
பிரதாப் பற்றி விகடன் நிருபர் சொன்னது, பின்நாளில் அப்படியே பலித்திருக்கிறது!
பிரதாப்பை இரண்டு நிமிடம் ஒர் இடத்தில் உட்கார வைத்துப் பேச முடியாது. ஏனென்றால் அவரும் உட்கார மாட்டார் - நின்று கொண்டு கைகளைச் சுற்றிக் கொண்டிருப்பார் - தன் பீரோவிலிருந்து விதவிதமான சட்டைகளை எடுத்துப் போட்டுக் கண்ணாடியில் வேடிக்கை பார்ப்பார்.
இதனால் பேச வந்தவர்களை அவர் அவமதிக்கிறார் என்று கூற முடியாது. ஏனென்றால் நாம் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்லிக் கொண்டே தன் `சேஷ்டை'களைச் செய்து கொண்டிருப்பார்.
குழந்தையாக இருந்தால் `ரெட்டைவால்' என்றுகூட அழைக்கலாம். 27 வயதானவரை எப்படி அவ்வாறு அழைப்பது? சுறுசுறுப்பாக ஏதாவது செய்து கொண்டே இருப்பது அவரது `மேனரிஸம்'!பிரபல மலையாளத் தயாரிப்பாளரான ஹரிபோத்தனின் சகோதரர் இந்த பிரதாப் போத்தன்.

ஊட்டியில் பள்ளிப் படிப்பு; தாம்பரம் கிறிஸ்துவக் கல்லூரியில் பி.ஏ., எகனாமிக்ஸ் முடித்து விட்டுப் பல பிரபல விளம்பர நிறுவனங்களில் பணியாற்றியிருக்கிறார்.
அப்போதே நாடகம் என்றால் உயிர். பல ஆங்கில நாடகங்களில் நடித்திருக்கிறார். இவரது நடிப்பைப் பார்த்த டைரக்டர் பரதன் இவரை மலையாளப் படம் ஒன்றில் நடிக்க வைத்தார்.
பாலுமகேந்திரா தனது `அழியாத கோலங்'களில் பிரதாப்பை நடிக்க வைத்து தமிழ்த் திரையுலகுக்கு அறிமுகப்படுத்தினார்.தொடர்ந்து பல படங்கள் - எக்கச்சக்க மார்க்கெட் - இப்போது பிஸி ஆர்டிஸ்ட்!
வசதி வாய்ந்த குடும்பமாதலால் இவர் நடிப்பைத் தேடிப் படவுலகுக்குப் போகவில்லை. அதுவே வந்தது - வந்ததைப் பிடித்துக் கொண்டார்.அவரை உட்கார வைத்துப் பேச ஆரம்பித்தால் தெளிவாகப் பேசுகிறார். 70-30 கலவையில் ஆங்கிலமும் தமிழுமாகப் பேசுகிறார்.
கூடியவரை இங்கு ஆங்கிலத்தைத் தவிர்த்து அவர் எண்ணங்களைத் தந்திருக்கிறேன்:``அந்த நாட்களில் நடிகர்களுக்கு ஒரு இலக்கணம் இருந்தது - முகம், உடல், குரல் இவை இப்படி இப்படி இருக்க வேண்டும் என்று. இப்போது அது தேவையில்லாமல் போய் விட்டது. பார்க்கக்கூடிய முகமாக இருந்தால் போதும்; கொஞ்சம் நடிப்புத் திறமையும் அதைவிட அதிகமாகக் கற்பனா சக்தியும் இருந்தால் போதும். ஒரு குறிப்பிட்ட பாத்திரம் இதை - இப்படி - செய்வான் என்று அதைப் பற்றிக் கற்பனை செய்யும் சக்தி வேண்டும். இந்த மாறுதல் இவ்வளவு சீக்கிரம் வரும் என்று நான் நினைக்கவே இல்லை.
அதனால்தான் என் போன்றவர்களை ரசிகர்கள் ஏற்றுக் கொள்ளத் துவங்கி விட்டார்கள்." - கட்டிலில் படுத்துக் கொண்டு இதைச் சொல்வதற்குள் ஆறு விதமாக மாறி மாறிப் படுத்துக் கொண்டார். கட்டிலை விட்டு எழுந்தவர் நடக்க ஆரம்பித்தார்.``ஓ... தமிழ் ரசிகர்கள்! திறமை இருந்தால்தான் ஏற்றுக் கொள்கிறார்கள். இல்லையேல் தூக்கி எறிந்து விடுகிறார்கள்.
எனக்கு மலையாளப் படவுலகைவிடத் தமிழ்ப் படவுலகு பிடித்திருக்கிறது. காரணம், இதிலிருந்து எத்தனை `ஜெயண்ட்ஸ்' வந்திருக்கிறார்கள்! எத்தனை வகையான பாத்திரங்கள்! எத்தனை வகையான படங்கள்! இன்று நேற்று அல்ல... அன்றையிலிருந்து சொல்கிறேன்... பாகவதர், என்.எஸ்.கே... இப்போது சிவாஜி... இவர்கள் எல்லாம் சாதித்ததில் ஐந்து சதவிகிதம் நான் சாதித்தால் போதும்!" பீரோவிலிருந்து வேறு ஒரு மூக்குக் கண்ணாடியை எடுத்து, போட்டிருப்பதைக் கழற்றி வைத்துவிட்டு அதை மாட்டிக் கொள்கிறார். கட்டிலுக்கு ஒரு டைவ்!
ஒரு சினிமா கம்பெனியிலிருந்து உடை தைக்க ஒருவர் வருகிறார். அவரிடம் ``இதோ பாருங்க சார்... நோ பெல்ஸ் ஃபார் மி! பெல்ஸ் பேண்ட் போட்டுக்கற ஃபேஷன் போயிடுச்சு... பழையபடி பைப் டைப் வந்திடுச்சு... இதோ பாருங்க..." என்று நாலைந்து புத்தகங்களை அவரிடம் எடுத்துக் காட்டுகிறார்.மேஜையிலிருந்து ஒரு சிகரெட்டை எடுத்து வந்து பற்றவைத்துக் கொண்டார். ``கமிங் டு டமில் ஃபிலிம்ஸ்! இங்கே நிறைய டைரக்டர்கள் இருக்கிறார்கள். நல்ல நல்ல பாத்திரங்கள் வருகின்றன.
எனக்குப் பிடித்தவற்றை நான் தேர்ந்தெடுத்து நடிக்கிறேன். அந்த வகையில் பார்த்தால் இது ஒரு சூப்பர் மார்க்கெட். தேர்ந்தெடுக்கப் பல ரகம் இருக்கும். நாம்தான் நல்ல பொருளாகப் பார்த்து எடுக்க வேண்டும்." - மீண்டும் அறைக்குள் கிரிக்கெட் பெளலரைப் போலக் கையைச் சுற்றிக் கொண்டே நடக்கிறார்.
அவரது அறையில் சினிமா, நடிப்பு இவற்றைப் பற்றிய பல புத்தகங்கள், ஓரிரண்டு கதைப் புத்தகங்கள், உடைகளைப் பற்றிய சமீபத்தில் வெளியான புத்தகங்கள் இருக்கின்றன.
பிரதாப்புக்குப் பிடிக்காததே எதுவும் இல்லை. சங்கீதமோ, கதையோ, படமோ, நாடகமோ எதுவாக இருந்தாலும் ரசிப்பார். `Caution! The world's greatest lover is hiding under the bed' என்று ஒரு ஸ்டிக்கரை அறையில் ஒட்டி வைத்திருக்கிறார்.``எனக்கு வாழ்க்கையில் எல்லா நல்ல விஷயங்களும் பிடிக்கும்.
நான் தெரிந்து கொண்டது, கற்றுக் கொண்டது அணு அளவுதான். ஐ லவ் லேர்னிங்...! தாத்தாவானால்கூட நான் எதையாவது தெரிந்து கொள்ளத்தான் ஆசைப்படுவேன். ஏனென்றால் அப்போதும் நான் தெரிந்து கொள்ள வேண்டியது நிறைய இருக்கும்.
எக்ஸ்கியூஸ் மீ..!" ஏதோ பேசிவிட்டு வருகிறார்.``தெரிந்து வைத்துக் கொள்வதோடு சரி. அதை மற்றவர்களுக்குத் தெரியப் படுத்துவது எத்தனை ஆபத்து என்பதை நான் சமீபத்தில் இலங்கையில் உணர்ந்தேன்." - கட்டிலில் கிடந்த புத்தகங்களை அலமாரியில் வைக்கிறார்.``எனக்கு இங்கிலீஷ் மியூஸிக் என்றால் கொஞ்சம் ஆசை. இலங்கையில் ஒரு நாள் நான் தங்கியிருந்த இடத்தில் இங்கிலீஷ் பாட்டு பாடினேன்.
நான் மிகவும் ரசித்துத்தான் பாடினேன். அந்தப் பக்கமாகப் போய்க் கொண்டிருந்த இரண்டு வெள்ளையர்கள் என்னை நோக்கி வந்தார்கள். என் ரசிகர்கள் என்று சந்தோஷப்பட்டேன். தொடர்ந்து பாடினேன். வந்தவர்கள் கிட்டே வந்து என் முகத்தைப் பார்த்தார்கள். நான் சிரித்துக் கொண்டே உச்சஸ்தாயியில் பாடினேன். அவர்கள் `டக்'கென்று திரும்பி ஓட ஆரம்பித்து விட்டார்கள்.
என் சங்கீதம் அவர்களைத் துரத்தியது!"சினிமா, நடிப்பு, நாகரிகம், காமிரா, கதாபாத்திரங்கள் - இப்படி பலவற்றைப் பற்றியும் நிறையத் தெரிந்து வைத்திருக்கிறார் பிரதாப்.
கடைசியாக பிரதாப்பைப் பற்றி ஒரு ஜோஸ்யம்: இவர் விரைவில் டைரக்டராகிப் படமெடுப்பார். பல புதுமைகளைச் செய்ய வேண்டும் என்ற எண்ணமும் அதற்கான திறமையும் இவரிடம் கொட்டிக் கிடக்கிறது!
- பாலா