Published:Updated:

``அருண், ஆன்மிகம், ஜீவ சமாதின்னு சுத்திக்கிட்டிருப்பார்... விபத்துக்கு முன்னாடி கூட!''- சி.வி.குமார்

இயக்குநர் அருண் பிரசாத்
இயக்குநர் அருண் பிரசாத்

விபத்தில் உயிரிழந்த இயக்குநர் அருண் பிரசாத் குறித்து தயாரிப்பாளர் சி.வி.குமார் பேசியது...

`4G' எனும் தன்னுடைய அறிமுகப் படம் வெளியாவதற்குள் இயக்குநர் அருண் பிரசாத்தின் உயிர் பிரிந்துவிட்டது. நேற்று காலை கோவை, மேட்டுப்பாளையம் அருகே நடந்த விபத்தில் அருண் பிரசாத் உயிரிழந்தார். பட வேலைகள் அனைத்தும் கிட்டத்தட்ட முடிவடைந்து படம் ரிலீஸாகும் தறுவாயில் அவர் உயிரிழந்திருப்பது தமிழ்த் திரையுலகை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அருண் இயக்கிய `4ஜி' படத்தின் தயாரிப்பாளர் சி.வி.குமாரிடம் பேசினேன்.

``எனக்கு அருணை அறிமுகப்படுத்தி வெச்சது `இன்று நேற்று நாளை' பட இயக்குநர் ரவிக்குமார்தான். ரொம்ப நல்ல பையன். திறமைசாலி. ஷங்கர் சார்கிட்ட `ஐ' படத்துல உதவி இயக்குநரா வேலை செஞ்சிருக்கார். `2.0' டிஸ்கஷன்ல எல்லாம் ஷங்கர் சார்கூட இருந்திருக்கார். `4G' கதையை அவர் என்கிட்ட சொன்ன விதமே எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. எனக்கு அவர் அறிமுகமான நாள்ல இருந்தே ரொம்ப நெருக்கமாகிவிட்டார். ரெண்டு பேரும் ஃபிரெண்ட்ஸ் மாதிரி ஆகிவிட்டோம். தினமும் போன்ல கதைகள் பத்தி நிறைய பேசுவோம். நான் ஏதாவது எழுதினேன்னா அவருக்கு அனுப்புவேன். அவர் ஏதாவது எழுதினார்னா எனக்கு அனுப்புவார். அதுல சில கரெக்‌ஷன்கள் எல்லாம் சொல்லி நல்லா வொர்க் பண்ணிக்கிட்டு இருந்தோம். வாரத்துல மூணு நாளாச்சும் ரெண்டு பேரும் சந்திச்சிடுவோம். என் வீட்டுல, ஆபீஸ்ல நைட் 12 மணி வரை எல்லாம்கூட கதைகள் பத்தி பேசியிருக்கோம். மூணு நாளுக்கு முன்னாடிகூட நான் ஒரு ஒன்லைனை அவருக்கு மெயில் பண்ணியிருந்தேன். நிறைய கனவுகளோட இருந்த பையன். நடிக்கிறதுலயும் அவருக்கு ரொம்ப ஆர்வம். என் தயாரிப்புல அடுத்து பண்ணப்போற படத்துல ஒரு கேரக்டர்ல அவர் நடிக்கிறதாவும் இருந்தது. அவர் வீட்டுக்குப் போய் கடைசியா ஒருமுறை அவர் முகத்தைப் பார்த்துட்டு வந்துடலாம்னு பார்த்தா பாஸ்கூட தரமாட்டேங்கிறாங்க. ரத்த சொந்தமா இருந்தால்தான் தருவாங்களாம். அவர் சொந்த ஊர் அன்னூர். அவர் `இன்று நேற்று நாளை' ரவிக்குமார், `முண்டாசுப்பட்டி' ராம்குமார், `மரகத நாணயம்' சரவணன் எல்லோரும் ஒரே ஊர். சின்ன வயசுல இருந்தே இவங்க எல்லோரும் ஒன்னாதான் வளர்ந்திருக்காங்க. என்னாலயே அவர் இறப்பை ஜீரணிக்க முடியலை. அவங்க எல்லோரும் ரொம்ப பாவம்.

4G
4G

`மரகத நாணயம்' பண்ண சரவணனுக்கு அந்தப் படம் பண்ண வாய்ப்பு வாங்கிக் கொடுத்ததே அருண்தான். அருணுக்கு ஆன்மிகம், ஜீவ சமாதி இதுல எல்லாம் அதிக நம்பிக்கை. சித்தர்கள் பத்தி தெரிஞ்சிருக்கிறதுல அவ்ளோ ஆர்வமா இருப்பார். நிறைய கோயில்கள், ஜீவ சமாதிகள்னு போய் ஏதாவது தேடிக்கிட்டே இருப்பார். என்னையும் நிறைய கோயிலுக்கு கூட்டிக்கிட்டுப் போயிருக்கார். இப்போகூட கோயிலுக்குப் போயிட்டு வரும்போதுதான் விபத்து நடந்திருக்கு. இதையெல்லாம் பார்க்கும்போது வாழ்க்கை ஒண்ணுமே இல்லைன்னு தோணுது. நான் வீட்ல நிறைய புத்தகங்கள் வெச்சிருக்கேன். லாக் டெளனுக்கு முன்னாடி ஊருக்குப் போகும்போது `வீட்ல படிக்க சில புத்தகங்கள் வேணும் சார்'னு சொன்னார். என் வீட்ல இருந்து அவருக்கு என்ன புத்தகங்கள் வேணுமோ அதையெல்லாம் எடுத்துட்டுப் போனார். வீட்டுக்குபோய் `இந்தப் புத்தகம் நல்லாயிருக்கு, இந்த நாவல் சூப்பரா இருக்கு, அதோட ஆசிரியர்கிட்ட பேசினேன். இந்தப் புத்தகத்தை மையமா வெச்சு ஒரு வெப் சீரிஸ் பண்ணலாம்'னு போன்ல என்கிட்ட அடிக்கடி பேசிக்கிட்டே இருந்தார். அவ்ளோ கனவுகளோட இருந்த பையன்.

அவருக்கு ஆன்மிகம், சித்தர்கள் வழிபாடு மேல பெரிய ஆர்வம் இருந்ததுனால அருண் பிரசாத்ங்கிற பெயரை வெங்கட் பாக்கர்னு மாத்தினார். பாக்கர்ங்கிறது ஏதோ சித்தருடைய பெயராம். அப்புறம், கொஞ்ச நாளுக்கு முன்னாடி `இல்ல சார். சித்தர்கள் பெயரை வெச்சுக்கக் கூடாதாம். அதனால அருண் பிரசாத்னே படத்துல வரட்டும்'னு சொன்னார். அதே மாதிரி ஜோதிடத்துலயும் ஆர்வம் அதிகம். 2020 ஆரம்பிச்சவுடன் என்கிட்ட, `நம்ம ரெண்டு பேருடைய ஜாதகத்தையும் பார்த்துட்டேன் சார். 2020 நமக்கு சூப்பரா இருக்கு. நாம எல்லாம் வேற எங்கேயோ போகப்போறோம். அடுத்து பெரிய ஹீரோவை வெச்சு நம்ம படம் பண்றோம் சார்'னு அவ்ளோ பாசிட்டிவிட்டியோட பேசினார். கொஞ்சம்கூட அவர்கிட்ட நெகட்டிவிட்டி இருக்காது. தயாரிப்பாளர். இயக்குநர்னு நாங்க பழகலை. நண்பர்கள் மாதிரி இருந்தோம். நானும் அவரும் சேர்ந்து ஏகப்பட்ட படங்களுக்கு அவருடைய பைக்லேயே போயிருக்கோம்.

தயாரிப்பாளர் சி.வி.குமார்
தயாரிப்பாளர் சி.வி.குமார்

படத்தோட ஷூட்டிங், டப்பிங், எடிட்டிங்னு எல்லா வேலைளும் முடிஞ்சுடுச்சு. அப்புறம், கொஞ்சம் ஃபைனான்ஸ் பிரச்னையால ஒன்றரை வருஷம் தாமதமாகிடுச்சு. அந்தப் பிரச்னை எல்லாம் முடிஞ்சு இப்போ மார்ச் 25 மோஷன் போஸ்டர், ஏப்ரல் 14 டீசர், மே மாதம் படத்தை வெளியிடலாம்னு பிளான் பண்ணி அதுக்கான வேலைகளை பார்த்துட்டு இருந்தோம். அதுக்குள்ள இந்த லாக் டெளன் வந்திடுச்சு. இன்னும் ஒரு நாள் பேட்ச் வொர்க் இருக்கு. ஹீரோயினுக்கு நாலு ஷாட் மட்டும் எடுக்கணும். அதை ஆடியோ லான்ச்சுக்கு முன்னாடி எடுத்துக்கலாம்னு நினைச்சிருந்தோம். ஆனா, அதுக்குள்ள இப்படியாகிடுச்சு. ரொம்ப ரொம்ப கஷ்டமா இருக்கு. இதையெல்லாம் பார்க்கும்போது வாழ்க்கை மேல இருக்கிற நம்பிக்கையே போயிடுது.

லாக் டெளனுக்கு முன்னாடி இந்தப் படத்தை நேரடியா ஓடிடி தளத்துல வெளியிட கேட்டாங்க. நான் அருண்கிட்ட `ஓடிடி-ல கேட்கிறாங்க, கொடுத்துடலாமா?'னு கேட்டேன். `சார் வேணாம் சார்... என் முதல் படம் தியேட்டர்ல வெளியானாதான் நல்லாயிருக்கும்னு ஆசைப்படுறேன். இருந்தாலும் நீங்க கேட்கிறீங்க. சரி சார், வெளியாகாத டீசரை அந்த ஓடிடி ஆளுங்களுக்கு அனுப்புங்க. என்ன சொல்றாங்கன்னு பார்ப்போம்'னு சொன்னார். ஓடிடி கம்பெனிக்கும் அந்த டீசர் பிடிச்சிருந்தது. ஒரு பத்து நாள்ல ஓடிடில ரிலீஸ் பண்றதுக்கான வேலைகளும் முடியுற மாதிரி இருந்தது. ஆனா, இப்போ எல்லாம் மாறிடுச்சு.

அருணோட ஆசை `4ஜி' படத்தை தியேட்டர்ல ரிலீஸ் பண்ணணும்கிறதுதான். அதனால ஓடிடில பேசி யாருக்காக இல்லைன்னாலும் அருண் பிரசாத்துக்காகப் படத்தை தியேட்டர்லதான் ரிலீஸ் பண்ணுவேன். என்ன பிரச்னை வந்தாலும் லாக் டெளன் முடிஞ்சவுடன் படம் 100 சதவிகிதம் தியேட்டர்லதான் ரிலீஸாகும். அதுக்கு நான் பொறுப்பு" எனும் சி.வி.குமாரின் குரல் தழுதழுக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு