
- சினிமா
நடிகைகளுக்கு டோலிவுட் என்றுமே ஸ்பெஷல்தான். காரணம், அவர்கள் வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், அவர்களுக்குச் சிவப்புக் கம்பள வரவேற்பு அளித்து, திறமைக்கு அங்கீகாரம் கொடுப்பது தெலுங்கு சினிமாவின் சிறப்பு. அப்படி வந்த பல புது வரவுகள் இன்று சீனியர் மற்றும் மோஸ்ட் வான்டட் ஹீரோயின்கள். டோலிவுட்டின் சமகால ஹீரோயின்களில் இவர்களெல்லாம் நம்பிக்கை நாயகிகள்!
ஈஷா ரெப்பா
ஹோம்லி, கிளாமர் என இரண்டு களங்களிலும் ஜொலிக்கிறார், ஈஷா ரெப்பா. இன்ஸ்டாவில் இவர் பதிவிடும் போட்டோக்களுக்குத் தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது. நானியை அறிமுகப்படுத்திய இயக்குநர் மோகனகிருஷ்ண இந்திரகாந்திதான், ஈஷாவையும் தெலுங்கு சினிமா உலகுக்கு அறிமுகப்படுத்தினார். தொடர்ந்து அவர் படங்களில் நடித்து வந்த ஈஷா, பிறகு மற்ற இயக்குநர்கள் படங்களிலும் நடிக்கத் தொடங்கினார். ஈஷா துணிச்சல்காரர். `ஆவ்' படத்தில் நித்யா மேனனும் இவரும் லெஸ்பியன்களாக நடித்திருப்பார்கள். தொடர்ந்து த்ரிவிக்ரம் இயக்கத்தில் ஜூனியர்
என்.டி.ஆருடன் `அரவிந்த சமேத வீரராகவா', `சுப்ரமணியபுரம்', `பிட்டா கதலு' என அடுத்தடுத்து படங்கள் வெளியாகின. தெலுங்குப் படங்களில் நடித்துக்கொண்டிருந்தாலும் இவரது டார்கெட் கோலிவுட். ஜி.வி.பிரகாஷுடன் `ஆயிரம் ஜென்மங்கள்' படத்தில் நடித்து முடித்திருக்கிறார். படம் வெளியானால் இன்னும் ஏராளமான வாய்ப்புகள் கோலிவுட்டிலிருந்து குவியும் எனக் காத்திருக்கிறார்.

நபா நடேஷ்
பொறியியல் பட்டதாரியான இவர், படிக்கும்போதே மாடலிங், நடிப்புப் பயிற்சி ஆகியவற்றில் கவனம் செலுத்திவந்தார். முதல் படமே கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமாருடன் `வஜ்ரகாயா.' முதல் படத்தில் தனக்குக் கொடுக்கப்பட்ட வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தினார். அடுத்தடுத்து இரண்டு கன்னடப் படங்கள். கன்னடத்தில் கொஞ்சம் பெயர் தெரிய ஆரம்பித்தவுடன் அவர்களைத் தெலுங்கு சினிமா தன்வசப்படுத்திக்கொள்ளும். அதற்கு உதாரணங்கள் ராஷ்மிகாவும் கீர்த்தி ஷெட்டியும். அந்த வரிசையில் நபா நடேஷும் ஒருவர். `நன்னு டொச்சுகுன்டுவடே' படத்தின் மூலம் டோலிவுட் உலகில் அடியெடுத்து வைத்த நபா, இப்போ வளர்ந்துவரும் நாயகி. `ஐஸ்மார்ட் சங்கர்', `டிஸ்கோ ராஜா', `சோலோ ப்ரத்துகே சோ பெட்டர்', `அல்லுடு ஆதர்ஸ்' என அடுத்தடுத்து இவர் நடிப்பில் படங்கள் வெளியாகின. சில படங்களில் இரண்டு ஹீரோயின்களில் ஒருவராக நடித்தாலும் பார்ப்பவர்களை வசீகரிக்கிறார், நபா. சமீபமாக, `அந்தாதுன்' தெலுங்கு ரீமேக்கில் ராதிகா ஆப்தே நடித்த கேரக்டரில் நடித்திருந்தார். அடுத்து நபாவின் டார்கெட், டாப் கோலிவுட் ஹீரோக்களின் படங்கள்தான்!
கீர்த்தி ஷெட்டி
மும்பையில் வளர்ந்தாலும் பூர்வீகம் மங்களூரு. `உப்பென்னா' என்ற ஒற்றைப் படம் இவர் கரியரை எங்கோ கொண்டுபோய் நிறுத்தியிருக்கிறது. படம் சூப்பர் டூப்பர் ஹிட். சங்கீதாவாக வாழ்ந்த கீர்த்தி ஷெட்டி, நடிப்பில் அசத்தியிருப்பார். அவரின் அப்பாவாக விஜய் சேதுபதி மிரட்டியிருப்பார். இவர் பேசிய வசனங்கள் இன்ஸ்டாகிராம் ரீல்ஸில் செம வைரல். 18 வயதேயான கீர்த்தி ஷெட்டிதான், டோலிவுட்டின் தற்போதைய சென்சேஷன். `உப்பென்னா' படத்தைப் பார்த்த முன்னணி இயக்குநர்கள், தங்களுடைய படங்களில் இவரை போட்டி போட்டு ஒப்பந்தம் செய்துவிட்டனர். நாகார்ஜுனா, நாகசைதன்யாவுடன் `பங்கராஜூ', நானியுடன் `ஷியாம் சிங்கராய்', லிங்குசாமி இயக்கத்தில் ராம் பொத்தனேனியுடன் ஒரு படம், சுதீர்பாபுவுடன் ஒரு படம் என கீர்த்தி படு பிஸி. விரைவில் தமிழில் களமிறங்கக் காத்திருக்கிறார்!

பிரியங்கா மோகன்
பிரியங்கா மோகனின் அப்பா தமிழ், அம்மா கன்னடம். அதனால், இரண்டு மொழிகளும் பிரியங்காவுக்கு நன்கு பரிட்சயம். அப்படியே தெலுங்கும் கற்றுக்கொண்டார். `ஒந்து கத யெல்லா' என்ற கன்னடப் படத்தில் நடித்திருந்த இவருக்கு, நானியுடன் `கேங்லீடர்' படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. உடனே, ஷர்வானந்துடன் `ஸ்ரீகரம்.' இந்த இரண்டு படங்களிலுமே ஹோம்லி லுக்கில் கலக்கினார். நானி படத்தைப் பார்த்த நெல்சன் மற்றும் குழுவினர் `டாக்டர்' படத்தில் நடிக்க அழைப்பு விடுக்க, சந்தோஷமாக நடித்து முடித்தார். இவரைத் தமிழுக்கு அழைக்கக் காரணம், இவருக்குத் தமிழும் சரளமாகப் பேச வரும் என்பதுதானாம். `டாக்டர்' படத்தைத் தொடர்ந்து, மீண்டும் சிவகார்த்திகேயனுடன் `டான்' படத்தில் ஒப்பந்தமானார். இது ஒரு பக்கம் நடந்துகொண்டிருக்க பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக `எதற்கும் துணிந்தவன்' படத்தில் நடிக்கும் ஆஃபர் வர... பிரியங்கா செம குஷி! `கிளாமர் ஜோன் நடிகைகள் பலருக்கு நடுவில் இப்படியொரு ஹோம்லி ஹீரோயினா' என அனைவரும் பிரியங்காவை ரசிக்கின்றனர். தமிழ், தெலுங்கு, கன்னடம் என மூன்று மொழிகளும் அறிந்த இவருக்கு மலையாளப் படங்கள் மிகவும் பிடிக்குமாம். விரைவில் அங்கேயும் தடம் பதிப்பார் என எதிர்பார்க்கலாம்.

நிதி அகர்வால்
`முன்னா மைக்கேல்' என்ற பாலிவுட் படத்தில் டைகர் ஷெரோஃபுடன் அறிமுகமான நிதி அகர்வால், படித்து வளர்ந்ததெல்லாம் கர்நாடகாவில். பாலிவுட்டில் இவரின் முதல் படம் கவனிக்கப்பட, டோலிவுட்டிலிருந்து அழைப்பு வந்தது. நாகசைதன்யாவுடன் `சவ்யசாச்சி', அகிலுடன் `மிஸ்டர். மஜ்னு' என அடுத்தடுத்து அண்ணன் படத்திலும் தம்பி படத்திலும் நடித்தார். ஆனால், இவருக்கு பிரேக் கொடுத்தது புரி ஜெகன்நாத் இயக்கிய `ஐஸ்மார்ட் சங்கர்.' இன்றைய தேதியில் டோலிவுட்டின் கிளாமர் குயினாக இருக்கிறார். உடனே `ஈஸ்வரன்', `பூமி' எனத் தமிழ் சினிமாவில் இருந்து வாய்ப்புகள் வர, கோலிவுட்டில் கவனம் செலுத்திவருகிறார். தெலுங்கில் பவன் கல்யாணுக்கு ஜோடியாக `ஹரிஹர வீரமல்லு' என்ற பீரியட் படத்தில் ஒப்பந்தமாகி இருக்கிறார். க்யூட் அண்டு ஹாட் என இருமுகம் காட்டும் நிதி அகர்வால் தமிழ், தெலுங்கு சினிமாவில் நிச்சயம் ஒரு ரவுண்டு வருவார்.