Published:Updated:

`பொல்லாதவன்' 7 கோடி, டாப்ஸிக்கு 7 லட்சம், தனுஷிடம் ஜெயலலிதா சொன்ன வார்த்தை! - தயாரிப்பாளர் கதிரேசன்

ஆடுகளம் ஷூட்டிங் ஸ்பாட்டில்...
ஆடுகளம் ஷூட்டிங் ஸ்பாட்டில்...

மலையாளத்தில் ஹிட் அடித்த ப்ரித்விராஜின் `அய்யப்பனும் கோஷியும்' படத்தின் ரீமேக் உரிமையும் இப்போது தயாரிப்பாளர் கதிரேசன் வசம்தான். இந்நிலையில், இவரின் முதல் இரண்டு படங்களான `பொல்லாதவன்', `ஆடுகளம்' பட அனுபவங்களைப் பற்றி கேட்டோம்.

'பொல்லாதவன்', 'ஆடுகளம்', 'ஜிகர்தண்டா' என தமிழ் சினிமாவின் சில முக்கியமான படங்களைத் தயாரித்தவர், 'ஃபைவ் ஸ்டார்' கதிரேசன். அருள்நிதி நடிக்கும் படத்தை தற்போது தயாரித்துக்கொண்டிருக்கும் கதிரேசன், மலையாளத்தில் ஹிட் அடித்த ப்ரித்விராஜின் 'அய்யப்பனும் கோஷியும்' படத்தின் ரீமேக் உரிமையையும் வாங்கிவைத்திருக்கிறார். இந்தப் படத்தின் இயக்குநர், நடிகர்களை விரைவில் அறிவிக்க இருக்கிறார். இதற்கிடையே இவரின் முதல் இரண்டு படங்களான 'பொல்லாதவன்', 'ஆடுகளம்' பட அனுபவங்களைப் பற்றி கேட்டோம்.

``நான் சினிமா தொழிலுக்கு 1994-ம் ஆண்டே வந்துட்டேன். முதல்ல ஃபைவ் ஸ்டார் ஆடியோ கம்பெனி நடத்தினேன். 175 படங்களின் ஆடியோ உரிமையை வாங்கி வெளியிட்டேன். அதன்பிறகு, விநியோகஸ்தர் ஆனேன். கஸ்தூரிராஜா இயக்கிய 'நாட்டுப்புறப் பாட்டு', 'கும்மிப்பாட்டு', செல்வராகவனின் 'துள்ளுவதோ இளமை', ' காதல் கொண்டேன்' படங்களை வாங்கி வெளியிட்டேன். அப்பதான் கஸ்தூரிராஜாவும், தனுஷும் எனக்கு நல்ல பழக்கமானாங்க. ஒருநாள், `கதிரேசன் நீங்க ஏன் ஒரு படத்தை தயாரிக்கக்கூடாது'னு கஸ்தூரிராஜா சாரும், தனுஷ் சாரும் கேட்டாங்க. நானும் கதை கேட்க ஆரம்பிச்சேன். முதலில் மிஷ்கின் கதை சொல்ல வந்தார். அடுத்து தரணியோட அசிஸ்டன்ட் கதை சொன்னார். அதுக்கப்புறம் ரெண்டு டைரக்டர்கள் சொன்ன கதைகள் எனக்குப் பிடிக்கல. கடைசியாத்தான் வெற்றிமாறனை அறிமுகம் செஞ்சார் தனுஷ். 2006-ம் வருஷம். அப்போ நான் சபரிமலைக்கு மாலை போட்டிருந்தேன். சென்னை வடபழனியில் உள்ள ஆதித்யா ஹோட்டலுக்கு வந்து, வெற்றி ஒரு கதையைச் சொன்னார். ஆனால்,, அந்தக் கதை எனக்கு அவ்வளவா பிடிக்கல. வேறு ஒரு கதையைத் தயார்செய்வதாக வெற்றி சொல்ல, நானும் சபரிமலைக்குப் போயிட்டேன். ஒரு மாசம் கழிச்சு வந்து ஒரு கதையைச் சொன்னார் வெற்றிமாறன். அதுதான் `பொல்லாதவன்'.

Polladhavan
Polladhavan
Screenshot from Sun Nxt

`ஒவ்வொரு மனுஷனுக்கும் ஒரு எதிர்பார்ப்பு உண்டு. அஞ்சாங்கிளாஸ் பாஸ் ஆனவுடன் வாட்சுக்கு ஆசைப்படுவான். எட்டாம் க்ளாஸ் படிக்கும்போது சைக்கிள் வாங்க ஆசைப்படுவான். வேலைக்குப்போகும்போது பைக் வாங்கணும்னு ஆசைப்படுவான். இப்படி ஒரு சராசரி இளைஞனின் ஆசையில் ஒரு கேங்ஸ்டர் குறுக்கிடுறான்னு' னு வெற்றிமாறன் சொன்ன கதை ரொம்பவே பிடிச்சுப்போய் உடனே களத்துல இறங்கிட்டோம். வெற்றிமாறனுடன் கேமராமேன் வேல்ராஜ் இணைந்த முதல் படம், பொல்லாதவன்'. அன்னைக்கு ஆரம்பிச்ச அவங்களோட காம்பினேஷன் `அசுரன்' வரைக்கும் தொடர்ந்து வர்றதுல ரொம்ப சந்தோஷம். அதேபோல `வெயில்' படத்துக்குப் பிறகு ஜி.வி.பிரகாஷ் இசையமைச்ச ரெண்டாவது படம், `பொல்லாதவன்' . இதில் வில்லனா நடிச்ச கிஷோருக்கு இதுதான் தமிழில் முதல் படம். முதல் ஷெட்யூல் போய்வந்த பிறகு எடிட் செஞ்சார் லெனின் சார். அப்ப அவரின் அசிஸ்டன்ட்டா இருந்தவர், கிஷோர். அவர்தான் பின்னாளில் `ஆடுகளம்' படத்துக்கு சிறந்த எடிட்டருக்கான தேசிய விருது பெற்றார். 2007-ம் வருஷம் தீபாவளிக்கு, `பொல்லாதவன்' ரிலீஸ். அப்ப விஜய் நடிச்ச `அழகிய தமிழ்மகன்', சூர்யா நடிச்ச`வேலு', போதாதுக்கு ஷாருக்கான் நடிச்ச `ஓம் சாந்தி ஓம்' படங்கள் எல்லாம் ரிலீஸானதால, பொல்லாதவனுக்கு தியேட்டர் கிடைக்கலை. இப்போது போல அப்போது மல்டிப்ளக்ஸ், மால் தியேட்டர்கள் இல்லை. நான் சோர்ந்து போகவும் இல்லை.

சென்னை, செங்கல்பட்டு, கோயம்புத்தூர், திருச்சினு நாலு ஏரியால நானே சொந்தமா படத்தை ரிலீஸ் பண்ணேன். சென்னை சத்யம் தியேட்டர் கிடைக்காததால பக்கத்தில் இருந்த பைலட் தியேட்டரில் ரிலீஸ் பண்ணேன். அங்கே மட்டும் மொத்த கலெக்‌ஷன் 8 லட்சம் ரூபாய். ஒரு விநியோகஸ்தரா எனக்கு கிடைச்சது 4 லட்சம் ரூபாய். அடுத்து ஆல்பர்ட், தேவி, வடபழனி ஏவி.எம் ராஜேஸ்வரி, தி.நகர் கிருஷ்ணவேணி, அசோக்நகர் காசி-ன்னு எல்லா தியேட்டர்களிலும் `பொல்லாதவன்' படத்தை திரையிட்டேன். நான் வெளியிட்ட அத்தனை தியேட்டர்களிலும் படத்தின் ரிசல்ட் சூப்பர். படம் சூப்பர் ஹிட், வசூல் அபாரம். அப்போ `பொல்லாதவன்' படத்தால் எனக்குக் கிடைச்ச லாபம் மட்டும் ஒன்றரை கோடி ரூபாய். இப்போதுள்ள பணத்துக்கு 10 கோடிக்கு சமம். `பொல்லாதவன்' படத்தின் வெற்றியைக் கொண்டாடும் விதமா வெற்றிமாறன், அஸிஸ்டன்ட் டைரக்டர்கள், முக்கியமான டெக்னீஷியன்களுக்கு தங்கச்செயின் பரிசளிச்சேன்.

தனுஷ் - டாப்ஸி
தனுஷ் - டாப்ஸி
ஆடுகளம்

என்னுடைய முதல்படமே நல்லபெயர் வாங்கிக் கொடுத்ததால், ஜெயிச்சிடுவோம்கிற நம்பிக்கை வந்துடுச்சு. தனுஷ் சாரையும், வெற்றிமாறனையும் நிறைய தயாரிப்பாளர்கள் தேடிவந்து தங்களோட கம்பெனிக்கு படம் செய்யச்சொல்லி கேட்டாங்க. ஆனா, தனுஷ் சாரும் சரி, வெற்றிமாறனும் சரி என்கிட்டதான் அடுத்த படம் பண்ணுவேன்னு சொல்லிட்டாங்க. அந்த படம்தான் `ஆடுகளம்'.

நான் சினிமாவுக்கு வந்து 30 வருஷத்துக்கு மேல ஆகிடுச்சு. என் லைஃப்ல எத்தனையோ டைரக்டர்களைப் பார்த்திக்கேன். ஆனா, வெற்றி மாதிரி ஒரு வித்தியாசமான டைரக்டரை பார்த்ததேயில்லை. சிலபேர் சொல்லும் கதைகள் நமக்கு பிடிக்கலைன்னு சொன்னா முகம் வேறமாதிரி மாறிடும். ஆனா வெற்றிகிட்ட சொன்னா பெருசா எடுத்துக்கவும் மாட்டார், ரியாக்‌ஷன் எதுவும் காட்டிக்கவும் மாட்டார். அடுத்து இன்னொரு கதையோட வந்து அசத்திடுவார். முதலில் வெற்றி சொன்ன நகர வாழ்க்கை சம்பந்தமான கதை எனக்கு அவ்வளவா பிடிக்கலை. அதை அவரிடமே சொல்லிட்டேன் . மதுரைக்குக் கிளம்பிட்டார். மூணு மாசம் கழிச்சு சென்னைக்கு வந்து ஒரு கதையைச் சொன்னார். அதுதான் `ஆடுகளம்'. சினிமாத்தனமே இல்லாத இயல்பான கதை. ஏதோ ஒரு கிராமத்துக்குள்ள நாம போய் சந்திக்கிற ஏதார்த்தமான கேரக்டரா ஹீரோ தனுஷ், பேட்டைக்காரன் கேரக்டர், டாப்ஸி கதாபாத்திரம்னு ஒவ்வொண்ணும் மிரட்டலா இருந்துச்சு. இந்தப் படத்துலயும் தனுஷ், வெற்றிமாறன், வேல்ராஜ், ஜி.வி.பிரகாஷ்னு இந்த நால்வர் கூட்டணி நல்லாவே வொர்க் அவுட் ஆச்சு.

2009-ம் வருஷம் ஜனவரில, மதுரைல நாலுவீடுகள் வாடகைக்குப் பிடிச்சாச்சு. எல்லோருக்கும் சாப்பாடு செய்யறதுக்கு ஆட்களை ஏற்படும் பண்ணியாச்சு. அங்கேதான் கதை, விவாதம், நடிகர், நடிகைகள் தேர்வு எல்லாமே நடந்துச்சு. அவங்க தங்கறதுக்கும் அங்கே அறைகள் பிடிச்சாச்சு. அந்தப் படத்துல தனுஷ் சார், டாப்ஸி, பேட்டைக்காரன் போன்ற முக்கியமான கேரக்டர்கள் தவிர்த்து மத்த எல்லா கேரக்டர்களும் மதுரை மண்ணின் மைந்தர்கள்தான். ஏன்னா மதுரை ஸ்லாங் படத்தோட உயிர்மூச்சு. அதுமட்டுமில்லாம, அந்த ஊர்காரங்க சொந்தக் குரல்ல மதுரையிலேயே டப்பிங் பேச வெச்சாங்க. ஆங்கிலோ இந்தியன் கேரக்டருக்காக நாங்க ஹீரோயின் செலெக்ட் பண்ண மும்பைக்குப் போயிருந்தோம். அப்போ டாப்ஸி போட்டோ கிடைக்க, விசாரிச்சோம். அவங்களோட பூர்விகம் டெல்லின்னு சொன்னாங்க. வரவழைச்சு போட்டோ செஷன் எடுத்தோம். பிடிச்சுப்போச்சு. டாப்ஸி ரொம்ப டெடிகேட்டடான பொண்ணு. மதுரையிலேயே தங்கி நடிச்சுக் கொடுத்தாங்க. இப்போ தெலுங்கு சினிமா, பாலிவுட்னு டாப்ஸியோட சம்பளம் கோடிகளில் எங்கேயோ போயிடுச்சு. ஆனா அப்போ, `ஆடுகளம்' படத்துக்கு டாப்ஸிக்கு நான் கொடுத்த சம்பளம் 7 லட்சம் ரூபாய்தான். உண்மையைச் சொல்லணும்னா, ஹீரோ தனுஷ் சார்ல இருந்து, கடைசி லைட்பாய் வரைக்கும் அத்தனைபேரும் ஆறுமாசம் சென்னை பக்கமே எட்டிக்கூட பார்க்கல.

தயாரிப்பாளர் கதிரேசன்
தயாரிப்பாளர் கதிரேசன்

2007-ம் வருஷம் தீபாவளிக்கு `பொல்லாதவன்' ரிலீஸ்; 2011-ம் ஆண்டு பொங்கலுக்கு `ஆடுகளம்' ரிலீஸ். படத்துக்கு நல்ல ரெஸ்பான்ஸ். ஹீரோவான தனுஷ் சார், வில்லனா நடிச்ச ஜெயபாலன், எடிட்டர் கிஷோர்னு மொத்தம் ஆறு பேருக்கு தேசிய விருது கிடைச்சது. தேசிய விருது அறிவிக்கும்போது ஜெயலலிதா அம்மாதான் முதல்வர். சினிமாகாரங்க யாரையுமே அப்போ அவங்க சந்திக்காத தருணம். `ஆடுகளம்'ங்கிற ஒரே படத்துக்கு ஆறு தேசியவிருது கிடைச்சிருக்குன்ன உடனே முதல்வர் எங்களை நேர்ல கூப்பிட்டு பாராட்டினாங்க. நான், தனுஷ், வெற்றிமாறன், கிஷோர்னு எல்லோரும் ஜெயலலிதா அம்மாவை சந்திச்சோம். அவங்களும் ரொம்ப சந்தோஷமா எங்ககிட்டே பேசினாங்க. `எல்லோருமே யங்ஸ்டர்ஸா இருக்கீங்களே'ன்னு ஆச்சர்யப்பட்டாங்க. தனுஷ்கிட்ட ``நான் 'பொல்லாதவன் படம் பார்த்துட்டேன். ஆனா, `ஆடுகளம்' இன்னும் பார்க்கல. படம் பத்தி நிறைய பேர் என்கிட்ட சொன்னாங்க. நீ சென்னைல வளர்ந்த பையனாச்சே... எப்படி மதுரை கேரக்டர்ல சூப்பரா நடிச்ச?"னு கேட்டாங்க. எல்லோருக்கும் வாழ்த்து தெரிவிச்சாங்க. என்னோட வாழ்க்கையிலேயே இன்னிக்கு வரைக்கும் மறக்கமுடியாத தருணம் அது. என்னோட பேனர்ல மறுபடியும் தனுஷ் சார் நடிக்க இருக்கார். அது எப்போன்னு சீக்கிரமா சொல்றேன். அதே போல `நம்ம நட்புக்கு அடையாளமா ஒரு படம் சேர்ந்து பண்ணுவோம்'னு வெற்றியும் சொல்லியிருக்கார். அதுவும் கூடிய சீக்கிரத்தில் நடக்கும்.

இப்போ அருள்நிதி நடிச்சிருக்கிற படம் எடுத்து முடிச்சிருக்கேன். இந்தப் படத்தோட இயக்குநர் `எரும சாணி' சேனல் தம்பி விஜயகுமார் ராஜேந்திரன் சொன்ன கதை பிரமாதமா இருந்துச்சு. அதாவது பிரமாண்ட ஒரு விழா நடக்குது. அதோட பின்னணியில் நடக்கும் த்ரில்லர்தான் கதை. படம் நல்லாவே வந்திருக்கு. இந்தப் படத்துக்கு மூணு டைட்டில் பரிசீலனையில் இருக்கு. ஏதாவது ஒன்னை செலெக்ட் பண்ணி, ஏப்ரல் மாசம் தமிழ்ப் புத்தாண்டு அன்னைக்கு படத்தோட டைட்டில் ப்ளஸ் ஃபர்ஸ்ட் லுக்கை தனுஷ் சாரை வெச்சி வெளியிடலாம்னு நினைச்சேன். ஆனா, கொரோனோ வந்து குழப்பத்தை உண்டு பண்ணிடுச்சு. அடுத்து லாரன்ஸ் மாஸ்டர் சொன்ன கதை ரொம்பவே பிடிச்சுப்போச்சு. மே 15-ம் தேதியிலிருந்து ஷூட்டிங் ஆரம்பிக்கலாம்னு சொல்லிட்டு எல்லோரும் பக்காவா ப்ளான் போட்டு வெச்சிருந்தோம். அதையும் கொரோனா உள்ளே புகுந்து கொலாப்ஸ் செஞ்சிடுச்சு. சீக்கிரம் எல்லாம் சரியாகிடும்னு நம்புவோம்'' என்கிறார் கதிரேசன்.

அடுத்த கட்டுரைக்கு