சினிமா
தொடர்கள்
Published:Updated:

ப்ரின்ஸ் - சினிமா விமர்சனம்

ப்ரின்ஸ் - சினிமா விமர்சனம்
பிரீமியம் ஸ்டோரி
News
ப்ரின்ஸ் - சினிமா விமர்சனம்

எழுத்திலும் இயக்கத்திலும் அமெச்சூர் குறும்படம் பார்த்த உணர்வையே தந்திருக்கிறார் இயக்குநர் அனுதீப்

‘காதலுக்கு தேசம் முக்கியமா... ஹ்யூமானிட்டி முக்கியமா?’ என்ற விநோத கேள்விக்கு வித்தியாசமான காமெடி ட்ரீட்மென்ட்டால் சோதித்து விடை சொல்கிறான் இந்த ‘ப்ரின்ஸ்.’

பாண்டிச்சேரி பிரெஞ்சு காலனியில் வசிக்கும் பிரிட்டிஷ் பெண்ணுக்கும் கடலூர் தேவனக்கோட்டையில் வசிக்கும் இந்தியப் பையனுக்கும் ‘பார்டர்களைத் தாண்டி’ காதல். சிவகார்த்திகேயனின் அப்பா சத்யராஜுக்கு பிரிட்டிஷ் என்றால் அலர்ஜி. மரியாவின் அப்பாவுக்கு இந்தியர்கள் என்றாலே அலர்ஜி. கூடவே, பிரேம்ஜி தலைமையில் ஊரே இந்தக் காதலைப் பிரிக்கத் திட்டம்போட... சவால்களைத் தாண்டிக் காதலில் ஜெயித்தாரா சி.கா என்பதே க்ளைமாக்ஸ்.

சிவகார்த்திகேயனுக்கு இந்தப் படத்தில் ஸ்கூல் டீச்சராய் புரொமோஷன். ஆனால், ‘டான்’ மூடில் ஐ.டி கார்டைக் கழுத்தில் மாட்டிக்கொண்டு ஜாலியாய்க் காதலிப்பது, காமெடி பண்ணுவது என அதிகம் அலட்டிக்கொள்ளாமல் நடித்திருக்கிறார். சிங்கிள் டேக் லென்த்தான ஷாட் என டான்ஸில் பட்டையைக் கிளப்புகிறார். ஆனால், சிவாவுக்கு ஏற்ற தீனிபோடும் ஆழமான காமெடி படத்தில் மிஸ்ஸிங். ஹீரோயின் மரியா ரியபோஷப்கா, க்யூட் பார்பி பொம்மையைப் போல வந்து போகிறார். நடிப்பில் இன்னும் கொஞ்சம் முயற்சி செய்திருக்கலாம். நடனத்தில் மட்டும் சிவகார்த்திகேயனுக்கு ஈடுகொடுத்து அசத்தியிருக்கிறார். சிவகார்த்திகேயனின் அப்பாவாக சத்யராஜ். ரத்தத்தை வைத்துச் சாதி எதிர்ப்பு, மனிதநேயம் பற்றியெல்லாம் பேசும் இவர், ஒரு கட்டத்தில் நம் காதிலும் ரத்தம் வர வைக்கிறார். ஓவர் ஆக்டிங் சாரே!

நண்பர்களாக சதீஷ், பிராங்ஸ்டர் ராகுல், ஃபைனலி பாரத் மூவரும் கேமராமுன் ‘கேக் வாக்’ செய்து போகிறார்கள், அவ்வளவே. ஒரே ஒரு காட்சியில் வந்தாலும் சிரிக்க வைத்துவிடுகிறார் ஆனந்த்ராஜ். பிரேம்ஜியை வைத்து ‘வில்லத்தனமான காமெடி!’ ஆனால், அவரைப் பார்த்தால் பயமோ சிரிப்போ வரவில்லை.

ப்ரின்ஸ் - சினிமா விமர்சனம்

எழுத்திலும் இயக்கத்திலும் அமெச்சூர் குறும்படம் பார்த்த உணர்வையே தந்திருக்கிறார் இயக்குநர் அனுதீப். ‘என் ரத்தம் லைட்டு பிங்க்’, ‘எலிசபத் டெய்லருன்னு குழந்தைக்குப் பேரு வைக்கிறான். ஒரு டெய்லரோட புள்ள டெய்லராத்தான் ஆகணுமா?’, ‘பாட்டில் கார்டுனா என்னான்னு எனக்குத் தெரியும்!’ என ஒரு சில இடங்களில் மட்டும் சிரிப்பு வெடிகள். மற்றதெல்லாம் ‘ஜோக்கு ஜோக்கு’ என்று யாரேனும் ஞாபகப்படுத்தினால் கொஞ்சம் சிரிக்கலாம்.

இசை தமன். இரண்டு பாடல்களில் ஆட்டம் போட வைப்பவர் பின்னணி இசையில் மட்டும் பின்னால் போய் ஒளிந்துகொள்கிறார். பிரவீன் கே.எல்-லின் எடிட்டிங்தான் கத்தரி போட்டுப் படத்தைக் காப்பாற்றியிருக்கிறது.

இந்தத் தீபாவளிக்குப் பத்தாயிரம் வாலாவாக வெடித்திருக்க வேண்டிய ‘ப்ரின்ஸ்’, ஆங்காங்கே பிஜிலி வெடியாய் மட்டுமே வெடித்து முடிகிறான்.