இசைப் பணிகள்லயும் கவனம் செலுத்துவேன்."

``அம்மா ஷாலினி எப்படி?"

``எங்க பையன் ஆதித்யா பாலாஜி, ஆறாவது படிக்கிறான். படிப்பு தவிர, ஆர்வமா இசை கத்துகிறான். அவனை ஸ்கூல் சேர்த்த காலம் முதல் இப்போவரை பிக் அப், டிராப் எல்லாமே நான்தான் செய்வேன். என் பையனுடன் செலவிடும் நேரத்துக்குப் பாதிப்பு வராத வகையில, என் மத்த வேலைகளைத் திட்டமிடுவேன்.

குழந்தைகளுடன் அதிக நேரம் செலவிடுறதால, மனசு எப்போதும் லேசாக இருக்கும். கோபங்கள் வருவது குறையும். சொல்லப்போனால், குழந்தை மனசுடன் எப்போதும் மகிழ்ச்சியாகச் செயல்பட முடியுது.
`பாப்' ஷாலினி

என் பையனுக்கு கதை சொல்றதுக்காக, நிறைய புத்தகங்கள் படிப்பேன். அதில் பல புத்தகங்களில், இறுதி முடிவு இப்படி இருந்திருந்தா நல்லா இருந்திருக்குமேனு தோணும். அதனால என் பையனுக்காக, 40 புத்தகங்கள் எழுதியிருக்கேன். இப்புத்தகங்களும் கதைகளும் என் இன்ஸ்டிடியூட் குழந்தைகளுக்கும் உதவுது."

``குழந்தைகள் சூழ் உலகம் எப்படியிருக்கு?"

குடும்பத்தினருடன் ஷாலினி
குடும்பத்தினருடன் ஷாலினி

``அதை வார்த்தைகளில் விவரிக்க முடியாது. அது மிகவும் குவாலிட்டியான நேரம். நானும் குழந்தை மாதிரி மாறும் தருணம் அது. குழந்தைகளுடன் அதிக நேரம் செலவிடுறதால, மனசு எப்போதும் லேசாக இருக்கும். கோபங்கள் வருவது குறையும். சொல்லப்போனால், குழந்தை மனசுடன் எப்போதும் மகிழ்ச்சியாகச் செயல்பட முடியுது."