" `மேயாத மான்' டைட்டில்தான் `காதலும் கடந்து போகும்'னு மாறுச்சு!"- தயாரிப்பாளர் சி.வி.குமார்

''ரொம்ப எதிர்பார்ப்புக்கு இடையே படம் ரிலீஸாகி இருந்தது. ஒரு மெல்லிய காதல் கதையா இதை எடுத்திருந்தோம். ஆனா, படம் ரிலீஸானப்போ ஆடியன்ஸோட எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யல. இருந்தும்..." - சி.வி.குமார் #5YearsOfKadhalumKadandhuPogum
நலன் குமாரசாமி இயக்கத்தில், விஜய் சேதுபதி, மடோனா செபாஸ்டியன் நடிப்பில் வெளியான திரைப்படம் 'காதலும் கடந்து போகும்'. காதலர்கள் கொண்டாடும் கிளாசிக் படமாக மாறியிருக்கும் இந்தப் படம் வெளியாகி இன்றோடு ஐந்து வருடங்கள் நிறைவடைகின்றன. படத்தின் தயாரிப்பாளர் சி.வி.குமாரிடம் பேசினேன்.

" 'சூது கவ்வும்' படத்தோட வெற்றிக்குப் பிறகு அதே டீம் ஒண்ணா சேர்ந்து வேலைப் பார்த்த படம் 'காதலும் கடந்து போகும்'. கொரியன் படமான 'My dear desperado' பார்த்துட்டு தமிழ்ல இதை எடுக்கலாம்னு நலன் குமாரசாமி முடிவு பண்ணார். படத்தோட சிடி-யை என்கிட்ட கொடுத்து படத்தைப் பார்க்கச் சொன்னார். படம் பார்த்தேன். 'நல்லாயிருக்கு... முறைப்படி கொரியன் படத்தோட டீம்கிட்ட ரைட்ஸ் வாங்கி எடுக்கலாம்'னு சொன்னேன். இந்தப் படத்துக்கு முன்னாடி வரைக்கும் யாருமே கொரியன் படத்துகான ரைட்ஸை முறைப்படி வாங்கினது இல்ல. நாங்கதான் முதல் முறையா இந்த முயற்சியில் இறங்கினோம். நிறைய மெனகெட்டுதான் படத்தோட உரிமை எங்களுக்குக் கிடைச்சது.
2013-ல படத்தோட ரைட்ஸ் வாங்கிட்டு ரெண்டு வருஷத்துக்கு பிறகு படத்தோட ஷூட்டிங்குக்கு ரெடியானோம். படத்தோட ஹீரோ விஜய் சேதுபதினு ஏற்கெனவே முடிவு பண்ணி வெச்சிருந்தோம். ஆனா, ஹீரோயினா சனா அல்தாஃப் நடிச்சா நல்லாயிருக்கும்னு நலன் சொன்னார். இவங்க 'சென்னை 28' பார்ட் 2-ல ஜெய்-க்கு ஜோடியா நடிச்சிருப்பாங்க. மலையாள தயாரிப்பாளர் ஒருத்தவங்களுடைய பொண்ணு. ஆனா, சனாவுக்கு வயசு குறைவா இருந்ததுனால இந்தப் படத்துல ஹீரோயினா நடிக்க முடியல. இதுக்குப் பிறகுதான் படத்தோட ஹீரோயினா மடோனா செபாஸ்டியன் உள்ள வந்தாங்க.

'சூது கவ்வும்' படத்தோட வெற்றி கூட்டணியே இந்தப் படத்துக்கும் தொடர்ந்தது. கேமராமேன் தினேஷ் கிருஷ்ணன், எடிட்டர் லியோ ஜான் பால், சந்தோஷ் நாராயணன் மியூசிக்னு எல்லாருமே ஒண்ணு சேர்ந்தோம். படத்துல காட்டியிருந்த வீட்டை வளசரவாக்கம் குடோன்ல செட் போட்டு எடுத்தோம்.
முதல்ல படத்துக்கு 'மேயாதமான்'னு டைட்டில் ஃபிக்ஸ் பண்ணியிருந்தேன். ஆனா, நலனுக்கு 'காதலும் கடந்து போகும்' சரியாயிருக்கும்னு தோணுச்சு. சொல்லப்போனா இந்தப் படத்துக்கு சரியான பெயரா இதுதான் அமைஞ்சதுனு சொல்லலாம். என்கிட்ட இருந்த 'மேயாத மான்' பெயரை கார்த்திக் சுப்புராஜ் படம் தயாரிக்குறப்போ பயன்படுத்துக்கிட்டார்.
ரொம்ப எதிர்பார்ப்புக்கு இடையே படம் ரிலீஸாகி இருந்தது. ஒரு மெல்லிய காதல் கதையா இதை எடுத்திருந்தோம். ஆனா, படம் ரிலீஸானப்போ ஆடியன்ஸோட எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யல. இருந்தும் இப்போ அஞ்சு வருஷத்துக்குப் பிறகு கிளாசிக் படமா 'காதலும் கடந்து போகும்' கொண்டாடப்படுறதுல ரொம்ப சந்தோஷம்" என்றார் சி.வி.குமார்.