Published:Updated:

`ஆனந்த விகடனுக்கு நன்றி!' - ரஜினி சந்திப்பால் நெகிழும் பிரணவ் #Video

ரஜினியுடனான சந்திப்பு குறித்து கேரள மாற்றுத்திறனாளி இளைஞரான பிரணவ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பிரணவ்
பிரணவ்

கேரள முதல்வர் பினராயி விஜயனைச் சந்தித்து, பேரிடர் நிவாரண நிதி வழங்கிய மாற்றுத் திறனாளி இளைஞர் பிரணவ், ஒரே ஒரு செல்ஃபி மூலம் நாடு முழுவதும் பிரபலமான நபராக மாறிவிட்டார்.

பிரணவ்
பிரணவ்

இந்நிலையில், ரஜினியைச் சந்திக்க ஆசைப்படுவதாக, ஆனந்த விகடன் இதழுக்குப் பேட்டியளித்திருந்தார் பிரணவ். அவரது பேட்டி கடந்த வார ஆனந்த விகடனில் வெளியாகியிருந்தது.

அதைக் கவனித்த காங்கிரஸ் கட்சியின் கராத்தே தியாகராஜன், ரஜினி-பிரணவ் சந்திப்புக்கான முயற்சிகளை எடுத்தார். சந்திப்பு உறுதியான பிறகு, பிரணவ் மற்றும் அவரது குடும்பத்தினரைக் கேரளாவிலிருந்து சென்னைக்கு வரவழைத்தனர்.

ரஜினியுடன் பிரணவ்
ரஜினியுடன் பிரணவ்

நேற்று மாலை 5.30 மணியளவில் ரஜினியை, அவரது வீட்டில் பிரணவ் சந்தித்தார். இந்தச் சந்திப்பின் போது, ரஜினிக்கு தான் வரைந்த ஓவியத்தைப் பரிசாக வழங்கினார் பிரணவ்.

பிரணவின் காலை, தனது கையால் பிடித்துக் குலுக்கி, கட்டிப்பிடித்தார் ரஜினி. சுமார் 20 நிமிடங்கள் நடந்த இந்தச் சந்திப்பில் தனது லட்சியம், கனவு, குடும்பம் போன்றவை தொடர்பாகவும் ரஜினியிடம் கூறியிருக்கிறார் பிரணவ்.

பிரணவ்
பிரணவ்

அதற்கு ரஜினி, ``நீங்கள் திறமையானர் பிரணவ். உங்களது முயற்சிகளுக்கு நான் துணையாக இருப்பேன்" என்று நம்பிக்கை கொடுத்துள்ளார்.

ரஜினியுடனான சந்திப்பால் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கும் பிரணவ் இதுகுறித்து ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் ஆனந்த விகடன் மற்றும் கராத்தே தியாகராஜன் ஆகியோருக்கு நன்றி சொல்லும் பிரணவ், “வாழ்க்கையின் மிகவும் மகிழ்ச்சியான ஒரு தருணத்தில் இருக்கிறேன். உலகத்தின் ஒரே சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்தைச் சந்தித்துள்ளேன்.

ரஜினியுடன் பிரணவ்
ரஜினியுடன் பிரணவ்

எனக்குப் பொன்னாடை போர்த்தினார். என் காலைப் பிடித்து குலுக்கினார், கட்டிப்பிடித்தார், செல்ஃபி எடுத்தார். எனக்கு எப்போதும் துணையாக இருப்பேன் என்று கூறினார். இப்படியெல்லாம் நடக்கும் என்று நான் கனவிலும் எதிர்பார்க்கவில்லை” என்கிறார் நெகிழ்ச்சியான குரலில்.