
“விஜய் -சிம்ரன்” ஜோடி தான் 90ஸ் கிட்ஸ் பலபேருக்கு ஃபேவரைட்..!
“நீங்க சொல்ற பெண்ணைக் கல்யாணம் செய்துக்கிட்டு ஒரு வருஷம் அவ கூட வாழ்ந்து பார்ப்பேன்... வருஷ முடிவுல அவளையே தொடர்ந்து என்னால மனைவியா வெச்சுக்க முடியலேன்னா உதறிடுவேன்...”-கல்ணாயத்துக்கு அப்பா எஸ்.பி.பி.ரொம்பவும் வற்புறுத்த, மகன் விஜய் போடும் கண்டிஷன் இது!கோடீஸ்வரரான எஸ்.பி.பி-யிடம் பி.ஏ-வாகப் பணிபுரியும் சிம்ரன் இந்த கண்டிஷனுக்கு ஒப்புக் கொண்டு, ஒப்பந்தப் பத்திரித்தில் கையெழுத்திட்டு திருமதி விஜய் ஆகிறார்! அக்காவுக்கு ஹார்ட் ஆபரேஷன், தங்கைக்குத் திருமணம், தம்பிக்கு வேலை என்கிற குடும்பச் சுமைகளே அக்ரிமெண்ட்டில் சிம்ரன் கையெழுத்துப் போடக் காரணம்!இல்லற வாழ்க்கையில் மனைவிக்குரிய அத்தனை கடமைகளையும் சிம்ரன் செவ்வனே நிறைவேற்றினாலும் ஒரு வருடம் முடிந்தவுடன் அவரைப் பிறந்தவீட்டில் கொண்டுபோய் விட்டுவிடுகிறார் விஜய்! (சிம்ரனைத் தொடர்ந்து மனைவியாக வைத்துக் கொள்ள இவரைத் தடுப்பது எது என்பது டைரக்டர் செல்வபாரதிக்கே வெளிச்சம்!)

நடுரோட்டில் பிச்சைக்காரர் ஒருவர், ஊனமாகி விட்ட தன் மனைவியை முதுகில் சுமந்து கொண்டு இல்லாளின் பெருமை பேசுவதைக் கேட்க நேரிடும் விஜய், உடனே மனது மாறி சிம்ரனின் வீடு தேடிச் சென்று மன்னிப்புக் கேட்பதில் தேவையான அளவுக்கு வெயிட் இல்லை! திரும்பி வர சிம்ரன் முரண்டுபிடிப்பதும் விஜய் கெஞ்சிக் கூத்தாடுவதுமாகத் திரைக்கதை நகர்ந்து, கடைசியில் சிம்ரனுக்குப் பிறக்கும் குழந்தை, அப்பா- அம்மாவை இணைத்து வைப்பதாக முடிகிறது! இந்த ‘ஒரு வருட ஒப்பந்த திருமணம்' வெளிநாட்டு கலாசாரம் என்பது மாதிரி அங்கங்கே சொல்கிறார்கள். உண்மையில் அங்கெல்லாம்கூட கல்யாணத்துக்கு முன்புதான் சேர்ந்து வாழ்வது வழக்கம். திருமணம் செய்து கொண்டு மனைவிக்கு ஒரு வருட ஒப்பந்தம் போடுவது ரொம்பவே விநோதம்! கணவனை விட்டுப் பிரிந்து வந்த பின்னர், சிம்ரன் ஊரைக் கூட்டித் தன்னுடைய சீமந்த வைபவத்தைத் தடபுடலாக நடத்திக் கொள்ளும் காட்சி படத்துக்கு ஹைலைட். ஒரு வருட முடிவில் விஜய் தன்னை ஒதுக்கி வைத்த அநியாயத்தை அத்தனை பேர் மத்தியிலும் சிம்ரன் புட்டுப் புட்டு வைப்பது காரமும், குணமும் நிறைந்தது! விஜய் அதற்குப் பதிலடி கொடுப்பதும் பளீர் ரகம்! இதற்குப் பின் வரையில் பொறுமை செமத்தியாகச் சோதிக்கப்படுகிறது!

‘நான் வெறும் அழகுப் பதுமை மட்டுமல்ல; எனக்கு நடிப்புத் திறமையும் உண்டாக்கும்’ என்பதை இந்தப் படத்தில் மறுபடியும் நிரூபித்திருக்கும் சிம்ரனுக்கு பலே! ப்ளேபாய் இளைஞனாக, அக்ரிமெண்ட் கணவனாக, தாய்ப்பாசம் கிடைக்கப் பெறாத பரிதாப மகனாக.. பல்வேறு பரிமாங்களில் பரிமளிக்கிறார் விஜய்! பற்களைக் கடித்துப் பேசும் பழக்கத்தை இவர் விட்டுவிடலாமே! அப்பா எஸ்.பி.பி படுகச்சிதம். எதற்கு என்றே புரியாத ஒரு பாத்திரப் படைப்பில் ராதிகா செளத்ரி! ஸ்டீரியோ டைப் காமெடியில் விவேக்!

சர்ச்சைக்குரிய புதுமையான விஷயத்தை வைத்துக் கதையைத் தொடங்கி குடும்பம் சண்டை, தாலி, சென்டி மெண்ட் என்று டைரக்டர் பழைய திசையிலேயே பயணித்திருப்பது ஏனோ!
- விகடன் விமரிசனக் குழு