`என் வாழ்க்கையில் இதுவரை இப்படிச் செய்ததில்லை!'- ரஜினிக்கு `ஸாரி நோட்' எழுதிய பிரித்விராஜ்

தனது முதல் படத்திலேயே இயக்குநராக முத்திரை பதித்துள்ள பிரித்விராஜ் அப்போது நடந்த சம்பவங்கள் குறித்துப் பேசியுள்ளார்.
திரைப்பட நடிகராக மலையாளத் திரையுலகில் கோலோச்சிக் கொண்டிருந்த நடிகர் பிரித்வி ராஜ் கடந்த வருடம் இயக்குநராகவும் அறிமுகமானார். மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் ஹீரோவாக நடிக்க, மஞ்சு வாரியர், டொவினோ தாமஸ் என மல்டி ஸ்டார்களை வைத்து தனது முதல் படமாக `லூசிஃபர்' படத்தை இயக்கினார். இந்தப் படம்தான் மலையாளத் திரையுலகில் 200 கோடியை வசூலித்த முதல் படம் என்ற பெருமையைப் பெற்றது.

பொலிட்டிகல் திரில்லர் பாணியில் உருவான இந்தப் படத்தில் பிரித்திவிராஜின் இயக்கம் வெகுவாகப் பாராட்டப்பட்டது. இந்தப் படத்தின் ரீமேக் உரிமைகளும் விரைவாக வாங்கப்பட்டுள்ளன. தனது முதல் படத்திலேயே இயக்குநராக முத்திரை பதித்துள்ள பிரித்விராஜ் அப்போது நடந்த சம்பவங்கள் குறித்துப் பேசியுள்ளார்.
குறிப்பாக, இயக்குநர் வாய்ப்பு குறித்து பேசியவர், ``லூசிஃபர் வெளியீட்டின்போது ரஜினிகாந்த் சாரின் அடுத்த படத்தை இயக்குவதற்கான ஆஃபர் வந்தது. ஆனால் வாய்ப்பைத் தக்கவைக்க முடியவில்லை. என் சொந்தப் பட கமிட்மென்டுகள்தான் அதற்குக் காரணம்.
தற்போது நடித்துவரும் ஆடுஜீவிதம் படத்துக்காக நிறைய வேலைகள் இருந்தன. அந்தப் படத்துக்காக உடல் மற்றும் மனரீதியாக அதிக நேரம் தேவைப்பட்டது. அதனால், ரஜினி சார் படத்தை இயக்க முடியவில்லை. இருந்தாலும் அவருக்கு ஒரு மன்னிப்பு குறிப்பை எழுதினேன். என் வாழ்க்கையில் யாருக்கும் இதுபோன்ற நீண்ட மன்னிப்பு குறிப்பை நான் எழுதியதில்லை" எனக் கூறியுள்ளார்.

ரஜினி பட வாய்ப்பை இழந்தாலும் லூசிஃபர் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் மெகா ஸ்டார் சிரஞ்சீவியை வைத்து இயக்க விருப்பம் உள்ளதாகப் பிரித்வி தெரிவித்திருந்தார். சிரஞ்சீவி தரப்பிலிருந்து அதற்கு எந்தப் பதிலும் இதுவரை இல்லை எனக் கூறப்படுகிறது.
எனினும், தற்போது லூசிஃபர் படத்தின் அடுத்த பாகமான எம்பூரான் படத்தை இயக்கி வருகிறார் பிருத்வி. இதுபோக அய்யப்பனும் கொஷியும் படத்திலும் பிஸியாக நடித்து வருகிறார்.