Published:Updated:

`திருட்டையாவது ஒழுங்கா செய்யுங்க!' - சாஹோவால் கொதிக்கும் பிரெஞ்சு இயக்குநர்

சத்யா கோபாலன்

பிரபாஸ் நடித்து வெளியாகியுள்ள சாஹோ படம் கதை திருட்டு சர்ச்சையில் சிக்கியுள்ளது.

saaho  - Largo winch
saaho - Largo winch

தெலுங்கு நடிகர் பிரபாஸ் நடிப்பில் வெளியான`பாகுபலி’ படம் அவரை இந்தியா முழுவதும் உள்ள அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் அறிமுகம் செய்தது. பாகுபலியின் பிரமாண்ட வெற்றிக்குப் பிறகு அடுத்து வரும் பிரபாஸின் படங்களுக்குப் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற வேண்டிய அழுத்தமும் பிரபாஸுக்கும் இருந்தது.

saaho
saaho

பாகுபலிக்குப் பின்னர் அவர் ’சாஹோ' படத்தைத் தேர்வு செய்தார். ரூ.250 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாக்கப்பட்ட சஹோ படம் ஒன்றரை வருடங்களாகத் தயாரிப்பில் இருந்தது. அந்தப் படம் கடந்த மாதம் 29-ம் தேதி திரைக்கு வந்தது. தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் வெளியான இந்த படம் கலவையான விமர்சனங்களையே பெற்றுள்ளது.

இந்நிலையில் பிரபாஸின் ‘சாஹோ’ படத்தின் கதை தன்னுடையது என பிரான்ஸை சேர்ந்த இயக்குநர் ஜெரோம் செல்லி (Jerome Salle) குற்றம்சாட்டியிருக்கிறார். கடந்த ஆகஸ்ட் 30-ம் தேதி மும்பையைச் சேர்ந்த ஒருவர், ``இந்தியாவில் உங்கள் `லார்கோ விஞ்ச்’ (Largo winch) படத்தின் மற்றொரு இலவச உருவாக்கம். நீங்கள் தான் நிஜமான குருஜி’ என ஜெரோம் செல்லியை டேக் செய்து ட்விட்டரில் கருத்து பதிவிட்டிருந்தார்.

Jerome Salle tweet
Jerome Salle tweet

அவருக்குப் பதில் அளித்த ஜெரோம், `இந்தியாவில் எனக்குச் சிறந்த எதிர்காலம் இருக்கிறது என நினைக்கிறேன்’ எனக் கூறியிருந்தார். ஜெரோமின் பதிவு அவரது ரசிகர்களை பெரும் குழப்பத்தில் ஆழ்த்தியது. எதற்காக அவர் இப்படிக் கூறுகிறார் எனப் பலரும் கேள்வி எழுப்பி வந்தனர்.

இந்நிலையில் கடந்த செப்டம்பர் 1-ம் தேதி அனைவரது கேள்விகளுக்கும் விடையாக மீண்டும் ஒரு பதிவு வெளியிட்டிருந்தார், ``எனது லார்கோ விஞ்ச் படத்தைத் தழுவி எடுக்கப்பட்ட இரண்டாவது படமும் முதல் படத்தைப் போலவே மோசமாக இருப்பதாகத் தெரிகிறது. தெலுங்கு இயக்குநர்களே, நீங்கள் என் பணியை திருட நினைத்தால் தயவு செய்து அதையாவது சரியாகச் செய்யுங்கள். என்னுடைய `இந்தியாவில் எதிர்காலம்’ ட்வீட் முரண்பாடாக இருந்ததற்கு மன்னிக்கவும் எனக்கு வேறு வழி தெரியவில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.

Agnathavasi
Agnathavasi

லார்கோ விஞ்ச் படத்தின் இரண்டாவது ரீமேக் தான் `சாஹோ’ என ஜெரோம் கூறியிருந்தார். அப்படியானால் முதல் படம் எது எனப் பலருக்கும் கேள்வி எழலாம். கடந்த வருடம் பவன் கல்யாண் நடிப்பில் திரிவிக்ரம் ஸ்ரீநிவாஸ் இயக்கத்தில் வெளியான `அஞ்ஞாதவாசி’ என்ற தெலுங்கு படமும் லார்கோ விஞ்ச் படத்தின் கதையைத் தழுவி எடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. அப்போதும், இதேபோன்ற ஒரு கேள்வியை எழுப்பியிருந்தார் ஜெரோம் என்பது குறிப்பிடத்தக்கது.